Friday, July 31, 2015

எண்ணங்களின் வலிமையறிவோம்

மனவெளி அரங்குகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
நம் உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு

வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு

எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு

மனத்தைப் பொருத்தே
செயலின் போக்கு

செயலைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்
 எப்போதும்
 இதனை
மறவாது மனதில் கொள்வோம்-

வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வென்று உயர்வோம் 

கலைகளின் தெய்வமே சரஸ்வதி

ஒருநொடி உனதிரு அருள் விழி
எந்தனைக் கண்டிட அருள்புரி
அருவியும் மருகிடும் வகையினில்
கவியது பெருகிடத் தினமினி

ஒருமொழி திருமொழி எனும்படி
முதலடி தொடுத்தெனை நடத்துநீ
கருவது ஊற்றெனப் பெருகிட
கவியென உலகிதே போற்றிட

தினமொரு கணமது உன்வழி
நினைவுகள் கடந்திட துணைபுரி
மனமது மலரென மலர்ந்திட
கவியது மழையெனப் பொழிந்திட

உனதொரு அருளினை அண்டியே
பிதற்றுமென் கவிமன நிலையறி
உனதடி சரணமே சரணமே
கலைகளின் தெய்வமே சரஸ்வதி

Thursday, July 30, 2015

புகழுடம்பு

தேடிநித்தம் சேர்த்ததெல்லாம்
தெருக்குப்பை ஆகிவிடும்
தேடியோடிப் படித்ததெல்லாம்
தொலைந்தெங்கோ  ஓடிவிடும்
கூடியாடிக் களித்ததெல்லாம்
வெறுங்கனவாய் மாறிவிடும்
தேடிவந்து காலனவன்
மூச்சடைக்க நடந்துவிடும்

வெளியோடி உள்ளோடி
உயிரதற்கு ஆதரவாய்
ஒலியதனைத் தினம்கடத்தும்
ஒப்பற்றச் சாதனமாய்
நொடிதோரும் உழைத்திட்ட
வளியதுவும் திசைமாறும்
வெளியோடு நின்றுடலை
பிணமாக்கி சுகம்காணும்

தினமுலவி வாழ்வதற்கும்
நிம்மதியாய் சாய்வதற்கும்
தினந்தோரும் வகைவகையாய்
தின்றுவுயிர் வளர்ப்பதற்கும்
மனமிளகித் தாய்போலத்
தனைத்தந்த நிலமகளும்
மனங்கெட்டு அரக்கியாகி
உடல்தின்னத் துணிந்துவிடும்

நதியாகித் தினமோடி
நாடெல்லாம் செழிப்பாக்கி
தவிப்பெடுத்த உயிரனைத்தின்
தாகமதை தினம்தீர்த்த
அதிமதுர நீரதுவும்
நிலைமாறும் முகம்மாறும்
பொதியான பிணம்கழுவும்
புழக்கடைநீர் போலாகும்

உடல்நலத்தைத் தினம்காக்கும்
உணவாக்க உறுதுணையாய்
கசடுயெனத் தினம்சேரும்
கழிவழிக்கப் பெருந்துணையாய்
உடனிருந்த பெருந்தீயும்
கொண்டகுணம் விட்டுவிடும்
உடலெரித்துப் பசியடக்கப்
பேராசைக் கொண்டுவிடும்

நான்கினையும் உள்ளடக்கி
ஏதுமில்லை என்பதுபோல்
காண்பதற்குத் தெரிந்தாலும்
கடவுள்போல் யாதுமாகி
ஆண்டுவரும் வெளியதுவும்
அரக்ககுணம் கொண்டுவுடல்
தாண்டிவரும் உயிரதனை
விழுங்கிடவே தினமலையும்

உடலோடு உயிரிருக்க
உள்ளன்பின் துணையோடு
உலகத்தார் மேன்மையுற
உழைக்கின்ற உழைப்பொன்றே
உடல்விட்டு உயிர்பிரிந்தும்
உலகுவிட்டு மறையாது
புகழுடம்பு எடுத்திங்கு
எந்நாளும் நிலைத்திருக்கும்

Wednesday, July 29, 2015

புரியாத சில புதிர்கள்

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
டஜன் கணக்கில் இருக்க

பூர்வ புண்ணிய  பாக்கிய ஸ்தானங்களின்
தோஷ ங்களை
புண்ணிய ஷேத்திரங்களிருந்து
 சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தை பாக்கியம் இல்லை

இலக்கண அறிவு
மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கணச செறிவு
 பூரணமாய் அமைய

 இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும்  ஏனோ
 கவிதை  ஒருவரி எழுத வரவில்லை

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரீசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க

சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலைவரின் வாரீசுகள்  எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர


அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின்
 படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

விளக்கங்கள்
ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை

எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
கடைசிவரை புரியத்தான் இல்லை

Tuesday, July 28, 2015

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து
நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
 நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தானோ  ? "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படிக்  கவிதையாகும் ? "
என்றேன் குழப்பத்துடன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும்
கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப்
படைக்கும் குழம்பு - கவிதை

நாங்கள் பிறர்
ருசிக்கச் செய்யும்
கவிதை- குழம்பு" என்றாள்

Monday, July 27, 2015

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் கொஞ்சம் ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்திருப்பீர்

எதுகை மோனைத் தேடி நித்தம்

எதுகை மோனைத் தேடி நித்தம்
மொகட்டைப் பாக்கும் மாமா-தாடித்
தடவி நோகும் மாமா

ஒதுங்கி ஓடும் வார்த்தைத் தேடி
அலஞ்சு திரியும் மாமா-மனசு
கலங்கித் திரியும் மாமா

அச்சு ஒண்ணு செஞ்சு வச்சு
வெல்லம் செய்தல் போல-அச்சு
வெல்லம் செய்தல் போல

குட்ட குழியை கணக்கா வைச்சு
மாவு இடுதல் போல-இட்லி
சுளுவா சுடுதல் போல

சந்தம் ஒண்ணு நெஞ்சில் வைச்சு
எழுதிப் பாரு மாமா-நீயும்
பழகிப் பாரு மாமா

பெஞ்ச மழையில் காட்டு ஆறு
ஓடி வருதல் போல-அடப்பைத்
தாவி வருதல் போல

கவிதை நூறு உனக்குள் ஊறித்
திமிறி வருமே மாமா-தானா
பெருகி வருமே மாமா

எளிதா கவிதை வசத்தில் வந்தா
என்னப் பாடு மாமா-அதுக்கே
இந்தக் கவிதை மாமா  

Sunday, July 26, 2015

குன்றெனில் மகிழ்வுடன் வீற்று.......

ஓரிடம் எனக்கென உண்டோ -இல்லை
கோடியில் ஓரிடம் தானோ
காரிருள் சூழுதல் போல-நெஞ்சில்
சூழுதே குழப்பமே ஏனோ

வேலினைத் தாங்கிய வேலா-எந்தன்
வேதனை ஒழித்திட வாராய்
தாளினை பற்றியே நின்றேன்-உந்தன்
கருணையைப்  பொழிந்தெனைக் காவாய்

சுழன்றிடும் உலகினில் என்றும்-நிலைத்த
புகழுடன் விளங்கிட வேண்டின்
அளவினை மீறிய செல்வம்-உடன்
ஆட்பலம் திமிருடன் சக்தி

பதவியும் பவிசதும் வேண்டும்-என்று
பழகிய பூமியில் நானே
இதமுடன் உலகிது உய்ய-நாளும்
உயர்கவி அளித்திடல் ஒன்றே

நலம்தரும் நல்வழி என்று-மாறா
நிலையினை மனதினில் கொண்டு
வலம்வரும் என்நிலை சரியா-என
மனமது குழம்புது தினமே

குன்றெனில் மகிழ்வுடன் வீற்று-பக்தர்
குறைகளைக் கலைந்திடும் குமரா
என்மனக் குறையதும் கலைந்து-நான்
தெளிவுறும்  வழிதனை அருள்வாய்

Saturday, July 25, 2015

கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப் போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது  ?"
கட்டுகட்டாய்  உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்த" கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நீ தராவிட்டாலும் 
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகப் புலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான்  நண்பன்

நான் புரிந்திருந்ததை  மெல்ல விளக்கினேன் 

" இது கொட்டிக்  கிடக்குமிடம்
அள்ளித் தரும் இடமில்லை

நம்பிக்  "கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்
.
ஏனெனில் 
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

Friday, July 24, 2015

யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி.

தகவிலர்கள் எல்லாம்
தக்கார்களாகியிருந்த
அந்நாளில் ஒரு நாள்
நான் அந்தக் கோவிலில் இருந்தேன்

ஆண்டவருக்கும் அர்ச்சகருக்கும்
இடைப்பட்ட ஒருஅதிகாரப்பதவியில்
இருப்பதான மமதையோடு
தக்கார் இருக்கையில்
இருந்தார்  அந்தத் தகவிலர்

அன்றைய சிறப்புப் பூஜையின்
பிரசாதத் தட்டுடன்
பணிவுடன் நின்றிருந்தார் அர்ச்சகர்

தொண்டையைச் சரிசெய்தவாறே
தகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்
" நான் பாண்டி கோவிலுக்குத்தான்
தக்காருக்கு முயற்சி செய்தேன்
அது கிடைத்திருந்தால்
இப்போது தேங்காய் பழம் இருக்கும் தட்டில்
வேறு இருந்திருக்கும்" என்றார்

பதட்டமான அர்ச்சகர்
"அபச்சாரம் அபச்சாரம்
இது சிவ ஸ்தலம்
நீங்கள் அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது " என்றார்

தகவிலர் தொடர்ந்தார்
"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா
உங்களுக்கு அது தேவை
அதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்" என்றார்

"இது காலம் காலமாக உள்ளது
பெரியவர்கள் உண்டாக்கி வைத்தது
காரணம் ஏதும் இல்லாமல் இருக்காது"
கொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்

இருவரின் பேச்சினையும்
கேட்கக் கேட்கக்
எனக்கு எரிச்சல் கூடிக்கொண்டேபோனது
நானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்
நேராக விஷயத்திற்கும் வந்தேன்

"சாமிக்கு படைக்கும் பொருட்கள்
புனிதமானவைகளாக இருக்க வேண்டும்
எச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது
தின்று போட்ட கொட்டையிலிருந்து
வேறு பழங்கள் விளையக் கூடும்

தேங்காயும் வாழையும்
அப்படி வளர வழி இல்லை
எனவே புனிதம் கெட வழி இல்லை

எனவே இவைகளை முன்னோர்கள்
படையல் பொருட்களாகி  இருக்கக் கூடும் " என்றேன்

இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள
நான் தொடர்ந்து சொன்னேன்
"தேங்காய் வாழைக்கு மட்டும்
சீஸன் என்பது இல்லை
மற்ற பழங்கள் காய்கள் எனில்
குறிப்பிட்ட சீஸன்களில்தான் விளையும்

நாமும்
குறிப்பிட்ட சீஸன்களில்தான்
சாமி கும்பிட இயலும் " என்றேன்

இருவரும் மீண்டும் ஏனோ
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

நான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்
"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
காரணம் சொல்லத் தெரியாத பல
நல்ல காரியங்கள் கூட
மூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்
தங்களைப் போல
தங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத
ஒப்புக்கு வேலை செய்யும்
அசடுகளால்தான் " என்றேன்
அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்

பின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து
இப்படிச் சொன்னேன்
"இது நம்பிக்கையை விளைவிக்கிற இடம்
உங்களுக்கு  நம்பிக்கையற்ற
பல விஷயங்கள் இங்கு இருக்கலாம்
உங்களது நம்பிக்கை கூட
சரியானதாக இருக்கலாம்

ஆயினும்
உங்களுக்கான இடம் இது இல்லை
இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்

இது நடந்து பல நாட்கள்
அந்தக் கோவில் போனேன்
தக்கார் என்னைக் கண்டதும்
வேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்
அர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை

நானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....

மனமூடை

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய…
.
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன

மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு

நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி

எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூடை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போலக்  கிடந்து சிரிக்கும்

சிலசமயம்
சிம்மாசனமாகி அவனைத்
 திமிர்பிடித்தவன் போலக் காட்டும்

சிலசமயம் அதுவே
 தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்

ஆனாலும்
பலசமயம் அவனுள்
பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்தே
லேசாக முகம் காட்டும்.

இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்


அவனை
அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்

எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட

உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்

அந்த மூடையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
நிச்சயசமாய் அறுந்து போகாது
என நினைப்பேன்


அந்த மூடையை
அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்

அவன் சரியானால் கூட
அந்த மூடை அவனைவிட்டு ஒழியும்
எனும் எண்ணம்
அவ்வப்போது  என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்

ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்

அந்த அழுக்கு மூடையை
உயரப்பிடித்தபிடி
போவோர் வருவோரை உற்று நோக்கி-
இதுதான் இதுதான் –
என உறக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண்
வெடித்துத் திறப்பதுபோலவும்

அனைவர்க்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்துவிரிந்து அம்மணமாவது போலவும்

என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்

என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.

Thursday, July 23, 2015

நிஜமல்ல கதை

இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி

இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி

உடலையும் மனத்தையும்
விஷமிருக்கும் கூடாக்கி
செரிமானமாகாது பின் அது
கக்கித் தொலைக்கையில்தான்

வெந்துச் சாகிறோமோ ?
 மனம் நொந்து வீழ்கிறோமோ ?

"அழகானவர்கள் என்றால் கெட்டவர்களா
அதைவிடக் கொஞ்சம்
சுமாரானவர்கள்தான் நல்லவர்களா"
என்றாள் என் பேத்தி

"அப்படி இல்லையே யார் சொன்னது " என்றேன்

"சும்மா கேட்டேன் " என்றாள்

நானும் விட்டுவிட்டேன்

"கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா " என்றாள்

அப்படியெல்லாம்  கிடையாதே யார் சொன்னது
அவர்கள் எப்போதும் புத்திசாலிதான் "என்றேன்

பின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்
"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும் " என்றாள்

துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது

பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
 தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்

நல்ல பள்ளி
நல்ல சூழல்
நல்ல நண்பர்கள் எல்லாம்
வெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து
வீட்டுக்குள் மட்டும் விஷக்காற்றை
பரவவிட்டுக் கொண்டிருப்பதை
அப்போதுதான் அறிந்து தொலைத்தேன்

அவளின் எதிகாலம் கருதி
இப்போதெல்லாம் அபத்தத் தொடர்களை
நாங்கள் அடியோடு பார்ப்பதில்லை

முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை

Wednesday, July 22, 2015

பழநிமுருகனும் நானும்

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில்
அவன் எப்போதும்
கோவிலில் இருப்பதில்லை

சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்

மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

 அப்படித்தான் இன்றும்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்

நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.

 காவடிக்குள்ளும்
பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சைப்  படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்

" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு
எதை கொடுக்காது இருக்கிறேன்

பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்து
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்

சக்தியைக் கொடுத்து
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்

இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்  ?

நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் சக்தியும்
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
...
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிகிறது

எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாய்
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது

நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை

அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

Tuesday, July 21, 2015

காலத்துக்கு தக்கபடி...

முள்ளும் மலருமே
ரோஜாவை
அடையாளம் காட்டிப் போகின்றன
செடிக்கு
அழகு சேர்த்துப் போகின்றன

நண்பர்களும்
 பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்

நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல

இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்
நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்

நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்
உயிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்

நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல

இன்றைய நிலையில்...

அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை

Monday, July 20, 2015

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..

அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்

எனவே....

சூட்சும நாடி

எதிர்பார்ப்பிற்கும்
யதார்த்தத்திற்குமான இடைவெளியே
இன்ப துன்பத்திற்கான
இடைவெளி என்பது புரிந்து போக

யதார்த்தத்திற்கான
எதிர்திசை பயணம் விடுத்து
யதார்த்தத் திசையிலேயே
பயணிக்கத் துவங்குகிறேன் நான்

இடைவெளி குறைதல்
குறித்த அச்சத்தில்
எதார்த்தமும் தன்
வேகம் குறைக்கத் துவங்குகிறது

மேல்தாடை
நம்  வசத்தில் இல்லை என்பது
புரிந்து போக

கீழ்தாடை பலமறிய
மேல் தாடை நினைவொழித்து
மெல்லத் துவங்குகிறேன் நான்

தன் பலவீனம் அறிந்த
மேற்தாடையும்
கீழ்த்தாடையின் போங்கிலேயே
மெல்ல இயங்கத் துவங்குகிறது

Sunday, July 19, 2015

புலம்பி அலையும் பொது நலம்

உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது

குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்

நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்

உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்

எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்

மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்

Saturday, July 18, 2015

பட்டவைகள் துளிர்க்க...

இருள்
தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

பட்டுப்போனவைகள் கூட
மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

வாலி நீ வாழீ

 நாளும்
பாமாலைச் சூடி
தமிழன்னை திருப்பாதம்
படைத்துக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனே
உன்மறைவுக்கு
இரங்கற்பா பாட நேர்ந்ததும் அவலமே

என்றும்
மரபுக் கவிதையின்
சந்த அழகையும்
வசன கவிதையின்
இறுக்கத்தையும்
ஒன்றாக இணைத்துத் தந்த உன் கவித்துவம்
அனைவருக்கும் உவப்பாய் இருந்ததைப் போலவே

பழுத்த
ஆன்மீக வாதியாய்
பகுத்தறிவு மேடைகளிலும்
பகுத்தறிவாளனாய்
ஆன்மீகத் தளங்களிலும்
வேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்
அனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது

கோரிக்கையாக அன்று நீ எழுதிய ஒரு பாடல்
பட்டிதொட்டியெல்லாம்
நாடு நகரமெல்லாம்
காலக்கணக்கற்று
ஆண்டவன் செவிகளைத் துளைக்க
இரண்டாவது முறையாகத்
தோற்க நேர்ந்தமைக்காக
 எமனவன் இன்று
பழிதீர்த்துக் கொண்டுள்ளான் பாவி

கல்லுக்குள் ஈரம்போல்
எருமை
உயிர்
மரணம்
பாசக்கயிறு என
எந்த நாளும் கடுமையாய்த் திரிந்து
மரத்துப் போன அவன் மனது
உன் இயைபுத் தொடையின் அழகிலும்
சிந்தனைச் செறிவின் உயர்விலும்
மயங்கிட
அவசரப்பட்டு விட்டான் மடையன்

ஆயினும்
மெய்யென்று  மேனியை
யார் சொன்னது எனச் சாடிய உனக்கு
புகழுடலே மெய்யெனப் புரியாதா இருக்கும் ?

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் ?

வாலி நீ வாழீ

Friday, July 17, 2015

யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் ...

அலமேலுகளும் அம்புஜங்களும்
மாமியாகிப் போனார்கள்
மாமியாராகியும் போனார்கள்
வனஜாக்களும் கிரிஜாக்களும்
நாற்பதைக் கடந்து போனார்கள்
பலர் போயும் போனார்கள்

இப்போது ஜொலிப்பதெல்லாம்
த ன்ஷிகாவும்  தமன்னாவும் தான்

கால மாற்றத்தில்
கலாச்சார மாற்றத்தில்
பெயர்களும் மாறிப் போவதை
எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது

அது சரி
ஆயினும்
பச்சேரிகள் எல்லாம்
அம்பேத்கார் நகர்களாகவும்
அக்ரகாரங்கள் எல்லாம்
பாரதியார் வீதிகளாகவும்
வணிக வீதிகள் எல்லாம்
காமராஜ் சாலைகளாகவும்
மாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன?
கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?

சுதந்திர வேள்வியில்
தன் சுகம்  
தன் குடும்ப சுகம்
எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
 நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?

இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து
 அவரவர்கள் ஜாதிகள் மட்டும்   செய்யும்
அவல நிலையைத்   தவிர்போமா?

இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?

Thursday, July 16, 2015

கவிதை என்பது உணர்வு கடத்தி....

" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது
கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில்
கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""
என்கிறான் கொஞ்சம் எரிச்சலுடன்

"அப்படியும் இருக்கலாம்

ஏனெனில்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை

கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை

இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை

தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பரச்  சாதனமும் இல்லை

தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே
கவிதையாய் இருக்க முடியும்

ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல்
லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும்
அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது
 நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?

Tuesday, July 14, 2015

விதைத்த ஒன்றே .. நூறாய்...ஆயிரமாய்

முன்பு
எதிர் வீட்டுக்காரரை
எப்போது நினைத்தாலும்
எரிச்சல் எரிச்சலாய் வரும்

என்றும் எப்போதும்
பாராட்டித் தொலைப்பதற்கென்றே
அவரைச் சுற்றி
ஒரு பெருங் கூட்டம் காத்துக் கிடக்கும்

கடந்து செல்வோரைக்
கவரும்படியாகவும்
கைகளுக்கு எட்டும் படியாகவும்
உடலை  மிகச் சாய்த்து வைத்திருந்தும்
எவரும் என்னைத்
தட்டி கொடுத்துச் செல்வதே இல்லை

எரிச்சல் எல்லை கடந்து போக
தடுக்கும் தன்மானத்தையும் புறந்தள்ளி
காரணம்  எதுவாய் இருக்குமென்று
அவரையே கேட்டும் தொலைத்தேன்

"நீ யாரையாவது என்றாவது
பாராட்டியிருக்கிறாயா " என்றார்

"நினவு தெரிந்து இல்லை " என்றேன்

"பாராட்டிப் பார் புரியும் " என்றார்

எரிசலுடன்
சில நாள் உடனிருப்போரைப்
பாராட்டித் தொலைத்தேன்

விளையாட்டாக
சில நாள் எதிர் வருவோரை
 பாராட்டி வைத்தேன்

பாராட்டைத் தொடரத் தொடர
என்னுள் ஏதோ ஒரு மாற்றம்

அதுவரை
எதிர்படுவோரின்
குற்றம் குறைகளை  மட்டுமே
காணப்பழகிய  கண்கள்
மெல்ல மெல்ல
அவர்களிடம்
நிறைவுகளை  மட்டுமே
காணத் துவங்க


பாராட்டுப் பெறுவோரின்
மகிழ்வும்
மனந்திறந்த
 நன்றி அறிவிப்பும்
என்னுள் என்னவோ செய்து போக

இப்போதெல்லாம்
நான் எவ்வித பாராட்டுக்கும்
ஏங்கி நிற்பதே இல்லை

பெறுதலை விட
கொடுப்பதில் உள்ள சுகம்
புரியப் புரிய

பாராட்டத் தக்கவர்களையெல்லாம்
மனந்திறந்து
பாராட்டிக்கொண்டே செல்கிறேன்

இப்போது

எனக்குப் பின்னும்
என்னைப் பாராட்டுவதற்கென்றெ
ஒரு பெருங்கூட்டம்
வரிசை போட்டுக் காத்திருக்கிறது

Monday, July 13, 2015

ஆண்டவன் குறித்த அரிச்சுவடி

அடுத்து அடுத்து இருக்கிற
வீடுகள்தான் ஆயினும்

சுப்ரமணி வீடு
வரும் கண்ணன்
காதர் வீட்டையோ

காதர் வீடு வரும் அல்லா
சுப்ரமணி வீட்டையோ
எட்டிப்பார்பதே இல்லை

இதில்
எட்வெர்ட் வீடு வரும்
ஏசுவும் விதிவிலக்கானவர் இல்லை

ஏனெனில்
அவரும் எதிர் வீட்டுக் காதரையோ
பக்கத்து வீட்டு சுப்ரமணியையோ
கண்டு கொள்வதே இல்லை

காரணம்
ஆண்டவர்கள் எல்லாம்
ஒரு சார்புடையவர்கள் என்பது
நிச்சயமாக இல்லை

வீரிய மருந்துதான்
எனினும் அது
உயிரற்ற உடலில்
தன் வீரியம் காட்ட இயலாது
கொண்ட நோய் தீர்க்க உதவாது

சக்தி மிக்கவர்தான்
ஆண்டவன் ஆயினும்
தன்மீது நம்பிக்கை
கொண்டவர்களையல்லாது
மற்றவருக்கு அருள் வழங்க இயலாது

இது
"எல்லா  "ஆண்டவர்களுக்கும்
தெள்ளத் தெளிவாய்த் தெரியும்

நாம்தான் குழம்பிப்
பிரிந்துத் திரிகிறோம்

பலகூராய்ப் பிரிந்து...
அவர்களையும் நம் நோக்கில்
அற்பத்தனமாய்ப் பிரித்து...

Sunday, July 12, 2015

அழகுக்கு அலகு

பூமிக்கு நீர்நதி அழகு
பூஜைக்கு பூக்களே  அழகு
சாமிக்கு இருண்மையே  அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு படைபலம்  அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்கு நளினமே  அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

Tuesday, July 7, 2015

காரணப் பெயருக்கும் ஒரு நல்ல காரணம்....

ஆடிக்காற்று ஊழிக்காற்றாய்
சுழண்டறடித்துப் பயமுறுத்துகிறது

மரங்களின் பேயாட்டமும்
வீதியின் புழுதியோட்டமும்
ஆங்காங்கே ஏதேதோ
விழுந்துடைந்து வீழும் சப்தமும்
அச்சம் கூட்டிப் போகிறது

காற்றெனில்
ஒரு குளுமை
கண்ணை மூடி மெய்மறக்கும்படியான
ஒரு சுகத் தடவல்
வீணையாய் மீட்டி மெல்லிய உணர்வுகளை
கிளறச் செய்து போகும்
ஒரு மெல்லிய சுகந்தம்
இருக்க வேண்டாமோ அதனிடம் ?

புயலுக்கு வாரீசுபோல்
அழிவை மட்டும்
அள்ளித்தந்து போகும்
ஆர்ப்பாட்டம்  மட்டும் செய்து
ஒரு துளிவேர்வைத் துடைத்தெடுக்காது போகும்
இந்தப் பயனற்றக் காற்றுக்கு
எதற்கு ஆடிப் பூச்சு ?

தாங்கித் தாங்கி வளர்த்தவன்
வளர்ந்தபின் எதற்கும்
பயனற்றுப் போக அவனை
"தண்டச் சோறு"என்பதைப் போல்

சித்திரை வெயிலை
கோடை வெயில் என்பதைப் போல்

ஐப்பசி மழையை
அடைமழை என்பதைப்போல்

இந்த ஆடிக் காற்றை
தண்டக்காற்று  என்றால் என்ன ?

காரணப் பெயருக்கும்
மிகச் சரியான காரணம் இருந்தால்
இன்னும் சிறப்புதான் இல்லையா ?

Friday, July 3, 2015

ஜென் சித்தப்பு

"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Thursday, July 2, 2015

மறை பொருள்

புரிகிறபடி
மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவைகள் எல்லாம்
அசிரத்தையால்
கவனமின்மையால்
மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளப்படாதுப்  போக

புதிராக
 துளியும் புரியாதபடி
சொல்லப்படுபவைகள்
கூடுதல் கவனத்தால்
கூடுதல் சுவாரஸ்யத்தால்
சொன்னதைவிட
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுவதைப்போல்

பட்டப் பகலில்
வெட்ட வெளியில்
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
அவ்வாறு தெரிவதாலேயே
சுவாரஸ்யமற்றுப் போக
நம் கவனம் கவராது போக

நடுஇரவில்
கரிய இருளில்
மின்னித் தொலைக்கும்
ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால்
நம் கற்பனையை
அதிகம் தூண்டிப் போவதைப்போல்

அண்டசராசரங்களும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் அறிவுக்கும்
நம் புரிதலுக்கும்
 கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது
ஜாலம் காட்டுவது  கூட

அவரவர்கள் தகுதிக்கேற்பவும்
முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்

அதுவே
முழுமையானதாகவும்
மிகச் சரியான
புரிதலாயுமி ருக்கும் எனும்
உயரிய நோக்கத்தில்  தானோ  ?

மாறா விதிகள் அறியும் ஞானம்...

நாளும் பொழுதும் காமக்  கடலில்
மூழ்கிக் கிடந்த போதும்-உலகில்
வாழும் நாளில் மன்ன னாக
பவனி வந்த போதும்

போதும் போதும் என்று சொல்ல
மனது ஒப்ப வில்லையே-காலன்
"வாரும் " என்று அழைக்கச் செல்ல
மனது ஒப்ப வில்லையே

சோறு தண்ணி ஏதும் இன்றி
தவித்துக் கிடந்த போதும்-காக்க
நாதி ஏதும் இன்றி நாளும்
நாறிக் கிடந்த போதும்

கேடு கெட்ட வாழ்வை வெறுக்க
மனது ஒப்ப வில்லையே-பாழும்
கூடு விட்டு உயிரை இழக்க
துளியும் ஒப்ப வில்லையே

கோடி நூல்கள் படித்து முடித்து
அறிஞன் ஆன போதும்-உலகே
கூடி நாளும் தொழுதுப் போற்றும்
ஞானி ஆன போதும்

இன்னும் வாழ எண்ணும் மனதில்
மாற்றம் ஏதும் இல்லையே-இந்த
மண்ணை விட்டு விண்ணில் ஏகும்
திண்ணம் தோன்ற வில்லையே

என்ன மாயம் இருக்கு இந்த
உலகில் என்று  நானும்-நாளும்
எண்ணி எண்ணி மூளை கசக்கி
விடையைத் தேடும் போதும்

குழப்பம் மட்டும் மனதில் கூடி
கும்மி அடித்துப் போகுதே-சரியாய்
விளக்கம் ஏதும் தோன்ற விடாது
"பழிப்புக் " காட்டிப் போகுதே

       வேறு

புத்தி நித்தம் புலன்கள் காட்டும்
பாதை போகும் மட்டும்-கொண்ட
சித்தம் தன்னில் ஆசை கூடி
ஆட்டம் போடும் மட்டும்

பதில்கள் இல்லா கேள்வி மட்டும்
பாலாய்ப் பொங்கி நிற்குமே-மாறா
விதிகள் அறியும் ஞானம் வந்தால்
எல்லாம் விளங்கத் துவங்குமே

Wednesday, July 1, 2015

காரணம் மறந்த காரியங்கள்...

நம் நடன மகிழ்வுக்கு
ஒத்திசைவாய் இருக்குமென
நாம் கட்டிக் கொள்ளும்
காலச் சதங்கை
அதன் போக்கில் போவோமெனில்
நம்மை கணந்தோரும் ஆடவிட்டு
நிச்சயம் மூச்சிறைக்க வைக்கும்

சுமை இறக்கி இளைப்பாற
உதவியாய் இருக்குமென
நாம் சார்ந்திருக்கும்
உறவுச் சுமைகல்
சற்று அசர ச் சாயுமெனில்
அதுவே கனத்தச் சுமையாகி
நம்மைக் கதற கதற வைக்கும்

அக்கரைப் போய்ச்சேர
ஆதரவாய் இருக்குமென
நாம் விரும்பி ஏறிய
நட்புப் படகு
துடிப்பின் விசையை இழந்தோமெனில்
நம் திசையை அது தீர்மானித்து
நம்மை அலைக்கழிக்க வைத்துவிடும்

நம்பிக்கை வளர்க்கவென்று
அவசியத் தேவையென
நாம் விரும்பித் தொடரும்
சம்பிரதாயங்கள் கூட
வெற்றுச் சடங்குகளாகிப் போயின்
அவநம்பிக்கையைப் பெருகவிட்டு
நம்மைஅது அற்பப் பிறவியாக்கிவிடும்

சொல்வதற்கு ஏதுமிருந்தும்
சொல்லத்தான் வேண்டுமென
நாளும் நச்சரிக்கும்
படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பைக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடித்தான் போகும்