Thursday, December 25, 2014

இன்கவி பெறலாம் யாரும்

விளமதும் மாவும் தேமா
வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

21 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இன்கவி இயற்றும் வழிமுறையை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்
நானும் யாப்பிலக்கணம் அறியாவிட்டாலும் அறுசீர் விருத்தம் எண்சீர் விருத்தம் ஆசிரியப்பா போன்றவற்றை சந்தத்தை வைத்துத்தான் எழுதி இருக்கிறேன். சந்தத்தை உணர்ந்தால் வெண்பா படைப்பது கூட கைவரப் பெறுகிறது. பின்னர் இலக்கணத்தை சரிபார்த்தால் பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தம 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

நானும் இப்படித்தான் ஐயா தாங்கள் சொல்லிய விதம் நன்றாக உள்ளது. முயற்சிதான் செய்கிறேன்.பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


கரந்தை ஜெயக்குமார் said...

///கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்///
அற்புதம் ஐயா
தம 4

Kasthuri Rengan said...

சில நொடியில் சிக்குகிற வித்தையா அது
கவிதை அருமை அய்யா

Kasthuri Rengan said...

த ம ஐந்து

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் இலக்கணத்தோடு படைத்தாலும், இலக்கணமின்றி இயற்றினாலும் இயல்பாய் வந்த கவிதை வரிகளில் தேமாவும் உண்டு; புளிமாவும் உண்டு. அணியிலக்கணமும் உண்டு. இயல்பாய் உதித்திடும், உங்கள் இயல்புநவிற்சி அணி கவிதைகள் தொடரட்டும்.
த.ம.6

திண்டுக்கல் தனபாலன் said...

க'விதை' அருமை...

Iniya said...

அருமையான முயற்சி நிச்சயம் திருவினை ஆக்கும்
மிக்க நன்றி !வாழ்த்துக்கள் ....!

KILLERGEE Devakottai said...

கவிதை அருமை கவிஞரே...

இளமதி said...

வணக்கம் ஐயா!

உள்ளத்தில் ஊறும் உணர்வே கவியாகும்!
அள்ளியே தந்தீர் அழகு!

இலகுவாகச் சொல்லித் தந்தீர்கள்!
அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

மின்னிடும் எதுகை! மோனை!
   மீட்டிடும் யாழ்போல் சீா்கள்!
பின்னிடும் அடிகள் யாவும்
   பெருக்கிடும் இனிமை என்பேன்!
பொன்னிடும் கன்னி போன்று
   பொலிந்திடும் சந்தப் பாக்கள்
உன்னிடம் கண்டே யானும்
   உவப்புடன் வாழ்த்து கின்றேன்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ்மணம் 9

”தளிர் சுரேஷ்” said...

கவிதையின் கருவை அழகாக விளக்கிவிட்டீர்கள்! அனைவருக்கும் உதவும்! அருமையான படைப்பு! நன்றி!

Unknown said...

இன்கவி பெறலாம் யாரும்...உண்மைதான் ,ஆனால் உங்களுக்கு வந்த ஞானம் வரணுமே :)
த ம 10

நிலாமகள் said...

சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே//

அருமை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நண்பர் சொன்ன யோசனை அருமை. கவிதையை ரசித்தேன். நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை எழுதுவது எப்படி என்பதை மிக அழகாக கவிதை வடிவில் கொடுத்து அசத்திவிட்டீர்கள்! அருமை! சந்தமே முதன்மை என்றும்...சொல்லி...அருமை அருமை...எங்க:ளையும் எழுதத் தூண்டியது பார்ப்போம்....மிக்க நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடனும், நட்புடனும்

துளசிதரன், கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

சிறப்பான முறையில் கவிதைகளை புனையும் ஆற்றலையும்,, கவிதை நடையிலேயே சொல்லித் தந்து சிறப்பித்த பதிவினை கண்டு நானும் வியந்துதான் போனேன். தங்களின் ஆற்றலை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு என் பணிவான நனறிகள் சகோதரரே!

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இனிய இப்புத்தாண்டில், அனைவரும் அத்தனை வளங்களையும் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Post a Comment