Saturday, June 30, 2012

கூண்டில் அடைபட்ட சிங்கம்

கிடைக்கிற மூன்று கற்களை
சமமாய அடுக்கி
சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
பற்றவைத்து
பேப்பருக்குள் எடுத்து வந்த
 மளிகைச்சாமானகளை வைத்தே
சமைக்கத் துவங்குகிறாள் ஆச்சி

சமமற்ற தரையோ
சுழன்றடிக்கும் காற்றோ
எடுக்க மறந்த பொருட்களோ
அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை
கொதிக்கிற குழம்பின் வாசம்
கோவில் வெளியெங்கும்
பரவி விரிகிறது
என்றுமில்லா பசி
குடலுக்குள் உருண்டு புரள்கிறது

நிழலிருக்கும் இடத்தைப் பெருக்கி
சமதளம்ற்ற தரையில்
இலையைப் போடுகிறாள் ஆச்சி
ஊட்டினாலும் முகம் திருப்பும்
பேரப்ப்பிள்ளைகளெல்லாம்
போட்டி போட்டு இலை நிரப்பி
சப்புக் கொட்டி உண்ணுகிறார்கள்

நவ நாகரீக அடுப்படி
அனைத்துப் பொருட்களும் உள்ள
அஞ்சறைப்பெட்டி
சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர்
தேக்காலான சாப்பாட்டு மேஜை
இவைகளின்றி ஏதும் செய்ய இயலாத
மருமகள் கள் எல்லாம்
வரிசையாய் அமர
பரிமாறத் துவங்குகிறாள் ஆச்சி

சட்டிக் குழம்பும்
அண்டாச் சோறும்
கற்பூரமாய்க் கரைய
ஏனோ கண்கலங்குகிறாள்
வீட்டில் கேஸ் அடுப்பு கூட
பற்றவைக்கத் தெரியாத
 "அந்த க் காலத்து ஆச்சி "


Friday, June 29, 2012

இருண்மை


எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை
பட்டப் பகலில் எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது
நடு நிசியில் எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்
அம்மணம் நிச்சய்ம் பெரும் ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்
நிச்சயம் அவன் தலைசிறந்த
"இருண்மைகவி" ஆவான் என
அப்போதே முடிவுசெய்துவிட்டேன்


Wednesday, June 27, 2012

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமயலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

Tuesday, June 26, 2012

வட்டத்தை நேராக்குவோம்

உடல் சுகமே சதமென
விலங்கொடு விலங்காய்
காட்டிடை வாழ்ந்தவன் காலம்
கற்காலமே

மனமும் அறிவும்  விரிய
அகம் புறமென
வாழ்வியல் நெறி கண்டு
வாழ்வாங்கு வாழந்தவன் காலம்
நிச்சயம நற்காலமே

இகம்  பரமென
இரு நிலை வகுத்து
மனமடக்கும் வழிதனை
உலகுக்கு உணர்த்தி
வாழ்ந்தவன் காலமும்
உன்னதப் பொற்காலமே

சுகமே சதமென
அதற்கென எதையும்
பலிபீடமேற்றத்
தயாரானவனின்
இன்றைய காலம்
எக்காலம் ?

யோசித்துப் பார்க்கையில்
ஒருசிறு படி கடந்தால்
முதல் நிலை சர்வ நிச்சயமெனும்
சாத்தியம் மனத்துள்
சங்கடமேற்படுத்திப் போகிறது

எப்போதும்
அவ நம்பிக்கையூட்டிப் போகும்
விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற
பகுத்தறிவு நண்பனும்
"இயற்கையின் சுழற்சி எப்போதும்
இயல்வட்டமோ
நீள் வட்டமோதான்
புறப்பட்ட இடம் சேருதற்கே
அதிக சாத்தியம்  "என
பயமுறுத்திப் போகிறான்

குழம்பிக் கிடைக்கியில்
ஆதாரங்களைத் தேடாது
எதையும் நம்பித் தொலைக்கும்
பகுத் தறிவற்ற நண்பனோ
"வட்டங்களைச் சிதைப்பது மிக எளிது
அவ நம்பிக்கை மையப் புள்ளியினை
சிதைத்தால் போதும்
வட்டம் சிதைந்து
நேர்கோடாகிப் போகும்" என்கிறான்

"எப்படிச் சாத்தியம் " என்கிறேன்

" பூமிக்கு வெளியில்
உறுதியாய் நிற்க ஒரு இடமும்
நெம்புகோலும் இருப்பின்
பூமியை நகர்துதல் சாத்தியம்
எனச் சொன்னவனின் தொடர்ச்சி நாம்
வட்டத்தை உடைத்து நேராக்குதல்
அதை விடப் பெரிய விஷமில்லை "என்கிறான்

எனக்கும் இப்போது
நம்பிக்கையுடன்  கொஞ்சம் முயன்றால்
வட்டத்தை நேர்கோடாக்குதல்
அவ்வளவு கடினமில்லை எனத்தான் படுகிறது

உங்களுக்கு ?

Saturday, June 23, 2012

பிரிதலும் பிரித்தலும், இணைதலும் இணைத்தலும்

பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...

அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்

இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில்  இனியேனும்
சுயமாய்  இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

Thursday, June 21, 2012

தேடல்

என் முன்னே என் பின்னே 
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்"
 என்றேன்என்னை ஒத்தவரிடம்
"நம் முன்னால் செல்பவர்கள்
எல்லாம் தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான்
 நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட
 நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால்
அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில்
 என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்
"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட
சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க
 ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர்
எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான்
 யாரேனும் உண்டா" என்றேன்
நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்"
என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி
அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்
"நம் கால்கள் ஓடத்தான்
 படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான்
 பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான்
 படைக்கப்பட்டது எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை
 நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட
 கேட்கலாம்தானே" என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப்
 பார்த்துக் கேட்டேன்
"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன்
 ஓய்வாக இருக்கிறீர்கள்" என்றேன்

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்"
என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும்
கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் -
 எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம்
விடைதெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட
விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல்
 நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

Tuesday, June 19, 2012

யாதுமாகி....

ரூப மற்றதாயினும்
அனைத்து இயக்கங்களுக்கும்
அச்சாணியாய் இருக்கும் அற்புதமே

நீதானே பிரம்மன்
நீதானே விஷ்ணு
நீதானே ருத்ரன்

தொப்புள் கொடி அறுபட
எம்முள் பிராண ஜீவனை ஏற்றி
எம்மை இயக்கத் துவங்கும்
நீதானே பிரம்மன்

ஒரு சிறு துளிக்கும்
பேரண்டப்பெருங்கடலுக்கும்
ஒரு இணைப்புப் பாலமாய் இருந்து
எம்மை தொடர்ந்து இயக்கும்
நீதானே விஷ்ணு

ஜீவ ராசிகளை
தோற்றுவித்தும் வளர்த்தும்
ஒரு நொடியில்வெளியேறி
ஏதுமற்றதாக்கியும்
களி நடனம் புரியும்
கருணையற்ற அரூபமே
நீதானே ருத்ரன்

உன் கருணையற்றுப் போயின்
உன் சகோதர்கள் நால்வரின்
வீரியமும் ஆகிருதியும்
ஒரு நொடியில்
அர்த்தமற்றதாகித்தானே  போகிறது

காலதாமதமாயினும்
உன் சக்தியை
மிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்
எங்கள் ஜீவனே
எங்கள் காலமே
எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !


Sunday, June 17, 2012

"அது "என்பது "இதுதான்"

ஏறக்குறைய முப்பதுவருடங்களுக்கு முன்னால்
 "கண்ணதாசன் " என்கிற ஒரு அருமையான
 இலக்கிய மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது

கணையாழியில் கடைசிப் பக்கத்தில்
சுஜாதா அவர்கள் எழுதி வந்ததைப் போல
கண்ணதாசன் மாத இதழின் கடைசி
பக்கங்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள்
தன்னுடைய சிந்தனைகளை அருமையான
கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும்
எழுதி வந்தார்.

(அவைகள் புத்தகங்களாகவெளிவந்துள்ளனவா
என எனக்குத் தெரியவில்லை
தெரிந்தவர்கள் சொல்லலாம் குறிப்பாக
மின்னல் வரிகள் கணேஷ்  )

அதில் குறிப்பாக "நான்" என்கிற தலைப்பில்
ஒரு அற்புதமான கட்டுரையை எழுதி இருந்தார்
அந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட வாசகம்தான்
என்னை சுயமாக சிந்திக்கத் தூண்டிப்போனது
அந்த வாசகம் இப்படிப் போகும்

"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"என்பார்

யோசித்துப் பார்க்கையில்
ஒரு புதிய அறியாத பொருள் குறித்து
ஏதும் தெரியாத போதும்...

அதை உலகின் பார்வையிலும்
நம் தனித்த பார்வையிலும்
அதனை முற்றாக புற நிலையில் பார்க்கவும்
அக நிலையிலும் பார்க்கவும்
அதற்கு ஆதரவாகப் பார்க்கவும்
அதற்கு எதிர் நிலையில் பார்க்கவும்
அதன் கடந்த கால நிலையைப் பார்க்கவும்
எதிர்கால நிலையினை யூகிக்கவும் தெரிந்தாலே
அந்தப் பொருள் குறித்து எல்லாமும்
நிச்சய்ம் தெரிந்து தானே போகும் ?

இப்படிப் பார்க்கப் பழகினால் இதுவரை
நமக்குப் புரியாத, புதிராக இருப்பவைகள் எல்லாம்
பழகிய ,தெரிந்த  பொருளாகிப் தானே போகும் ?

வள்ளுவன் சொல்லுகிற "இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " என்பதில்
இது என்பதும் இதனை என்பதும்
அதனை என்பதும் அவன் என்பதும்
அதுமட்டுமா என்ன ? எல்லாமும்தானே !

(குழப்பியதாக பெரும்பாலோர் சொன்ன
முன் பதிவான "அது""க்கான விளக்கப் பதிவு )


Friday, June 15, 2012

"அது"


பேசுகையில் மிகத் தெளிவாகவும்
எழுதுகையில் மட்டும்
குட்டையைக் குழப்பும் நண்பன்
மீண்டும்
ஒரு படைப்பைக் கொடுத்துச் சோதித்தான்
அதன் தலைப்பு "அது"வாக இருந்தது

"அதை இதற்கு முன்பு
பார்த்த ஞாபகம் இல்லை
புதியதாக இருந்தது
புரியாமலும் இருந்தது
அதனால்
புதிராகவும் இருந்தது

எட்ட நின்று
அதனைப்பார்த்தேன்
அதன் சூழல் புரிந்தது

மிக அருகில் நின்று
அதனைப் பார்க்க
சூழலுக்குள்
அதன் நிலை புரிந்தது

அணு சரனையாக
அதனைப் பார்க்க
அதன் சிறப்பு புரிந்தது

வெறுப்புடன்
அதனைப் பார்க்க
அதன் "கருமை"புரிந்தது

முற்றாக அதனைவிடுத்து
வெளியேறிப் பார்க்க
அது இல்லாமலே போனது

அத்னுள் இருந்து
அதன் பார்வையில் பார்க்க
அதுவே எல்லாமாக இருந்தது

இப்போது அது
புதிதாக்வும் இல்லை 
புதிராகவும் இல்லை
புரிந்ததாக மாறி இருந்தது "

எனக்கேதும் புரியவில்லை
சிறுபிள்ளைத்தனமாக அது என்றால்
எது என்றேன்

அவன் சிரித்தபடி
எல்லாமும்தான் என்றான்

நம்பிக்கை

செடியை கொடியை மரத்தை
தாவரம் எனப்
பொதுமைப் படுத்திப்பார்த்தல் சரியா?

தாய் மண்ணின்
அடி வயிறு கிழித்து வெளியேறல்
ஒன்றுபோலத்தான் ஆயினும்
விதைக்குள் வீரியத்தை இயற்கை
வித்தியாசப்படுத்தியல்லவா வைத்திருக்கிறது ?

வேர்ப்பாதங்களை அழுந்த் ஊன்றி
அடிமரக்கால்களில் உறுதிஏற்றி
வான் நோக்கி நிமிரும் மரத்துக்கு
பற்றுக்கோடுவேண்டியதில்லைதான்.

மரமளவு இல்லையாயினும்
வீசுகிற காற்றுக்கு ஒப்ப ஆடி
தன்னை நிலை நிறுத்திக் கொள்கிற
செடிகளுக்குக் கூட
பிடியது அவசியமில்லைதான்

உறுதியற்ற வேர்க்காலுடன்
மெலுந்து போன உடலுடன்
சிறு ஊதற்காற்றுக்கே
தள்ளாடுகிற கொடியதற்கு
மரமோ மதிலோ
காய்ந்து போன குச்சியோ கூட
பற்றுக் கோடாய்
வேண்டியதாகத்தானே இருக்கிறது ?

Wednesday, June 13, 2012

ஆஸ்கருக்குரிய அன்றாட நடிகர்களும் பரிசு தட்டிப் போகும் போலி நடிகர்களும்..

எதிர் வீட்டு சுஜாதா
மிகத் தெளிவாகத் தெரிகிற
மாடிப்படி ஐந்தாவது படிக்கட்டில் அமர்ந்து
சப்தம் போட்டு பாடம் படிக்கிறான்
பிஞ்சில் பழுத்திட்ட இரண்டும் கெட்டான்
பெருமையில் பூரித்துப் போகிறார்
பாசக்கார ஏமாளி அப்பா

"ஒரு மாதம் உன்னைப் பார்க்காதது
உலகே வெறுத்துப் போச்சு
வேலையாவது மண்ணாங்கட்டியாவது
அவசியம் இந்த வாரம் ஊர் வருவேன்" என
சின்னவீட்டுக் கட்டிலில் படுத்தபடி
அலைபேசியில் பாசத்தைப் பொழிந்தார்
ராமன் என்ற ராமனாதன்
தாலிச் சரட்டை கண்ணில் ஒன்றிக்கொண்டாள்
பத்தாம் பசலி சீதையம்மா

" முதலில் போய் நீங்கள்
அதைக் கவனியுங்கள் சார்
நான் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்"
வலுக்கட்டாயமாக அதிகாரியை
வெளியில் அனுப்பி சிரித்துக் கொண்டார்
வெளியே அவசர வேலை வைத்திருந்த
கெட்டிக்கார ஊழியன்

"குடும்பம் துண்டு
தொண்டன் வேட்டி
துண்டை அவசியமெனில் தூர எறிவேனே ஒழிய
உயிர் போனாலும் வேட்டியை
துறக்கமாட்டேன் " என
தனது புதல்வனின் பதவி ஏற்பு விழாவில்
அடுக்கு மொழியில்
ஆக்ரோஷப்பட்டார் தலைவர்
அவருடைய தன்னலம் துறந்த தியாகத்தில்
அதிர்ந்து கிடந்தது கூட்டம்

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்
அமையும் சூழலுக்கேற்ப சுயமாய்
மிக நேர்த்தியாய் நடிக்கும் நடிகர்கள்
ஆயிரம் ஆயிரமாய் இருக்க..

யாரோ எழுதி யாரோ இயக்கிய
ஏதோ ஒரு படத்திற்கு
கிடைத்த சிறந்த நடிகருக்கான பரிசுக்கு
தான் பட்ட சிரமங்களை
தொலைகாட்சியில் அடுக்கிக் கொண்டிருக்கிறார்
அந்த ரிமோட் கண்ட்ரோல்  நடிகர்

அவரது அறியாமையை ரசித்து
 நாளும் சிரித்துத்  தொலைப்போமா ?
உலகத்தோடு ஓட்ட ஒழுகி மகிழந்து
 நாமும் ரசித்துத் தொலைப்போமா ?

Sunday, June 10, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்-6 (எம். ஜிஆர்./ எஸ் எஸ்.ஆர்,/ராமராஜன் )

புராணக் கதைகளின் தொடர்ச்சியாக நாடகங்களும்
அதன் நீட்சியாகவே சினிமாவும் தொடர்ந்ததாலோ
என்னவோ கதை மாந்தர்களை கதையின்
போக்கைவிட மிக உயர்த்திச் சொல்லுதல்
ஒரு தவிர்க்க இயலாஅம்சமாக மாறிப் போனது
நாளடைவில் அது மக்கள் விரும்புகிற
அம்சமாகவும் மாறிப் போனது

ஆதியில் நாடகங்களாக  நடிக்கப் பட்ட
ஹரிச்சந்த்ரா வள்ளி திருமணம் பவளக் கொடி
முதலான கதைகளில்  கதை அம்சம்
அதிகமாக இருந்தாலும் கூட அதை விட
கதாபாத்திரத்தின் அம்சம் கொஞ்சம்
கூடுதலாகவே இருந்தது

அதன் போக்கில் வந்த முந்தைய
ராஜா ராணிக் கதைகளில் சுவாரஸ்யமான
கதை இருந்த போதிலும் கதைக்கு அடங்காது
கதாபாத்திரங்கள் திமிரித் தெரியும் படியான
படங்கள்வெளிவந்தபோது அதன் போக்கில்
கதா நாயகத் தன்மையும் தவிர்க்க இயலாமல்
கதையை விட கொஞ்சம் முன்னால்
 துருத்திக் கொண்டே வந்தது

புரட்சித்தலைவர் அவர்கள் சண்டைப்பயிற்சி
முறையாகக் கற்றவர் என்பதால்
அவருக்கு இயல்பாகவே
அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அமைந்தது
குறிப்பாக நடிப்பைவிட பிரமிப்பூட்டும்
(ஆக்ஸன் படங்கள் எனச் சொல்லலாமா )
சண்டைக் காட்சிகளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன
பின்னாளில் அவருக்கென ஒளிவட்டம்அமைந்து
தனிப்பட்ட ரசிகர்கள்ஆதரவும் கூடக் கூட
அவராகவே அந்த பாணிக்
கதாபாத்திரங்களை அமைத்து மகத்தான்
வெற்றியும் பெற்றார்

அதே சமயத்தில் கதையும் கதா பாத்திரமும்
சம  நிலையில் இருக்கிற அல்லது
கதாபாத்திரத்தை விட கதை மிக முக்கியமாகப்
-படுகிற ,அல்லது ஆணை விட பெண் கதாபாத்திரம்
முக்கியமாகப் படுகிற திரைக் கதை அமையும் போது
அதற்கு பொருந்தி வரக் கூடியவராக
புரட்சித் தலைவர் இல்லை.
அவர் அதைமீறி இருந்தார்

.அதைப் போன்ற கதைகளுக்கு
(குறிப்பாக கதையை மீறிய நடிப்பும் தேவையிலை
அதிக உக்கிரமான சண்டையும் தேவை இல்லை)
எஸ் எஸ்.ஆர் அவர்கள் மிகப் பொருத்தமானவராக
இருந்தார்..அந்த இடத்தை அவர் மிகச் சரியாகப்
பூர்த்தி செய்தார்.புரட்சித் தலைவர் ரசிகர்களையும்
நடு நிலை ரசிகர்களையும் அது திருப்தி செய்ததால்
அவருடைய படங்களும் வெற்றிகரமாக ஓடின

மனோ தத்துவ அறிஞர்கள் நாம் வீட்டில் மின் விளக்கை
ஏற்றுகையில் கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல் கூட
காட்டு வாசியாய் இருந்த மனிதன் நெருப்புக்கு பயந்து
வணங்கி வந்ததன் மிச்ச சொச்சம் என்பார்கள்

நாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்
ஏற்கெனவே அவர் சாயலில் பிடித்த நபர் ஒருவர் நமக்கு
ஒருவர் இருந்தால் இவரை நமக்கும் பிடித்துப் போகும்
பிடிக்காதன் நபர் எனில் பிடிக்காமல் போகும்

அந்த வகையில் புரட்சித் தலைவர் பாணியில்
பாதி அளவு வெளிப்படு த்தி வெற்றி கண்ட
எஸ்.எஸ் ஆர் அவரகளது  பாணியை மிகச்
 சரியாகப் புரிந்து(இயக்கு நர் என்பதால்)
 தன் உடல் மொழி மற்றும்அது போன்ற
கதைகளை மட்டும்  தேர்ந்தெடுத்து
நடித்ததால் இவர் சில காலம் வெற்றி பெற்றார்
என்பது எனது கருத்து

 ( அவர் நடை உடை பாவனைகளை
 ஒப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்தால்
இது விஷய்ம்தெளிவாகப் புரி யும் )

தனக்கு அதிர்ஷ்டத்தால் அல்லது
மிகச் சிறந்த கதை அமைப்பால்
கரகாட்டக் காரனுக்குக்கிடைத்த வெற்றியை
 ராம ராஜன் அவர்கள் 
கொஞ்சம் அதிகப்படியாக
கற்பனை செய்து கொண்டு அகலக் கால்
வைத்ததால்தான் என்னவோ அவர்
அடியோடு  காணாமலும் போனார்

(தொடரும் )

Friday, June 8, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (எம்.ஜிஆர் ) 5 தொடர்ச்சி

ஐந்தாவது பதிவாக எனது தலைப்பினை விளக்கி
பதிவினை முடிக்கலாம் என இருந்தேன்
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் மறைந்து
 இத்தனை காலத்திற்குப் பின்னும் அவர்கள்
 மக்களிடம் கொண்டிருக்கிற
செல்வாக்கிற்கான காரணம் இன்னும்
விரிவாக அலச ஆசைதான் என்றாலும்
பதிவின் நோக்கம் விட்டு விட்டு செல்லும்
சாத்தியக் கூறு அதிகம் என்பதால் நான
விரிவாக எழுதவில்லை.

ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் குறித்த
பதிவுக்குப் பின் வந்தபின்னூட்டங்கள் அவசியம்
இன்னும் கொஞ்சம்புரட்சித் தலைவர் குறித்து
எழுதி இருக்கலாமோ என்கிற எண்ணத்தைத்
தந்ததால் இதைத் தொடர்கிறேன்

இருவர் படத்தில் மணிரத்தினம் அவர்கள்
அரசியலும் சினிமாவும் தனிப்பட்ட வாழ்வும்
புரட்சித் தலைவர் வாழ்வில் எப்படி மிகச் சரியாக
தன்னை இணைத்துக் கொண்டே வந்தன என்பதை
மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போதுதான்
ஒரு முழுமையான அரசியல்வாதி பொருளாளராக
நியமிக்கப் பட்டுள்ளார்.அதற்கு முன்னாள்
நடிகர்களே பொருளாளராக இருந்து வந்துள்ளர்கள்
நடிப்பிசைப் புலவர் கே.ஆர் ராமசாமி அவர்களும்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களும்
அதற்குப் பின்னர் புரட்சித் தலைவரும்
பொருளாளரராக இருந்துள்ளனர்.

வீறுகொண்ட இரு குதிரைகளாக இருக்கிற
சினிமாத் துறையிலும் அரசியல் துறையிலும்
முன்னர் சொன்ன இருவருக்கும் பிந்தியவராக
இருந்தபோதிலும் இரண்டிலும் மிகச் சரியாக
பயணித்து வெற்றி கண்டவர் புரட்சித் தலைவர்

அரசியலில் கண்ட சாதுர்யங்களை
சினிமாவில் கிடைத்த தனது புகழை மிக நேர்த்தியாக
இடம் மாற்றம் செய்ததன் மூலம் எப்படி
அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு
எப்படி நனமை செய்யலாம் என்கிற ஒரு
புதிய பாதையை உலகுக்கே காட்டியவர்
புரட்சித் தலைவர்தான்

மு. க .முத்து அவர்களுக்கு முன்பாகவே
புரட்சித் தலைவருக்கு எதிராக இலட்சிய நடிகரை
பிரதானப் படுத்த அரசியலிலும் சினிமாவிலும்
எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயினும் அவைகள் எல்லாம் சம்பத்தப் பட்டவர்கள்
மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை
என்பதால் தோற்றும்போயின

இவர்களின் நோக்கம் அறிந்த புரட்சித் தலைவர்
அவர்கள் தனது ஒவ்வொரு அசைவிலும்
மிகக் கவனமாக இல்லையெனில் இத்தனை
உயரத்தை அடைந்திருக்கச் சாத்தியமே இல்லை

இல்லையெனில்
காமராஜர் போல் எளிமையானவராக
இலலாது போயினும்
அண்ணா போல பேரறிஞராக
இல்லாது போயினும்
இலட்சிய நடிகர் போல் அத்தனை
அழகானவராக இல்லாது போயினும்
(நான் இருவரையும் நேரடியாகப்
 பார்த்திருக்கிறேன் )
ராஜாஜி போல் மதி நுட்பம்
இல்லாத வராக இருந்த் போதிலும்
கலைஞர் போல அத்தனை
பேசுசுத் திறன் அற்றவராக இருந்தபோதிலும்
சிவாஜி போல அத்த னை சிறந்த
நடிகர் இல்லைஎன்ற போதிலும் 

இன்னும் எத்தனையோ போதினும்
சொல்லிக் கொண்டே போகலாம்

இப்படி சினிமாத் துறையில் நடிப்பில்
ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தபோதும்
கடைசிவரையில்
வசூல் சக்கரவர்த்தியாக இருந்ததும்

அரசியல் துறையில் சாணக்கியர்கள் கூட்டம்
நிறைந்திருந்த்போதும்
இறுதிவரையில்
எவரும் வெல்ல முடியாத்
மக்கள் தலைவராக இருந்ததும்
வெறும் சந்தர்ப்ப சூழ் நிலையால் ஏற்பட்டதில்லை

அவரை மிகச் சரியாக அறிய முயல்வது
நமக்கும் கூட நல்ல வழிகாட்டியாக அமையலாம்


(தொடரும்)


Thursday, June 7, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (4) (எம்.ஜி.ஆர்)

பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள மூவரும்
காலியாகக் கிடந்த இடத்தை மிகச் சரியாகப்
புரிந்து கொண்டு களமிறங்கியதால்தான் அவர்களால்
வெகு நாட்கள் நீடித்து திரையுலகில் பவனி வர
முடிந்தது என்பதை தற்போதைய இளைஞர்கள்
ஓரளவு மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்
என்பதற்காகத்தான் கொஞ்சம் விரிவாகவே
இந்தப் பதிவைத் தொடர்கிறேன்

திரை யுலகைப் பற்றி மக்கள் ரசனை குறித்து
மிகத் தெளிவான கருத்து கொண்டிருந்தவர்
புரட்சி நடிகர் அவர்கள்.

திரைப்படம் என்பது பொழுது போக்கு
அம்சத்திற்கானதேபாடுபட்டு பல்வேறு
துயருக்கிடையில் அவதியுறும்
பாட்டாளி மக்கள் கொஞ்சம் இளைப்பாறிப்
 போகும் இடம்திரைப்படம் எனப்தில்
அவர் திட்டவட்டமாக இருந்தார்

கலை கலைக்காவே என்கிற ஓரத்திற்கும் போகாமல்
கலை மக்களுக்காகவே என்பதையும் மறக்காமல்
அதே சமயம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல்
தனக்கென ஒரு புதிய பாணியை அவர்
அமைத்துக் கொண்டதால்தான் கடைசிவரையில்
திரைப்படத்துறையில் முடி சூடா மன்னனாகவே
இருக்க முடிந்தது

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருக்கும் சாகஸம்
இருக்கும்படியாகவும் (செக்ஸ் இல்லாதபடியும் )
அதே சமய்ம் காதல் தாய்ப்பாசம்
ஏழைகளிடம் பரிவு கொள்ளுதல்
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வெற்றி உண்டு
பொய்யும் பித்தலாட்ட்டமும்
இறுதியில் தோற்றே தீரும் முதலான
 விஷயங்களை மிக நேர்த்தியாகக் கலந்து
ஒரு புதிய பாணி கதைகளைக் கொண்ட
படங்களைத் தொடர்ந்து தந்தாலும் நடிகர் திலகம் போல்
கதாபாத்திரத்தில் தன்னை ஒளித்துக் கொள்ளாமல்
கதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்
மிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்
அடங்கி இருந்தது .

ஒளிவிள்க்கு படத்தில் புரட்சி நடிகர் முத்து என்கிற
திருடனாக நடித்திருப்பார்.அவர் ஜெயிலில்
இருந்து வந்த சமயம் அவர் இருப்பிடத்தை
 ஒட்டி இருக்கும் குழந்தைகள் அவரை அனபுடன்
சூழ்ந்து கொள்வார்கள்.எம் .ஜி ஆர் அவர்கள்
அருகில் இருந்த தள்ளுவண்டிக்காரனிடம்
அனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொல்லி
நூறு ரூபாய் நோட்டைத் தருவார்.அவன் எடுத்துக்
கொடுத்துக்கொண்டிருக்கும் போதே
குழந்தைகளின் பெற்றோர் "திருடனிடமா
வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் "என குழந்தைகளை
அடித்து இழுத்துப் போவார்கள்.வியாபாரம்
ஆகாத சோகத்தில் தள்ளுவண்டிக்காரன்
நூறு ரூபாய் நோட்டைத் திருப்பித் தருவான்

அந்த சமயம் தியேட்டரில் ஒரு ரசிக்ரின் குரல்
"டேய் எங்கள் தலைவருக்கு கொடுத்ததை
திருப்பி வாங்கிப் பழக்கமில்லை "எனஓங்கி ஒலிக்கிறது

அவன் சொன்னது போலவே வேண்டாம்
வைத்துக் கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு
எம்.ஜி ஆர்.நடக்கத் துவங்கிவிடுகிறார்
தியேட்டரில் விசில் சபதம் காதைப் பிளக்கிறது

காவல்காரன் என்கிற படத்தில் ஒரு அருமையான
சண்டைக் காட்சி.ஒரு முரடனை அடிக்கும் போது
அவன் விலக தலைவரின் கை கண்ணாடி பீரோவை
உடைத்துக் கொண்டு செல்லும் .
கண்ணாடி உடைந்து சிதறும். நாம் அவர் கை என்ன
ஆகி இருக்குமோ என நினைக்கும் சமயம்
அவர் கையைக் கவனிக்காமல் கையில்
கட்டியிருக்கிற கடிகாரம் சரியாக ஓடுகிறதா
எனப் பார்ப்பார்.அதே சமயம் அவரைத் தாக்க
அவர் அறியாமல் பின்னே ஒருவன் வருவான்

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான்

அவன் சொல்லி முடிப்பதற்குள் தலைவர்
திரும்பாமலே அவனுக்கு ஒரு டிஸும் விடுகிறார்
தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.

இப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்
அவர் மிகவும் நெருங்கிவிட்டதாலும்
தன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு
தேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)

சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை கொள்வது
மற்றபடி எந்தக் காட்சி என்றாலும்
முன்னிலை என்றால் முன்பக்கம் கைகாட்டுவது
படர்க்கை என்றால் பின் பக்கம் கைகாட்டுவது
உண்மை நேர்மை முதலான விஷயங்களுக்கு
நெஞ்சைத் தொட்டுக் காட்டுவது.,
அம்மா அண்ணா முதலானவைகளுக்கு கை கூப்புவது
காதல் காட்சியில் லேசாக உதட்டைச் சுளித்து
விஷமப் புன்னகை பூப்பது,
கோபம் எனில் பற்களைக் கடிப்பது
அழுகை என்றால் எதையாவது வைத்து
முகத்தை மறைத்துக் கொள்வது அல்லது
தூணில் மறைந்து கொள்வது
மற்றபடி அனைத்திற்கும் கைகளை இரண்டு புறமும்
மிக நேர்த்தியாக விரிப்பது மட்டுமே போதும்
என்பதில் மிகச் சரியாக இருந்தார்
கதைக்கும் அவரது ரசிகர்களுக்கு அதுவே
போதுமானதாகவே இருந்தது

அவரும் ,கதையும் ,.இசையும் ,பாடலும்
ஒவ்வொரு படத்தில் ஏற்றுக் கொள்ளும்
மாறுபட்ட கதாபாத்திரமும்
புத்தம் புதிய இளமையான கதா நாயகிகளும்
அவர் படத்தின் பால் எப்போதும் ஒரு
அதிக ஆர்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன

இப்படி மக்கள் திலகமாகவும் நடிப்புத் திலகமாகவும்
இருந்த இரு துருவங்களுக்கிடையில்
நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களும்
காதல் மன்னன் ஜெமினி அவர்களும்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ் ஆர் அவர்களும்
மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்ததும் அவர்கள்
நடித்த படங்கள் மிகச் சிறப்பாக ஓடியதும்தான்
மிகுந்த சுவாரஸ்யமான விஷயமே

(தொடரும்)

Wednesday, June 6, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்(சிவாஜி)3

முதல் மரியாதை படம் வெளியான சமயம்
நடிகர் திலகம் அவர்கள்  அளித்தபே ட்டியில்
குறிப்பிட்ட பல்வேறு அதி முக்கிய விஷ்யங்களில்
இது மிக முக்கியமானது

"இப்போது இருக்கிற இயக்கு நர்கள்
இப்போது க்ளோசப்தான் எடுக்கிறோம்
முக பாவனை மட்டும் இப்படி இருந்தால் போதும்
என்கிற மாதிரிச் சொல்லி சூட் செய்கிறார்கள்
உடல் முழுவதும் நடிக்காமல்
முகம் மட்டும் நடிக்கச் சாத்தியமா ?
மன்னன் என்று சொன்னால் கால நுனி முதல்
உச்சம் தலைவரை வரை மன்னனாக
இருத்தல் தானே சரி. "எனச் சொல்லி
இடது காலைதரையில் அழுத்தி ஊன்றி
நெஞ்சை நிமிர்த்திகம்பீரமாகப் பார்த்தபோது
அங்கே ஒரு நொடியில் நடிகர் திலகம் மறைந்து போய்
ஒரு சக்கரவர்த்தி அங்கே அமர்ந்திருந்தார்

இப்படி ஒரு கதாபாத்திரம் என்றால்
அதுவாகவே அனைத்திலுமாக மாறிப்போகும்
அசாத்திய வல்லமை படைத்திருந்ததால்தானே
இன்றுவரை நடிப்பிற்குஒரு இலக்கண நூலாக
நடிகர் திலகம் அவர்களின் படங்கள்
விளங்கிக் கொண்டிருக்கின்றன

ஆலயமணியில் நண்பனுடன் வெளியே போன
மனைவியை சந்தேகித்து அந்த ஈசி சேரில்
வெறிகொண்டு அமர்ந்திருக்கையில்
ஒரு வெறிபிடித்த சிங்கத்தை நினைவுறுத்தும் காட்சி..

பாபுவில் மிகக் கடினப்பட்டு பள்ளிக்காண கட்டணத்தை
கட்ட வகுப்பு வகுப்பாகத்தேடி அலைந்து முடிவில்
துணியில் முடிந்து வைத்த காசுகளைக் கொடுக்கையில்
அந்த்ச் சிறுபெண் ஏன் இங்கே வந்தீர்கள்
எனக் கேட்கையில் முகத்தில் காட்டும் மனோபாவம்...

பாசமலரில் மனம் வெறுத்து வெளியேறி
ஊர் உலகெல்லாம் சுற்று மீண்டும் வீடு நுழைகையில்
நான் உள்ளே போகலாம என அவர் வீட்டு வாட்ச்மேனிடமே
கேட்கும் அந்த நொடி..

 கவரிமானில் தனது ஆசைமனைவியை அடுத்தவனுடன்
 கட்டிலில் பார்த்ததும் கொண்ட அதிர்ச்சியை
வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பில்

அப்பராகவே திருவருட்செல்வரில்...
வ.வூ. சி யாக்வே கப்பலோட்டிய தமிழனில்

 பதறவைக்கும்வில்லனாக அந்த நாளில்,
பெண்ணின் பெருமையில், ரங்கோன் ராதாவில்

இப்படியே சொல்லிக் கொண்டு போனால்
குறைந்த பட்சம் ஐம்பது படங்களையாவது
நிச்சயம் சொல்லவேண்டி இருக்கும்

சுருக்கமாகச் சொன்னால் சிவாஜி நடித்த
 மோசமான படங்கள் உண்டு
ஆனால் சிவாஜி மோசமாக நடித்த படம்
 ஒன்று கூட நிச்சயம்   இல்லை என
உறுதியாகக் கூ றலாம்

இப்படி நடிப்பின் அனைத்து அம்சங்களையும்
விரல் நுனியில் வைத்திருந்தவர்
நடிப்பைப் பொருத்தவரை ஒரு
சர்வகலாசாலையாகவே விளங்கியவர்
சினிமா அரசியல் குறித்தும்
அரசியல் பித்தலாட்டங்கள் குறித்தும்
அதிகம் அறிந்து கொள்ளவிரும்பாததாலோ
என்னவோஒருசினிமாவை இயக்கவோ
குறைந்த பட்சம்ஒரு சட்டமன்ற
 உறுப்பினராகவோ ஆகக் கூட
கடைசிவரையில் முடியாமலே போனது

 இதற்கு நேர்மாறாக சினிமா குறித்தும்
அரசியல் குறித்தும் மிகத் தெளிவான கருத்தை
கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்
அதனால்தான் அவரால் ரிக்சாக் காரனுக்கு
சிறந்த நடிகருக்கான அவார்டையும்
மூன்று படங்களை தயாரித்து இயக்கவும்
ஒரு மா நிலத்தின் முதல்வராகவும் ஆக முடிந்தது
என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை

(தொடரும் )


Monday, June 4, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் -2

மோகன் தவிர மணிவண்ணன் அவர்களும்
ராம ராஜன் அவர்களும் இயகு நர்கள் என்பதால்
அவர்கள் எப்படி மிகத் தெளிவாக அவர்களுக்கான
இடத்தை மிகச் சரியாக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை
மிகச் சரியாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன் கதைச்
சுருக்கம் இருந்தால்தால் உதவும் என நினைக்கிறேன்

முன்பெல்லாம் வயதுக்கு மீறிப் பேசினாலே
புத்திசாலி யெனவும் ஒரு பிரபலமான
குட்டி நட்சத்திரத்தை ஒப்பிட்டுப் பேசுதலும்
கொஞ்சம் அழகாய் இருந்தாலே
பத்மினிபோல் வைஜந்திபோல் சாவித்திரிபோல்
என ஒப்பீடு செய்கிற கால கட்டம் அது.

பொழுது போக்கு என்றால் அது சினிமா மட்டுமே.
திருவிழா என்றால் சினிமா பார்த்தல் என்பது
நிச்சயமாக இருக்கவேண்டும் என அனைவரும்
ஏற்றுகொண்டிருந்த காலமது.

மதுரையைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட
இன மக்கள் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை
பெண் வீட்டுக்காரர்களை புதிய திரைப்படத்திற்கு
அழைத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு
அங்கீகரிக்கப் பட்ட சடங்காகவே கூட இருந்தது
கூடுமானவரையில் இன்றைய அலங்கார் தியேட்டரும்
(அன்றைய லெட்சுமி ) சிந்தாமணி தியேட்டரும்
தினமணி டாக்கீசும் அதற்கான தியேட்டர்களாக்வே
அங்கீகரிக்கப் பட்டிருந்தன

இளைஞர்களாக் இருந்த நாங்கள் எல்லாம்
எங்களை சிவாஜி ரசிகராகவோ அல்லது
எம்.ஜி.ஆர் ரசிகராகவோ எங்களை
பிரித்துவைத்துக் கொண்டிருப்போம்.
எப்போதும் இரண்டு திலகங்களின் படங்களும்
ஒன்றாகவே திருவிழா நாட்களில் வெளியாகும்
அப்போதெல்லாம் ஒரு வார காலம்
மாலை நேர விவாதங்கள் எல்லாம் சினிமா குறித்தே
இருக்கும்.முதலில் அவர் அவர்கள் மதிக்கிற
திலகங்களைப் புகழ்வதில் துவங்குகிற விவாதம்
பின் அவர்களுக்கு எதிராகப் பேசுவதில் தொடர்ந்து
சண்டை சச்சரவு அடிதடியென முடிவதுண்டு

பெரும்பாலான சமயங்களில் நடிகர் திலகம்
அவர்களின் தொந்தி குறித்தும் மக்கள் திலகம்
அவர்களிம் சொட்டை குறித்தும் பேசினால் போதும்
அங்கு நிச்சயம் ஒரு பிரளயம் உருவாகிவிடும்

தங்கள் ரசிகர்களிடையே தங்கள் இமேஜ் குறித்து
இருக்கிற சாதக பாதகங்க்களை இர ண்டு திலகங்களும்
மிகத் தெளிவாக அறிந்திருந்தோடு மட்டுமல்லாது
அதனை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்
என்பதுதான் சுவாரஸ்யத்திலும் சுவாரஸ்யம்

(தொடரும் )

Sunday, June 3, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்...

சனி மாலையில் துவங்கி நள்ளிரவு வரை நீளும் 
அரட்டைக் கச்சேரியில் அந்த அந்த
வாரத்தில் நடந்த நாட்டு நடப்புகள்  குறித்து
விரிவான காரசாரமான விவாதம் எங்கள்
நண்பர் குழுவில் நடைபெறும்

ஒரு பொருள் குறித்த விரிவான விவாதம்
என்பதைவிட பல பொருள் குறித்த
முடிவற்ற விவாதமே அதிகம் நடைபெறும்
எப்போதேனும் ஒரு பொருள் குறித்த
விவாதம் நாங்களே எதிர்பாராது அமைந்துவிடும்

அந்தவகையில் இந்த வாரம் மாட்டியவர்
நடிகர் ராம ராஜன்தான்

நடிப்புத் திறனோ அல்லது சண்டைக் காட்சியில்
மிளிரும் திறனோஅல்லது சொல்லிக்
கொள்ளும்படியானஎந்த வித்தியாசமான
 நடிப்புத் திறமையோ இல்லாத நடிகர் ராம ராஜன்
எப்படி இத்தனைப் படங்களில்
நடித்து முடித்தார் என்கிற விவாதத்தை ஒருவர்
துவங்கி வைக்க விவாதம் சூடு பிடித்தது

நல்ல வேளையாக ராம ராஜன் அவர்களுக்கு
தீவீர ரசிகர் யாரும் கூட்டத்தில் இல்லாததால்
அவர் நடிப்பு குறித்த, கோடு போட்ட
உள்ளாடை குறித்த,லிப்ஸ்டிக் போட்ட உதடுகள்
குறித்த மோசமான விமர்சனங்களுக்கெல்லாம்
எவ்வித எதிர்ப்பும் இல்லை

ஆனாலும் கூட அவர் நடித்த படங்கள் எல்லாம்
ஓரளவு வசூல் குவித்தது குறித்தும் அவர் நடித்த
கரகாட்டக்காரன் தமிழ் பட உலகில் நிகழ்த்திய
சாதனைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்
மாற்றுக் கருத்தில்லை

நிச்சயமாக ஓரளவேனும் காரணமில்லாமல்
எவரும் வெற்றி கொள்ள சாத்தியமில்லை
ராம ராஜன் மட்டும் அல்ல மணிவண்ணன்
மற்றும் மோகன் அவர்கள் கூட
அதிகப் படங்களில் நடித்ததற்கு
ஒரு அடிப்படையான ஒரு காரணம் உண்டு

குறிப்பாக இயக்குநர்களாக இருந்த  ராம ராஜனும்
மணிவண்ணன் அவர்களும் மிகப் புத்திசாலித்தனமாக
தமிழ்த்திரையுல்கில் வெகு நாட்களாக
 காலியாகக் கிடந்தஅனைவரையும் கவர்ந்த
 காலி இடத்தை மிகச் சரியாகத்கண்டுபிடித்து
 நிரப்பியதுதான் அவர்கள் வெற்றிக்கான
விஷயமேயன்றி அவர்கள் நடிப்புத் திறனில்லை
என்பதை நான் விளக்கத் துவங்கினேன்

(தொடரும் )