Wednesday, November 23, 2022

தெரிந்து கொள்வோம்..


 நம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏழைகள் பயன்படுத்திக் கொள்ளும்படியான ஒரு திருமணத்திட்டம் இதுபோல் ஒன்று உள்ளது...நாம் அறிந்த ஏழைகளுக்காக இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் பகிர்வதன் மூலம் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளச் செய்வோம்....

Monday, November 21, 2022

ஆவணங்கள் தொலைந்தால்...

 *12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்...*

*எப்படி திரும்பப் பெறுவது...?* 


எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


*1.  #இன்ஷூரன்ஸ்__பாலிசி தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். 


எவ்வளவு கட்டணம்...? 


ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும் இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 


நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 


*2. #கல்வி_மதிப்பெண்_பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி. 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது. 


எவ்வளவு கட்டணம்...? 


உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 


கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். 


அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். 


தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். 


*3. #ரேஷன்_கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள 

அட்டை. 


எவ்வளவு கட்டணம்...? 


புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். 


கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். 


நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். 


*4. #டிரைவிங்__லைசென்ஸ் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண். 


எவ்வளவு கட்டணம்...? 


கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). 


கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம். 


நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம். 


*5. #பான்கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். 


கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். 


நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 


*6. #பங்குச்சந்தை_ஆவணம் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 


எவ்வளவு கட்டணம்...? 


தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். 


கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். 


நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். 


இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும் பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். 


*7. #கிரயப்பத்திரம் தொலைந்ததால் யாரை அணுகுவது...?* 


பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். 


இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். 


கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். 


நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். 


*8. #டெபிட்கார்டு தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


கணக்குத் தொடர்பான விவரங்கள். 


எவ்வளவு கட்டணம்...? 


ரூ.100. கால 


வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள். 


நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். 


*9. #மனைப்பட்டா தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


வட்டாட்சியர். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்..? 


*நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்...?* 


ரூ.20. 


கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 


*10. #பாஸ்போர்ட் தொலைந்தால் யாரை அணுகுவது...?* 


மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். 


எவ்வளவு கட்டணம்...? 


ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். 


நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 


20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். 


இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். 


*11. #கிரெடிட்கார்டு தொலைந்தால் கிரெடிட் கார்டு யாரை அணுகுவது...?* 


நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். 


என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்...? 


தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். 


எவ்வளவு கட்டணம்...? 


ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). கால வரையறை: 15 வேலை நாட்கள். 


நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். 


தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். 


*12. #ஆதார்_அட்டை தொலைந்து போனால்...?* 


உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள் அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. 


இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 


அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 


உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம். 


தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்....


ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும். ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும். 


மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால், மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும். நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள். 


கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். 


கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம் உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.

Tuesday, November 15, 2022

எம் படைப்புகள்...

 எம் படைப்புகள் எல்லாம்...


ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச் செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை
எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
மனம் கீறிப்போகும்
சின்னஞ் சிறு அல்லல்களை
அதிக மசாலாக் கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

Sunday, November 13, 2022

ரோஜாவின் ராஜா...

 நேரு மாமா பிறக்கும் முன்பும்

ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Saturday, November 12, 2022

காந்தி கிராமம் அறிவோம்..அப்படியே ...

 'காந்திகிராமம்' துவங்கிய புரட்சிப்பெண்

டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன்!அவர்களையும்...


1904, ஆகஸ்ட் 18 அன்று புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் டி.வி.சுந்தரம் ஐயங்காருக்கு மகளாக நெல்லையில் பிறந்தார் சௌந்தரம். 


சுட்டிப் பெண்ணாக சுற்றித்திரிந்த தன் மகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான உறவுக்காரர் டாக்டர் சௌந்தரராஜனை 1918-ஆம் ஆண்டு, மணம் முடித்து வைத்தார் சுந்தரம்.  மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தார் சௌந்தரராஜன். 


அந்தக் காலத்தில் பிளேக் நோய் தாக்கி மக்கள் பலரும் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். தன் உயிரை துச்சமென மதித்து அவர்களுக்கு சிகிச்சை தந்தார் சௌந்தரராஜன்.அதே பிளேக் நோய் அவரையும் தாக்கியது; மரணப் படுக்கையில் விழுந்தார். 


செய்வதறியாது திகைத்த தன் மனைவி 14 வயது  சௌந்தரத்தை அழைத்தார் சௌந்தரராஜன். "தொடர்ந்து நீ படிக்க வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் கல்வி கற்பதை நிறுத்தி விடாதே. குறிப்பாக மருத்துவப் படிப்பை படித்து முடித்து மக்கள் சேவையில்  ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். "எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், நீ என்னையே நினைத்துக் கொண்டிராதே. என்னை மறந்துவிட்டு, வேறொரு திருமணம் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தவர், 1925-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


வேறு எந்தக் குடும்பத்தில் இதுபோன்ற மரணம் நிகழ்ந்திருந்தாலும், சிறுமிக்கு அதுதான் வாழ்க்கையின் எல்லையாக இருந்திருக்கும். சுந்தரம் ஐயங்கார் குடும்பமோ, புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் காந்திய சிந்தனைகளுக்கு உதாரணமாக அன்றே சுட்டிக்காட்டப்பட்ட குடும்பம். 


கணவரை மிக இளம் வயதிலேயே பறி கொடுத்த சௌந்தரம், கல்வியைத் தொடர வசதியும் வாய்ப்பும் அமைத்துத் தந்தது குடும்பம். பள்ளிப் படிப்பு முடித்து, இறந்துபோன கணவரின் ஆசைப்படி டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்துவைத்தார் சௌந்தரம். 


இங்குதான் விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியடிகளின் மருத்துவருமான சுசீலா நய்யரின் அறிமுகம் சௌந்தரத்துக்குக் கிடைத்தது. காந்தியை சுசீலாவுடன் சென்று சந்தித்தார் சௌந்தரம். அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சந்திப்பு அது!


காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க எண்ணிய சௌந்தரத்தைத் தடுத்து நிறுத்தினார் காந்தி." முதலில் மருத்துவப் படிப்பைப் படித்து முடி.பிறகு

இங்கு வா"என்று கூறினார்.


லேடி ஹார்டிங் கல்லூரியின் தங்கப் பதக்கத்தை வென்ற சௌந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய் மற்றும் மகப்பேறியல் பட்டமும் பெற்றார். 1936-ஆம் ஆண்டு, தன் 32-ஆவது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார். 


அடுத்து அவர் சென்ற இடம் காந்தியின் சேவா கிராம் ஆசிரமம். தமிழகத்தின் செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்த சௌந்தரம், காதி உடுத்தவும் நூல் நூற்கவும் இங்கு கற்றுக்கொண்டார்; வெறும் தரையில் படுத்து உறங்கினார்; கழிவறைகளைச் சுத்தம் செய்தார்; கிராம வாழ்க்கை முறைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார்.


இங்குதான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான  ஜி.ராமச்சந்திரனை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். 


ராமச்சந்திரன் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்வதாகக் காந்தியிடம் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் எழுதி கையெழுத்திட்டுத் தந்திருந்தார். எனவே காதல் ஜோடி மணமகனுக்கு 35 வயதாகும் வரை காத்திருந்தது. 


ஒருவழியாக திருமணம் செய்து கொள்ளும் தங்கள் எண்ணத்தை காந்தியிடம் சொன்னார்கள். காந்தியும் ராஜாஜியும் சுந்தரம் ஐயங்காரிடம் மகளின் மறுமணத்துக்கு அனுமதி கோரினர். சுந்தரம் ஐயங்கார் திட்டவட்டமாக முடியாது என்று இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 


`ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது, கடிதப் போக்குவரத்து கூடாது’ எனக் கடும் விதிகளை விதித்து, ஓர் ஆண்டு முடிந்ததும் அதே காதல் இருந்தால் உங்கள் திருமணத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி ஓராண்டு கழித்து தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினார் காந்தி.


ஓர் ஆண்டு அவ்வாறு இருவரும் சந்திக்காமல் இருந்தார்கள். பின்னர் காதலர் இருவரும் வந்து சந்திக்க, அவர்கள் மன உறுதியைப் புரிந்துகொண்டார் காந்தி. 1940 நவம்பர் 2 அன்று, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் தம்பதிக்கு சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் எளிமையாக திருமணம் செய்துவைத்தார் காந்தி. 


மனைவி கஸ்தூரிபா காந்தி நூற்ற கதர் சேலையை சௌந்தரத்துக்குப் பரிசளிக்க, அதையே உடுத்திக்கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விதவை மறுமணம், வெவ்வேறு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிப் பின்புலம் கொண்டவர்கள்; வேறு மாகாணத்தவர்கள்; பெற்றோர் சம்மதமின்றி திருமணம் என்பதால், இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது.


1942 தொடங்கி சௌந்தரம் நேரடியாக சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் கேரளப் பகுதியெங்கும் சுற்றுப் பயணம் செய்து நாட்டு விடுதலைக்குப் போராடினார். தேச விடுதலைக்காக சிறை சென்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். இவரது நடவடிக்கையைக் காரணம் காட்டி திருவிதாங்கூர் சமஸ்தானம் இவரை சமஸ்தானத்தை விட்டு வெளியேற்றியது.

ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்ட சாவர்க்கர் ஆங்கிலத்தில் எழுதிய

'எரிமலை' என்ற நூலை இவர் மொழி பெயர்க்க அது காரைக்காலில் அச்சாகி

எங்கும் ரகசியமாக வினியோகமாகி சுதந்திரக் கனலை எங்கும் பரப்பியது.


1943-இல் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு சேர்ந்து பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். அன்னை கிராமிய மருத்துவப் பணி என்ற பெயரில் இவர் பல கிளைகளை அமைத்து மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை மேற்கொண்டார். 


காந்தியின் வழிகாட்டலில், காந்தி தொடங்கிய கஸ்தூரிபா டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகிகளாகப் பணியாற்றினர் தம்பதியினர். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சௌந்தரம் கையில் கஸ்தூரிபாவின் ஓவியத்தைத் தந்து, டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகியாக அவரை அறிவித்தார் காந்தி. 


எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் தற்சார்புகொண்ட காந்தி கிராமங்களை இந்தியா முழுவதும் தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்க எண்ணிய சௌந்தரமும் ராமச்சந்திரனும், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கிராமத்தை ஒட்டி, 1947 அக்டோபர் 7 அன்று ‘காந்திகிராமம்’ ஒன்றை நிறுவினர்.

 இரண்டு ஏக்கர் நிலத்துடன் அன்று ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம் என்று 350 ஏக்கர் நிலப் பரப்பில் செயல்பட்டு வருகிறது. 


முழுக்க முழுக்க தங்கள் பணிகளைத் தாங்களே செய்ய இங்கு வந்த தன்னார்வலர்கள் பணிக்கப்பட்டனர். காய்கறி விளைவிப்பது முதல், சமைப்பது, துணி நெய்வது, சுத்தம் செய்வது என்று அத்தனையும் தாங்களே செய்தனர். இங்கு அமைக்கப்பட்ட கஸ்தூரிபா இலவச மருத்துவமனை மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்தார் சௌந்தரம்.


 ‘ஆரோக்கிய சேவகர்’ என்று அழைக்கப்பட்ட தன்னார்வப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் சொல்லித்தரப்பட்டு, அவர்கள் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டது. பள்ளிகள் இல்லாத பகுதிகளில் ஆசிரியர்களாகவும், மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் செவிலியர் களாகவும், கலவரங்கள் வெடித்த இடங்களில் சமூக நல்லிணக்கத்துக்குப் போராடும் களப் போராளிகளாகவும் இந்த ஆரோக்கிய சேவகர்கள் பணியாற்றினர். 


ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட காந்திகிராமப் பள்ளி, கல்லூரியாக வளர்ந்து 1976-ஆம் ஆண்டு, காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.


1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சௌந்தரம். 

பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார்


1962-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சௌந்தரத்தின் நேர்மையும் திறமையும், மக்கள் நேசப் பாங்கும் நேருவை வெகுவாகக் கவர, கல்வித்துறை துணை அமைச்சராக அவரை நியமித்தார் நேரு. தமிழகப் பெண் ஒருவர் மத்திய அரசவையில் துணை அமைச்சர் பதவியில் அமர்ந்தது அதுவே முதன்முறை.


தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவசமாக்கிய பெருமை, அப்போதைய கல்வி அமைச்சர் மற்றும் சௌந்தரத்தையே சேரும். நாட்டு நலப்பணித் திட்டத்தை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கொண்டுவந்ததும் இவரது முக்கியப் பங்களிப்புதான். அதே ஆண்டு சௌந்தரத்தின் சமூகப் பணியைப் பாராட்டி அவருக்கு பத்மவிபூஷண் பட்டம் வழங்கிக் கௌரவித்தது மத்திய அரசு. இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது மத்திய அரசு.


1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார் சௌந்தரம். அதன்பின் அரசியலில் இருந்து விலகியவர், முழு நேர சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1984 அக்டோபர் 21- தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டார் சௌந்தரம். அவரது பெயரை இன்னமும் சொல்லியபடி கம்பீரமாக நிற்கிறது.... காந்திகிராமம்!

Thursday, November 10, 2022

அழகு..

 


பூமிக்கு நீர்நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு மௌனமே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு வீரமே அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

Monday, November 7, 2022

போதைக்காரனின் புலம்பல் (நிச்சமாய் நானில்லை)

 


மாலை நேரம் ஆனாப் போதும்
மனசு குளிருதே-இந்த
பாழாய்ப் போன உடம்பு மட்டும்
அனலாய் காந்துதே
கால்கள் இரண்டும் கடையைப் பார்த்து
தானாய் நடக்குதே-இந்த
பாழாய்ப் போன போதைப் பழக்கம்
பாடாய்ப் படுத்துதே

வேட்டி துண்டு விலகி கிடக்க
விழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை  மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே

வ்லியைப் போக்க நல்ல மருந்து
என்று சொல்லியே -ஒரு நாள்
வலிய எனக்கு ஓசி தந்து
உசுப்பு ஏத்தியே
குழியில் என்னைத் தள்ளிப் போனான்
சகுனி நண்பனே-இன்று
குழிக்குள் கிடக்கேன் குப்பை போல
நாறி அழுகியே

காசு கொடுத்து யாரும் முதலில்
குடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
             

Sunday, November 6, 2022

நேர்மறை மகாத்மியம்

 புரியாது என புலம்பித் திரிவதைவிட.     புரிந்து கொள்ள முயன்றால்                கொஞ்சம் புரியத்தான் செய்யும்


கிடைக்காது என சோம்பித் திரிவதைவிட
தேட முயன்றால்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்யும்

முடியாது என முடங்கிக் கிடப்பதைவிட
அடைய முயன்றால்
கொஞ்சம் முடியத்தான் செய்யும்

மாறாது என மறுத்துத் திரிவதை விட
மாற்ற முயன்றால்
கொஞ்சம் மாறத்தான் செய்யும்

கிடையாது என அவநம்பிக்கைகொள்வதை விட
நமபத் துவங்கினால்
கொஞ்சம் உண்டெனத்தான் புரியும்

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருப்பதை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைப்பது
நிச்சயம் பலன் தரத்தான் செய்யும்..

Friday, November 4, 2022

வாழையடி வாழையாய்...

 முட்டாள் தொண்டர்களுக்கு

தலைவான அரைமுட்டாள்..


தொண்டர்கள் தொடர்ந்து

முட்டாளாக இருப்பதுவே

தன் தலைமைக்குப் பாதுகாப்பு

என்பதில் கவனமாகவே இருக்கிறான்..


அதன் காரணாமாகவே

காலங்காலமாய்..


அரைமுட்டாளாக

அவனும்...


முழுமுட்டாள்களாக

அவனைத் தொடரும் தொண்டர்களும்.....


புத்திசாலி தொண்டர்களுக்கு

தலைவனான அதீத புத்திசாலி...


தொண்டர்கள் தொடர்ந்து

தகுதி வளர்ப்பதுவே

தன் தகுதி வளர்க்கத் தூண்டுகோல்

என்பதில் கருத்தாய் இருக்கிறான்


அதன் காரணமாகவே

காலங்காலமாய்....


அதீத புத்திசாலியாய்

அவனும்...


புத்திசாலிகளாய்

அவனைத் தொடரும் தொண்டர்களும்.

Wednesday, November 2, 2022

தொள்ளாயிரமா...ஆயிரமா ?

 முன்பெல்லாம்

யார் பேசுகிறார்கள் என்பதை விட

என்ன பேசுகிறார்கள் என்பதில்

"அவர்கள் " கவனம் இருந்ததால்...


அவர்களும்

கவனமுடன் கவனித்தார்கள்

பேசுவோரும்

கவனமாய்ப் பேசினார்கள்


அதனால் பேச்சிற்கான

எதிர்வினையாற்றலும்

சரியாகவே இருந்தது...


இப்பொதெல்லாம்

என்ன பேசுகிறார்கள் என்பதை விட

யார் பேசுகிறார்கள் என்பதில்தான்

அவர்களின் முழுக்கவனமும் இருப்பதால்..


அவர்களும்

ஒழுங்காகக் கவனிப்பதில்லை

பேசுவோரும்

கவனமாய்ப் பேசுவதில்லை


அதன் காரணமாகவோ என்னவோ

அவர்களுக்கு "அதை " விட

"இதுவே " 

கூடுதல் அசிங்கமாய்ப் படுகிறது...


ஒருவகையில்

பின் இருக்கை மாணவனுக்கு

ஆயிரத்தை விட

தொள்ளாயிரம் பெரிதாய்ப் படுவதைப் போலவே