Sunday, August 30, 2020

மாண்டிச்சோரி பிறந்தநாள்

 .ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்

ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்

கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி

பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்


குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை

அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை

உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்

அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா


பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை

குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என

எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்

பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா


திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்

புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை

அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்

வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா


இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்

தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற

சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை

இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா


(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)(சிறு செடியை பிடுங்கி நட்டாலும் வேரைப்போலவே அது இருந்த மண்ணையும் சேர்த்தே எடுத்து நடப் பழகிய நமக்கு இவர் கூற்று புரிதல் கடினம் இல்லையே) 

Saturday, August 29, 2020

அது ஒரு வஸந்த் & கோ காலம்

 நாற்பதாண்டுகளுக்கு முன்பு வாங்கிய

ஒரு இரும்புக்கட்டிலில் அமர்ந்து அதனுடன்

சேர்த்து வாங்கிய இரும்பு பீரோவைப் பார்த்தபடி

இதை எழுதத் துவங்குகிறேன்..


இப்போது அவசியத் தேவையோ இல்லையோ

நினைத்ததும் இலட்சம் ரூபாய் ஆனாலும்

கிரடிட் கார்டை தேய்த்து உடன் பொருளை

வீட்டுக்குக் கொண்டு வருகிற இன்றைய 

தலைமுறையினருக்கு இந்தப் பதிவு

வித்தியாசமானதாகவோ ஏன் ஒருவேளை

கேலிக்கூத்தானதாகவோ தோன்றவே அதிகச்

சாத்தியம்


எண்பதை ஒட்டிய காலங்களில் ஒரு

நடுத்தர ஊழியரின் சம்பளம் என்பது

உத்தேசமாக எண்ணூறு தொள்ளாயிரம்

என்கிற அளவிலேயே இருக்கும்              ..நான்கு இலக்கச் சம்பளம்

என்பது உயர்தரப்பணியாளர்களைக் குறிக்கும்

ஒரு குறியீடாகவே இருந்த காலம்..


கிராமத்தில் இருந்து படித்து

முடித்து அரசுப் பணி கிடைத்து வெளியூர்

வேலைக்குச் செல்வதும் அந்த வேலையின்

காரணமாகவே திருமணத்திற்குப் பெண்கள்

எளிதாக அமைவதுமாக இருந்த காலம்....


அந்தக் காலக் கட்டத்தில் சீர் வரிசையாக

வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும்

கிடைத்துவிடும் சாத்தியம் இருந்த போதும்

புரட்சிகர சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு

வரதட்சணை சீர்வரிசை வாங்கக் கூடாது என்பதை

இலட்சியமாகக் கொண்ட பலருக்கு

அது ஒரு சோதனைக் காலமே.


பெண் எளிதாகக் கிடைத்தாலும் வசதியான

ஆடம்பரமான வாழ்வுக்கு ஏற்ப ஊதியம்

இல்லையென்றாலும் வருகிற் பெண்ணும்

பெண்ணும் பெண் வீட்டாரும் கௌரவமாக

நினைக்கிற அளவு வீட்டில் அத்யாவசியத்

தேவையெனச் சொல்லத் தக்க கட்டில் பீரோ

குக்கர் கேஸ் ஸ்டவ் டேபிள் நாற்காலி 

மற்றும்தகரப் பொட்டி அல்லாது ரெக்ஸின

சூட்கேசாவது இருக்கவேண்டும் என்கிற

தேவை இருந்த காலம்..


குறைந்த பட்ச மேற்குறித்த தேவைகளை

நிறைவு செய்ய அன்றைய சம்பளத்தில்

குறைந்த பட்சத் தேவை நான்கு மாதச்

சம்பளமாவது வேண்டி இருக்கும்..


கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு

முடிந்ததை அனுப்பியது போக

இங்கு வேலை பார்க்கும் இடத்துத் தேவையான்

ரூம் வாடகை சாப்பாட்டுச் செலவு

இவையெல்லாம் எப்படித்தான்

சிக்கனமாகச் செய்தாலும்

கூட மாதம் இருபதோ முப்பதோ

மிச்சப்படுத்துவதற்குக் கூட பிரம்மப்பிரயத்தனப்

படவேண்டும்....


புரட்சிகர எண்ணத்தையும் விட்டுக் கொடுக்க

முடியாது...அத்யாவசியத் தேவையையும்

நிறைவு செய்யாது இருக்க முடியாது

பணம் சேர்த்து பொருள் வாங்கவும் முடியாது

இப்படிப் பட்ட இடியாப்பச் சிக்கலில்

இருந்த என்போன்ற நடுத்தர மக்களுக்கு

வாயத்த வரப்பிரசாதம் தான் வஸந்த & கோ

மாதிரியான தவணையில் பொருள் கொடுக்கும்

நிறுவனங்கள்....தொடரும்

Wednesday, August 26, 2020

1500 + 1-------

தெரிந்ததை

தெரிந்தபடி

பிறரும் தெரிந்துகொள்ளும்படி

அதிகம் சுவை கூட்டாது


புரிந்ததை

புரிந்தபடி

பிறரும் புரிந்து கொள்ளும்படி

அதிகம் மெருகூட்டாது


தெளிந்ததை

தெளிந்தபடி

பிறரும் தெளிவுறும்படி

அதிகம் விளக்க முயலாது


கவிதையை விரும்புவோர்

முகம் சுழிக்காது

கவிதையை வெறுப்போர்

விலகி ஓடிவிடாது


கவிதையாயும் இல்லாது

உரையாகவும் இல்லாது

ஏதோவாக

யாதோவாக


பத்தாண்டுகளாக

எவ்விதத் தொய்வுமின்றி

தொடர்ந்து எழுதுவதை...


நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட

நாட்டினர் தொடர்வதும்

நானூறுக்கும் மேற்பட்டோர்

தொடர்ந்து இணைந்து இருப்பதும்


ஆறு இலட்சத்திற்கும்

மேலாக படிக்கப்பட்டிருப்பதுவும்

அதிக மகிழ்வளிக்க..


அதீத உற்சாகத்தோடும்

எனக்கான எல்லையினை

இன்று இன்னும் விரிவுபடுத்தி வைக்கிறேன்...


பதிவர்களாகிய

உங்கள் ஆதரவோடும்

நிறைவான ஆசியோடும்...

Monday, August 24, 2020

ஆத்ம ஞானமும் அல்ப ஞானமும்ஆரம்பத்தில் 

சீனாவில்

கொரோனாவால் ஏற்பட்ட

ஒரு சில மரணத்திற்கே

பதறிய மனம்.....


இப்போது

உலகெங்கும்

இலட்சக்கணக்கில் என்றபோதும்

சமநிலை பேணுகிறது...


மாலைச் செய்தியில்

மரண அறிக்கையினைக் கேட்கக் கேட்க

உறவுகளை இழந்தது போல்

நடுங்கிய மனம்....


இப்போது

அடுத்த வீட்டில் என்றாலும் கூட

அதை ஒரு தகவலாக மட்டுமே

கணக்கில் கொள்கிறது...


புராணங்களும்

போதனைகளும்

தராத ஞானத்தை

ஒரு நுண்கிருமி தந்து போனது கூட

ஒருவகை நகை முரணே...


இருந்தும் உண்ணாதிருத்தலும்

இல்லாமையால் உண்ணாதிருப்பதும்

விரதக் கணக்கில் சேர்த்த கதையாய்...


உணர்ந்து தெளிந்து பெறும்

ஆத்ம ஞானமும்...


இயலாது அடங்கிப் பெற்ற

இந்த அல்ப ஞானமும்..

இப்போது ஒரே கணக்கில்....

Wednesday, August 19, 2020

அழிவின் விளிம்பில் ....

 இதுதான் வாழ்க்கை !  வெள்ளம் உணர்த்தும் பாடம் !


“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 

முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”


இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு


தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.


இப்போது அவர்கள் பிரச்சினை

எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல

எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.


முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 


பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.


பரிசுப்பொருள்கள்

தெய்வப்படங்கள்

புகைப்பட ஆல்பங்கள்

ஆடைகள்

உள்ளாடைகள்

புத்தகங்கள்

இசைக்கருவிகள்

இசைப்பேழைகள்

ஸ்பூன்கள்

கண்ணாடிக் கோப்பைகள்

பொம்மைகள்

கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்

உடல் வாசனையுள்ள போர்வைகள்


அழகு சாதனப்பொருள்கள்


கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.


நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும். 


எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

 

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.


ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.


அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.


தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது. 


அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது. 


எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.


கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.


வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.


சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள். 


ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.


ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ! 


முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.


பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...


வாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே,  நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்...  என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு (?)...  என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... "கடைசி"யா இதுல ஏதாச்சும்  கைகுடுத்துச்சா...???.கை கொடுக்குமா...??? .. 


சிந்திப்போம்... 


இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ  எதை விட்டுச் செல்ல போகிறோம்...??? 


நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...??? 


இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல்  நல்லவைகளை பேசி, முடிந்தவரை  பிறருக்கு உதவி  செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!


நான் ௮ப்படித்தான் வாழ நினைக்கிறேன், நீங்கள்👉?

Friday, August 14, 2020

பொறுப்பும் சுதந்திரமும்...

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குரைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
யாரைப் பார்த்தும்  குரைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

Thursday, August 13, 2020

இருக்கும் இடம் அறிவோம்...

 மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு......


பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.


"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"


அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார்.  


ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார்.  


"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையே சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."  


"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.  அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."  


"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.  மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.  இது ஒரு நீண்ட பட்டியல்."  


"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.   நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.  வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."


"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.  என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."  


"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல.  நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால்.  நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."   


"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.  நான் என்னைப் பார்த்துக் கொள்வது போல் என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களும் அவரவர் வாழ்வைப் பார்த்துக் கொள்ளட்டும். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.  அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.  


அரங்கத்தில் கைதட்டல் ஓயவே இல்லை.  


ஆக 

உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்.  வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.  உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக் கொள்ளுவீர்கள். அது இந்த உலகத்தில்  எத்துனை தேடினாலும் கிடைக்காது.   சொல்லப் போனால் மற்றவர்களால் கிடைக்கும் சந்தோஷம் என்பது நிரந்தரமே அல்ல..... திரும்ப எதிர்பார்க்கும் தருணத்தில்  கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.  வாழ்க்கையே நிரந்தரம் இல்லாத போது சந்தோஷம் மட்டும் நிரந்தரமா என்ன ?   மனித மனத்தின் எதிர்பார்ப்புகளைப் போல அதுவும் மாறிக் கொண்டே இருக்கும்.  மற்றவர்கள் உங்கள் சந்தோஷத்தின் ஒரு கருவியே தவிர மற்றபடி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சின்ன சின்ன சந்தோஷங்கள் எதில் கிடைத்தாலும் அதில் ஆனந்தம் கொள்வது அவரவர் கையிலே. மனதிலே.  மகிழ்ச்சியும் அப்படியே....  மற்றவர் என்பதில் அனைத்து  குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உற்றார், உறவினர்களும்  அடக்கம்.  அவரவர் சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்வது அவரவர் கையில் மட்டுமே.எல்லா சமயத்திலும் நம்மை மற்றவர் தான் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது முடியுமா....சந்தோஷம் என்பது உங்களுக்கு உள்ளே உள்ளது.  அதை உங்களுக்குள்ளே தேடுங்கள். கட்டாயம் கிடைக்கும். வெளியில் இல்லவே இல்லை...... தேடாதீர்கள். கிடைக்காது....படித்ததில் பிடித்தது..

Wednesday, August 12, 2020

காரணம் தெரியவில்லை..

 கூடிய வயதால்

வந்த முதிர்ச்சியா..


கொரோனாக் கொடுமைகளைக் 

காண வந்த தளர்ச்சியா...


உடன் பயணித்தோரை

தொடர்ந்து இழக்கும் அதிர்ச்சியா...


காரணம் எதுவெனத் தெரியவில்லை..


ஆனால்

இப்போதெல்லாம்

சந்திக்க நேர்பவர்களையெல்லாம்...


முன் அபிப்பிராயம் ஏதுமின்றி

முதல் சந்திப்பாகவே எண்ணி

உறவாடத் துவங்குகிறேன்


கடைசிச் சந்திப்பாகவும் இருக்கலாம் எனும்

பயத்துடனும் அதீத அக்கறையுடனும்..

தொடர்பு கொள்கிறேன்


சந்திப்பு மிக இனியதாகவே

பயனுள்ளதாகவே தொடர்கிறது


இப்போது வந்து தொலைத்த

இந்தப் பட்டறிவு

இளமையிலேயே                                                        கற்ற அறிவாய்                                                  வந்து தொலைத்திருக்கலாமே

எனத் தோன்றும்  எண்ணத்தை மட்டும்

ஏனோ புறக்கணிக்க முடியவில்லை...

Tuesday, August 11, 2020

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

என் வலைப்பக்கத்திற்கு ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன் என எனது  நண்பன் நேற்று எனக்கு செய்தி அனுப்பி இருந்தான்..ஏன் என நான் என் பாணியில் விளக்குவதை விட அந்த வரிகள் இருக்கும் முழுப்பாடலையும் விளக்கத்துடன் கொடுத்தாலே போதும் அவனே புரிந்து கொள்வான் என இப்பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளேன்..என் எண்ணம் சரிதானே.... *கணியன் பூங்குன்றனார்* 


சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி 

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.


 *யாதும் ஊரே யாவரும் கேளிர்*


இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.

பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின்

முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.


முழு பாடலும் அதன் பொருளும்👇.


*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*

*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*

*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*

*சாதலும் புதுவது அன்றே,*

*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,* 

*முனிவின் இன்னாது என்றலும் இலமே* 

*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*

*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*

*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*

*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்*

*ஆதலின் மாட்சியின்*

*பெயோரை வியத்தலும் இலமே,*

*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*


*பொருள்*👇


*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* 


எல்லா ஊரும் எனது ஊர்.

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று

வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.


*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*


'தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்

சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.


*"நோதலும் தனிதலும்*

*அவற்றோ ரன்ன"*


துன்பமும் ஆறுதலும் கூட

மற்றவர் தருவதில்லை.

மனம் பக்குவப்பட்டால்,

அமைதி அங்கேயே கிட்டும்.


*"சாதல் புதுமை யில்லை"*


பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,

இறக்கும் நாளும் ஒன்று உண்டு.

இறப்பு புதியதல்ல. அது

இயற்கையானது.

எல்லோருக்கும்

பொதுவானது.

இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்

எதற்கும் அஞ்சாமல்

வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.


*"வாழ்தல் இனிது என* *மகிழ்ந்தன்றும் இலமே*

*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*


இந்த வாழ்க்கையில்

எது, எவர்க்கு, எப்போது,

என்ன ஆகும் என்று

எவர்க்கும் தெரியாது.

இந்த வாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்.

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.


*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"*


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது.

நாம் வாழ 

மழையையும்

தருகிறது. இயற்கை வழியில் அது அது

அதன் பணியை செய்கிறது.

ஆற்று வெள்ளத்தில்,

கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,

வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்கொண்டு

இருக்கும்.

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.


*"ஆதலின்* *மாட்சியின்*

*பெரியோரை வியத்தலும்* *இலமே;*

*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"*


இந்த தெளிவு

பெற்றால்,

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து

மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.

சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும்

வேண்டாம்.

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு

அவற்றில் அவரவர்கள்

பெரியவர்கள்.


*இதை விட வேறு எவர்*

*வாழ்க்கைப் பாடத்தை*

*சொல்லித் தர முடியும்?*💐💐

Sunday, August 9, 2020

மதங்களும் மரணமும்....

 மதங்களும் மரணமும்....


பொல்லாத கோபத்துடன்

மதங்களை முறைத்துப் பார்த்தபடி

மரணம் இப்படிப் பேசத் துவங்கியது......


" என்னைக் காட்டிப் பயமுறுத்தியோ

இல்லை என் அணைப்புக்குப் பின் 

மறுமையில் கிடைக்கும்

சுகங்கள் என

அல்லது தண்டனைகள் என

மகிழ்வூட்டியோ அச்சமூட்டியோ

மனிதனிடம் மனச்சாட்சியை

உருவாக்கிக் கொடுங்கள்..

.

அதன் காரணமாய்

எப்படியோ தனிமனித ஒழுக்கமும்

சமூக ஒழுங்கும்

சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பும்

சரியானால் சரியானால் சரி

எனச் சொல்லி உங்களுக்கு 

என்னைப் பயன்படுத்திக் கொள்ளும்

அதிகாரம் அளித்திருந்தேன்.


நீங்கள் சடங்குகளும் சம்பிரதாயங்களுமே

நம்பிக்கையை ஏற்படுத்தும்

அதன் தொடர்ச்சியாய்

மதமும் வளரும்

மனச் சாட்சியும் உருவாகும் என்றீர்கள்


எதற்குச் சடங்குகள்

எதற்குச் சம்பிரதாயங்கள் என்பதைத்

தொடர்ந்து போதிக்காமையால்

காரணம் மறந்த காரியங்களாய்

அவைகள் தொடர

அதனையே பித்தலாட்டம் எனக் காரணம் சொல்லி

பகுத்தறிவு என புதுப் பூச்சாண்டிக்காட்டி

மனிதன் அனைத்தையும் பாழ்ப்படுத்திவிட்டான்

எம் நோக்கத்தையே சீர்குலைத்துவிட்டான்.


அதன் காரணமாய்

மனச்சாட்சியின் மூலம்

நிலை நிறுத்தப்பட வேண்டிய 

ஒழுக்கமும் தர்மமும் இப்போது

இப்போது சட்டத்தினாலும் தண்டனையாலும்

என்றாகிப் போனது


சமூக ஒழுக்கமும்

சுற்றுப்புறச் சூழலும்...

கேலிக் கூத்தாகிப் போனது....


ஆம் இனி நியாய மான முறையில்

சீர் செய்யவே முடியாது என்கிறபடி

நாசமாகிப் போனது..


எனவே இனியும் 

உங்களை நம்பிப் பயனில்லை

என முடிவெடுத்துவிட்டேன்


நானே களத்தில் இறங்கி

நிலைமையை கட்டுப்படுத்த

உறுதிஎடுத்துவிட்டேன்.


அதனால்.. இனி...                                          உங்கள் பிழைப்புக்கெனவே ஆகிப் போன

கோவில் குளங்கள்

மசூதிகள் தேவாலயங்கள் எல்லாம்

அடைபடும்...


பூசைகள் தொழுகைகள்

பிரார்த்தனைகள் எல்லாம்

சிலகாலம் நிறுத்தப்படும் சரியா..."

எனச் சொல்லி தலைகவிழ்ந்திருந்த

எல்லா மதங்களையும் ஒரு நோட்டம் விட்டது


யாரும் பதில் பேசவில்லை


அதில் உலகளாவிய

எனப் பெயர் கொண்ட மதம் மட்டும்

மெல்லத் தலைத் தூக்கி...

"எங்களாலேயே இத்தனை ஆண்டுகள்

முழுமூச்சாய் முயன்றும் முடியவில்லை

நீ தனியாய் எப்படி....." என

மெல்ல முனங்கியது.....


சபதம் போட்டுச் சிரித்த மரணம்

இப்படிப் பிரகடனம் செய்தது


"ஆம் தனியாகவே

நான் மட்டுமே இந்த ஆண்டில்

நான் யார் எனபதை நிரூபிக்கப் போகிறேன்


உங்களைப் போல இனி

நிலையாமைக் குறித்து

பாடம் நடத்திக் கொண்டிருக்கப் போவதில்லை

நிலையாமையை 

மனிதர்களுக்குக் கண்ணெதிரேயே காட்டப் போகிறேன்


அறிவின் ஆணவத்தில்

எதற்கும் அடங்காத மனிதனை

அடக்கிவைக்கப் போகிறேன்

வீட்டிற்குள் முடக்கிவைக்கப் போகிறேன்....


அதன் காரணமாகவே

அவனை மட்டுமல்ல

நாசமாகிக் கொண்டிருக்கும் இந்தப் பூமியையும்-

சீராக்கப் போகிறேன் " எனச் சொல்லிச்

குரூரமாய்ச் சிரித்தபடி- எங்கோ

வெறித்துப் பார்த்தது


மதங்கள் மெல்ல மெல்ல

பயம் விலக்கி

தலை நிமிர்த்தி மரணம் பார்த்த

திசையை நோக்க.....


அது சைனாவின் ஹூஹானாய் இருந்தது..


Wednesday, August 5, 2020

இதையும் வாசித்து வைப்போம்...

*ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்*

உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்கள்.

உண்மை என்ன என்று அறிந்து கொள்வோம்.

#ஐம்பதாண்டு_திராவிட ஆட்சியின் மறுபக்க அவலம் இது. 

          திராவிடம் எந்த கொள்கைகளில் மிகவும் பிரதானமானது இந்தி எதிர்ப்பும், இந்தி பேசும் வடநாட்டவர் எதிர்ப்பும். 

       இவற்றை மையமாக வைத்தே திராவிடம் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தது. இந்த கொள்கைகளை இன்றளவும் உயர்த்தி பிடித்து வருகிறது. 

 திராவிட  தமிழன் அடைந்தது என்ன...? இழந்தது என்ன...? 
என்று எந்த அறிவாளியாவது யோசித்து பார்த்தது உண்டா...?

         தமிழகம் தனக்கு தேவையான எல்லா பொருட்களையும் தானே உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல. 

       இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்கள், இயற்கை பொருட்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வர்த்தகத்தை செய்கின்றனர். 

          திருப்பூரின் பின்னலாடை, கோவையின் இயந்திரபொருட்கள், சென்னையின் ஆட்டோ மொபைல் பொருட்கள் இதெல்லாம் தமிழகத்தின் உற்பத்தி பொருட்கள். 

       அதே போல ஆந்திராவில் அரிசி.,  
குஜராத்தில் டைல்ஸ், வைரம், டெக்ஸ்டைல்ஸ்.,
 மேற்கு வங்கத்தில் சணல், பட்டு, பால் பொருட்கள்., 
பஞ்சாப்பில் கோதுமை, கனரக இயந்திர தயாரிப்பு.....
 என அந்தந்த மாநிலங்கள் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றன. 

 உற்பத்தி செய்த பொருட்களை இந்தியா முழுக்க விற்பனைக்கு அனுப்பி வைத்து வர்த்தகம் செய்கின்றன. 

       இதற்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பது தெரிகிறது. பொறுமையாக அடுத்து படியுங்கள். 

        எந்த மாநிலத்திற்கு சென்று பார்த்தாலும் அந்தந்த மண்ணின் மைந்தர்கள் வர்த்தகத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

        மும்பை சென்றால் மராட்டி, குஜராத் சென்றால் குஜராத்தி, பஞ்சாப் சென்றால் பஞ்சாபி.......

         எல்லா மாநிலத்திலும் அந்தந்த மக்கள்தான் வர்த்தகம் செய்து கொண்டிருப்பார்கள். மிஞ்சிப் போனால் ஐந்து சதவிகிதம் பிற மாநில வியாபாரிகள் இருப்பார்கள். 

தமிழகத்தில் இது அப்படியே தலைகீழ். 
ஐந்து சதவிகிதம் தமிழர்கள் வியாபாரம் செய்கிறார்கள். 
95% பிற மாநிலத்தவர்கள் இங்கே வர்த்தகம் செய்கிறார்கள். 

உடனே நம்மூர் சில்லறை விற்பனை கடைகளை கணெக்கெடுக்க வேண்டாம். 
மொத்த விற்பனையாளர்களை கணக்கெடுங்கள் புரியும். 

இரண்டு ரூபாய் மதிப்புள்ள 
பெண்கள் தலைக்கு அணியும் ரப்பர் பேண்ட் முதல் கோடிகளில் புரளும் பல தொழில்கள் அனைத்தும் நம்மாள் சேட்டுகள் என அழைக்கப்படும் ஹிந்தி பேசும் 
வட மாநில மக்களின் கைகளில் உள்ளன. 

 பல மாநிலங்களில் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து  கொள்முதல் செய்து வந்து 
நம்மூர் வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு விற்கும் ஹோல்சேல் கடைகளை நடத்துகின்றனர். 

           ஏன் நம்மூர் வியாபாரிகள் அந்த மொத்த வியாபாரத்தில் பிரகாசிக்க முடியவில்லை....? 

         ஒரே காரணம் ஹிந்தி தெரியாது. 
சென்னையின் கும்மிடி பூண்டியை தாண்டினால் சிங்கிள் டீ வாங்க வேண்டுமானாலும் தெலுங்கு அல்லது ஹிந்தியில் தான் கேட்டு வாங்க முடியும். 

              நமக்குத்தான் ஹிந்தி பகையாயிற்றே...? 

        மொத்த விலையில் விற்பனை செய்யும் ஒரு பேன்சி கடை வைக்க வேண்டுமானாலும் கூட நான்கு வட மாநிலங்களுக்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். 

 ஸ்டிக்கர் பொட்டுக்கு  மும்பை, கண்ணாடி வளையல்களுக்கு கொல்கத்தா, விலை மலிவான நக பாலிஸ் லிப்ஸ்டிக்களுக்கு டெல்லி,  கோன் மெஹந்திகளுக்கு ராஜஸ்தான், ஆடைகளில் வைக்கும் ஜரிகை ஜிகினாக்களுக்கு ஹைதராபாத் என உற்பத்தியாகும் இடங்களுக்கு சென்று கொள்முதல் செய்தால் தான் ஒரு மொத்த வியாபார பேன்சி கடை வைக்க முடியும். 

         நாம் தான் டுமீலர் பரம்பரையாயிற்றே ஹிந்தி நமக்கு தெரியாது. சென்னையை தாண்டினால் ஊமை மொழி தான் பேச தெரியும். இதில் எங்கே போய் உற்பத்தியாகும் பல மாநிலங்களுக்கு போய் 
கொள்முதல் செய்வது....? 

          இதைத்தான் குஜராத், ராஜஸ்தான் மாநில சேட்டுகள் பயன்படுத்தி மிக எளிதாக வர்த்தகம் செய்கின்றனர். 

          எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கட்டுமான பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட், பேன்சி, ஸ்டீல் தகடுகள், தோல் பொருட்கள், பொம்மைகள்........ என தமிழ்நாட்டில் நமக்கு தேவையான பொருட்கள் 90% சேட்டுக்களின் மொத்த விலை கடைகளிலிருந்தே கைமாறி சில்லறை விற்பனையாக நமக்கு வருகிறது. நமது தமிழக வியாபாரிகள் கிட்டத்தட்ட சேட்டுக்களை நம்பியே காலம் தள்ளும் நிலையில் உள்ளனர். 

 திராவிட  சாதனைகளில் ஒன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இதனால் தனி ஹிந்தி ஏரியாக்களே உருவாகி விட்டது. 

        சென்னையின் பாரிமுனை, சௌகார் பேட்டை போன்றவை மினி மும்பையாக மாறி விட்டது. உள்ளே சென்றால் முழுக்க முழுக்க ஹிந்தி பேசும் மக்கள் தான். 

       வடநாடுகளில் மட்டுமே கிடைக்கும் இனிப்பு கடைகள், மசாலா டீ கடைகள், ஹிந்தி DVD விற்கும் கடைகள், ஹிந்தி போஸ்டர்கள், ஹிந்தி சண்டைகள், பான் மசாலா கடைகள், வட இந்திய உணவகங்கள், ஹிந்தி மொழி பள்ளி......

        ஹிந்தியை விரட்டுவோம் என சொல்லிக்கொண்டு ஆட்சி செய்த திராவிட ஆட்சியாளர்கள் இந்தி பேசும் வட நாட்டவர்களுக்கு அந்தந்த பகுதிகளையே விற்று விட்டனர் என சொல்லலாம். 

          சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களும் அப்படித்தான் உள்ளன. 

       தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதி, 
திருச்சி சிங்காரத்தோப்பு, 
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் என வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் சேட்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன. 

     பதிவை பார்த்து யாரும் #தமிழ் தேசியம் பேசுகிறேன் என்று எண்ணி கம்பு சுத்த வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் எவரும் சட்டத்திற்குட்பட்டு எந்த தொழிலையும் செய்யலாம். சேட்டுகள் அதைத்தான் செய்கிறார்கள். 

        நம்மவர்கள் எதனால் தங்கள் மண்ணில் வர்த்தகத்தை கோட்டை விட்டார்கள் என்று சற்று சிந்திக்கவும். 

         திரைக்கடலோடி திரவியம் தேடிய நமது மூதாதையர்கள் தமிழை மட்டுமா அறிந்து வியாபாரம் செய்தனர். 

         இந்து மகா சமுத்திரம் தாண்டி ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், சீனம்  அனைத்திலும் கப்பலை செலுத்தி தமிழன் தனது வர்த்தகத்தை நடத்தினான் என்றால் பல மொழிகளையும் அவன் கற்றிருந்ததனால் அது சாத்தியமானது. 

       இன்றைக்கு  இந்திய மொழியான ஹிந்தியை கூட அறியாததால் தமிழகத்திற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற கேவலமான நிலைக்கு வந்து விட்டது

        சற்று சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் குறைந்தது ஐந்து லட்சம் சேட்டுகளாவது வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். அவனும் உழைத்து தான் முன்னேறி சொந்த கடை, சொந்த வீடு என்று உயர்ந்த நிலைக்கு வருகிறான். 

       ஆனால் இது யாருக்கு கிடைத்திருக்க  வேண்டிய வாய்ப்பு என யோசியுங்கள். தமிழர்கள் உழைப்பதில், திறமையில் வடநாட்டு சேட்டுக்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாம் அவர்களிடம் ஏன்  தோற்றோம்...? 

        அவனுக்கு வியாபாரம் செய்ய தேவையான மொழி அறிவு உள்ளது.  திராவிடர்களின் பேச்சை கேட்டு வியாபார தொடர்பிற்கான இந்தி மொழியை நாம் இழந்தோம். 

      இன்று....,
 சேட்டு எலக்ட்ரிகல் கடை வைத்தால் அவனை அண்டி இரண்டு எலக்ட்ரீசியன்கள் இருக்கிறார்கள். ஸ்டீல் தகடு கடை சேட்டு வைத்தால் அவனை சார்ந்து  இரண்டு மீன் பாடி வண்டி லோடு  மேன்கள் தொழில் செய்கின்றனர். 

இதெல்லாம் நமது #தமிழகத்தின்_சாபக்கேடு
வேறு என்னத்தை சொல்ல....? 

இங்குள்ள மராத்தியர்களும் என்னிடம் அன்பாக கேட்பதுண்டு நீங்கள் ஏன்  ஹிந்தியை வெறுக்குறீர்கள் என்று..

ஆக,நாம் ஹிந்தியை கற்று தெரிந்து கொண்டால் ஒன்றும் குடிமூழ்கி போகாது. திராவிட கட்சிகளின் வண்டவாளங்களை நாம் தெரிந்து கொள்ளவும் உதவும். 
தெரிந்தால் இவர்கள் அரசியலில் அனாதையாக்கபடுவார்கள். 
அந்த பயத்தில்தான் ஹிந்தி பயின்றால் தமிழ் அழியும் என்று முட்டாளாக இருக்கும் தமிழனின் மனதில் விஷத்தை கலக்கிறார்கள்...

நாம் பல மொழிகள் கற்றால் நமது அறிவும், ஆற்றலும் பெருகுமே தவிர நமது தமிழ் மொழி அழியாது..
கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி...

வேறு மொழி கற்றால் தமிழ் அழியும் என்பது கோமாளிகளின் கூற்று ...அவனுக்கு தமிழனை வெளியே எங்கும் செல்லமுடியாத படிக்கு அடிமையாகவே வைத்திருக்க ஆசை....


உயிரை விடவும் மேலாக தமிழ்மொழியை நேசிப்போம் சுவாசிப்போம்....
மற்ற மொழிகளையும் நேசித்து வாசிப்போம்..

நன்றி....இது யாரோ ஒருவரின் கருத்து என்று தாண்டிச் செல்லாமல் இனியாவது யோசித்து நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள்...மற்ற மொழிகளை வெறுக்காமல் குழந்தைகளுக்கு படிக்க கற்றுக் கொடுங்கள்...(படித்ததும் பகிரப்பிடித்தது...)