Friday, March 26, 2021

உலக நாடக அரங்க நாள்..

 இன்று மார்ச் 27


உலக நாடக அரங்க நாள் (World Theater Day) 


        உலக நாடக அரங்க நாள் ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

       சர்வதேச அரங்கப் பயிலகம் (International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப்பட்டது.

        இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961ல் ஃபின்லாந்தின் தேசீய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.            

       1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூரும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

       இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.        . 

        நம் நாட்டைப் பொறுத்தவரை 1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்றவையே நாடகங்களில் இருந்தன. 

       பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. 

       தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார். 

       மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். 

       தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாஸ் சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். 

      இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். 

      விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது.

        சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. 

        பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடியோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள்.

         நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.

        காலம் மாறினாலும் கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

        பொருளாதார வசதி இல்லை. நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள்.

        அவர்களை ஊக்குவிக்கும் தினமே இந்நாள்.(படித்ததும் பகிரப் பிடித்தது) 

Friday, March 5, 2021

நுனியில் அமர்ந்து முன்புறம் வெட்டும் முட்டாளாய்....

கொத்தனாரை

தோட்ட வேலை செய்யவும்

தோட்டக்காரனை

வீடு கட்டவும் 

விட்டக் கதையாய்


சர்வரை 

சமையல் வேலை செய்யவும்

சமையல்காரரை

நின்று பரிமாற 

வைத்தக் கதையாய்


அரசனை 

ஆலோசனை வழங்கச் செய்தும்

மந்திரியை

பெரும் போருக்கு 

அனுப்பும் முறையாய்


எல்லாவற்றையும்

மாற்றி மாற்றிச் செய்து

மாற்றம் இல்லையென

நொந்துச் சாகிறோம்


ஆப்பசைத்து

மாட்டிக் கொண்ட குரங்கு

நுனி அமர்ந்து

முன்புறம் வெட்டிய முட்டாள்

முதலான கதைகளைச் சொல்லியபடி..


வருகிற தேர்தலில்

தனக்கும் தன் வாரீசுகளுக்கும்

சேவை செய்யத் துடிப்பவர்கள்

நமக்கும் செய்வார்கள் என

வழக்கம்போல் நம்பியபடி...