Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Wednesday, January 8, 2020

முரண்....

தனியார்மயமாக்களுக்கு எதிரான
போராட்டத்திற்கு
ஆதரவு தேடும் நிமித்தம் அவர்கள்
முக நூல் டுவிட்டர்  பிளாக்கர் என
அத்தனை பிரச்சார வாய்ப்புகளையும்
பயன்படுத்த முயன்றார்கள்

ஆயினும்
தனியார் வசம் இருந்த
நெட் ஒர்க்குகள் பயன்பட்ட அளவு
விசுவாசமாக வைத்திருந்த
பி.எஸ் என் எல்.
கைகொடுக்கவில்லை..

ஆகவே பாவம்
தனியார் தயவினாலேயே அவர்கள்
தனியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மாவட்டத் தலைவர்களை
முடிக்கிவிட பயணப்பட்ட
,மாநிலத்தலைவர்களுக்கு
வசதியான குளிரூட்டப்பட்ட
தனியார் பேருந்துகள்
கொடுத்த சுகப் பயணத்தை
அரசுப் பேருந்துகள் தர இயலாததால்
தலைவர்களால்  பாவம் அதையும்
பயன்படுத்த இயலவில்லை...

ஆகவே பாவம்
தனியார் உதவியுடனேயே
பொதுத் துறையை ஆதரித்துக் கொண்டுள்ளார்கள்

பொதுமக்களுக்கான
நல்வாழ்வுச் சட்டங்களுக்காக
பொதுமக்களை ஒன்றாகத் திரட்டும் பணிக்கு
தங்கள் கொள்கை முரண்பாடுகளும்
சுய நலங்களும் இடம் தரவில்லை
ஆகவே அவர்களால்
அரசுக்கு எதிரான பெருந்திரள்
போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை

ஆகவே பாவம்
பொதுத்துறை ஊழியர்களைத் தூண்டியே
அதைக் காப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்

ஜன நாயகம் காக்க என இவர்கள்
போடுகிற வேஷமெல்லாம்
ஜன நாயகத்தை அழிக்கவும்
தொழிலாளி வர்க சர்வாதிகாரத்தை
வேரூன்ற வைக்கவுமே எனத் தெரிந்த பாமரனுக்கு
இவையெல்லாம் தெரியாமலிருக்க சாத்தியமே இல்லை

ஆகவே அவனும் எப்போதும் போல
தனக்குச் சம்பந்தே இல்லாததைப் போல
இவர்கள் ஆர்ப்பாட்டத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான்

Tuesday, July 17, 2018

கொசுக்கள் உள்ளிருக்கும் கொசுவலை

கொசுக்கள் சூழ்ந்த இடத்தில்
குழந்தையைக் காக்க
கொசுவலைக்  கட்டுதல்
புத்திசாலித் தனமே

ஆயினும்
தெரிந்தோ தெரியாமலோ
கொசுக்களை
உள்ளே விட்டுக்கட்டுதல்
பெரும் மடத்தனமே

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்
பாதுகாப்புக் கருதி
காவலர்களை நியமிப்பது
நிச்சயம் அவசியமே

ஆயினும்
வாய்ப்புக் கிடைத்தால் உடல் மேயும்
காமாந்திரர்களை நியமித்தல்
நிச்சயம் பெரும் ஆபத்தே

மக்கள் நலம் பேண
ஜனநாயக வழியில்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே
ஆகச் சிறந்த முறையே

ஆயினும்
இலவசங்களுக்கு மயங்கி
பேராசைப் பேய்களைத் தேர்ந்தெடுத்து
அவதியுறும் நிலைபோலவே

Tuesday, July 10, 2018

உப்பும் தலைமையும்

இல்லையோ என
உணரும்படியாகக்
குறைவாகப் போடப்பட்ட உப்பும்

அதிகமோ என
உணரும்படியாக
அதிகமாகப் போடப்பட்ட உப்பும்

நிச்சயம்
உணவின் தரம் குறைத்துவிடும் என்பதும்

இருப்பது தெரியாதபடி
மிகச் சரியான அளவில்
இடப்பட்ட உப்பே
உணவின் சுவைக்  கூட்டும் என்பதுவும்

நல்ல சமையற்காரருக்குத் தெரியும்

பொறுப்பில்லையோ என
உணரும்படியாக
ஈடுபாடு இல்லாத தலைமையும்

ஆக்கிரமிக்கிறாரோ என
எரிச்சலூட்டும்படியான
அதிகாரம் காட்டும் தலைமையும்

நிச்சயம்
இயக்கத்தைப் பாழப்படுத்திவிடும் என்பதும்

தன்னைப் பிரதானப் படுத்தாது
அனவரையும் இயங்கவிட்டு
இணைந்து இயங்குவதே
இயக்கத்தை வலுப்படுத்தும் என்பதுவும்

நல்ல தலைவர்களுக்குத் தெரியும்

ஆம் பயிற்சிப் பெற்ற
அனைத்து அரிமாத் தலைவர்களுக்கும்
இது மிகத் தெளிவாய்த் தெரியும்

பயிற்சிப் பெற்றப் பின்
உங்களுக்கும் இது
மிகத் தெளிவாய்ப் புரியும்

( 15/07/2018 இல் நடைபெற உள்ள
 பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள இருக்கிற
இவ்வாண்டின் தலைவர் செயலாளர் மற்றும்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள் )

அரிமா.எஸ். வெங்கடசுப்ரமணியன்
அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மதுரை

Friday, June 30, 2017

கணினி உலகம்

உலகைச் சுற்றி
உலகை அறிந்து கொள்வதை விட
"மௌசைத் "தட்டி
அறிந்து கொள்ளுதல்
எளிதாகவும்
விரைவாகவும்
முடிவதை நினைக்க

ஞானப் பழம் பெற
உலகைச் சுற்றிய முருகனும்
தாய் தந்தையரைச் சுற்றி
ஞானப் பழம் பெற்ற
"மூஸிக "வாகனனும்
நினைவில் வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

உடன்
கணிப்பொறி இல்லையெனில்
உலகின் இயக்கமே
இல்லையென்றாகிப் போன
இன்றைய சூழலில்

அம்மையப்பன் தான் உலகம்
உலகம்தான் அம்மையப்பன்
என அருளிய
அம்மையப்பனின் அருளுரையும்...

Thursday, June 1, 2017

சென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்...

கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்
அவரை விழ்த்துவதற்கென்றே
மிகத் துல்லியமாக வீசப்பட்ட  ஒரு பந்தை
அவதானிக்கையில் சிறு கவனப்பிசகு
நேர்ந்தாலும் ஸ்டம்பினைத் தகர்க்கும்
நிலையில்

மிகச் சரியாகக் கவனித்து அதை
ஒரு சிக்ஸராக மாற்றுபவர் எப்படி
மிகச் சிறந்த பேஸ்மெனாக கருதப்படுகிறாறோ

அதைப் போல...

சமாளிக்கவே முடியாத சோதனை
ஏற்படுகையில் அதில் தனக்கு நேர்ந்த
இழப்புகள் குறித்து மட்டும் கவனம்
கொள்ளாது,

அதனால் தன்னைச் சார்ந்துள்ள
யாரும் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்கும்படியாக
அதிகம் கவனக் கொள்கிற நிறுவனமும்
நிர்வாகத்தினரும் மிகச் சிறந்த நிர்வாகமாகவும்
நிர்வாகத்தினராகவும் மதிக்கப்படுவர்

அந்த வகையில் மிகப் பெரிய பாதிப்பை
அடைந்த போதும் அது குறித்து மட்டுமே
கவன்ம் கொள்ளாது, உடன் தங்கள்
நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்
அனைவருக்கும் தாமதம் செய்யாது
இம்மாத ஊதியத்தை
உடன்பட்டுவாடா செய்ததோடு,

உடன் அவர்களை தன் நிறுவனத்தில்
 பிற கிளைகளில்பணியமர்த்த ஏற்பாடுகளைச்
செய்து கொண்டிருக்கிற
சென்னை சில்க்ஸ் நிறுவனம்
மக்கள் மனங்களில் ஒரு போற்றத்தக்க
மதிப்பினைப் பெற்றுள்ளது என்றால்
நிச்சயம் அது மிகையில்லை

அந்த நிறுவனம்  இந்தப் பேரதிர்வில்
இருந்து விரைவில் மீளவும், மீண்டும்
தனக்கான மதிப்பான நிலையைத்
தொடர்ந்து தங்க வைத்துக் கொள்ளவும்
இத்தனைப்பெரிய மோசமான சம்பவத்திலும்
உயிர் இழப்பு ஏதும் நேராதபடி அருளிய
எல்லாம் வல்ல இறைவன் இதற்கும்
அருள் புரியவேண்டிக் கொள்வோமாக  

Thursday, March 30, 2017

முகமதியரான மனுஷ புத்திரரே

எப்போதும்
இருபுறமும் வெட்டத்தக்க
கத்தியாகவே இருங்கள்
அதுவே பிழைக்கும் வழி

எப்போதும்
இருவரும் ஏற்கத்தக்க
ஆசாமியாகவே இருங்கள்
அதுவே ஜெயிக்கும் வழி

பொதுவெளியில்
அனைவரும் ஏற்கவேண்டுமெனில்
"மனுஷ புத்திரனாய் "இருங்கள்
அதுவே நிலைக்கும் வழி

வீடுகிடைக்கவில்லையெனில்
சங்கடப்படாது உடனே
"முகமதியராய் "முகம் காட்டுங்கள்
அதுவே அரசியல் மொழி

"இந்து "வெனவே தனக்கு
பெயர்வைத்துக் கொண்டு
மதம் கடந்ததைப் போல்
காட்டிக் கொள்பவர்களுக்கு

உங்கள் நாடகம்
நிச்சயம் கைகொடுக்கும்
அதைப்போலவே
நிச்சயமா உங்களுக்கும்

என்வே....
மனுஷபுத்திரரான முகமதியரே
முகமதியரான மனுஷபுத்திரரே

எப்போதும் என்றேன்றும்
இருபுறமும் வெட்டத்தக்க
கத்தியாகவே தொடருங்கள்
அதுவே என்றும் பிழைக்கும் வழி

Monday, February 13, 2017

தர்மம் தன்னை சூது கவ்வும்.....

தர்மம் தன்னை
சூது கவ்வும்
ஆயினும்
இறுதியில் தர்மமே வெல்லும்

என்பதனை

தர்மம் தன்னை
சூது கவ்வும்
இருபது ஆண்டுகள் ஆயினும்
இறுதியில்
தர்மமே வெல்லும்

என இனிச் சொல்லலாம்

நீதியின் மீதும்
சட்டத்தின் மீதும்
நாம் இழந்து கொண்டிருந்த நம்பிக்கையை
மீட்டுக் கொடுத்த
நீதிபதிகளுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றியும்
நல்வாழ்த்துக்களும்

Wednesday, February 1, 2017

ஜல்லிக்கட்டு.. ...போராட்டமும் முடிவும்

காலங்காலமாய்
துவக்கி வைத்துக் கொண்டிருந்தவர்கள்
அல்லது துவக்குவதாய்
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
அறியாமலேயே
இது துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அதை எட்ட நின்றுக்
கவனித்துக்கொண்டிருந்தார்கள்

காலங்காலமாய்
தொடர்ந்து கொண்டிருந்தவ்ர்கள்
அல்லது
தொடர்பவர்களாக
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
தொடராமலேயே
அது மிகச் சிறப்பாய்த்
தொடர்ந்து கொண்டிருந்தது

அவர்கள் மிரட்சியுடன்
அதைக் கவனமாய்க்
கவனிக்கத் துவங்கினார்கள்

காலங்காலமாய்
வென்று கொண்டிருந்தவர்கள்
அல்லது
வென்றதாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்
இல்லாமலேயே
அது வெல்லத் துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அது குறித்துச்
சிந்திக்கத் துவங்கினார்கள்

துவங்குவதும்
தொடர்வதும்
வெல்வதும்
சுயம்புவாய் ஆகக் கூடுமெனில்
நம் நிலை என்ன என்பது
அவர்களுக்குள்
ஒரு எரிமலையை உருவாக்க

அவர்கள் மீண்டும்
வழக்கம்போல
மெல்ல மெல்லத் துவங்கி
மெல்ல மெல்லத் தொடர்ந்து
முடிவாய்
வழக்கம்போல
முடித்தும் வைத்துவிட்டார்கள்

வழக்கமான
ஒரு போராட்டம் என்பதைப் போலவே

ஆயினும்........

Saturday, January 21, 2017

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக் கடந்து நிலைத்து நிற்கு தென்றால்

சந்தாக் கட்டி சண்டை போடும்
சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு

சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு

சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்

ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே

ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி

கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி

வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்

நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே

உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை

உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து  நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்

உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்

( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )

Friday, January 20, 2017

நிமிரச் செய்து போகிறது புதிய தலைமுறை....

கொசு ஒழிக்க விதம் விதமாய்
பொருட்களைப் பயன்படுத்தி
ஓய்ந்துப் போனது
எங்கள் தலைமுறை

சாக்கடையை ஒழித்துவிடத்
துணிந்துக் களத்தில்
இறங்கிவிட்டது
இன்றைய தலைமுறை

விஷமரம் ஒழிக்க இலை நசுக்கி
கிளை நறுக்கி சக்தி இழந்து
தவித்துப் போனது
எங்கள் தலைமுறை

ஆணிவேர் அறுத்து மரத்தை
அடியோடுச் சாய்த்து
வெற்றியடையுது
இளைய தலைமுறை

தலைமைக்குப் பின்னோடி
பிரச்சனைக்குத் தீர்வுத் தேடி
சோர்ந்துச் சாய்ந்தது
எங்கள் தலைமுறை

பிரச்சனையைத் தலைமையாக்கி
தலைவர்களை மூச்சிறைக்க
பின் தொடரச் செய்துவிட்டது
இளைய தலைமுறை

தகவல் தொடர்பு
யானைகளைக் கொண்டு
பிச்சையெடுத்துப்
பெருமை கொண்டது
எங்கள் தலைமுறை

தகவல் தொடர்பினைக்
கூர்வாளாக்கி
போராட்டக் களத்தை
கூர்மைப்படுத்திப்
பெருமைப் பெற்றது
புதிய தலைமுறை

அனைத்து முறைகளிலும்
நம்பிக்கையிழந்து
புலம்பி நித்தம்
ஓயத் துவங்கியது
எங்கள் தலைமுறை

புதியவகைஅணுகுமுறையில்
நிமிரத் துவங்கி
எங்கள் தலமுறையையும்
மெல்ல மெல்ல
நிமிரச் செய்து போகிறது
புதிய தலைமுறை

Friday, December 16, 2016

ஒரு இனிய அரிய வாய்ப்பு




வலைத்தள நண்பர்களுக்கு  இது ஒரு அரிய வாய்ப்பு
இணைய தளம்  குறித்து எளிமையாகவும்
தெளிவாகவும் அறிய இது ஒரு இனிய வாய்ப்பு

கலந்து கொண்டு  நிகழ்வைச்  சிறப்பிப்போம்  வாரீர்
கலந்து கொண்டு இன்னும் நம்மைக்
கூர்மைப்  படுத்திக்  கொள்வோம் வாரீர்

அனுமதி இலவசம்  ஆயினும்
முன் பதிவு அவசியம்

கூடுதல் விவரம் அறிய

http://valarumkavithai.blogspot.com/2016/12/blog-post_16.html


நேரடித் தொடர்பு  அவசியமாயின்  

பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்  
சிலரது எண்கள்

நா.முத்துநிலவன்-9443193293

ராசி.பன்னீர்செல்வன்-7373002837

மு.கீதா-9659247363

மீரா.செல்வக்குமார்-8870394188

இரா.ஜெயலட்சுமி-9842179961

மது.கஸ்தூரிரெங்கன்-9842528585

க.மாலதி-9659584845

முனைவர் மகா.சுந்தர்-9442232678

பொன்.கருப்பையா-9442211096

பேரா.சக்திவேல்-7373000601

Tuesday, February 23, 2016

ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள் மன்றம்

 ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள்  மன்றத்தின்
( மலேசியா )சார்பாகத்   தைப்  பொங்கலை
முன்னிட்டு  நடைபெற்ற கவிதைப் போட்டியில்
என்னையும் நடுவராக இருக்கப்
பணித்த   நிர்வாகிகளுக்கு  என் நன்றியைக்
காணிக்கையாக்கி  போட்டியின்  முடிவுகளை
வெளியிடுவதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வெற்றி வாகைச்  சூடிய   மற்றும்   போட்டியில்
பங்கு கொண்ட   கவிஞர்கள்கள்  அனைவருக்கும்
என் மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள்




கவிதைகளைப்  படித்து இரசிக்க  ....
http://ootru1.blogspot.com/2016/02/blog-post.html


Wednesday, January 27, 2016

அடியாருக்குச் செய்கிற சேவை....

 நான் சார்த்திருக்கிற அரிமா  சங்கத்தின் கொள்கை  
தொண்டும் தோழமையும் தான் .
அதன் காரணமாகவே அதன் லோகோவில்
we serve  என்கிற ஆங்கில  வாசகங்கள்
குறிக்கப் பட்டிருக்கும் .

தனியாகச் செய்கின்ற சேவைகளை விட
கூட்டாகச் செய்கையில்மிகப்  பெரிதாகவும்
செய்ய முடிவதோடு மட்டும் அல்லாது
தன்  முனைப்பும்  ( ego )இல்லாமல் போய்விடும்  வாய்ப்பதிகம்

அத்துடன் ஆண்டவனுக்குச் செய்கிற   சேவையினும்
அவரின்அடியாருக்குச் செய்கிற சேவை
சாலச் சிறந்தது என்பதைப் போல..

சமூகத்திற்கு  எதையும் எதிர்பாராது  தன்  பங்கை
அளிக்கிறவர்களைஅழைத்துக் கௌரவிப்பது  ,
அவர்களுக்கு  தொடர்ந்து   சேவை செய்ய
ஊக்கமளிக்கும் என்பதால்  ....

ஒவ்வொரு அரிமா சங்கமுக்கிய நிகழ்வுகளிலும்
சமூகச் சிந்தனையாளர்கள், ஆர்வலர்கள் ,
மற்றும் ,சிறந்த சமூகச் சேவகர்களை அழைத்துக் 
கௌரவிப்பது   வழக்கம்

அந்த வகையில் இந்த முறை ,ஆழ்துளை  கிணற்றில்
விழுந்தகுழந்தைகளை மீட்கும் ரோபோ   கருவியைக்
கண்டுபிடித்தஇளம் விஞ்ஞானி
திரு மணிகண்டன் அவர்களைஅழைத்துக்
கௌரவிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது .

அந்த நிகழ்வின் புகைப்படத்தைத தங்களுடன் 
 பகிர்ந்து கொள்வதில்  மிக்க மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...




விருது வழங்கி கௌரவிப்பவர்
 324  B3 அரிமா மாவட்ட  ஆளு நர்
லயன் .S.ராமசுப்பு P.M.J.F  அவர்கள் ..

Wednesday, January 13, 2016

மெல்வின் ஜோன்ஸ் (13.01.1879 ).



உலக அரிமா சங்க நிறுவனர்  மதிப்பிற்குரிய
மெல்வின் ஜோன்ஸ்  அவர்களின்  அவர்களின்
 பிறந்த தினம் இன்று  (13.01.1879 ).

நூறு ஆண்டுகளைக் கடந்து  இந்த இயக்கம்
இரு நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில்
 பதினான்கு  இலட்சத்திற்கும்  மேற்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டு  இன்னும் இளமையான
இயக்கமாகவும் ,மதிக்கத் தக்கமுதிர்ச்சியான  சேவை
மனம்  கொண்ட அங்கத்தினர்களைத் தொடர்ந்து
இணைத்துக் கொண்டுள்ள இயக்கமாக இருக்கிறது
எனில்  அதுதனது தாரக மந்திரமான
தொண்டும் தோழமையும்   என்கிற  நிலையில்
சற்றும் விலகாது தொடர்ந்து
பயணிப்பதால்தான்  என்றால் அது மிகை இல்லை

இன்று அவரது நினைவினைப் போற்றும் விதமாக
உலகெங்கும்பசிப்பிணி அகற்றும்  சீரிய பணியாக
10 மில்லியன்   ஏழை மக்களுக்கு உணவளிக்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டுளது

அதற்குரிய  எங்களின்  சிறு துளிப் பணியாக
எங்கள் பகுதியில் 10,000 பேருக்கு  உணவளிக்க  ஆவன
செய்வதன் மூலம்   எங்கள்அஞ்சலியைக்
காணிக்கையாக்குகிறோம் என்பதைப் பணிவுடன்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும்
 மகிழ்ச்சி  கொள்கிறோம்








Tuesday, January 5, 2016

நிறைவாகவும் ,விரைவாகவும் நிறையவும்


நிறைவாகச்  செய்ய  அனுபவமும் விரைவாகச் 
செய்யஇளமையும் ,நிறையச்  செய்ய இரண்டும்  சேர்ந்து  
இருத்தலும் அவசியம் என்பதை  சமீபத்தில் நாங்கள்  
முயற்சி எடுத்து  புதிதாக அமைத்த  
அரிமா லியோ சங்க
இளைஞர்கள்  மூலம்  புரிந்து கொண்டோம் .

எங்கள் குடியிருப்புப் பகுதியில்(சுமார் 6000 வீடுகள் )  
பாதுகாப்புக்குறித்த விஷயங்களில்  பெரியவர்கள் 
கவனம் செலுத்த  இளைஞர்களைசுற்றுச் 
சூழல்குறித்த விஷயங்களில்  கவன ம் செலுத்துமாறு 
கேட்டுக் கொண்டோம்


நாங்கள்  கேட்டு க் கொண்ட ஒரே வாரத்தில் 
ஒரு குறிப்பிட்டச் சாலையைத் தேர்ந்தெடுத்து 
புதர்களை நீக்கி நூறு பூமரக் கன்றுகளை நடவும் 
அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாகவும் 
ஒரு சிறப்பு விழாவுக்காகவும்உடனடியாக மிகச் 
சிறப்பாக ஏற்பாடு செய்துவிட்டார்கள்  

இதுவரை அப்பகுதியில் அனைவரையும் 
 மிரட்டுபவராகவும் அதன் காரணமாக 
பொது இடத்தைச சுய  நலமாகவும்
பயன்படுத்தியவருமான  ஒரு ஜாதி 
 அடிப்படைவாதி விழா நடக்கவிடாதும் 
அப்பகுதி மக்களைஒன்று சேரவிடாதும்செய்ய 
அடாவடித்தனத்தனமாய்  முயற்சிக்க அதனை  
அனுபவசாலியான  பெரியவர்கள் காவல்துறையின் 
முயற்சியுடன் தடுத்து விழாசிறப்பாக நடைபெறவும்
ஒற்ற்றுமையின்  மேன்மையை அப்பகுதி மக்கள் 
உணர்ந்து தெளியும்படியாகவும் செய்தார்கள் 

அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மட்டுமல்லாது 
இயக்கத்தில் பட்டும் படாமலும் இருக்கும் சிலருக்கும்
அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்தால்  
எதனையும்சாதிக்க இயலும் என்கிற  நம்பிக்கையையும்
போனாசாகஇந்த நிகழ்வு    கொடுத்துப் போனது  

அந்த  விழா குறித்தான சில புகைப்படங்கள் 
தங்கள் பார்வைக்காக 






Saturday, January 2, 2016

Award night


உலகின் முதன்மையான சேவைச் சங்கமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ள அரிமா சங்கம்...

சேவை மற்றும் நிர்வாக ரீதியான பல துறைகளில் 
மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை வருவாய்
மாவட்டங்களை உள்ளடக்கிய 324 பி3  மாவட்டமே
உலக அளவில் சிறந்தமாவட்டமாக தெரிவு செய்து...

அதன் ஆளு நரான லயன். பி ரெகுவரன் பி எம் ஜே எஃப்
அவர்களை அம்பாசெடர் ஆஃப்  குட் வில் விருது
கொடுத்துச் சிறப்பித்தது.

உலக அரிமா சங்கம் துவங்கப்பட்ட 
ஆண்டிலிருந்து ,
(இது நூறாவது ஆண்டு ) 
இந்தியாவில் இந்த  விருதினைப் பெறும் 
முதல் அரிமா ஆளு நர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது   


அவர் அந்த  பெறுதற்கரிய விருது பெறுவதற்குக் 
காரணமாக இருந்தசங்கத் தலைவர்களை 
விருது இரவும் நடத்தி இன்று கௌரவம் செய்தார்

இந்த அரிமா மாவட்டத்தில் எல்லா சங்கங்களும்
( 130 )மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதில்
மிக முக்கியமான பதினாறு சங்கங்களைத் 
தேர்ந்தெடுத்து

அதிலும்  இன்னும் சிறந்த நான்கு சங்கங்களைத்
தெரிவு செய்து அவர்கள் மூலம் அந்த  உலகளாவிய்
விருதினைப்பெற்றுக் கொண்டார்

அந்த நான்கு சங்கங்களில் நான் தலைமைப் 
பொறுப்பில்இருந்த சங்கமும் இருந்தது என்பதால் 
நானும்
அந்த விருதினைக் கொடுக்கும் குழுவில் இருந்து
அந்த விருதினைக் கொடுக்கும் கௌரவம் பெற்றேன்.

நானும் என் சங்க சார்பாக   கீழ்கண்ட 
பெருமைக்குரிய 
விருதுகளைப் பெற்றேன்

அந்த நிகழ்வுகளைத்  தங்களுடன் பகிர்ந்து 
கொள்வதில்
மிக்க மகிழ்வு கொள்கிறேன்.












எ னது  சங்க நிர்வாகிகளுடன் ...




விழாவில் விஜய்  தொலைக்காட்சிப் புகழ்
நடனக்   குழுவினரின்  கலை நிகழ்ச்சி 

இசை அமைப்பாளர்  ஜீப்ரான்  அவர்களுடன் 

Monday, December 28, 2015

அநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...

பல்லைக் கடிப்பது...

நாக்கைத் துருத்துவது...

தூ எனத்  துப்புவது ...

பொது வெளியில்  பொறுப்பு மிக்க
பதவிகளில்  இருப்பவரையே  அடிப்பது

இது சிறுபிள்ளைத் தனமா  ?

கிறுக்குத் தனமா ?

எதில்  சேர்ப்பது இதை ?

பொது வழியில் தன்னைக்
கட்டுப்படுத்திக் கொள்ளும்
அடிப்படைத் தன்மை கூட
இல்லாதவர்கள் ...

 பொறுப்பு  மிக்க
பதவியில் அமர்ந்தால்
மாற்றுக் கருத்துடையோரை
எப்படி எதிர்கொள்வார்கள் .. ?

திட்டியா
அடித்தா
 அல்லது
ஆள்  வைத்து உதைத்தா ?

மண்டியிட வைத்து இரசிக்கும் குரூரம்
ஒருவகை அநாகரீகமெனில்

அநாகரீகச் செய்கைகளும்
 ஒருவகை குரூரமே


அநாகரீகத்தை
அநாகரிகமாகவே  சந்தித்தல்
நிச்சயம் நாகரீகமில்லை

எப்படிப் புரியவைப்பது இதை ?

எப்படிச் சகித்துக் கொள்வது இதை ?




Wednesday, December 23, 2015

"அவர் " ( 2 )

தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில்
தொடர்ந்து நீங்காது இடம்பெற்றிருக்கிற
தலைவர்களில்"இவரும் " முக்கியமானவர்
என்றாலும்.....

முன்பு சினிமாத் துறையினரால் எம். ஆர். டி. கெ
எனச் சுருக்கமாக அழைக்கப் பட்ட மதுரை/
இராமனாதபுரம்/திருநெல்வேலி/ கன்னியாகுமரி
மாவட்டங்களில் அவருக்கிருந்த செல்வாக்கு
இன்னும் அதிகமானது

அதிலும் மிகக் குறிப்பாக மதுரை எனச் சொல்லலாம்

அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்
வீரவாள் வழங்கியது/ கணக்குக் கேட்டது/
புரட்சித்தலைவிக்கு கொள்கைப்பரப்புச் செயலாளர்
பதவி வழங்கியது/ உலகத் தமிழர் மா நாடு நடத்தியது
என   அவரின் பல முக்கிய நிகழ்வுகள்
இப்படி மதுரையை அனுசரித்தே இருக்கும்

அப்படித்தான் அன்றைய முக்கிய நடிகர்களின்
புதுப்பட வெளியீடு பொதுப்பண்டிகையான
 தீபாவளி மற்றும் பொங்கலின் போதுதான்இருக்கும்
என்றாலும் ...

"இவரின் " சொந்தப் படம் ஒன்று
மதுரையின்முக்கியத் திரு நாளான சித்திரைத்
திரு நாளின் போது வெளியிடப்பட்டது.

அப்போதெல்லாம் இப்போதைப்போல டீஸர்கள்
கிடையாது என்றாலும் போஸ்டர்களும் அன்றாடம்
அது குறித்து வெளியிடப்படும் பத்திரிக்கை
 விளம்பரங்களும்படத்திற்கான சிறப்புப்புத்தகங்களும்
இப்போதையடீஸர்களை விட அதிக தாக்கத்தை
ஏற்படுத்திப் போகும்

இந்தப் படத்தைப் பொருத்தவரை , "இவர் " மற்றும்
"அவர் " இரண்டுவேடம் என்றதும்,இருவரும் அந்த ராஜா
ராணி உடையில் ஜெய்பூர் அரண்மனைப் பின்புலத்தில்
நடந்துவரும் படமும்,"அவரின்" மார்ப்புப் பிளவுகள்
தெரியும்படியான வித்தியாசமான உடையில்
சிங்கத்தின்வாய்ப் பிளப்பதுமான படங்களைப்
 பார்த்து நாங்கள் மெய் சிலிர்த்துக் கிடந்தோம்

எப்படியும் இப்படத்தை வந்த முதல் நாளே பார்த்து
விடுவது எனத் தீர்மானித்தோம்

அது மதுரையில் அவ்வளவு எளிதில்லை என்றுத்
தெளிவாகத் தெரிந்த போதும். நிற்க

(நிற்க . என்பதைப் பார்த்து யாரும் எழுந்து
நின்று விட வேண்டாம்

என்போன்ற அந்த காலத்து நபர்களுக்கு
நிற்க என்பதன் பொருள் நன்றாகத் தெரியும்.
இப்போதைய இளைஞர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

முன்பெல்லாம் நேரடியாகப் பேசுவதை விட
விரிவாகவும் உணர்வு பூர்வமாகவும்
கடிதம் எழுதுவார்கள்.

அப்படி எழுதிக் கொண்டுவருகையிலேயே
அதன்தொடர்புடைய வேறு விஷயத்தைச்சொல்ல
வருகையில்இந்த நிற்க. என்கிற வார்த்தையைப்
போடுவார்கள்.

அதைப்போலத்தான் இந்த நிற்க.)

தொடரும்

Thursday, December 10, 2015

மனித நேயத்தின் அருமையும் பெருமையும்...

உயிர் பெரிதெனத்
தெரிகையில்தான்
விலை கூடிய உடமைகளின்
மலிவுத் தன்மை
புரியத் துவங்கியது

உணவே உயிரென
ஆனபின் தான்
கட்டிக் காத்து வந்த
வரட்டு கௌரவங்கள்
உடையத் துவங்கியது

ஒரு மடக்கு குடி நீருக்கு
அல்லாடுகையில்தான்
அவசியம் அத்தியாவசியங்களுக்குமான
இணைவில்லா  வித்தியாசம்
விளங்கத் துவங்கியது

மாற்றுத் துணியின்றி
மாட்டிக் கிடைக்கையில்தான்
தேவைக்கும் நாகரீகத்திற்குமான
மிக நீண்ட இடைவெளி
கண்ணுக்குத் தெரிந்தது

ஆம்...

எங்கிருந்தோ எவரோ
முகமறியா இனமறியா பலர்
எங்களை நாடி வந்து
அரவணைக்கையில்தான்
ஆறுதல் அளிக்கையில்தான்....

ஜாதி மத அரசியல் ஆர்ப்பாட்டங்கள்
வெற்றுப்  பிணச் சுமையெனவும்
மனித நேயத்தின்
அருமையும்  பெருமையும்
மெல்ல மெல்ல
விளங்கத் துவங்குகிறது

Tuesday, December 8, 2015

விதைப்பதைப் போலத்தான்.

அலுவலங்களில் உயர் அதிகாரிகள் அடுத்து
அடுத்து இருப்பது  கீழ் நிலை அதிகாரிகளின்
தவறுகளைகுற்ற நோக்கில் கண்டுபிடிப்பதற்காக
அல்ல

தவறு தவறி நேர்வது இயல்பு.அதைச் செய்பவரை விட
அதைக் கவனித்துக் கொண்டிருப்பவர் கண்டுபிடிப்பது
மிக எளிது என்பதால்தான்.

அதனால்தான் கோடலிக் காரனுக்கு நாலு ரூபாய்
என்றால்கோளாறு சொல்பவனுக்கு பத்து ருபாய்
என கிராமங்களில்சொல்வார்கள்

அதைப் போலவே செய்வது சிறிய உதவிதான் எனினும்
அதை மறைத்துச் செய்யாமல் பிறர் தெரிகிறபடிச்
செய்வதும் பிரச்சார நோக்கில் இல்லை

இதைப் பார்க்கிறவர்கள் நாமும் நம்மால் முடிந்த அளவு
செய்யலாமே என்கிற எண்ணம் நிச்சயம் உருவாகும்
என்கிற நோக்கில்தான்

அதுவும் வரி வடிவங்களில் உதவி செய்வதைச்
சொல்வதை விட புகைப்படங்களாய்,காணொளியாய்
இருப்பது கூடுதல் சிறப்பு.

சமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்
தெருக்களில் நின்று  நிவாரண நிதி
வசூலித்துக் கொண்டிருக்கையில்
பள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி  கைக் குழந்தையுடன்
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது
அருகில் நின்றிருந்த  தனது மூத்த பெண்ணிடம்
இருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்
கொண்டுவந்திருந்தஉண்டியலில் போடச் சொன்னது
இன்றும்நினைத்துப் பார்க்கையில்கண் கலங்கச்
செய்துதான் போகிறது.

மழை நேரம் என்பதாலும் சட்டென
இது நடந்து விட்டதாலும் இதைப் புகைப்படம்
எடுக்க முடியவில்லை.

இப்படி எழுத்க் கொண்டிருப்பதை விட அது
புகைப்படமாக எடுக்கப்பட்டுப் பதிவிடப் பட்டிருந்தால்
அந்த இருபது ரூபாய் எத்தனை ஆயிரமாய்
சேரக் காரணமாய் இருந்திருக்கும். ?

எனவே தங்களால் இயன்ற அளவு உதவி
செய்பவர்கள் அனைவரும் கூடுமானவரையில்
முடிந்த அளவு அதை பிறர் அறியப் பதிவு செய்யுங்கள்

இதுவும் ஒருவகையில் விதைப்பதைப் போலத்தான்.

வாழ்த்துக்களுடன்....