Tuesday, February 28, 2012

பாவப்பட்ட ஆண்டிகள்

தன்னையொத்தவர்கள்
தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்


Sunday, February 26, 2012

காதல் கடலில் படகே ஊடல்


ஆண்
 :
அகில உலகும் சுத்திப் பாத்தேன்
அகிலா போல பொண்ணே இல்லை
உலகம் முழுசும் தேடியும் பாத்தேன்
ஷகிலா போல ஃபிகரே இல்லை
சல்லடை போட்டு அலசியும் பாத்தேன்
ஷண்முகி போல சிக்கவே இல்லை-அட
என்னவோ சொல்லுநீ பொண்ணை விட்டா
பூமிக்கு அழகு இல்லவே இல்லை

வீதி வீதியா சுத்தியும் பாத்தேன்
விமலா போல பொண்ணே இல்லை
மாடி வீடா போயும் பாத்தேன்
மாலா போல  அமையவே இல்லை
கோவில் குளங்கள் சுத்தியும் பார்த்தேன்
கமலா போல கிடைக்கவே இல்ல-நீ
ஆயிரம் சொல்லு பொண்ணு போல
அழகு உலகில் எதுவுமே இல்லை

பீச்சு பூங்கா அலசியும் பாத்தேன்
பாமா போல பார்க்கவே இல்லை
பீட்சா கார்னர் போயும் பார்த்தேன்
பமீலா போல யாருமே இல்லை
நாத்து நடுகிற வயலும் போனேன்
நமீதா போல எவளுமே இல்லை-யாரும்
மாத்திப் பேச வழியே இல்லை
பொண்ணை விட்டா உலகே இல்லை


பெண்
 ;
செக்ஸ் கதைகள் நாலு ஐஞ்சு
எனக்கும் கூட தெரியும் மச்சான்
சிக்ஸ் பேக் உடம்புக் காரன்
மூனு பேரைத் தெரியும் மச்சான்
அத்தை ம்கனே அர்ச்சுனன கூட
என்னைக் கேட்டு தவமாய் கிடக்கான்
மொத்த பொண்ணையும் கனவிலே பாரு-நான்
ஊரு போரேன் உருப்படா மச்சான்

செக்கு மாடு போல என்னை
தினமும் சுத்தி வார மச்சான்
கிக்கு கொஞ்சம் ஏறிப் போனா
திமிரும் கொஞ்சம்  ஏறுமோ மச்சான்
மத்த பொண்ணை நினைச்சு நாயாய்
நாடு பூரம் சுத்தும் மச்சான்-உன்
ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்-உன்னை
விட்டுப் போறேன் விளங்கா மச்சான்

ஆண்
 :
மேலே சொன்னது எல்லாம் டூப்பு
போதை செஞ்ச எடக்கு மடக்கு
நீயே எனக்கு என்றும் டாப்பு
வைச்சுப் புடாதே எனக்கு ஆப்பு
கையைக் காலாய் நெனைச்சுப் புட்டேன்
கண்ணில் நானும் ஒத்திக் கிட்டேன்
போதைச் சனியனை விட்டும் புட்டேன்-என்னை
விட்டுப் புடாதே அழிஞ்சித் தொலைப்பேன்

இருவரும்

குஞ்சு உடம்பில் கோழி மிதித்து
காயம் இதுவரை வந்ததே இல்லை
அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை:
வாழ்வில் காதல் கடலைப் போல
அதிலே ஊடல் படகைப் போல
தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்

 (ஒரு பபூன் வேஷம் கட்டும் நண்பருக்காக
மேடையில் பாடி ஆடி நடிக்க வென எழுதிக் கொடுத்தது
ஆணை சு.பானா கெட்டப்பிலும் பெண்ணை
கோவை சரளா கெட்டப்பிலும் கற்பனை செய்து
எழுதியது )


Saturday, February 25, 2012

டியூப் லைட் படைப்பாளியும் தடாலடி வாசகனும்

எப்போதும் மூன்று விஷயங்களை
தனித்தனியாகச் செய்யும் என் நண்பன்
இன்று ஒன்றாய்ச் செய்திருந்தான்

"என்ன விஷேசம் " என்றேன்

"ஒரு கிடாவெட்டு " என்றான்
மது வாடை குப்பென அடித்தது 

"சரி வரட்டுமா " என்றேன்

"உன்னிடம் பேசத்தான்
செட்- அப் பாக வந்திருக்கிறேன்
நீ போனால் எப்படி " என்றான்

அவன் பேசவில்லை
மப்பு  பேசுகிறது எனத் தெரிந்து கொண்டேன்

இந்த நண்பன் என்னோடு பள்ளி
இறுதி வகுப்புவரை தொடர்ந்து வந்தவன்
அப்போது அவனுக்கு வந்த காதலினால்
படிப்பையும் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி
கொண்டவன் .எழுதுபவ ன் எல்லாம் எல்லாம்
தெரிந்தவன் என்றோ அல்லது இப்படிப்
பேசினால் தானும் எல்லாமும் தெரிந்தவன்
என எண்ணிக்கொள்வார்கள் என  எண்ணியோ
என்னை சந்திக்கிறபோதெல்லாம் இப்படி
"பெண்களின் முடிக்கு     இயற்கையில் மணமுண்டா "
என்பது மாதிரியான ஏதாவது ஒரு
அசட்டு பிசட்டான கேள்வியை வைத்திருப்பான்
நானும் வார இதழ்களில் தாடி மீசை மற்றும்
பட்டை அடித்துக் கொண்டு வாராவாரம்
 பசு மாட்டுக்கு எந்தக் கிழமையில் எது கொடுத்தால்
செத்த மாமனார் சொர்க்கத்தில் சந்தோஷமாகச்
சாப்பிடுவார் என்பதற்கு பதில் சொல்லும்
ஆன்மிகப் பெரியவர் போல எதையாவது
நான்தான்  அதாரிட்டி போலச் சொல்லிப் போவேன்
அவனும் மகிழ்ந்து போவான் '

அது மாதிரித்தான் இன்றும் பிடித்துக் கொண்டான் 

  அவனே தொடர்ந்தான்
" முதலில் கிடாவெட்டுக்குத் தயாராக
ஒயின்ஸ் போனேன்அங்கே குடி குடியைக்
கெடுக்கும் எனப் போட்டிருந்தது
படித்துவிட்டு ஒரு ஃபு ல் போட்டேன்.
கரி சூப்பரா இற்ங்கிச்சு.செமிக்க வெத்தலை பாக்கு
போடப்போனா புகையிலை விளம்பரத்திலே
புகையிலை புத்து நோயை வரவழைக்கும்ன்னு
போட்டிருந்தது.அதைப் படிச்சுப் பாத்து ஒரு
பொட்டலம் வாங்கிப் போட்டேன்.இதோ இந்த
சிகரெட் விளம்பரத்திலே புகைபிடித்தல் கேடுன்னு
போட்டிருக்கு.படிச்சுட்டு ஒன்னு பத்தவச்சிருக்கேன்
ஏனப்பா இப்படியெல்லாம் எழுதி வைக்கிறாங்க
எழுதறதுல என்னப்பா பிரயோஜனம்  "என்றான்

அவன் சுற்றி வளைத்து எங்கு வருகிறான் எனத்
தெரிந்தது

" எந்த எழுத்தைச் சொல்றே.அதுல இருக்கிறதயா
இல்லை நாங்கள் எல்லாம் எழுதறதையா " என்றேன்

"இரண்டையும்தான் "என்றான் நக்கலாக

இவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை
இந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்
இதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை
உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு    பல நாட்களாக உண்டு

இந்த நிலையில் இவனுக்குஎப்படி பதில் சொல்வது
அல்லது எப்படித் தப்பிப்பது என
யோசித்துக் கொண்டிருந்தேன்

நல்லவேளையாக ஆபத்பாந்தவனாக  என நண்பன்
மணி எதிரே சைக்கிளில் வந்து நின்றான்
அவன் எங்கள் இருவருக்கும் ஒரு வருடம் சீனியர் .
அவன் எழுதுவதில்லையென்றாலும் வாசிப்பில் அதிக
ஆர்வம் உள்ளவன்

அவன் எடுத்த எடுப்பில் என்னைப் பார்த்து
லேசாக கண்ணடித்துவிட்டு " அதிகமாக மது வாடை
அடிக்கிறதே யார் குடித்திருக்கிறீர்கள் ?
தூரே இருந்து பார்க்கையில்
இருவரும் குடித்துப் பேசுவது போலத்தான் பட்டது
குடித்திருப்பவர் சைக்கிளில் ஏறலாம்
வீட்டில் விட்டு விடுகிறேன் " என்றான்

நண்பன் சட்டென குரலை உயர்த்தினான்
"இப்போது பிரச்சனை குடிப்பது
குடிக்காம இருப்பது பத்தி இல்லை
பேச்சை மாற்றாமல்  நீயாவது பதில் சொல்லு
இவன் முழிக்கிறான் " எனச் சொல்லி மீண்டும்
ஏற்கெனவே சொன்னபடி "கிடாவெட்டுக்கு
ஒயின்ஸ் போனேன் ".. எனத் தொடர்ந்து
பேச ஆரம்பித்துவிட்டான்

மணிக்கு நிலைமை புரிந்து போனது
"தம்பி நீ கேட்கிற கேள்வி பெரும் கேள்வி
இதற்கு பதில் சொல்லும் அளவு
நான் அறிவாளி இல்லை ஆனாலும்
தீயணைப்புத் துறையில் நான் வேலைக்குச்
சேர்ந்தபோது ட்ரைனிங்கில் ஒரு விஷயம் சொல்லிக்
கொடுத்தார்கள் அதை வேண்டுமானால்
சொல்கிறேன் " என்றான்

போதை நண்பன் சப்தம் போட்டு சிரிக்கத்
துவங்கினான் " அப்ப நீயும் போட்டுகிட்டுத்தான்
வந்திருக்கையா எதையோ கேட்டால்
எதையோ சொல்கிறாயே " என்றான்

"எல்லாம் தண்ணி  சம்பத்தப்பட்டதுதானே
போதையேறவும் தண்ணி வேணும்
தீ அணைக்கவும் தண்ணி வேணும்
முதலில் நான் சொல்றதைக் கேளு
அப்புறம் உன் கேள்விக்கு பதில் தேடுவோம் "
எனச் சொல்லிவிட்டுசொல்ல ஆரம்பித்தான்

"முதலில் தீ பிடித்த வீட்டுக்குப் போனவுடன்
அந்த வீட்டில் உயிருடன் எவரும் உள்ளே
மாட்டிக் கொண்டிருக்கிறார்களா எனப்
பார்க்கச் சொல்வார்கள் இல்லையெனில்
உயரிய பொருட்கள் எதுவும் இருந்தால்
அதை மீட்கச் சொல்வார்கள்.
அதுவும் இல்லையென்றால்
எரிகிற வீட்டைவிட தீ பரவாமல்
பார்த்துக் கொள்வதில்தான்
அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என
சொல்லிக் கொடுத்தார்கள்  "
எனச் சொல்லி சிறிது நிறுத்தி பின் போதை
நண்பனை உற்றுப் பார்த்துவிட்டு "எந்த பயனும்
அற்றதை காப்பதை விட வேறு பயனுள்ளவை
எரிந்துவிடாமல் காப்பதில்தான் அதிகம் கவனம்
கொள்ளவேண்டும் எனபதைத்தான் பால பாடமாகச்
சொல்லிக் கொடுத்தார்கள்" என்றான்

"என் கேள்விக்கு பதில் சொல்லாமல்
வேறு எதையோ சொல்கிறாயே " என்றான்

"  அவசரப்படாதே  ஒவ்வொன்னா
சொல்லிவாரென்  " என சைக்கிளை
ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு விவரமாக்ப்
பேசத்துவங்கினான்

"ஒயின்ஸ் கடை வாசலில் ஒயின்ஸ் ஷாப்
என எழுதி இருப்பது குடிகாரர்கள் கடையைத்
தெரிந்து கொள்வதற்காகவும் உள்ளே நுழைந்து
குடித்து மகிழ்வதற்காகவும்தான்

.குடிப்பது உடல் நலத்திற்கு
தீங்கானது  என எழுதி இருப்பது என்பது
குடிக்காதவர்கள் மனதில்
தொடர்ந்து பதியவைத்துக் கொள்வதற்காகவும்
தொடந்து குடிப் பழக்கத்திற்கு
அடிமையாகாமல் இருப்பதற்காகவும்தான்

நல்ல விசயங்களைத் தொடர்ந்து
எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்
ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே
இருக்கவைக்கத்தான் " என்றான்

போதை நண்பனுக்கு இந்தப் பதில்
உடன்பாடானதாகத் தெரியவில்லை       
"இது சரியில்லை உளறுகிறாய்
இன்னும் விளக்கமாகச் சொல்" என்றான்

"சரி சரி அப்படியே இருக்கட்டும் இப்போது
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்றுபேரும்
குடித்து பினாத்துவது போல் தெரியும்
நான் இவனை சைக்கிளில் கூட்டிப் போகிறேன்
நாளை விளக்கமாகப் பேசிக் கொள்ளலாம் "
எனச் சொல்லி என்னை ஏற்றிக் கொண்டு
சைக்கிளைக் கிளப்பினான்

நானும் அவஸ்தையில் இருந்து தப்பினேன்
இவன் விளக்கம் என்னுடைய நெடு நாளைய
குழப்பத்திற்கு சரியான பதில் போலவும் பட்டது  

எனக்கென்னவோ வர வர  வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
 இருப்பதாக மனதிற்குப்படுகிறது


Thursday, February 23, 2012

மீண்டும் ஒரு காதல் கவிதை

பல்லவி கிடைத்த புலவன் போல
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

Wednesday, February 22, 2012

புரியாத பேரதிசயம்


அவன் குழந்தையும்
அவள் குழந்தையும்
அவர்கள் குழந்தைகளோடு
அளவளாவி மகிழ்வது
அவர்களுக்கு அதிசயமேயில்லை
நமக்குத்தான் அதிசய்ம்

ஆயினும்
பத்தாண்டுக்கு முன் எனினும்
முறையற்ற பாலியல் தொடர்புகொண்டவன்
பொதுவாழ்வில்
எத்தனை உயர் பதவியிலிருந்தாலும்
சகித்துக் கொள்ளாது
பதவி நீக்கம் செய்யத் துணிவது
அவர்களுக்கு அதிசயமேயில்லை
நமக்குத்தான் அதிசயம்

மனதால் மட்டுமே நினைத்திருந்தும்
வேரொருவனை மணக்க நேரின்
கற்பிழந்தவளாக கருதப்படுதலும்
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே
உன்னதக் கோட்பாடாகக் கொள்வதுமே
நமது பண்பாட்டு
இது அவர்களுக்கு அதிசயமே
நமக்கு இது அதிசயமேயில்லை

ஆயினும்
பட்டப் பகலில் கொட்டடித்து
விபச்சாரி வீட்டுக்குப் போனாலும்
ஊரறிய உறவறிய
இரண்டு மூன்று
வீடு வைத்துக் கொண்டாலும்
வேறு தகுதிகள் இருப்பின்
தலைவனாக்கி கொண்டாடுதல் என்பது
நமக்கு அதிசயமேயில்லை
ஆயினும் உலகிற்கு
இது ஒரு பேரதிசயமே

Monday, February 20, 2012

நிஜமல்ல கதை

இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி

இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி

உடலையும் மனத்தையும்
விஷமிருக்கும் கூடாக்கி
செரிமானமாகாது பின் அது
கக்கித் தொலைக்கையில்தான்

வெந்துச் சாகிறோமோ ?
 மனம் நொந்து வீழ்கிறோமோ ?

"அழகானவர்கள் என்றால் கெட்டவர்களா
அதைவிடக் கொஞ்சம்
சுமாரானவர்கள்தான் நல்லவர்களா"
என்றாள் என் பேத்தி

"அப்படி இல்லையே யார் சொன்னது " என்றேன்

"சும்மா கேட்டேன் " என்றாள்

நானும் விட்டுவிட்டேன்

"கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா " என்றாள்

அப்படியெல்லாம்  கிடையாதே யார் சொன்னது
அவர்கள் எப்போதும் புத்திசாலிதான் "என்றேன்

பின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்
"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும் " என்றாள்

துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது

பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
 தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்

நல்ல பள்ளி
நல்ல சூழல்
நல்ல நண்பர்கள் எல்லாம்
வெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து
வீட்டுக்குள் மட்டும் விஷக்காற்றை
பரவவிட்டுக் கொண்டிருப்பதை
அப்போதுதான் அறிந்து தொலைத்தேன்

அவளின் எதிகாலம் கருதி
இப்போதெல்லாம் அபத்தத் தொடர்களை
நாங்கள் அடியோடு பார்ப்பதில்லை

முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை

Sunday, February 19, 2012

முடிவு தெரியாக் கதைகள்

எல்லோருமே கால்கேட்டிலும் குலோஸ்-அப்பிலும்
முதலில் துவங்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் இல்லை
என்னைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய
பெரும்பாலோர் அனேகமாக கோபால் பல்பொடியில்
துவங்கியவர்களாகத் தான் இருப்பார்கள்

அது போல இலக்கிய பரிச்சியம் கூட எடுத்தவுடன்
கணையாழியிலோ கசட தபறவிலோ
இருக்க சந்தர்ப்பமில்லை.எல்லோரும் அம்புலி மாமா
கண்ணன் கல்கண்டு குமுதம் ஆனந்தவிகடன்
எனத் தான்துவங்கி இருக்க அதிக வாய்ப்புண்டு
என்னைப் போலவே

அம்புலிமாமா வந்தவுடன் முதலில் நூலகத்தில்
அதைப் படிக்கவேண்டும் என்பதற்காக நான்
ஒரு வாரத்திற்கு முன்பே கொள்ளும் பரிதவிப்பும்
முயற்சியும் இப்போது நினைத்தாலும்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நூலகத்தில் நூலகரின் பழக்கம் வேண்டும் என்பதற்காக
அதிகாலை எட்டு மணிக்கே நூலகம் சென்று
அந்த வருவோர் பட்டியல் பதிவேட்டுக்கு
கோடு போட்டு வைப்பது,பென்சிலை சீவிவைப்பது
கலைந்து கிடைக்கும் மாத வார இதழ்களை
சரியாக அடுக்கிவைப்பது ,அவர் எத்தனை முறை
சொன்னாலும் பியூன் சும்மா உட்கார்ந்திருக்க
பத்து தடவைக்கு மேல்  கடைக்குப்
போய் டீ வாங்கி வரச்சொன்னாலும்
வாங்கி வருவது ஆகிய எல்லாம்
மிகச் சரியாகச் செய்வேன்
அதையெல்லாம்இப்போதுநினைத்துப் பார்த்தாலும்
சிரிப்புத்தான் வருகிறது
.
இத்தனையும் செய்து முடித்தாலும்
நூலகர்  தபாலில் வந்தவுடன் அந்த தபாலைப்
பிரிக்க மாட்டார்.ஒரு நாள் இரண்டு நாள்
அதுஅவர் டேபிளிலேயே அப்படியே கிடக்கும்
நான் கேட்டாலும் " கொஞ்சம் பொறு என்ட்ரி
போடாவிட்டால் விட்டுப் போகும்  " என
வெறுப்பேற்றுவார்.இத்தனை இடர்கள் இருந்தாலும்
அந்தப் புதுப் புத்தக வாசனையோடு முதலில்
படிப்பதுவும்  அடுத்தவர்கள்  படிக்கும் முன்பாக
படித்த கௌரவத்தில் என்னொத்தவர்களிடம்
கதை சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுவும்
இப்போது  நினைத்துப் பார்த்தாலும் ,
அது ஒரு  இனி பெறவே முடியாத
அரிய சுகமாகத்தான் படுகிறது

இந்தச் சுழலில் ஒரு மாத அம்புலிமாமாவை
இப்படி புதுவாசனைச் சுகத்தோடு படித்துக்
படித்துக் கொண்டிருந்தேன்.கதை இப்படிப் போனது

ஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும்
தன் கணவனுக்கு அவள் மனைவி தினமும்
மதிய சாப்பாட்டிற்கு பழைய சோறு கொண்டு போவாள்
அவர்கள் வயல் சுடுகாட்டை ஒட்டி இருந்ததால்
பேய் பிசாசு அதிகம் என்பதால் அவைகள்
சாப்பாட்டை  மட்டும் தனியாக வைத்துக்
கொண்டு போனால் எடுத்துச் சாப்பிட்டுவிடும்
என்பதால் தினமும் சாப்பாட்டுத் தூக்கில்
சாப்பாட்டின் மேல் அடுப்புக்கரியோ அல்லது
தேய்ந்த லாடமோ அல்லது இரும்பு ஆணியோ
வைத்துக் கொண்டு போவாள்
அப்படிக் கொண்டு போனால் பேய் சாப்பாட்டைத்
தொடாது என அவள் மாமியார்  அவளுக்கு
சொல்லிக் கொடுத்திருந்தாள்
இவளும் தவறாது  அப்படியே செய்து வந்தாள்

ஒரு நாள் ஏதோ அவசரத்தில்  எல்லாம் சரியாக
வைத்திருக்கிறோம் என நினைத்து பழைய சோற்றை
மட்டும் தூக்குப் போணியில் வைத்துவிட்டு
ஆணியோ கரியோ தேய்ந்த லாடமோ
வைக்காமல்  வந்து வயலில் பக்கம் உள்ள
மரத்தடியில்  வைத்துவிட்டு அவளும்
 வயலில் இறங்கி வேலைபார்க்கத்
துவங்கிவிடுகிறாள்.

இதுவிஷயம் தெரிய வர ஒரு சுதாரிப்பான  பேய்
தூக்கைத் திறந்து பழைய சோற்றை
முழுவதுமாக தின்று விடுகிறதுஅந்தக்
கருவாட்டுத் துண்டுக்கும் பழைய சோற்றுக்கும்
இருக்கிற ருசியை சப்புக்கொட்டிசாப்பிட்டுவிட்டு
அப்படியே மதி மயங்கிப் போகிறது.இந்தப் பழைய
சோற்றுக்காகவாவது இவர்கள் வீட்டில்
வேலைக்காரியாகக்  கூட  சேர்ந்து விடலாம்
என்கிற முடிவுக்கு அந்தப் பேய் வந்து விடுகிறது

பாவம்.இதுவிவரம் எதுவும் இந்த இரண்டு பேருக்கும்
சுத்தமாகத் தெரியாது.அவர்கள் வேலை முடித்து
கைகால் கழுவிக் கொண்டு தூக்கைத் திறந்தால்
தூக்கில் ஏதும் இல்லை.மூடி திறந்து கிடக்க
சுற்றி பருக்கைகள் சிதறி இருக்க  "ஏதோ நாய்தான்
தின்றிருக்கும் ,இனிமேல் கீழே சாப்பாட்டை
வைக்காதே மரத்தில் கட்டித் தொங்கவிடு  " என
கணவன் சொல்ல  மனைவியும் " சரி தப்புத்தான்
இனிமேல் மரத்திலேயே  கட்டிவைத்துவிடுகிறேன் "
என மன்னிப்புக் கேட்டுக் கொள்ள இருவரும்
வீட்டுக்குப் புறப்படுகிறார்கள்.
பழைய சோற்று ருசியில்சொக்கிப் போன பேயும்
ஒரு வேலைக்காரி மாதிரிதெரியும் படியாக
ஒரு உருவம் எடுத்துக் கொண்டு அவர்கள்
பின்னாலேயே சென்று வீட்டைத்தெரிந்து கொள்கிறது

பின் சிறிது நேரம் கழித்து அவர்கள் சாப்பிட்டு
முடித்து சற்று ஓய்வாக இருக்கும் நேரத்தில்
வாசலில் இருந்து வேலைக்காரி
உருவில் இருக்கும் பேய் "அம்மா "
என குரல் கொடுக்கிறது

அவர்கள் வெளியே வந்து  யார் என்ன வேணும்
எந்த ஊர் எனக் கேட்க   "தான் அசலூர் எனவும்
பஞ்சம் பிழைக்க வந்திருக்கிறேன் எனவும்
என்னவேலை சொன்னாலும் செய்வேன்
சம்பளம் கூட வேணாம் வயிறார
பழைய சோறு மட்டும் கொடுத்தால் போதும் "
என்கிறது

இவர்களுக்கு இந்த டீல் ரொம்பப் பிடித்துப் போகிறது
அவர்களும் பாவம் பேய் எனத் தெரியாது
வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்
எவ்வளவு வேலைக் கொடுத்தாலும் கொஞ்சமும்
முகம் கோணாது  தீயாக வேலையைச் செய்து முடிக்கிறது
வம்பு தும்பு இல்லை. பழையசோறு மட்டும்
கொஞ்சம் அதிகமாகத் தின்கிறது என்பதைத் தவிர
வேறு குறை இல்லை.எல்லாம் சந்தோஷமாகவே
போகிறது

ஒரு நாள்அந்த கிராமத்தான் மட்டும்  ஒரு
உறவினர்  வீட்டு விஷேசத்திற்காக வெளியூர்
போகவேண்டி வந்தது.இரவு லேட்டாகத்தான்
வருவேன்எனச் சொல்லிப் போனதால்
முன் பத்தியில் கிராமத்தான் மனைவியும்
உள்ளே தூரே  பின்பத்தியில் பேய் வேலைக்காரியும்
படுத்துத்தூங்கிப் போனார்கள்

நடு ராத்திரியில் கிராமத்தான்
வந்து கதவைத் தட்ட,அவர் மனைவிக்கு
கொஞ்சம் வேலை அசதி. என்வே எழுந்திரிக்கச்
சஙகடப்பட்டு விழித்த படியே படுத்தபடி
 வேலைக்காரப் பேயை கதவைத்திறக்கச் சொல்கிறாள்
,வேலைக்காரப் பேய்க்கும்
அன்று கொஞ்சம் தீனீ ஜாஸ்தி.அதற்கும்
எழுந்து போய்கதவைத் திறக்க
சோம்பேறித்தனமாக இருக்கிறது
வீட்டுக்கார அம்மாள்தான் நன்றாகத் தூங்குகிறாளே
தெரியவாபோகிறது என நினைத்து
 அது  படுத்த இடத்தில் இருந்தே கையை நீட்ட
கை கிராமத்தான் மனைவியின்  தலையைத்
தாண்டி போய் கதவைத் திறந்து விட்டு மீண்டும்
வேலக்காரப் பேய் உடலிலேயே 
சாதாரண கைப் போல் சேர்ந்து கொள்கிறது

கை இருபது அடி நீண்டதையும் திரும்பவும் போய்
சாதாரண கை போல் ஒட்டிக்கொண்டதையும்
நேரடியாகப் பார்த்த கிராமத்தான் மனைவிக்கு
அடிவயிறு கலக்குகிறது,ஆஹா நம் வீட்டிற்குள்
பேய் அல்லவா வேலைக்காரி போல் இருக்கிறது
மோசம் போனேமா என்ன செய்வது எனத்
தெரியவில்லையே என அரண்டுபோய்
மறு நாள் தன் கணவனை த்னியாக அழைத்து
நடந்த விவரத்தைச் சொல்ல
இருவருமே என்ன செய்வதேன்று
தெரியாது முழித்துக் கொண்டிருக்கிறார்கள் .....

இதுவரை படித்துக் கொண்டிருந்தபோது
நூலகர் என்னை அழைத்து கடை வரை
போய் வரச் சொன்னார்.தட்ட முடியவில்லை
நான் படித்த அம்புலிமாம புத்தகத்தை
கூட்டுறவு மஞ்சரி கொல்லிப் பாவை முதலான
யாருமே எடுக்காத புத்தகங்க்களுக்கு அடியில்
ஒழித்துவைத்துவிட்டு கடைக்குப் போய்விட்டேன்
நான கடையில் இருந்துவர மணியும் பதினொன்று
ஆகிவிட நூலகத்தை மூடத் துவங்கிவிட்டார்கள்
அதனாலென்ன மாலையிலே நான்கு மணிக்கு
முதல் ஆளாக வந்து எடுத்துக் கொள்வோம் என
நானும்போய்விட்டேன்

வீட்டுக்குப் போனால் ஒரே அமளி துமளி
என் ஒன்றுவிட்ட்ட பாட்டி ஊரில் இற்ந்துபோய்
விட்டதாகவும் எல்லோரும் இரண்டு மணி டிரெயினுக்கு
கிளம்ப வேண்டும் எனவும் பேரன் என்கிற முறையில்
நானும் தீப்பந்தம் பிடிக்க நானும் வரவேண்டும் எனவும்
என்னையும் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்
எனக்கு பேயை எப்படி விரட்டினார்கள் எனப்து
தெரியாமல் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது
சரி  நான்கு நாள் தானே வந்து பார்த்துக் கொள்வோம்
அம்புலிமாமா  நூலகத்தில் தானே இருக்கும்
என சமாதான செய்து கொண்டு வேண்டா வெறுப்பாக
 அவர்களுடன் கிளம்பிவிட்டேன்

நான்கு நாள் முடிந்து ஊருக்கு  வந்த்தும் வராததுமாக
மாலையில் நூலகத்திற்குத்தான் ஓடினேன் .
அங்கு போய் நான் வைத்த இடம் n
வேறு எங்கெல்லாம் இருக்கச் சாத்தியமோ
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன்.
எங்கும் இல்லைநூலகரிடமும்கேட்டுப் பார்த்தேன்.
அவர் " நீ தானேகடைசியில் எடுத்துப் படித்திருக்கிறாய்
அதற்குப் பின் தான் அதைக் காணோம்
நீ எடுத்துப் போகவில்லையே " என  என்னையே
கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்
பழி போடுவது கூட போய்த்தொலையட்டும்
அந்தப் பேயை எப்படி விரட்டினார்கள் எனத்
தெரிந்து கொள்வதுதான் என முக்கியமாகப் பட்டது
என் வயதுடைய அம்புலிமமா படிக்கும் எல்லோரையும்
கேட்டுப் பார்த்துவிட்டேன்.யாரும் படிக்கவில்லை எனச்
சொல்லிவிட்டார்கள்.
எங்கள் ஊர்  மதுரையை ஒட்டியகிராமம்
அங்கு பேப்பரே அப்போது கடைக்கு வராது
வீட்டில் போடுவதோடு சரி.எங்கள் தாத்தாவிடம்
மதுரைக்குப் போனால் வாங்கிவரச் சொல்ல
"என்ன தைரியம் இருந்தால் பாடப் புத்தகம்
 படிப்பதைவிட்டுஎன்னையே கதை புத்தகம்
வாங்கி வரச் சொல்கிறாய் "
 எனச் சொல்லி முதுகில் நான்கு போடு போட்டார்

அப்புறம் வளர்ந்த பின்பு கூட எனக்கு எப்படி
அதை விரட்டி இருப்பார்கள் என யூகித்துச் சொல்லும்படி
எனது எழுத்தாள நண்பர்களையெல்லாம் கூடகேட்டு
தொந்தரவு செய்து இருக்கிறேன்

சிலர் என்னை ஒரு முட்டாளைப் பார்ப்பது போல
பார்த்துச் சிரித்திருக்கிறார்கள். பலர் சொன்ன கதை
எனக்கு ஏனோ ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை

முடிவு தெரியாத நான் முடிவு  தேடித் திரிகிற
 கதைகள் இப்படி இரண்டு மூன்று
என்னிடம் இருக்கத்தான் இருக்கிறது

முடிவு தெரியாமல்  இருக்கிற
வாழ்வின் போக்கைப் போலவே
 இப்படி முடிவு தெரியாது போய்விடுகிற
கதைகள் கூட  உண்மையில்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது


Friday, February 17, 2012

அடங்காத மனசு

நான் எங்கள் வீட்டு நடுக் கூடத்தில் உட்கார்ந்து
படித்துக் கொண்டிருக்கிறேன்.எப்போதுமே நாங்கள்
வீட்டில்  உட்காரும்போது இப்படித்தான்
தெற்குப் புறச்  சுவற்றில் சாய்ந்து
 உட்கார்ந்து கொள்வோம்

இப்படி உட்கார்ந்தால் இடது புறம் கூடம் ,நடை,
திண்ணை தாண்டி தெருவாசல் வரை
தெளிவாகத்தெரியும்

அதேபோல வலது புறம் கூடம்,இருட்டுக் கூடம்
சமையலறைவெளி சமயலறை,முற்றம்,
மாட்டுக் கொட்டகை,கிணறு ,தோட்டம் தாண்டி
 பின் தெரு வரை முழுமையாகத்  தெரியும்

நாங்கள் எப்போதுமே வாசல் கதவுகளை
மூடுவதில்லை
மாலையில் எனில்  வாயில் புறம் வந்த லெட்சுமி
கொல்லைப் புறம்போய் விடுவாள் என
பின்புற வாசல் மட்டும் பூட்டி விடுவோம்
மற்றபடி எப்போதும் இருபுற கதவுகளும்
திறந்தே இருக்கும் இப்படி படித்துக் கொண்டிருந்தாலும்
வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இங்கு
உட்கார்ந்து கொண்டால்  வாசலையும்
கொல்லையையும்.கவனித்துக் கொள்வது ரொம்ப வசதி

 குனிந்து படித்துக் கொண்டிருக்கும் போதே
திடுமென வாசல் பக்கம் யாரோ வருவது போல
நிழலாட திரும்பிப் பார்க்கிறேன்.எனக்கு "பக்" என்றது

செத்துப் போன வெங்கு தாத்தா தடியை ஊன்றியபடி
படியேறிக் கொண்டிருந்தார்.

எனக்கு கைகால்நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது
என்னசெய்வது எனத்தெரியவில்லை.
ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
மிக வேகமாக ஓடி வாசல் கதவை மூடப் பார்க்கிறேன்
அதற்குள் அவர் வாசல் தாண்டி திண்ணைக்குள்
நுழைந்து விட்டார்.ஓடி வந்த அவசரத்தில் டிராயர் வேற
கழற ஆரம்பித்துவிட்டது.யோசிப்பதற்கு நேரமில்லை
சடாரெனப் பாய்ந்து அவர் உள்ளே நுழையாதபடி
மண்டி போட்டு அவர் முட்டியோடு சேர்த்துப்
பிடித்துக் கொண்டு "தாத்தா நீங்க செத்துப் போயாச்சு
இனிமே நீங்கள்வீட்டுக்குள் வரக்கூடாது ஆகாது "
என கத்துகிறேன்

அவர் என்னைக் கண்டு கொண்டதாகவே
தெரியவில்லை
என் பிடிக்குள் அவர் இல்லவே இல்லை
அவர் பாட்டுக்கு நடந்து நடைக்கு வந்து விட்டார்

ஏற்கெனவே எனக்கு நடைரூம்  என்றாலே பயம்
அதில் அப்பா தங்கை  பெரிய பாட்டி ஆகியோரின்
உடல்களை படுக்க வைத்துப் பார்த்ததிலிருந்து
பகலில் நடைப்பக்கம் வந்தால் கூட
கண்ணை மூடிக் கொண்டுதான் வாசல் பக்கம் வருவேன்
இப்போது இவர் வேறு அங்கு நிற்க 
உடல் நடுங்கத் துவங்கியது

வெங்கு தாத்தா இப்போதுதான் என்னைப் பார்ப்பது போல
"நான் இங்கிருந்துதான்  சுடுகாடு போக ஆசைப் பட்டேன்
என் நேரம் நடக்காமப் போச்சு " என்று சொல்லியபடி
மேற்கொண்டு வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்
நானும் விடாது " உள்ளே போகாதீர்கள் வெங்குத் தாத்தா
வீட்டிற்கு ஆகாது தாத்தா வந்தவுடன் வாங்க தாத்தா "
என கத்திக் கொண்டே பின்னால் போனேன்

அவர் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை
ஒவ்வொரு இடமாக நின்று  ஏதோ சிற்பத்தை
ரசிப்பதைப் போலரசிப்பதும் பின் தொடர்ந்து
நடப்பதுமாக வந்து சமையலறையில்
கொஞ்ச நேரம் நின்றார்.பின் என்னை பார்த்து
 "சமையலறையில்மட்டும் கொஞ்சம் வேலை
பார்த்திருக்கிறானாக்கும் " என்றார்

எனக்கு இப்போது எரிச்சல் அளவு கடந்து போயிற்று
"எங்கள் வீடு நாங்கள் என்னவும் செய்வோம்
உங்களுக்கென்ன ஆச்சு " என்றேன்

அவர் நிதானமாக"உங்க வீடா உங்க தாத்தனைக்
கேட்டுப் பாருஒவ்வொரு செங்கலா நான் அடுக்கி
 ரசித்து கட்டிய வீடாக்கும் "என்றார்

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பயம் ஒருபக்கம்வீட்டில் யாரும் இப்போது பார்த்து
 இல்லையே என்கிற எரிச்சல் ஒருபக்கம்
எப்படியும் இவரை வெளியே துரத்திவிடவேண்டும்
என்கிற வெறி ஒருபக்கம்
இனி வேறு வழியில்லை .கொல்லைப்புற
வாசலைத் தாண்டியதும்கதவைச் சட்டெனப்
 பூட்டிவிடுவோம் என மெதுவாக
அவர் பின்னாலேயே நடக்கத் துவங்கினேன்

நான் எதிர்பார்த்தபடியே பின் புற வாசல்
நிலையில் நின்று பின்புறத்தை ஒரு நோட்டம் விட்டார்.
நான் கதவடைக்கரெடியாக இருந்தேன்.
என்ன நினைத்தாரோ சட்டென திரும்பவும்
உள்ளே திரும்பி நடக்கத் துவங்கிவிட்டார்

இனி இவரை உள்ளே விட்டால் போச்சு என சட்டென
தரையில் விழுந்து அவர் கணுக்காலை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு எவ்வளவு சப்தமாகக் கத்த முடியுமோ
அவ்வளவு சப்தமாக கண்ணை மூடிக்கொண்டு
கத்தத் துவங்கினேன்.
இப்போதுஅவர் காலகள் இரண்டும்என் கைப்பிடியில்
இருந்தது.அவரால் நகரமுடியவில்லை

நான் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோது
என் அம்மாவின்கைகளை கெட்டியாகப் பிடித்திருந்தார்
அவர்கள் மடியில்குப்புறப் படுத்திருந்தேன்.
புரண்டு திரும்பிப் பார்க்கையில்
தாத்தாவும் பாட்டியும் குனிந்து என்னையே
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கூடத்தில் சுவற்றில்
தெரிந்த அவர்கள் நிழல்கள் இன்னும் என் பயத்தை
அதிகமாக்கிக் கொண்டிருந்தது நிச்சயமாக
அது கனவில்லைவெங்குதாத்தா
உள்ளே தான் இருக்கிறார் எனக் கத்தவேண்டும்
போல இருந்தது கத்தவும் செய்தேன்.சப்தம்தான்
வெளியே வரவில்லை

"உன் பேரன் என்னவோ பேய் கனவு கண்டுப்
பயந்திருக்கிறான்
சாமி கூண்டில் இருந்து விபூதி எடுத்து நெற்றியில் வை
அப்படியே வாயிலும் போட்டு தண்ணீர் கொஞ்சம்
குடிக்கக் கொடு "எனச் சொல்லி தாத்தா அவர் கட்டிலுக்கு
படுக்கப் போய்விட்டார்

"நிலைக்கு நேராக படுக்காதே எனச் சொன்னால்
கேட்டால்தானே " எனச் சொல்லியபடி  என் நெற்றியில்
திரு நீறு பூசி அப்படியே கொஞ்சம் வாயிலும் போட்டு
கொஞ்சம் தண்ணீரை குடிக்கவைத்தாள் பாட்டி
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்

"என்னடா கனவு கத்தி ஊரையே கூட்டுகிற மாதிரி "
நெஞ்சைத் தடவி விட்டபடிக் கேட்டாள் அம்மா

"நிஜம்மாம்மா செத்துப் போன வெங்குத்தாத்தா
வீட்டுக்கு வந்தார் .இப்போ கூட உள்ளே இருக்கார்
நம்பும்மா " என்றேன்

"சரி சரி விடிஞ்சு போச்சு நீ  போய் தாத்தாகிட்ட
படுத்துக்கோ.நான் உள்ளே இருக்கிறாரான்னு பாக்கிறேன் "
எனச் சொல்லி அம்மா எழுந்து வாசல் தெளிக்கப் போனாள்
நான் ஓடிப் போய் தாத்தாவை
கட்டிப் பிடித்துப் படுத்துக் கொண்டேன்

"என்ன வெக்குத் தாத்தா ரொம்ப பய முறுத்திவிட்டானா  "
என என்னைத் தடவிக் கொடுத்தபடியே தாத்தா கேட்டார்
எனக்கு அது கொஞ்சம் தெம்பாகவும் இருந்தது
கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது

"இல்லை தாத்தா செத்தவர் உள்ளே வரக்கூடாதுன்னு
கத்திக் கத்தி சொல்றேன் கேக்காம உள்ளே வர்ராரு
கேட்டா என் வீடு உன் தாத்தன் கிட்ட வேற கேளுன்னு
சொல்றாரு.அவர் வீடா தாத்தா உன் வீடுதானே தாத்தா "
என்கிறேன்

"அப்பிடிச்சொன்னானா " எனச் சொன்னவர் சிறிது நேரம்
எதையோ நினைத்தபடி பேசாமல் இருந்தார்
பின் அவரே அவருக்கே சொல்லிக் கொள்ளுகிற மாதிரி
பேசத் துவங்கினார்

"அவன் சொல்வது நிஜம்தான் அவன்தான்
இந்த வீட்டை கட்டினான்.ஆசை ஆசையா
பாத்துப் பாத்துக் கட்டினான்.அதிகக் கடன் ஏறிப்போச்சு
நாலு பொண் பிள்ளைங்க வேற இரண்டு பையன்களும்
தறுதலையா போனாங்க.சமாளிக்க முடியாம
எங்கிட்டதான் வித்தான்.

உங்க அம்மா சின்னப் புள்ளையா
இருக்கிறப்பவே இதுவெல்லாம் நடந்து போச்சு
தெருவில் வெங்கையாத் தாத்தா அவ்வளவு வசதியா
வாழ்ந்தவருன்னு இப்ப இருக்கிற யாருக்குமே தெரியாது
போன வருஷம் சாகிறதுக்கு முன்னாடி கூட
வீட்டை ஒருதடவை நல்லா  பாத்துக்கறேண்டான்னு
சொல்லி பாத்துட்டுப் போனான்.
ரொம்ப மனசு சரியில்லைன்னு போன இப்படி இங்கே தான்
கூடத்தில வந்து உட்கார்ந்துப்பான்
எனக்கு கூட அவங்கிட்ட வாங்கி இருக்கக் கூடாதோன்னு
அப்பப் அப்பத் தோணு ம்....."

தாத்தா பேசிக் கொண்டே இருந்தார்
நான் எப்போது   தூங்கினேன் என்று எனக்கேத் தெரியவில்லை
நான் விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது
அவசரம் அவசரமாக குளித்து முடித்து
வழக்கம்போல ஈஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிடக்
கிளம்பினேன்

அம்மா சமையல் கட்டிலிருந்து
" நீ சின்னப் பையன் இல்லை ஆறு முடிச்சு
ஏழு போகப் போறே.படிப்போட தைரியத்தையும் கொடுன்னு
அம்பாள வேண்டிண்டு வா "ன்னு கத்தினாள்

நான் மண்டைய ஆட்டிவிட்டு தெருவுக்கு வந்தேன்
வாசலுக்கு வந்ததும் என்னையும் அறியாமல் ஏனோ
தெருவுக்கு நடுவில் இருந்த வெங்குத்தாத்தா பையன்
வீட்டைத்தான் பார்த்தேன்

வாசலில் ரிக்க்ஷாவில் இருந்து நாராயணன் சாஸ்திரிகளும்
அவர் அசிஸ்டெண்டும் இறங்கி அவர்கள் வீட்டுக்குள்
போய்க் கொண்டிருந்தார்கள்.என்னவாக இருக்கும்
என யோசித்தபடி நடக்கத் துவங்கினேன்

வெங்குத்தாத்த விட்டுக்கு எதிர்வீடுதான்  கோபால் வீடு
அவனும் வாசலில் இருந்து ரிக்க்ஷாவில் இருந்து
பை ,சட்டி பானைகளை இறக்குவதை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

நான் அவன் அருகில் போய் " இவர்கள் வீட்டில்
என்ன விஷேசம்  "என்றேன்

"உனக்குத் தெரியாதா வெங்குத்தாத்தா செத்து
இன்றோடு ஒரு வருஷம் ஆகிப் போச்சு.
இன்று முதல் திவசம் " என்றான்

Wednesday, February 15, 2012

உறவுகள்

எண்பதின் துவக்கம் அப்போது நான்
உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கும் அன்றைக்கும் காலக்கணக்கில்
முப்பத்து ஏழு  ஆண்டுகள்தான் இடைவெளி
என்றாலும் கூடஉண்மையில் இன்றைய
உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்தி
இருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கி
வேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.

வீடுகள்  வாடகைக்கு இருக்காது
இருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காது
நல்ல ஹோட்டலகள் இருக்காது.உயர் அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோ அல்லது தேனிக்கோ சாப்பாட்டுக்குச்
சென்று விடுவார்கள்,

மொத்தத்தில் அரசு பணியாளகளைப்
பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதை
ஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்
எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும்
பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது
என்பதாலும் மாறுதல் என்பது முயன்று
பெற்றால்தானே ஒழிய அவர்களாக மாற்றமாட்டார்கள்
என்பதாலும் கொஞ்சம் தெனாவெட்டாகத்தான்
வேலை பார்ப்பார்கள்அலுவகப் பணி நேரம்
குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாக
மதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்கு
ஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.
அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காக
அவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்
அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு
செல்பவர்களுக்குகொஞ்சம் தாமதமாகத்தான் போகும்
ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம்
வயல்வெளியில்நடந்துபோய்ச் சேர எப்படியும்
தினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும்
என்றாலும் அந்த ஊர் மக்களும்அதிகாரிகளும்
அதற்கு அனுசரித்து இருக்கபழகிக் கொண்டார்கள்.

அதைப் போல மாலையிலும்
ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும்
என்பதாலும்எல்லோரும் மூன்று நாற்பதிற்கே
அலுவலக்ம் விட்டு
புறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்
தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரி
 அலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்
ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்
கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்
தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்
செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்
உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படி ஒரு நாள் புகைவண்டி கிளம்பிக்
கொண்டிருக்கையில்எதிர்பாராதவிதமாக
 எங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம் வரும் வரையில் நாங்களும்
கண்டு கொள்ளவில்லைபல்கலைக் கழகத்தில்
கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்
கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்
பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்
அப்படி என்னதான் இருக்கிறது என நான்
முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்டப்
பெண்தான எனத் தெரிந்த போதும் வயதும்
முக  லட்சணமும்எதோ ஒரு தவிர்க்க முடியாத
சூழலில்அப்படி ஆகி இருக்கக் கூடும்
என்கிற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு
தோன்றும்படியாகத்தான்அவள்  இருந்தாள்

எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்தது
ஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடி
அந்தப் பார்வைப்  பார்த்தார் என்பதும் எனக்கு
 இப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்து
ஆடத்துவங்க எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்
அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாக
அமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிஸம்
செய்யத் துவங்கிவிட்டார்.
எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோக
அனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றிக்
காரசாரமாக விவாதித்து வருவோம்

சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்
அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம
மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்

இவையெல்லாம் குறித்து  பேசுகையில்
அந்த எதிர் சீட் நண்பர்எ ல்லோரையும் விட
மிக தெளிவாகவும்ஆணித்தரமாகவும்
உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்க்ள்  எல்லாம் அவர்பேச்சில் உள்ள
தார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது
பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கை
என்னுள் என்னவோ செய்தது.

சந்தர்ப்பம்கிடைக்காத வரையில்தான்
நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

ஒருவிதத் தீர்மானத்துட ன்சடாரென எழுந்து
நான்அ ந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்சயம்
மிகுந்த பசியோடுதான்இருப்பாள்எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா "
என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது "
என்றாள்

"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து
 என் பையில் இருந்த மூன்று அடுக்கு டிபன் பாக்ஸ்
மற்றும் தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து
இன்னும்  "இன்னும் இருபது நிமிடத்தில்
உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள்
இறங்கிவிடுவோம்அதற்குள் சாப்பிட்டு விட்டு
டிபன் பாக்ஸைகழுவிக் கொடுத்துவிடு"
எனச் சொல்லிக் கொடுத்தேன்.

அவள் பசியின் காரணமோ என்னவோ
சம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.
எனக்கும்  சாப்பிடக்கொடுத்ததின் மூலம்
நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளை
செயய முடியாமல் போகச் செய்யவும்
பசியில் இருந்த ஒரு பெண்ணுக்கு உதவிய
திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.

நண்பனும் எரிச்சலுடன் என்எதிரிலேயே
வந்து அமர்ந்து விட்டான் .
அந்தப் பெண்ணும்அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு
நாங்கள்இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸை
மிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டு
எங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்

நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
 செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.
நாங்கள் இறங்கி நடக்கத் துவஙக
எல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்
மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும்
நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்
அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்
உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காக
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்
ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து
 "என்னைத் தெரிகிறதா " என்றாள்
உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா
அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  நடுத்தரக் குடும்பம்  சார்ந்த
பெண் போலவே இருந்தாள்
.குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலே
கேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்
அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலே
பிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டு
பேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து
இருப்போமான்னு கேட்டாங்க

எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்தது
நானும்  சரின்னு சொன்னேன்.வீரபாண்டி கோவிலிலே
இந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள் சொல்வதைகேட்கக் கேட்க எனக்கு மிகுந்த
சந்தோஷமாக இருந்தது.ஆனாலும் நம்மிடம் ஏன்
இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாக  கசிய்த் துவங்கிய
நீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவது
உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு
இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது
ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிர
நானேதும் அவளுக்கு செய்தததில்லை.

அது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை
ஏற்படுத்தி இருக்கிறதென்றால்
அவள் அரவணை ப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள்என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில்
"பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.
விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும்
வாங்கிக் கொடு "என கையில் கிடைத்த
ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும்
சேர்த்துப் பிடித்து"சாருக்கு வணக்கம் சொல்லு "
என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை
என் காலடியில் போட்டு அவளும் தரையில்
வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது
அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

Monday, February 13, 2012

எனது புத்தாண்டுத் தீர்மானம் ஐந்தாண்டுத் திட்டமான அறுவைக் கதை

புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்த தொடர் பதிவுக்கு
என்னிடமும்  இது தொடர்பாக ஏதோ விஷயம்
 இருக்கும் என நம்பி என்னை அழைத்த
 திருமதி சந்திர கௌரி அவர்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறேன்

நான் புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் செய்வதில்லை
பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு தீர்மானமாகப் போட்டு அதற்கென
தனியாக புதிதாக ஒரு டைரி போட்டு எழுதி,
ஒரு வாரம் மட்டும் தொடர்ந்து
பின்பு வழக்கம்போல அதை மறந்து போய்விடும்
நிலை வேண்டாம் என விட்டுவிட்டேன்.
ஆனாலும் இப்படி எழுதியதில் புதிதாக ஒரு சிந்தனை
எனக்கு தோன்றியது

அதன்படி இனி வருடாவருடம் தீர்மானம்
போடாமல்சில குறிப்பிட்ட விஷயங்களை
தேர்ந்தெடுத்து அதனை ஒரு குறிப்பிட்ட
ஆண்டுகளில் அடைய முயல்வது என்றும்
ஒவ்வொரு ஆண்டும் அது விஷயமாக
நம்முடைய நிலை அல்லது வளர்ச்சி
எந்த நிலையில் உள்ளது என
பரிசீலனை செய்வது எனவும் முடிவெடுத்தேன்

அதன்படி கீழ் குறித்த விஷயங்களில் என்னுடைய
அப்போதைய நிலை குறித்தும் இன்னும்
ஐந்து ஆண்டுகளில் நான் அடைய நினைக்கும்
நிலை குறித்தும் விரிவாக
ஒரு நோட்டு வாங்கி குறித்து வைத்தேன்

1)உடல் நிலை

2)மன நிலை

3) ஆன்மீக நிலை (மதம் இல்லை )

4) குடும்ப நிலை

5)உறவு நிலை

6)சமூகத் தொடர்பு

7) பொருளாதார நிலை

எந்த விதத்திலும் பாசாங்கு இல்லாமல் மிகச் சரியாக
மேற்குறித்த ஏழு நிலைகளில்  நான் அன்று
இருந்த நிலையினைமிகத் தெளிவாக எழுதி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் இதில்
அடையவேண்டிய இலக்கு குறித்து முடிவுசெய்து
அதனை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு ஆண்டும்
எட்ட வேண்டியநிலை குறித்து  மிகத் தெளிவாகக்
குறித்துவைத்தேன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்
பிறந்த உடனேயே அதனைஆய்வு செய்யத் துவங்கி
அதில்  எதில் குறைவான முன்னேற்றம்
உள்ளதோ அது விஷயத்தில் அதிக
கவனம் செலுத்தவும்கூடுதலாகிப் போன
விஷயத்தில் கொஞ்சம் கவனத்தைக்
குறைத்துக்கொள்வதுமாகச் செய்துகொள்வேன்

அது நல்ல பயனளிக்கத்தான் செய்தது
இப்போது இரண்டாம் ஐந்தாம் ஆண்டை
முடிக்க இருக்கிறேன் ஏறக்குறைய
பத்தாண்டுகளுக்கு முன்னால் குறித்துவைத்த
விஷயங்களில் எல்லாம கொஞ்சம் கூடுதலாகவே
அடைந்துவிட்டேன்..இதனை துவங்குகிற
ஆரம்ப வருடத்தில் மட்டும் மாதாந்திர ஆய்வினை
மூன்று மாதம் செய்து அதனை
மனதிற்குள் ஏற்றிவிட்டால் பின் நாம் செய்யும்  
அன்றாடச் செயல்களில் எது எது
தேவையயற்றவை என்பது
நமக்கு தெளிவாகவே புரிந்து போகிறது

இது தொடர்பாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில்
28 தலைப்புகளில்  ஒரு புத்தகம் எழுதலாம் என்கிற
ஒரு கருத்தும் வருகிற ஐந்தாண்டுத் திட்டத்தில் இருக்கிறது
(பதிவர்கள் பய்ப்பட வேண்டாம் )

இந்தத் தொடர் பதிவினைத் தொடர் நினைப்பவர்கள்
தொடரலாம்.
ஒரு பதிவுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
திருமதி சந்திர கௌரி அவர்களுக்கு மீண்டும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Saturday, February 11, 2012

மகான்களாக ஒரு சுருக்கு வழி

விலைவாசி உயர்வு கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்பு போல
கிலோவுக்கு விலை விசாரிக்கும்
அவசியம் இல்லையென்பதாலும்
அதை நான்கால் வகுக்கும்
அவஸ்தை இப்போதில்லை என்பதாலும்

அதிக கரண்ட் கட் கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்புபோல்
கரண்ட் கட்டாகும் நேரத்தை விட
கரண்ட் வரும்
நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
அதை நினைவில் வைப்பதே
வசதியாய் இருக்கிறது என்பதாலும்

மந்திரிகளை
அடிக்கடி மாற்றுவது கூட
மகிழ்வுக்குரியதாகத்தான் இருக்கிறது
போட்டித்தேர்வுகளில்
மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க 
அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்

எத்தனை கோடி
ஊழல் குறித்த செய்திகளும்
இப்போது அதிர்ச்சியடையச் செய்வதில்லை
எப்படியும் அடுத்தவாரம்
இதைவிட கூடுதல் தொகையில்
ஊழல் செய்தி வரும் என்பதாலும்
இன்றைய  கோடி எப்படியும்
நாளை நமக்கே
பைசாப் போல் தெரியும் என்பதாலும்

சரியாகச் சொன்னால்
இதுபோன்ற அவஸ்தைகள் கூட
இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத  பொறுமையும் முதிர்ச்சியும்  கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட  மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்

Friday, February 10, 2012

இன்னும் ஒரு அங்கீகாரம்! 

தோழர் மகேந்திரன தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது.  நண்பர் மின்னல் வரிகள் கணேஷ் எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு இந்தவிருதினை எனக்களித்தமைக்காகவும்  ( எங்கள் மனம மகிழ வேண்டும் என்பதற்காக  "என்னிலும் மேம்பட்ட " என்கிற  பொருந்தாத  வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும்  )   எனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

 எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்  

 

1)அதிகாலை நடைப் பயிற்சி 

2)புத்தகம் படித்தல் 

3) வானொலி கேட்பது

4)குடும்பத்தினருடன் நண்பர்களு டன் பேசிக்கொண்டிருப்பது

5)வீட்டு  வேலையில் மனைவிக்கு உடன் உதவுவது
6) நான் சார்ந்திருக்கும்சேவை அமைப்புடன்
 சமூகப் பணிகள் செய்வது
7) அப்புறம் என்ன  வலைத்தளத்தில் உலாவுவதுதான்

என் மனம் கவர்ந்த பதிவர்கள் ஐவர்

1)குறையொன்றுமில்லை லெட்சுமி  அவர்கள்  Lakshmi

அனுபவமிக்க வாழ்வியல் கட்டுரைகளுக்காகவும்
அருமையான பயணக் கட்டுரைகளுக்காகவும்

2) திருமதி யுவராணி அவர்கள் யுவராணி தமிழரசன்
 சமுக உணர்வுடன் கூடிய தித்திக்கும் தமிழ் நடைக்காக

3) திருமதி இந்திரா அவர்கள் இந்திரா
யதார்த்தம், தார்மீ கக் கோபம்,  ,
லேசான ரசிக்கும் படியான  கிண்டல்  இப்படி
இப்படி நவரசங்கள் கலந்த அருமையான  பதிவுகளுக்காக

4)திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
அருமையான பழைய தமிழ்  பாடல்களுக்காகவும்
மிகச் சிறந்த காணொளி களுக்காகவும் 

5) திருமதி ராம்வி அவர்கள் RAMVI.
சிறந்த ஆன்மிகப் பதிவுகளுக்காகவும்
அருமையான பயணப் பதிவினுக்காகவும்

இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த கணேஷ் அவர்களுக்கும்   அவருக்கு விருது தந்த ஷக்திப்ரபா அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.


Wednesday, February 8, 2012

லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு 
வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது
இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்

இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்
5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள 
வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் 
அடையாளமாக அதன் படத்தை தங்கள் 
தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்
மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்

இந்த விருதினை அன்போடு எனக்கு 
அளித்த எனது நண்பர் மகேந்திரன் 
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்





எனது மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இதை 
பகிர்ந்தளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
 வண்ண வண்ண ஓவியங்களுக்காகவும்
மனம் கவரும் கவிதைகளுக்காகவும்  

G.M  பாலசுப்ரமணியம் அவர்கள்
G.M பாலசுப்ரமணியம்
72 வயது இளைஞரின் வாழ்வு குறித்த 
வித்தியாசமான அணுகுமுறையுடன் கூடிய
பயனுள்ள வாழ்வியல் பதிவுகளுக்காக     

திருமதி சுந்தரா  அவர்கள்     சுந்தரா
தென்றலாய் மனதை வருடிப் போகும் அழகிய
படை ப்புகளுக்காக  

 பதிவின் பெயர்  கிணற்றுத் தவளை
http://asokarajanandaraj.blogspot.in/
காலத்தால் அழியாத  பாடல்களை  நாம் அறியாத
விளக்கங்களுடன் தரும்
அருமையான பதிவுகளுக்காக 

திருமதி மஞ்சுபாஷினி அவர்கள் மஞ்சுபாஷிணி
உணர்வுபுர்வமான அருமையான கதைகளுக்காக 

இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப,
அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினை
இன்புற வழங்கிடுமாறு
தங்களை கேட்டுக்கொள்கிறேன்

Saturday, February 4, 2012

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..

அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்

எனவே....

Friday, February 3, 2012

சக்தியும் சிவனும்

தன் பண்டைப் பெருமைகளை
பக்தர்களுக்கு விளக்கமாகச் சொல்லி
ஊரை இழுத்தது தேர்

தன் ஊரின் பெருமையை நிலை நாட்டி
தம்  பக்திக்கு மேலும் மெருகூட்டிக்கொண்டது
தேரை இழுத்த ஊர்

அம்மணமாய் ஆற்றலின்றிக் கிடந்தாலும்
வசீகரச் சிரிப்பால்  உறவுகளை இழுத்தது
பிறரை சார்ந்திருக்கவே முடிந்த குழந்தை

வாரி அணைத்து உச்சிமோந்து
கவலைகளை உதிர்த்து களிப்பில் மிதந்தனர்
அன்பை கொடுத்தெடுக்கத் தெரிந்த உறவினர்

தரிசாய் கிடந்தாலும்  கடந்த பருவத்து
செழிப்பினை நினைவூட்டி
உழவனைக் கவர்ந்தது  நிலம்

உயிரைக் கொடுத்து உழைப்பை விதைத்து
விளைச்சளைப் பயனாக்கி
உவகை கொண்டான் உழவன்

ஆகம சாஸ்திரவிதிகளால் 
காந்தம்போல் ஒளிர்வதாய்
வசீகரித்து நின்றது கோவில்

வெற்று இரும்பாய் உள்நுழைந்து
தன் சக்தி பொருத்துச் சக்தியேற்றி
சந்தோஷமடைந்து போனான் பக்தன்

சிவம் என்றுமே சவம்தான
தனித்தியங்காது சந்தேகமில்லை
ஆயினும்
சக்தி மிக்க சக்தி
சக்திபெறக்கூட
சவமான சிவம் நிச்சயம்  தேவை

இயற்கையின் சூட்சுமம் அறியாது
நம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.
அறிந்திருந்தும் சக்திபெற முயலாது
வெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------ .
அறிந்ததனை அனுபவமாக்கி
ஆனந்தமாக  இருக்கத் தெரிந்தவன் எவனோ
அவன்  மட்டுமே புத்திசாலி

Thursday, February 2, 2012

நிலையான முகவரி

கடலுக்கு அலையது முகவரி
நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கும் நீதான் முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கும் நீதான் முகவரி

மனதுக்கு நினைவே  முகவரி
நினைவுக்கு மொழிதான் முகவரி
பகலுக்கு ஒளிதான் முகவரி-என்
படைப்புக்கும் நீதான் முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கவிதைக்கு பல்லவி முகவரி
உடலுக்கு முகம்தான் முகவரி-வாழ்வில்
எனக்கென்றும் நீதான் முகவரி

 (கல்லூரிக் காலப் பிதற்றல் 2 )