Wednesday, December 31, 2014

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே 

Thursday, December 25, 2014

இன்கவி பெறலாம் யாரும்

விளமதும் மாவும் தேமா
வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Wednesday, December 24, 2014

ஒரு டவுட்டு

ஏன் எல்லா  இறைத் தூதர்களும்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?

காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?

மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?

இயற்கை  மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?

ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்

எதையோ  சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்

என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை

உங்களுக்கேதும் புரிகிறதா  ?

புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ் 

Tuesday, December 23, 2014

"பிஸாசைப் "பார்த்தேன்- விமர்சனம் போலவும்

தீவீர எம்.ஜிஆர் ரசிகன் என்றால்
கொஞ்சம் மட்டமாகவும் சிவாஜி ரசிகன் என்றால்
கொஞ்சம் உயர்வாகவும் பார்க்கப் பட்ட அந்தக்
காலத்திலேயே நான் தீவீர எம்.ஜி,ஆர் ரசிகன்

போலீஸ் கெடுபிடி அடிதடி இத்தனையயும் மீறி
முதல் நாள்  முதல் ஷோ எப்படியும்
பார்த்துவிடுவேன்.

எப்படித்தான் சுதாரிப்பாக இருந்தாலும்
கூட்ட இடிபாடுகளில் சிக்கியதில் கவுண்டர் அருகில்
ஏற்படும் அதீதத் தள்ளுமுள்ளில் தோள்பட்டை
இடுப்பில் எப்படியும் ஊமைக் காயம் ஏற்பட்டுவிடும்

அதனால் ஏற்படும் வலி இரண்டு மூன்று நாள்
நிச்சயமிருக்கும் என்றாலும் தெரு மற்றும்
நண்பர்கள் வட்டத்தில் "டேய் இவன் இந்தப்
படம் பார்த்துபுட்டாண்டா " என்கிற அந்தப்
பெருமைப் பேச்சைக் கேட்பதிலும் அந்தப்
படத்தின் கதையைக் கேட்பதற்காக ஒரு சிறு குழு
என்னையே சுற்றுக் கொண்டிருப்பதிலும், உள்ள
அந்த அற்புதச் சுகம் அனுபவித்தவர்களுக்குத் தான்
மிகச் சரியாகத் தெரியும்

இப்படிப்பட்ட குணாதியம் மிக்க நான்
வெகு நாட்களுக்குப்பின் அதிக எதிர்பார்ப்பில்
(போஸ்டர் மற்றும் ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
தந்த திருப்தியில் தூண்டப்பட்டு )
முதல் நாள் முதல் ஷோ எவ்வித சிரமமுமின்றி
"பிஸாசு " சினிமாவைப் பார்த்தேன்

என்னைப் போலவே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
ஏற்படுத்தியிருந்த பாதிப்பினாலோ கொஞ்சம்
ஜனரஞ்சகம் தாண்டிய சினிமா பார்க்கவேண்டும்
என்கிற எதிர்பார்ப்பினாலோ நானே எதிர்பார்க்காதபடி
இளைஞர் கூட்டம் அதிகம் இருந்தது
(ஜோடி இளைஞர்கள் இல்லை )

முதலில் ஒரு டைட் குளோஸப்பில் துவங்கிய
படம் இடைவேளைவரை மிக நேர்த்தியாய்
செதுக்கப் பட்டச் சிற்பம்போல் சின்னச் சின்னக் காட்சி
அமைப்புகளின் மூலமும் அற்புதமான இசை
மற்றும் காமிராவின் அதி உன்னதப் பதிவுகளின்
மூலமும் நம்மை ஒரு வித்தியாசமான அற்புதமான
படத்தைப் பார்க்கின்ற ஒரு திருப்தியை ஏற்படுத்திப்
போகிறது

இடையில் வருகிற சிலச் சில எதிர்பாராத்
திருப்பங்களும் நமக்கு உற்சாகம் கொடுத்துப் போகிறது

எந்த ஒரு படம் இடைவேளையில் நம்மை
அதிக உச்சத்திலும் அதிக எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தி
படம் முடிகையில் ஒரு திருப்தியை
ஏற்படுத்திப் போகிறதோ அதுவே ஒரு
வெற்றிப்படமாகவும் ஒரு நிறைவைத் தருகிற
படமாகவும் இருக்கும்

இப்படத்தில் முதல் பாதி மிகச் சரியாக அமைந்த அளவு
பின் பாதி நம் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை

காரணம் பேய் பிஸாசு எனில் ஒரு இருளின் திரட்டு
அல்லது ஒளி உருவம் என நாம் கொண்டிருக்கிற
நம்பிக்கைக்கைக்கு மாறாக ஒரு உருவமாகவே காட்டப்
படுவதாலா ?

பேயும் ஆண்டவனும் சுயமாக நேரடியாக இயங்க
முடியாது ஏதோ ஒன்றில் ஏறியோ அல்லது அதன்
உதவியுடந்தான் நன்மையோ
தீமையோ செய்ய இயலும் என நாம் கொண்டிருக்கிற
 ஒரு அபிப்பிராயத்துக்கு எதிராக
பிஸாசே தன் உடலைத் தானே தூக்கி எரிக்கும்
நம்ப முடியாத காட்சி அமைப்பாலா ?

மிகச் சரியாகத் தெரியவில்லை

ஆயினும்
நன்மை செய்யும் பேய் பிஸாசு மற்றும்
தீமை செய்யும்பிஸாசு இவைகளைப்
பற்றியேப் பார்த்தும்
காமம் கொள்ளும் பிஸாசு பழி வாங்கும் பிஸாசு
எனப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு
காதல் உணர்வில் வரும் பிஸாசுக் கதை ஒரு
வித்தியாசமான அனுபவம்தான்

கண்ட குப்பைகளைப் பார்ப்பதற்கு ஒரு
வித்தியாசமானமிக நேர்த்தியாக எடுக்கப் பட்ட
 இப்படத்தைஅவசியம் பார்த்து வைக்கலாம்

மிஷ்கின் அவர்களே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
ஏற்படுத்தியிருந்த அருமையான பாதிப்பில்
மற்றும் பிஸாசின் மேல் அனைவருக்குமிருக்கும்
ஒரு சுவாரஸ்யத்தில் விளம்பர யுக்தியில்
இந்தப் படத்திற்கு ஓபெனிங் காட்சியில்
கூட்டம்  இருந்தது

இந்தப் படம் அடுத்த படத்திற்கு அதைச் செய்வது
சந்தேகமே...

Monday, December 22, 2014

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

Sunday, December 21, 2014

விந்தையிலும் விந்தைதான்

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

 அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
 விந்தையதே வியக்கும் விந்தைதான்

Saturday, December 20, 2014

ஆண்டவனே நீ அருள் புரி

மிக நெருங்கி வந்து
"அப்பா " என அன்புடன் அழைத்து
சொல்லவேண்டியதை
மிகப் பணிவாய்ச் சொல்லிப் போகிறாள்
முன்பின் நானறியா
அழகிய யுவதி

எனக்கு முன்வரை
கடுகடுத்தும்
வெறுப்பேற்றியுமே
பேசிவந்த நடத்துநர்
"ஐயா நீங்கள் எங்கு செல்ல வேண்டும் " என
அன்புடன் வினவி நிற்கிறார்

நேரில் பார்த்தறியாது
எழுத்தின் மூலம் அறிந்த
முகமறியா பதிவுலக நட்புகள் எல்லாம்
தவறாது பெயருக்குப் பின்
"ஐயாவை" இணைத்துவிடுகின்றனர்

இளமை கொடுத்த
வலுவும் திமுறும்
கொடுத்த மதிப்பினும்
நரையும் முதிர்ச்சிகொடுக்கும் மதிப்புத்தான்
எத்தனை உயர்வானது !

அதனை அனுபவிக்கவேண்டியேனும்
அனைவரும் நிச்சயம்
நீடுழி வாழ்வதோடு
முதிர்ச்சி அடைந்தும் வாழவேண்டும்
எனப் பிரார்த்திக்கிறேன்
ஆண்டவனே நீ அருள் புரி

Friday, December 19, 2014

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்

மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Wednesday, December 17, 2014

ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்.....

உழைத்துக் களைத்தவன்
மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது

மனத்தளவில்
பள்ளத்தில் கிடப்பவனை மேட்டுக்கும்
மேட்டில் இருப்பவனை உச்சத்திற்கும்
ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்த
கலைகள் எல்லாம்

நிற்பவனைத் தள்ளாடச் செய்யவும்
தள்ளாடுபவனை வீழச் செய்யவுமான
சதுப்பு நிலமாகிப் போய்
வெகு காலமாகிவிட்டது

தேவையான உணவுக்கும்
பசிக்கும் இடையினில்
நொறுக்குத் தீனியாய் இருந்த
கலைகள் எல்லாம்

துரித உணவாகி
அதுவே முழு உணவாகி
சக்திக்குப் பதில்
விஷமேற்றும் பொருளாகி
வெகு காலமாகிவிட்டது

இந்நிலையில் கவி முலம்
அறம் கூறி அறிவுரை கூறி
காணாமல் போகாதே
"ஐய்யோ பாவமென்னும்" பட்டமேற்று
பரிதவித்துப் போகாதே

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள்  நிலை  நமக்கெதற்கு  ?

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா

Tuesday, December 16, 2014

லிங்கா சொல்லும் செய்தி ---விமர்சனமல்ல

அடுத்தவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தைத் 
திருடிக் கொள்ளையடித்து வாழ்வதாக
பேரன் லிங்கேஸ்வரன் அறிமுகமாகிறான்

அவனது தாத்தாவின் கொடைத் தன்மையை
அறியாமலும் தனது அரண்மனை தஙகம்
வெள்ளி மற்றும் நவரத்தினங்கள் முதலான
சொத்துக்கள் அனைத்தையும்
தனக்கென தன் குடும்பத்திற்கென ஏதும்
ஒதுக்கிவைக்காது அந்த ஊருக்கே
அனைத்தையும்கொடுத்திவிட்டுத்
தன்னை அனாதையாக
ஏதுமற்றவனாகவிட்டுச் சென்றதற்காகவே
தான் அவ்வாறுஅடுத்தவர் சொத்தைக்
கொள்ளை அடிப்பவனாக
மாறிப் போனதாகவும் விளக்கம் தருகிறான்

சந்தர்ப்ப சூழ் நிலையில் தன் ஊருக்கு வந்து
தாத்தாவின் அருமை பெருமைகளை
ஊருக்காகவும் உலகுக்காகவும் வாழ்ந்ததை
அறிந்து மனம் மாறி இனி தானும் தன் தாத்தாபோல
ஏதாவது உருப்படியாக மக்களுக்கு ஏதாவது
செய்தபின் திரும்ப அந்த ஊருக்கு வருவதாகச்
சொல்லி ஊரைவிட்டுக் கிளம்புகிறான்
லிங்கேஸ்வரன்

இது படத்தின் கதை

புரட்சித் தலவர்  அவர்களின் படத்தின் கதையையோ
அல்லது சூப்பர் ஸ்டார் அவர்களின் படத்தின் கதையோ
நாம் வெறும் கதையாகவோ அல்லது அவர்களை
நாம்வெறும்கதாப்பாத்திரமாகவோ எடுத்துக்
 கொள்வதில்லை

அதையும் மீறி அந்தப் படத்தின் மூலம்
மறைமுகமாக அவர் நமக்குச் சொல்ல
 நினைக்கும் செய்திஒன்று உண்டு
என்கிற நோக்கத்தில்தான் பார்த்துப்
பழகியுள்ளோம்.

அவர்களும் தங்கள் அனைத்துப்
படங்களிலும் பூடகமாக பல செய்திகளைச்
சொல்லியும் இருக்கிறார்கள்

அவர்கள் திரையை மீறி மக்களிடம்
மிக நெருக்கமாகஇருப்பதற்கு
இதுதான் திட்டவட்டமான
காரணமும் கூட

என்னைப் ஒருத்தவரை லிங்கேஸ்வரனின்
தாத்தாவுக்கும்புரட்சித்தலவருக்கும் அதிக
வேறு பாடுகள் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவர் மறைந்து எத்தனை ஆண்டு காலமானாலும்
அவர் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் அரசியல்
நடத்தவேண்டிய சூழலில் அவருடைய கட்சி இன்றும்
இருக்கிறது தொடர்ந்தும் இருக்கும்
லிங்கேஸ்வரனின் தாத்தாவை நினைத்தபடி வாழும்
அந்த ஊரைப் போல

தனது திருட்டில் மிக உட்ச பட்ச திருட்டின் மூலம்
திசை மாறும் பேரன் லிங்கேஸ்வரன் போல
தன் நடிப்புச் செல்வாக்கின் மூலம் இதுவரை
அடைந்த பலனின் உச்சபட்சமாக இந்த
இந்தப் படத்தின் மூலம் தனக்கென தன்
குடும்பத்திற்கென வாழும் ஸூப்பர் ஸ்டார்
அவர்கள் புரட்சித் தலைவரைப் போல
இனி தானும் மக்களுக்கென வாழ்வதற்காக
முடிவெடுப்பார் எனும்  மறைமுகச் செய்திதான்
இந்தப் படம் என்பது ஆணித்தரமான கருத்தாக
எனக்குப் படுகிறது

இவ்வளவு நாள் பொறுத்தோம்
சில அரசியல் சூழல் மாறும் நேரத்திற்காக
கொஞ்சம் பொறுக்கமாட்டாமோ என்ன ?

Monday, December 15, 2014

மேற்கில் தோன்றும் உதயம்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுமோ -கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குமோ

மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுமோ

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குமோ

தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எறிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுமோ


கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்

நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குமோ

செத்துக் காடு போன பிணமே
வீடு திரும்பினால் -பெண்
பித்துப் பிடித்துத் திரிவோன் மனசில்
இரக்கம் அரும்பினால்

போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமோ  ?-கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமோ ?  

Friday, December 12, 2014

மூலம் அறிய முயல்வோம்

இயந்திரப் பராமரிப்புக்குச்
செய்யும் செலவினில்
பாதியளவு கூட
அதை இயக்குபவனுக்குச் செய்ய
மனமற்றுப்போகும் முதலாளி
நலிவடையவே அதிகச் சாத்தியம்

மூல நூலைப் படித்து
அதன் நுண்பொருள் அறிய முயலாது
விளக்கங்களைப் படித்தே
வித்துவானாகித் திரிபவன
அறிஞர்கள் சபையினில்
சறுக்கி விழவே சாத்தியம் அதிகம்

திரண்ட தோளும்
சிக்ஸ் பேக் உடற்கட்டும்
அழகென  மெனக்கெடுபவன்
மனப்பயிற்சி இல்லையெனில்
ஆரோக்கியம் இழக்கவே
நிச்சயம் அதிகச் சாத்தியம்

சடங்குகளில் சம்பிரதாயங்களில்
மனமதனை அடகுவைத்துவிட்டு
அதற்கான காரணம் அறியாது
அன்றாடம் தொடர்பவன்
பெறுவதனை விட
இழப்பதற்கே சாத்தியம் அதிகம்

காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
மூலம் அறியாத காரியங்களுமே
மடத்தனம் என அறிவோம்
நடைபயணத்தில் காலடிக் கவனமாய்
செயல்பாடுகளின் மூலம் அறிய முயல்வோம்
பகுத்தறிவு மனிதனாய் நிலைத்து உயர்வோம் 

Wednesday, December 10, 2014

கவிதைத் தாய்க்குச் செய்யும் தொண்டு

பாட்டுக் கூட பேச்சைப் போல
சுலுவா இருக்கணும் மாமா-அதைக்
கேட்கும் போதே மனசுத் தானா
துள்ளிக் குதிக்கணும் மாமா

நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
ஏதும் தவறியும் மாமா-உன்
பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
கவனம் கொள்ளணும் ஆமா

நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
காத்தைப் போலவும் மாமா -ஓடும்
ஆத்து நீரில் மிதந்து போகும்
பூவைப் போலவும் மாமா

ஆத்தா தூக்கப்  பொங்கிச் சிரிக்கும்
பாப்பா போலவும் மாமா-உன்
பாட்டு என்றும் இயல்பா  இருக்கணும்
சொல்லிப் புட்டேன் ஆமா

எதுகை மோனை தேடி அலையும்
நிலைமை உனக்குமே வந்தா-பாட்டில்
புதுசா சொல்ல விஷயம் தேடி
அலையும் கஷ்டமும் வந்தா

 எழுதும் ஆசைய விட்டு நீயும்
வெளியே வந்துடு மாமா -அதுவே
கவிதைத்  தாய்க்கு நாம  செய்யும்
அருமைத்  தொண்டுதான் மாமா

Tuesday, December 9, 2014

சென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014





வலைப்பதிவர்களிடம் அறிமுகம் ஆகி இருக்கிற மாதிரி
நான் டுவிட்டர்களிடமோ அல்லது
முக நூல் நண்பர்களிடமோ அறிமுகம் ஆனவனில்லை

ஆனாலும் டுவிட்டர்களிடமும் முக நூல் நண்பர்களிடமும்
இருக்கும் ஒரு இளமைத் துள்ளலுடன் கூடிய
மிகக் கூர்மையான டுவீட்டுகளும் பதிவுகளும்
எனக்கு மிகவும் பிடிக்கும்

அதன் காரணமாகவே அவர்களை மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே
என்னுடைய திருப்பூர் நண்பர் கோவைக் கமல்
அழைப்பின் பேரில் கோவையில் நடைபெற்ற
ஒரு டுவிட்டர்களில் கூட்டத்தில் கலந்து கொண்டேன்
இளமைத் துள்ளலுடன்  கூடிய அந்தக் கூட்டம்
ஒரு வித்தியாசமான இரசிக்கத் தக்க சுவாரஸ்யமான
அனுபவமாக இருந்தது

அதைப் போலவே சென்னையில்  நடைபெறும்
முக நூல் நண்பர்களின் பதிவு வழியாக வந்த
அழைப்பினை ஏற்று நான் அந்தக் கூட்டத்தில்
கலந்து கொண்டேன்

ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன
அரிமா சங்கத் தலைவராக இருக்கிறவன்
என்கிற முறையில்அதன் காரணமாக
அறிமுகம் ஆகி இருந்த இருவரைத் தவிர
வேறு யாரையும் எனக்குத் தெரியவில்லை

அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை

ஏனெனில் நடத்துபவர்கள் கலந்து கொள்பவர்கள்
என்கிற வேறுபாடு தெரியாதவாறு அனைவரும் மிக
இயல்பாக சொந்த வீட்டு வைபவத்தில் கலந்து
கொள்வதைப் போன்ற ஒரு சூழ் நிலையை அங்கு
ஏற்படுத்தி இருந்தார்கள்

அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிகம் பேர்
கலந்து கொண்டதாலும் மிகச் சிறப்பான
பறை நடனத்திற்கும்இன்னிசைக் கச்சேரிக்கும்
நேரம் வேண்டி இருந்ததாலும்அதிகம் பேர்
சுய அறிமுகம் செய்து கொள்ள இயலவில்லை

ஆனாலும் ஏற்கெனவே பின்னூட்டத்தின் மூலம்
தொடர்பில் இருந்தவர்கள் குழு குழுவாகத்  தங்களை
அறிமுகம் செய்து கொண்டு
மகிழ்ச்சிக் களிப்பில் இருந்தது
கண்கொள்ளாக்  காட்சியாக இருந்தது

மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த
அட்வகேட் சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்களது
நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



















அட்வகேட் சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்களது
நண்பர்களுக்கும் மீண்டும்  எனது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



Monday, December 8, 2014

அழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Friday, December 5, 2014

"ஜான் அப்துல் நாராயணன் ( டிசம்பர் ஆறுக்காகவும் )

கடந்த வருட மழைக்காலத்தில்
சுகாதாரக் கேடும் அடைமழையும்
கைகோர்த்துக் கொள்ள
எங்கள் காலனியில்
கொள்ளை நோய்
பேயாட்டம் போடத் துவங்கியது

பழகிப் போன சோம்பல் நோயிலும்
அதிகார போதையிலும்
நெளிந்து கொண்டிருந்த அரசை
நாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப
கொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது
நாங்களும் திரு நீறுஅடித்து
பேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்
ஆயினும்
மூன்று வயதானவர்கள் மட்டும்
வசமாக மாட்டிக் கொண்டனர்

பெற வேண்டியதை எல்லாம்
சரியாகப் பெற்றுக்கொண்டபின்
"செய்ய வேண்டியதை எல்லாம்
முறையாகச் செய்துவிட்டோம்
இனி எங்கள் கையில் ஏதும் இல்லை
எல்லாம் அவன் கையில் " என
ஆகாசத்தைக் காட்டிவிட்டனர் மருத்துவர்கள்

நாங்கள் குழம்பிப் போனோம்
சங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி
மூவருக்குமாக வேண்டிக் கொள்வதென
ஏகமனதாய் தீர்மானித்தோம்

அப்போதுதான் பிரச்சனை
பூதாகாரமாய் கிளம்பியது
காரணம்
ஒருவர்  பெயர் ரஸாக்
அடுத்தவர் பெயர் ப்ரான்ஸிஸ்
மற்றொருவர் பெயர் விஸ்வனாதன்
எந்த முறையில் பிரார்த்திப்பது என
எழுந்த பிரச்சனை சங்கத்தை
மூன்றாக்கும்போல் வெடித்தது

திடுமென எழுந்த இளைஞன் ஒருவன்
"பிரார்த்தனைக்கு நாளைக்கு
ஏற்பாடு செய்ய்யுங்கள்
நான் சரிசெய்கிறேன்"என்றான்
எங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்
நம்பிக்கைஊட்டும்படியாக அவன்
பார்வைக்குத் தெரிந்ததாலும்
சரியெனச் சொல்லிவைத்தோம்

மறு நாள்
பிரார்த்தனைக்கு அனைவரும்
ஆவலாகக் காத்திருக்க
அதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்

இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்

மேடையில் மண்டியிட்டவன்
குரானைப் பிரித்து
வேதம்போல் படிக்கத் துவங்கினான்
அதிர்ச்சியில் எல்லோரும்
அவனையே பார்த்திருக்க
"ஆண்டவன் பரிபூரணன்
எல்லையில்லா அருளாளன்
அவனுக்கு எல்லாம் தெரியும்
நிச்சயம் அவர்களைக் காப்பான் " என்றான்

எல்லோரும் ஏதோ ஒருவகையில்
சமாதானமடைந்து போனார்கள்
எனக்கு மட்டும் ஒரு உறுத்தல்
"மூன்றுக்குள் இவன்
யாராக இருப்பான்
எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்"  
என்றேன் என் நண்பனிடம்
"அது எப்படி முடியும் ? " என்றான் அவன்

"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்
நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து
அகமகிழ்ந்து போனான்

"தம்பி நல்லது செய்தாய்
உன்பெயரென்னப்பா " என்றேன் பரிவுடன்
என்னை இகல்பமாகப் பார்த்தவன்
"ஜான் அப்துல் நாராயணன் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
"கைக்குட்டை சரி வராது
வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்

Wednesday, December 3, 2014

மீண்டும் ஜென் சித்தப்பு

"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Monday, December 1, 2014

உலகுக்கு ஒரு நாள் புரியும் எங்கள் அதீத அசுர பலமே

எம் படைப்புகள் எல்லாம்...
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும்  எனும்
அதீத  எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச்  செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்

 சராசரித்  தேவைகளை அடையவே
 திணறும்அல்லல்  கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
எதிர்படும்  பெரும்  துயர் களை
எமக்குத் தெரிந்த வகையில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி   மகிழ்கிறோம்

எமது எல்லைக்கு  எட்டிய வகையில் புனைவு
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
இன்றைய  நோக்கில்
ஒரு சிறிய குழுவே

ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர  பலமே