Sunday, July 31, 2016

கலைகள் அனைத்துமே......

கலைகள்  அனைத்துமே
மகத்தானவை
அற்புதமானவை
அழகானவை மட்டுமல்ல
விளையாட்டுத்  தனமானதும் கூட

அதானாலேயே
தன்னைப் பயன்படுத்தி
தன்னை  உயர்த்திக் கொள்ள
முயல்வோனுக்கு
முக்காடிட்ட
முகம்காட்டும் அதுவே

தன்மை மறந்து
அதனில் கரைவோனுக்கு
முழுமுகம் காட்டி யும்
முறுவலித்தும்
வாழ்த்திப் போகிறது

ஆம்
கலைகள் அனைத்தும்
மகத்தானவை
அற்புதமானவை
அழகானவை மட்டுமல்ல
விளையாட்டுத்  தனமானதும்  கூட

கலைகள் என்னும்
பொதுப் பெயர்
கவிதைக்கும் பொருந்தும்  என்பது
சொல்ல வேண்டியதா  என்ன ?

Friday, July 29, 2016

முன்.......

குடை விரிக்கும் முன்
சட்டெனப் பெய்து
மனம் நனைக்கும்
கோடை மழையாய்

விழி பார்க்கும்முன்
மேகமெனத் திரண்டு
மனம் நிரம்பும்
மணமலராய்

கைவிரிக்கும் முன்
சட்டெனத் தாவித்
தோளேறும்
மழலைச் செல்வமாய்

பசி யறியும் முன்
கிண்ணத்தில்அமுதுடன்
எதிர்வரும்
அன்புத் தாயாய்

எழுத முனையும் முன்
எண்ணமாய் எழுத்தாய்
எதிர்விரியும்
அமுதத் தமிழே

கடலதன் முன்
கை நனைத்த்த சிறுவன்
கடலையறிந்ததாய்
களிகொள்ளும் கதையாய்

பேரண்டமே உம்முன்
சிறுபுழு நான்
பிதற்றித் திரிகிறேன்
கவியென்றே நாளும்

விழிமூடும் முன்
ஒருசிறு கவியேனும்
கவியென நிலைபெற
நவின்றிட அருள்புரி

Thursday, July 28, 2016

பதிவர் சந்திப்புப் பல்லவி

 சுவையான கனிகளை
இரசித்து உண்ட பின்
அது உண்டான மரம் பார்க்கும் ஆசை

வெக்கைப் போக
அந்த இதமான சூழலைத் தந்த
கருமேகங்களைக்  காண ஆசை

நல்ல விருந்தினை
இரசித்துப் புசித்தப்  பின்
அதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை

மணக்கும் மல்லிகையைப்
நுகர்ந்ததும்
மதுரையைப் பார்க்கும் ஆசை

மொறுமொறு முறுக்கினை
கடித்து முடித்ததும்
மணப்பாறைப் பார்க்கும் ஆசை

நாவைக் குளமாக்கும் அல்வாவை
உண்டு முடித்ததும்
நெல்லையைக் காணும் ஆசை

விடாது தொடருதல் போல

சிறந்தப் பதிவுகளைப் படித்ததும்
அதைப் படைத்தவனைப்
பார்க்கும் ஆசை

விடாது தொடருதல் என்னுள்

நடந்து முடிந்த சந்திப்புக்கள்
தொடர்ந்து ஓடுது கண்ணுள்

என்று ?
எங்கு ?
எப்போது ?
என்னும் கேள்விகளோடு

வழக்கம்போல்
ஊதுகிற சங்கை ஊதிவைக்கிறேன்

விதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்

சரணங்களும்
அனுசரணங்களும்
பல்லவியைத் தொடரும்
என்கிற அதீத நம்பிக்கையுடன்  

Wednesday, July 27, 2016

நெஞ்சில் ஈரம் என்றும் காப்போம்ஈரம் காப்போம்
வறண்டு விடாது
ஈரம் காப்போம்

மண்ணின் செழுமைக்கு
மண்ணில் ஈரம்
மனிதரின் வளமைக்கு
நெஞ்சில் ஈரம்

கோடைச் சூரியன்
எப்படித் தாக்கினும்
அடைமடி ஈரம்
காத்திடும் பூமி

எப்படிக் கறப்பினும்
கன்றுக்கு பாலினை
ஒதுக்கியே வைத்திடும்
அழகியத் தாய்ப்பசு

அதுபோல்

சுயநலச் சூரியன்
எப்படி எரிப்பினும்
அடிமன  ஈரம்
அகலாது காப்போம்

நம் நிலை எந்நிலை
ஆன போதிலும்
நம்சுகம் கொஞ்சம்
நலிவுறும் ஆயினும்...

ஈரம் வரும்வழி
மழைவழி நதிவழி
எவ்வழி என்று
பூமி பிரிப்பதில்லை

ஈரம் வரும் வழி
மதவழி இனவழி
எவ்வழி என்று
நாமும் பிரிக்காது

நெஞ்சில் ஈரம்
என்றும் காப்போம்
அனைவரும் உயர்ந்திட
ஆனதைச் செய்வோம்

(இந்த  நிகழ்வுக்கு அனைத்து விதத்திலும்
ஊற்று அமைப்பின் சார்பாக அனைத்து
விதத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர்கள்
மதிப்பிற்குரிய  ரூபன் ராஜா மற்றும்
நண்பர் யாழ்பாவாணன் ஆகியோரையும்
அறிவுக்குக்கண்  கல்விக்கு கைக்கொடுப்போம்
அமைப்பினரையும் மனதார பாராட்டுவதன் மூலம்
நாமும் இந்த நிகழ்வில் பங்குபெறலாமே )

வாழ்த்துக்களுடன் ....Tuesday, July 26, 2016

கணந்தோறும் தினந்தோறும்

கணந்தோறும்
தினந்தோறும்

நகரக் காடுகளில்
காங்கிரீட் கூடுகளில்
தவித்துக் கிடக்கின்றன
தாய்ப்பறவைகள்

உடல் அலகுகள்
மனச் சிறக்குகள்
உறுதிப் பெற
பயிற்சிப் பெற

வெளிச் சென்ற
இளங்குஞ்சுகள்

காதல் வலைவிரித்துக்
காத்திருக்கும்
கயவர்களிடன் சிக்கிவிடாது

காம வில்லேந்திக்
காத்திருக்கும்
வேடர்களால் வீழ்ந்திடாது

கூடு வந்துச்
சேர வேண்டி

நாளும்பொழுதும்
இறைவனை வேண்டியபடி

நாளும்
வலையில் வீழும்
குஞ்சுகளின்
எண்ணிகையறிந்து
பயந்தபடியும்

தினமும்
அடிபட்டுப்பட்டுச் சாகும்
குஞ்சுகளின்
நிலையறிந்து
நொந்தபடியும்

நகரக் காடுகளில்
காங்கிரீட் கூடுகளில்
தவித்துக் கொண்டிருக்கின்றன
தாய்ப்பறவைகள்

தினந்தோரும்
கணந்தோரும்

இதற்கொரு
விடிதலை  வேண்டியபடியும்
முடிவினை நாடியபடியும்Friday, July 22, 2016

இது கபாலிக்கும் பொருந்தும்...

எத்தனைச் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டிருக்கினும்
அதை இயக்குவோன்
எத்தனைத் திறன்
மிக்கவனாயினும்

வாகனம் பொறுத்து
அதற்கென ஒரு
வேக அளவுண்டு

அது
மிதி வண்டி ஆயினும்
நவீன விமானமாயினும்

அளவை மீறுகையில்

அந்த அற்புத
வாகன்ம் மட்டுமல்ல
அந்தத் திறன் மிக்க
இயக்குவோன் கூடத்

தனக்கான மதிப்பினிலிருந்து
இறங்கவே சாத்தியம்
தனக்கான இடத்திலிருந்து
சரியவே சாத்தியம்

இது
கட்டை வண்டிக்கு மட்டுமல்ல
கபாலிக்கும் பொருந்தும்

Thursday, July 21, 2016

நித்தமும் புதிதாய்ப பிறக்கிறேன்

நித்தம்
முத்துக் குளிக்கிறேன்

அடி ஆழம் போய்
நித்தம் குளித்து வந்தாலும்

முத்துக்களை விட
சிப்பிகள் கிடைக்கவே
அதிகச் சாத்தியம்
என்பது புரிந்தாலும்

முத்துக்கள் எடுக்க
முத்துக்கள் கிடைக்க
இதுவொன்றே
ஆன வழி என்பதாலும்

என்றாவது
எதனுள்ளாவது
முத்துக்கள் கிடைக்கச்
சாத்தியம் என்பதாலும்

நித்தமும்
முத்துக் குளிக்கிறேன்

இதனால்
ஒருவகையில்
நித்தமும்
புதிதாயும்   பிறக்கிறேன்


அனுபவத்தை அனுபவிப்பவனே

ஆழ்ந்து இரசித்து
அனுபவித்ததை
அனுபவித்தபடி
அனுபவிக்கும்படி
கொடுப்பது
படிப்பதற்காக அல்ல
அது அனுபவிப்பதற்காகவே

எழுத்தினைக் கடந்து
சொல்லுக்கு வருபவன்
பாமரன் எனில்

சொல்லைக் கடந்து
பொருளுக்கு வருபவன்
படித்தவன் எனில்

பொருளை கடந்து
அனுபவத்தை அனுபவிப்பவனே
நிச்சயம் வாசகன்

நிகழ்வுகளில்
நம் பிணைப்பும்
அது தரும் அனுபவமும் தான்
நம் வாழ்க்கையாகுமேயன்றி
நிகழ்வுகள்
வாழ்க்கையில்லை என்பது
நாம் அறிந்ததுதானே !

Wednesday, July 20, 2016

சூழல் கோகுலம் .. சொற்கள் கோபியர்கள்

சூழல் இரம்மியமாக
அதனை இன்னும்
இரம்மியமாக்கும் விதமாய்
மெல்ல மெல்லத்  தோகை விரிக்கும்
அந்த அழகு மயிலாய்...

மனச் சூழல் இரம்மியமாக
அதனை இன்னும்
இரம்மியமாக்கும் விதமாய்
மெல்லக் கவிக் குழலெடுத்து
இசைக்கத் துவங்குகிறான் அவன்..

குழலிசைக் கேட்டு
சுயமிழந்து
கள்ளுண்ட வண்டுகளாய்
கண்ணனைச் சூழும்
கோகுலத்துக் கன்னியராய்

கவிமனம் அறிந்து
ஒற்று விரிவு களைந்துச்
சுய அழகோடு நிர்வாணமாய்
அவனைச் சூழ்ந்து நிற்கிறது
அழகுத் தமிழ் வார்த்தைகள்

கௌசிகன் ஆணைப்படி
காலத்தால் இற்றுக் கிடந்தக்   கற்பாறையில்
கோதண்டராமன்
பொற்பாதம்   பதிக்க
புத்துயிர்ப்  பெரும் அகலிகையாய்

தோன்றிய நாள்முதல்
உருவுக்குப்  பொருள் மட்டுமே
காட்டி வந்த சொற்களெல்லாம்
கவிஞனின் தீண்டுதலில்
உணர்வுத் தீயாகித் தகிக்கிறது

அவன்
மேலும் இசைக்கிறான்

சூழல் கோகுலமாகிறது
சொற்கள் கோபியராகின்றனர்

அவனும் கண்ணனாகி
சொற்களுடன் மெய்ம்மறந்து
சல்லாபிக்க

இசை அக்கணம் முதல்
அவனை மீறி
இசைக்கத் துவங்குகிறது

அவனும்  இரசிகனாகி
அதனை  இரசிக்கத் துவங்குகிறான்

சல்லாபத்தில் உச்சத்தில்
இசை மெல்ல மெல்ல
தன் உருமாற
வரி வடிவாக...

ஒர் அற்புதக் கவிதை
ஜனித்துச் சிரிக்கிறது

Tuesday, July 19, 2016

மாற்றி யோசித்தலும்..

மாற்றி யோசித்தலே
கேள்விகளுக்குத் தாயாகி
மறுத்தலை
முரண்படுதலை
மாறுதலை
எதிர்ப்பைப்
பிரசவித்துப்
புளங்காகிதம் கொள்கிறது

சமூக மாறுதலுக்கும்
அஸ்திவாரமாகிறது

ஆயினும்
மறுத்தலில்
தன்முனைப்பும்
முரண்படுதலில்
விதண்டாவாதமும்
மாறுதலில்
வேரை அழித்தலும்
எதிர்ப்பில்
வன்முறையும்
மாற்றி யோசித்தலை
மடை மாற்றிவிடுவதால்

மாற்றி யோசித்ததன் பலன்
திசை மாறிப் போகிறது

மீண்டும் மீண்டும் பழமையே
நிலை என்றாகிப் போகிறது

புது வகையாய்
ருசி ருசியாய் சமைத்தல் போலவே

இரசிக்கும்படியாய்
புதுப் புதுவிதமாய் படைத்தலும்

புதுமையாய்
மாற்றி யோசித்தலைப் போலவே

இதமாய்
மாற்றிப் படைக்கக் பயில்தலும்

நாணயத்தின் இருபக்கமே
என்பதில் கவனமாய் இருப்போம்

மாற்றி யோசித்ததைச்
சிதறாமல் கொடுக்க முயல்வோம்

Monday, July 18, 2016

பிரசவ அவஸ்தையின் கடைசி நொடி உந்துதலாய்....

பாலத்தின் உச்சத்தில்
அதிக சுமையேற்றப்பட்ட
அந்த வண்டி மாடுகள்
நிலை குலைந்து போகின்றன

நிலையுணர்ந்துக்
கீழிறங்கித்
தானும் தள்ளுதல் போல்
குரலால், உடல் மொழியால்
அதீத பாவனை செய்கிறான்
அந்த்க் கிராமத்து வண்டியோட்டி

பிரசவ அவஸ்தையின்
கடைசி நொடி உந்துதலாய்
உடல் சக்தியணைத்தையும்
ஒருங்கிணைத்து மாடுகள்  உந்த
உச்சம் கடக்கிறது வண்டி

உடல் மொழியும்
ஓங்கி ஒலித்தக் குரலும்
பொய்தான் ஆயினும் கூட
உச்ச நொடிக் கடக்க
அந்தப் பாவனைக் கூட
அவசியமானதாகத்தான் படுகிறது

நம்பிக்கைக் குலையாதிருக்க
நிலையிலிருந்து சரியாதிருக்க
பகுத்தறிவுக்கு ஒப்பவில்லையாயினும்
சில சடங்கு சம்பிரதாயங்கள்
மிக அவசியமாவதைப் போலவும்...

Sunday, July 17, 2016

ஆடி மாதமும் தம்பதிகளை பிரித்து வைத்தலும் ,,,

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான
காரணங்களை பலரும் பலவிதமாக
விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து
கருத்தரித்தால்சித்திரையில்
குழந்தைப்  பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தான் இருக்குமிடத்தில்
தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,

அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்று
பிற  அசம் ங்களும்  சரியாக அமையுமாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படித் 
தம்பதிகளைப்பிரித்துவைத்தலை
ஒரு சடங்காக சம்பிரதாயமாக ஆக்கி நாமும்
காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

Friday, July 15, 2016

உணர்தலும் அறிதலும்....

" உணர்ந்து
இரசித்தவர்களால்
படைக்கப் படும்
படைப்பிற்கும்

அறிந்து
இரசித்தவர்களால்
படைக்கப்படும்
படைப்பிற்கும்

அதிக வித்தியாசம் தெரிகிறதே
அது ஏன் ? எதனால் ? "

என்றான் நண்பன்

வீட்டின் வெளியில்
பச்சைப் புல் விரிப்பில்
மாலை வெய்யிலின்
இதமான சூட்டில்
குளிர்ந்துக்  கிடந்தோம் அப்போது

மெல்லத் தலை நிமிர்ந்து
"அதை நீ
அறியச் சொல்லவா ?
அல்லது
உணரச் சொல்லவா '" என்றேன்

சற்று யோசித்தவன்
"உணரவே சொல் ? என்றான்

அவனை முன்னறையுள்
கண்ணாடி ஜன்னலருகில் நிறுத்தி
மாலைச் சூரியனைக் காட்டினேன்

சூரியன் அங்குதான் இருந்தது
ஒளியும் அதே நிலையில்தான் வந்தது
ஆயினும் சூடு மட்டும் இல்லை

"நேரடியாய் ஒளியை அனுபவித்ததற்கும்
ஒன்றின் வழி அனுபவிப்பதற்கும்
என்ன வித்தியாசம் "என்றேன்

அவன் பதில்
"சூடாக "இருக்கும் என நினைத்தேன்

 அவனும் படைப்பாளி என்பதால்
"ஜீவன் "என்றான் சிரித்தபடி
என் விளக்கத்தை இரசித்தபடி

Wednesday, July 13, 2016

ஆடி அமாவாசை ..மூதாதையர் வழிபாடு ஏன் ? இந்துக்களின் நம்பிக்கை


கிரகத்தின் சுழற்சிப் பொருத்து பகல் இரவு
நேரங்கள் மாறுபடுவதைப் போல

கிரகங்களுக் கிடையிலான தொடர்பு பொருத்து
அவைகளுக்கிடையே ஆன மாத  வருடங்களும்
மாறுபடுகின்றன

அந்த வகையில் பூமியின் ஒரு வருடமே
தேவர்களுக்கு (அதாவது தெய்வங்களுக்கு )
ஒரு நாளென்பது இந்துக்களின் நம்பிக்கை

அந்த வகையில் மார்கழி மாதமே தேவர்களுக்கு
அதிகாலை( அதனால்தான் கோவில்களில்
திருப் பள்ளியெழுச்சிப் பூசைகள் )

தை முதல் வருகிற ஆறு மாதம் பகல் பொழுது

ஆடி மாதம் முதல் தொடர்கிற ஆறு மாதம்
அவர்களுக்கு இரவுப் பொழுது

அனைவருக்கும் புரிகிறார்போல உதாரணம் எனில்
இப்படிச் சொல்லலாம்

மாவட்ட ஆட்சித் தலைவரே ஆனாலும்கூட
பகலெல்லாம் பணியாற்றி விட்டு இரவு
ஓய்வெடுக்கையில் அலுவலகத்தில்
இருக்க் மாட்டார்.ஆனாலும் கூட
மாவட்டப் பொறுப்பு அவர்வசம்தான் இருக்கும்

அவர், தான் அலுவலகத்தில் இல்லாத
காலங்களிலும் தன் சார்பாக எந்தத்
தகவலைப் பெறவும் ஒரு  பொறுப்பான
காரியஸ்தரை நியமனம் செய்து வைத்திருப்பார்

மிக மிக அவசரம் எனில் அந்தப் பொறுப்பாளர்
தகவலை உடன் ஆட்சித் தலைவருக்கு
தெரிவிப்பார். அல்லது அவ்வளவு அவசரம்
இல்லையெனில் தகவல்களைப் பதிவு
செய்து வைத்திருப்பார்.

அதைப் போலவே ஓய்வ்டுக்கச் சொல்லும்
தெய்வங்கள் தங்கள் சார்பாக உலகைக் கவனித்துக்
கொள்ளும் பொறுப்பாளர்களாக மூதாதையரை
நியமித்துச் செல்வதாகவும்...

அவர்களை
வரவேற்று உபசரித்து தங்கள் குடும்பங்களைக்
காக்குமாறு வேண்டிக் கொள்ளும் நாளே
ஆடி அமாவாசையாகும்

அவ்வாறு இங்கு வந்திருந்து தங்களை
ஆறு மாதம் காத்து இருந்தவர்களுக்கு
நன்றி சொல்லி அனுப்பி வைக்கும் நாளே
தை அமாவாசையாகும்

இந்த ஆழமான நம்பிக்கையின் பொருட்டே
இந்துக்கள் ஆடி அமாவாசையை
மற்றும் தை அமாவாசையை

தங்கள் மூதாதையருக்கு உரிய நாளாக ஒதுக்கி
சிறப்புப்பூசைகளும் படையல்களும்
படைக்கிறார்கள்

படைப்பது சரி.அதற்கு எதற்கு நீர் நிலைக்குப்
போகவேண்டும். அதையும் கோவிலில்
செய்யலாமே ?

செய்யலாம் தான். ஆனால் அதற்கும் ஒரு
காரணமிருக்கிறது.........

Tuesday, July 12, 2016

காலமானவர் பட்டியலில் நீயா ? காவியமானவர் பட்டியலில் நீயா ?

அப்போது....

இலக்கற்றத்  தொடரோட்டத்தில்
நான் தனியனாய் ஓடிக் கொண்டிருந்தேன்

காலமும்
உடன் இணைந்தே  ஓடி வந்தது

இருமுனைப் போட்டியாளர்கள் போல்
இருவருமே ஓடிக் கொண்டிருந்தோம்

எப்படியும் அதுதான் வெல்லும் என்ற
நினைப்பின் சோர்வில்
நானும் இருந்தேன்

எப்படியும்
தான்தான் வெல்வோம் என்ற
அதீத மிதப்பில்
அதுவும் இருந்தது

அதனால்..

எங்கள் ஓட்டத்தில்
வேகமுமில்லை
போட்டியில்
சுவாரஸ்யமுமில்லை

பின்னொரு நாளில்..

இலக்கிருந்தால் நான் வெல்லச்
சாத்தியமிருக்கும் எண்ணம் வர...

இலக்கை நிர்ணயித்துக் கொண்டு
சட்டென ஓடத் துவங்கினேன்

இதுவரை நான் கண்டிராத
சக்தி என் உடலில் ஏற

இதுவரை நான் ஓடியிராத
வேகம் என் ஓட்டத்தில் கூட

அலட்சிமாய் வந்த காலமும்
வேகமெடுத்து உடன் தொடர

இப்போது...

எங்கள் ஓட்டத்தில்
இதுவரை இல்லாத வேகம்
எங்கள் போட்டியில்
இதுவரை இல்லாத சுவாரஸ்யம்

"காலத்திடம் தோற்றுக்
காலமானவர் பட்டியலில் நீயா ?
அல்லது
காலத்தை  வென்று
காவியமானவர் பட்டியலில் நீயா ? " என
உள்ளொலி ஓங்கி ஒலிக்க

நான் இன்னும் வேகமெடுக்கிறேன்
காலம் கொஞ்சம் திணறியபடித்தான் தொடர்கிறது 

Monday, July 11, 2016

விசுத்தனமாய்....

செய்யக் கூடாத ஒன்றை
ஒருவன் செய்து விட
நடக்கக் கூடாத ஒன்று
நடந்து விட

அதைச் மிகச் சரியாய்ப்
பார்க்கத் தெரியாதவர்கள் பார்த்து

மிகச் சரியாய்ச்
சொல்லத் தெரியாமல் சொல்ல

அதை மிகச் சரியாய்க்
கேட்கத் தெரியாதவர்கள் கேட்டு

மிகச் சரியாய்
எழுதத் தெரியாதவரிடம் சொல்ல

அதை மிகச் சரியாய்ப்
புரிந்துக் கொள்ளாமல் புரிந்து

மிகச் சரியாய்
மிகத் தவறாய்  எழுதித் தொலைக்க

இப்படித்தான்
விஷத்தனமாய் பரவுகிறது
நம்மை அண்டும் விஷயமெல்லாம்

சமுத்திரமென
முதலவன் சொல்ல
அடுத்தவன்
"மு "வை நெடிலாக்கி
சமூத்திரம் எனச் சொல்ல
மூன்றாமவன்
"ச "வை முழுங்கி
மூத்திரம் எனச் சொன்ன கதையாய்

முற்றிலும்
உண்மைக்குத் தொடர்பற்றே இருக்கிறது
நமையடையும்  எல்லாமே

நம்மால் முடிந்தவரை
பார்த்ததை மட்டும் சொல்லப் பயிலுவோம்

மிகச் சரியாய்த்
தெரிந்ததை மட்டும் பகிரப் பழகுவோம்

விசுத்தனமாய் எழுத்திருப்பதால்
விளையாட்டாய்க்  கொள்ளவேண்டாம்

விஷப்புரளிப் பரவ நாமும்
ஒரு காரணமாய் இருக்க வேண்டாம்

முக நூலும் வலைத்தளமும்

.உண்ணுதல் என்கிற
பொது வரையரையில்
விருந்தும் கொறித்தலும்
வேண்டுமானால் ஒன்றாக வரலாம்

ஆனால் உண்மையில்
அவையிரண்டும்
முற்றிலும் வேறுதளத்தவையே

ஆற அமர்ந்து
முன் இலைவிரித்து
வகைவகையாய் வரிசையாய்
பறிமாறியபின்
மெல்ல இரசித்துப் புசிப்பதற்கும்

ஓடத்துவங்கும் பேருந்தில்
ஏற எத்தனிக்கும் பயணியாய்
காலும் மனமும் எங்கோ பரபரக்கக்
கையும் வாயும் சரசமாடுவதற்கும்

நிச்சயம்
வித்தியாசம் உண்டுதானே

ஆம்
இரசித்து உண்போருக்கு
முன்னது

ஆம்
அவசரத்திலும் உண்போருக்கு
பின்னது

Friday, July 8, 2016

பதிவுலகின் என்றும் மாறா வேதம்

கவியரசர்
காதலர்களுக்கு...

"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று " என்பார்

என்னைக் கேட்டால்
பதிவர்களுக்கும்

"இரண்டு நிலை வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
இன்று நிலைக்க ஒன்று
என்றும் நிலைக்க ஒன்று "என்பேன்

காரணம்...

எண்ணிகையே
எதிலும் எங்கும்
வெற்றியைத் தீர்மானிக்கும்
என்னும் சூழலுக்கென
இன்று நிலைக்க என்று
தொடர்ந்து எழுத ஒன்று

கால தேவனின்
தராசுத்தட்டு
சமரசம் கொள்வதில்லை
என்னும் உண்மைக்கென
என்றும் நிலைக்க என்று
சிந்தித்து எழுத ஒன்று

இதுவே ஆறாண்டில்
நான் கற்றப் பாடமே
இதுவே பதிவுலகின்
என்றும் மாறா வேதமே 

உற்ற உறுதுணையாய் ....

நித்திரைக் கன்னியுடன்
நான்ஆனந்த போகத்தில் இருக்க
எனக்குள் ஜனிப்பதுதான் ஆயினும்..

கனவுகள் இதுவரை
எனக்குக்
கட்டுப்பட்டதே இல்லை

இறந்தவருடன்
அவர் இருந்தவரை
பிறக்காதவரை இணைத்து

நடந்ததுடன்
இனி எப்போதும்
நடக்க இயலாததை  இணைத்து

எனது
இறுதி யாத்திரையில்
நான் உடன் செல்வதைக் காட்டி

குழப்பி
ப்ய்முறுத்தி
திடுக்கிடச் செய்யும்
திக்குமுக்காடச் செய்யும்...

கனவுகள் எப்போதும்
எனக்குக்கட்டுப்பட்டதே இல்லை

நினைவு எல்லை
மெல்லக் கடக்க
எனக்குள் வளர்வதுதான் ஆயினும்

கறபனையும் இதுவரை
எனக்குக் கட்டுப்பட்டதே இல்லை

எதிர்ப்படும் நிகழ்வுடன்
என்றோ நடந்ததை
மிக நேர்த்தியாய் இணைத்து

நடக்கவே இயலாததை
நடந்து கொண்டிருப்பதாய்
ஒரு மனப் பிம்பம் காட்டி

உணர்வுடன் கைகோர்த்து
உல்லாசமாய் சில நேரம்
எங்கெங்கோ உலவவிட்டு

மகிழ்வித்து
மயங்கவிட்டு
யதார்த்தம் மறக்கவிடும்
விழி திறந்து துயிலவிடும்

கற்பனையும் இதுவரை
எனக்குக் கட்ட்ப்பட்டதே இல்லை

ஆயினும்
எனக்குக் கட்டுப்பட்ட
விழிப்பினை விட
நினைவினை விட

கட்டுப்படாத
கனவும்
கற்பனையுமே
எனக்கு  உகந்ததாய் இருக்கிறது

காரணம்
அவைகள்தானே
என் படைப்புகளுக்கு
உற்ற உறுதுணையாய் இருக்கிறது

Thursday, July 7, 2016

அழகின் அலகு

மழை அழகு
மழைக்கால மழை
இன்னும் அழகு

ஆயினும்
கோடைக் கால மழையே
அழகிலும்  கூடுதல் அழகு

நட்பு அழகு
இளமைக்கால நட்பு
இன்னும் அழகு

ஆயினும்
சோதனையில் தொடரும் நட்பே
அழகிலும் கூடுதல் அழகு

கவிதை அழகு
புரிகிறக் கவிதை
இன்னும் அழகு

ஆயினும்
பயன்தரும்  கவிதையே
அழகிலும் கூடுதல் அழகு

அழகே அழகு
பருவ அழகு
இன்னும் அழகு

ஆயினும்
முதிர்ச்சியில் மிளிரும் அழகே
அழகிற்கெல்லாம் கூடுதல் அழகு

ஏனெனில்
அழகு அழகுபெறுவது
அழகினால் மட்டுமாயினும்

அழகு சிறப்புப் பெறுவது
நிச்சயம் அது தரும்
பயன்பொறுத்துத்  தானே


Wednesday, July 6, 2016

விஸ்வ ரூபம் சுயமே

"குட்டையானவனின் "
சிரமம் கருதி
சிரமமாயினும்
"குனிந்தே " நடைப்  பயில்கிறேன்

"குட்டையானவன் "மட்டுமல்ல
கடந்துச்  செல்வோரும்
என்னைக்
"கூனனாகவே "மதிப்பீடு செய்கிறார்கள்

"நெட்டையானவனின்"
மதிப்புக் கருதி
சிரமமாயினும்
"உயரம் கூட்டிச்  "
"சமமாகவே "நடைப் பயில்கிறேன்

"உயரமானவன் "மட்டுமல்ல
உடன் கடப்போரும்
என்னை
"பெருமை விரும்பியாய்"
மதிப்பீடுச்  செய்கிறார்கள்

எரிச்சலுற்று நான்
"இயல்பாய் "இருக்கத் துவங்குகிறேன்

குட்டையானவன்
ஏனோ வியந்து
நிமிர்ந்துப் பார்க்கிறான்

நெட்டையானவன்
ஏனோ இயல்பாய்
உடன் நடக்கிறான்

சுயத்தின் சுகமறிய
சுயத்தின் பலமறிய
இப்போதெல்லாம்
நான் என்னைக்
கூட்டிக் குறைப்பதில்லை

சுயமே விஸ்வரூபம்
விஸ்வரூபம் சுயமே
எனப் புரிந்ததால்
இப்போதெல்லாம்
"வெளிமதிப்புப் "பொறுத்து
என் சிந்தனையைத் தொடர்வதில்லை  

Tuesday, July 5, 2016

அடுத்தப் பதிவர் சந்திப்பு

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி
முடிவுறும்போதும் , அடுத்துப் போட்டி
 நடக்க இருக்கிற நாட்டை முடிவு செய்து
அறிவித்து விடுகிற மாதிரியே....

சென்னையில் பதிவர் சந்திப்பு முடிந்த
நாளில்  அடுத்த சந்திப்பு நடத்த விரும்புகிற
மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட
சென்னை மாவட்டப் பதிவர்கள் அனைத்து
மாவட்டப் பதிவர்களையும் அணுகி முடிவெடுக்க
முயன்றார்கள்

அப்போது ஈரோடு மாவட்டப் பதிவர்களும்
மதுரை மாவட்டப் பதிவர்களும் தங்கள்
மாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற
முனைப்புடன் இருந்தார்கள்

முடிவாக அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோட்டில்
நடத்த முடிவெடுத்து அது குறித்து மேடையிலும்
அறிவிப்பு வெளியிடப்பட்டது

சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக ஈரோட்டில்
நடத்த முடியாமல் போனதால் அந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி மதுரை மாவட்டப் பதிவர்கள்
அடுத்த பதிவர் சந்திப்பினை மிகச் சிறப்பாக
நடத்தி முடித்தார்கள்

மதுரை மாவட்டப் பதிவர்கள் சந்திப்பில்
பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட
புதுகைப்  பதிவர்கள் அடுத்த சந்திப்பு தங்கள்
மாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற
கோரிக்கையை முன்வைத்து அந்த சந்திப்பில்
ஒப்புதல் பெற்று மிகச் சிறப்பான ஒரு பதிவர்
சந்திப்பை புதுகையில் நடத்தினார்கள்

சந்திப்பின் சுவாரஸ்யம்,கூடுதல்
 தொடர் நிகழ்வுகள் மற்றும் சந்திப்பு ஏற்படுத்திய
மலைப்பின் காரணமாகவோ என்னவோ
புதுகைச் சந்திப்பில் எந்த மாவட்டத்தைச்
சார்ந்தவர்களும் அடுத்த சந்திப்புக் குறித்து
விருப்பம் தெரிவிக்கவில்லை

அடுத்த பதிவர் சந்திப்பு நடக்கும் மாவட்டம்
குறித்து முடிவெடுக்கவும் முடியவில்லை

இந்த நிலையில் புதுகைச் சந்திப்பின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து தன் பங்கினை
 மிகச் சிறப்பாகச் செய்த முத்து நிலவன் ஐயா அவர்கள்
பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் அடுத்த
சந்திப்பிற்கான ஆலோசனைகள் வ்ழங்குமாறுக்
கோரி இருந்தார்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கான கால
அவகாசம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது
ஆறுமாத காலம் இருக்கும்படியாக தேதியையும்

ஈரோடு  பதிவர்களுக்கு முன்னுரிமை அளித்து
அவர்களால் இயலவில்லை எனில் விருப்பமுள்ள
பிற மாவட்டத்துப் பதிவர்களை
அணுகலாம் என்பதை எனது தனிப்பட்ட
ஆலோசனையாகப் பதிவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்...