Sunday, May 31, 2020

இது ஒரு கொரோனா காலம்...

"ஹலோ"

"ஹலோ சார் குட்மார்னிங்"

"வெரி குட் மார்னிங் சார்...😊"

"சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க"

"அமோகமா இருக்கோம்,  நீங்க எப்டி இருக்கிங்க, வீட்ல அண்ணி பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க..."

"எல்லா நல்லா இருக்கோம் சார்..."

"அப்றம் வேலைலாம் எப்படி போயிட்ருக்கு"

"சார் உங்களுக்கு ப்ரைவேட் செக்டார் பத்தி தெரியாததா, கோரனாவால, 50% வொர்க்கர்ஸ், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒர்க், 50% சாலரி😔"

"ஆமாம் சார், ஆமாம் சார், எல்லாருக்குமே காமனா இன்கம் பாதியா கம்மியாயிடிச்சி, இயல்பு வாழ்க்கை திரும்புற வரைக்கும் கொஞ்சம் சிரமம் தான், கவலப்படாதீங்க சார், இதுவும் கடந்து போகும்"

"நிச்சயமா சார்"

"அப்றம், சார் திடீர்னு போன் பண்ணிருக்கீங்க, எதுவும் விசேசமா"

"கரெக்டா சொல்லிட்டீங்க சார், ப்ரில்லியன்ட் சார் நீங்க,
என் பொண்ணுக்கு மேரேஜ் வச்சிருக்கோம்"

"வெரி குட் சார், என்னவோ நேத்து ஃபர்ஸ்ட் பர்த்டே கொண்டாடுன மாதிரி ஞாபகம், கடகடனு வருசம் ஓடிடுது"

"ஆமா சார்,  நெஜந்தான அது😊,  அப்றமா, மாப்ள நல்ல இடம், அதான் டக்குனு செட்டாயிடிச்சி, அப்றம், லாக்டவுன் 1.0ல பேசி முடிச்சோம், ஆனா லாக்டவுன் தான் 2.0, 3.0, இப்ப 4.0,🤓, போகுற போக்க பார்த்தா இதோட முடிஞ்சிடுற மாதிரி தெரில😇, அதான் தள்ளிப்போட வேணாம்னு வச்சிட்டோம்😊, உங்களுக்கு தெரியாதது இல்ல, இப்ப உள்ள சூழல்ல ஊர் ஊரா பத்திரிகை வைக்க அலைய முடியாது, இ பாஸ் சில இம்பார்டன்ட் ட்ராவல்க்கு தான் அலோவ் பண்ட்றாங்க..."

"ஆமா சார், பக்கத்து ஏரியாவுக்கு கூட ஈவ்னிங் 7மணிக்கு மேல போக முடியல..."

"அடுத்தது,  ஃபோன்ல சொல்ட்றத நேர்ல வந்து சொல்ட்றதா நினைச்சுக்கங்க...🤗"

"அதனால என்ன சார், நாம என்ன அப்புடியா பழகுறோம், நமக்குள்ள என்ன சார் பார்ஃமாலிட்டி...😎"

"தேங்க்யூ சார், தேங்க்யூ சார், அப்றம் நீங்களும் பங்க்சனுக்கு வர்றது சிரமம் தான், அடுத்தது பங்சனுக்கு எங்க சைடுல 25பேரு, அவங்க சைடு 25பேரு தான், அவ்ளோ தான் அலோவ்டாம், அதனால வீட்லயே பண்ட்றோம்"

"அதுவும் சரி தான் சார், இப்ப உள்ள சூழல் அவ்வளவு  சரியாயில்ல"

"அப்றம்..."

"சொல்லுங்க சார்"

"நான் உங்க வீட்ல நடந்த பெரும்பாலான ஃபங்க்சன்ல கலந்துக்காம விட்டதில்ல, போன வருசம் உங்க வீட்ல நடந்த காது குத்து வரைக்கும் வந்திருக்கன்"

"என்ன சார் நீங்க, எங்க ஃபேமிலி ப்ரெண்ட் சார் நீங்க"

"தேங்க்யூ சார், ஆனா என் லைஃப்ல இப்ப தான் நான் ஃபர்ஸ்ட் ஃபங்சன் என் பொண்ணுக்கு பண்ட்றன், அதனால...😍"

"சொல்லுங்க சார்...🙂"

"ஃபங்சன் ஃபுல்லாவும்  நாங்க ஃபேஸ்புக்ல லைவ் வீடியோ போட்ருவோம், நீங்க கண்டிப்பா பார்க்கணும், விஷ் பண்ணணும்,
அப்றமா..."

"சொல்லுங்க சார்...😒"

"என அகௌண்ட் நம்பர் குடுத்துடுறன், நீங்க அதுக்கு மொய் அமௌன்ட ட்ரான்சர் பண்ணிடுங்க, அப்றமா, உங்க அட்ரச சொல்லிடுங்க😊, நீங்க வெஜ்ஜா, நான் வெஜ்ஜா சொல்லிட்டீங்கனா, நாங்க ஸ்விக்கி, ஜொமாட்டோ எது உங்க ஏரியா நியர் ல இருக்கோ அதுல ஆர்டர் பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்பிருவோம்...🤗"

"😕😯😒 ச...சர்ரீங்க சார்😐"

#படித்ததில்_ரசித்துச் சிரித்தது.

Thursday, May 28, 2020

அதீத பலம் எப்போதுமே ஜெயிப்பதில்லை

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கரைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

எளியவர்களுக்கும் நல்லவர்களுக்கும் புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


கொடுப்பதன் மூலம் பெறுவோம்..

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Tuesday, May 26, 2020

புலிவேட்டை...

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Thursday, May 21, 2020

கவிதை என்பது உணர்வு கடத்தி...


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


Wednesday, May 20, 2020

வாழ்வை இரசித்து வாழ்வோம்

நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை

நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்

கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை

உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம்  அடைகிறான்

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை

நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்

Monday, May 18, 2020

நாலாந்தரம்...

"நாலாந்தரம் என்பதென்ன "
விள்க்கம் கேட்கிறான் நண்பன்

"நல்லதை
நல்லவிதமாகக் கொடுப்பது
முதல் தரமெனச் சொல்வதும்

நல்லதை
மோசமாகக் கொடுப்பது
இரண்டாம் தரமெனச் சொல்வதும்

நல்லதல்லாததை
மோசமாகக் கொடுப்பது
மூன்றாம் தரமெனச் சொல்வதும்
புரிகிறது

அது என்ன
நான்காம் தரம்
அதுவும் மூன்றைவிட
மிக மோசமானதாய்..."

நல்ல கேள்வியாய்ப்படுகிறது எனக்கும்

நான் இப்படிச் சொன்னேன்

"அரசியல், சினிமா,பண்பாடு
கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என
அனைத்திற்கும்பொருந்தும்படியாய்
சொல்லட்டுமா " என்கிறேன்

"முடிந்தால் சுருக்கமாகச் சொல் " என்றான்

"நல்லதல்லாததை
மிகச் சிறப்பாகத் தருவது
அதுவும்
நாம் விரும்பும்படியாகவும்
நாம் படிப்படியாய்
நம்மையறியாது அதற்கு நாசமாகும்படியாகவும்"
என்கிறேன்

அவன் யோசிப்பதுப் புரிந்தது

ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்

Saturday, May 16, 2020

சுகப்பிரசவம் வேண்டி...

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

Tuesday, May 12, 2020

அனுமன் வாலாய்...

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாய்  "

மனதின் மூலையில் புகையாய்
மெல்லக் கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரிந்து பரவி
என்னை திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய் இருக்கவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 வாழ்வினையொட்டி
எப்படியெல்லாம மாறிவிட்டன
வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்  பதிவு செய்யப்படாத
எத்தனை மாறுதல்கள் ?

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய
தேவைகளுக்கான இடத்தைக் கூட
பொழுது போக்கும் ஆடம்பரமும்  ஒதுக்கிக் கொடுக்க
உறவுகளைக் கூட அவர்களின் பயன் முடிவு செய்ய
உணவினை கிடைக்கும் நேரம் முடிவு செய்ய
உடலுறவைக் கூட கிழமை முடிவு செய்ய...

தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க
மனதின் மூலையில்
நெருப்புப் பற்றி எரியத் துவங்க
இப்போது புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
 இந்த அவசரக் காலத்தைப் பதிவு செய்ய வேண்டிய
 இதுவரை பதிவு செய்யப்படாத
 புதிய பட்டியல்
அனுமார் வாலாய் நீண்டு தெரிகிறது
என்னுள்ளும் இதுவரை இல்லாத
அதீத உற்சாகம்
காவிரி நீராய் பரந்து விரிகிறது

Sunday, May 10, 2020

கர்ப்பக் காலக் கோளாறுகள்...

எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

Saturday, May 9, 2020

மூலம் அறிதலே தெளிவு

பயணத்தின் இலக்கே
பயணத்தை அர்த்தப்படுத்தும்

பயணத்தின் அர்த்தமே
தூரம் குறித்துச் சிந்திக்கும்

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

இத்தனையும்  பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

எழுத்தின் நோக்கமே
கருவை முடிவு செய்யும்

கருவின் தாக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு
சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
முதலில்
மூலம் அறியும்
ஞானம் பெறுவோம்

பின்எச்செயலையும்
நிறைவாய்ச்   செய்து
சுகமாகவே
சிகரம் தொடுவோம்

Thursday, May 7, 2020

எல்லாம் சில காரணமாகத்தான்...

மதுபானக் கடைத் திறப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தலைவர்கள் யாரும் தன் கட்சியினர் யாரும் குடிக்கக் கூடாது என ஏன் சொல்வதில்லை...சொன்னால் கட்சி காணாமல் போய்விடும் அதனால்தான்.       தங்கள் தெருவில் மதுக்கடையைத் திறக்க அரசு அதிகாரிகளிடம் மல்லுக்கட்டும் பொதுஜனம் ஏன் குடிக்க வருபவர்களை மறிப்பதில்லை..அதற்குள் சொந்தபந்தம் உண்டு..வீண்பிரச்சனை வேண்டாம் என்றுதான்...                                      விதிமீறலுக்கு குடிமகன்களை சாலையில் அந்த அடி அடித்த காவலர்கள் அதே விதிமீறலுக்கு "குடி"மகன்களை பாரினில் அடிப்பதில்லை ஏன்.?அடித்தால் வருமானம் குறையும்..அதனால் அரசுக்கும் வலிக்கும் அதனால்தான்.                                               மதுக்கடை திறப்பதால் சமூக விலகல் பாதிக்கும் எனத் தெரிந்தும் அரசு அதைத் திறந்தது எதனால்...சமூக விலகல் பாதிப்பால் குரோனா பெருகும் ..குடிப்பவர்கள் சாவதால் குடியும் படிப்படியாய் குறையும் என்பதால்        அதுசரி இத்தனை களேபரங்களுக்கு இடையில் குடிக்காத பெரும்பாலோர் இந்தக் கருமாந்திரங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருப்பது எதனால்.. இனத்தால் மதத்தால் வர்க்க பேதத்தால் இணைய முடியாதபடி எல்லோரும் பிரிந்து கிடப்பதால்தான்...

Wednesday, May 6, 2020

பூந்தியாகும் லட்டுகள்

"ஸ்வீட் மாஸ்டர் பேசுகிறார்
என்னன்ன்னு கேளுங்கோ "என
அலைபேசியயைக் கொடுத்துப்போனாள் மனைவி

வாங்கிப் பேசினேன்

"அண்ணா ஒரு சின்னச் சங்கடம்
லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தீர்கள் இல்லையோ
சின்ன ஆர்டர்ன்னு
அஸிஸ்டெண்டைப் பார்க்கச் சொல்லி இருந்தேன்
கொஞ்சம் பதம் விட்டுவிட்டான்
லட்டு இனி பிடிச்சா அதிகம் உதிரும்
மன்னிச்சுடுங்கோ
பூந்தியா பாக்கெட் செய்து கொடுத்திடறேனே " என்றார்

சரி இனி பேசிப் பயனில்லை எனப் புரிந்தது

"சரி அப்படியே செய்துடுங்கோ
இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் "என்றேன்
ஏதாவது சொல்லவேண்டுமே என்று

"ஒண்ணும் இல்லேண்ண
இரண்டுக்கும் சேர்மானம் செய்முறை எல்லாமே ஒன்றுதான்
சைஸ்தான் வித்தியாசம்
இது உருண்டை அது உதிரி " என்றார்

பல சமயம்
எப்படி முயன்றும்
ஒரு கட்டுக்குள் அடங்காது
வசனகவிதையாகிப் போன
சில மரபுக் கவிதைகளின் ஞாபகம்
ஏனோ எனக்கு உடன் வந்து போகுது.......(yaathoramani.blogspot.com ) 

Monday, May 4, 2020

உண்மையான நமக்கு நாமே இதுதான்...

[இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி...

ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...

 திறக்கப்படவிட்டாலும் சரி.....

ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

 தளராவிட்டாலும் சரி.....

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி....

 தடுக்காவிட்டாலும் சரி...

அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி....

 போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி....

 பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்.

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்......

கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.....

எச்சில் துப்பாதீர்கள்.....

கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....

கும்பல் கூடுவதை தவிருங்கள்.......

முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க.... மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். (படித்ததில் பகிரப்பிடித்தது..)

Sunday, May 3, 2020

அனுபவமே அறிவு


ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

.'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை

*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து புரோட்டின், கலோரி, விட்டமின் பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,

*'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;*
*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*
*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*
*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்* என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு? லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா,

'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

பியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

*வயிறு உப்புசமா இருக்காமாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.*

*ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.*

*'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.*

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

*பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!'*

சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க

பித்தக் கிறுகிறுப்புக்க முருங்கைக்காய் சூப்,

மூட்டு வலிக்க முடக்கத் தான் அடை,

மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,

குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,

வயசுப் பெண் சோகைக்கு கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்க வாழைத்தண்டுப் பச்சடி’

என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையு சில நேரம் மருந்துகள்;பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

வாட்சப்பிலும் முகநூலிலும் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிருங்கள.படித்ததில் பிடித்தது...                     
-

Saturday, May 2, 2020

சிரிக்கத் தெரிந்த பிறவி...

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மகிழ்வு பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
மகிழ்ச்சி  கொள்ளுவோம்