மன்னர்களின் அரண்மனைகளில்
பெரும்பாலானவை சிதிலமடைந்து இடிந்து
அழிந்து போக
அவர்கள் கட்டிய கோவில்கள் இன்றும்
புதுப் பொலிவுடன் இருக்கக் காரணமே
மன்னர்கள் கோவில்களை மக்களின் சொத்தாக
அவர்களை உணரவைத்ததுதான்
அதைப் போன்றே அரசு மற்றும் ,தொண்டு
நிறுவங்கள் தங்கள் பொறுப்பில் என்னதான்
செய்து கொடுத்தபோதும், அதில் சிறிதேனும்
மக்களின் பங்களிப்பில்லை எனில் நிச்ச்யம்
அது தரிசாகத்தான் போகும்
அதனாலேயே நாங்கள் சார்ந்திருக்கிற
சேவைச் சங்கமான உலக அரிமா சங்கம் மூலம்
எந்தச் சேவையைச் செய்தாலும் உடலுழைப்பாகவே
பொருளாகவோ பணமாகவே எங்கள் பகுதியைச்
சார்ந்தவர்களிடம் சிறிய பங்கேனும் பெறாமல்
எந்தச் சேவையையும் செய்வதில்லை
அந்த வகையில் எங்கள் பகுதியில் பிரதான
சாலை வெறும் காட்டுச் செடிகளாலும்
முட்செடிகளாலும் சூழப்பட்டு கவனிப்பாரற்ற
அனாதைச் சாலைகள் போல இருந்தது
குறைந்த பட்சம் காலையில் நானூறு ஐநூறு
நபர்களுக்கு மேல் காலை மாலை நடைபயிற்சி
மேற்கொள்வார்கள்
இதனை ஒரு மனோரம்மியமான நடைப்பகுதியாக
மாற்றும் நோக்கில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து
அருகில் இருந்த சில நல்ல உள்ளங்களை அணுகி
சாலையில் பூச்ச்செடிகளை நட்டுவைத்தோம்
பணம் பெற்றதும், நட்டு வைத்ததும், சிலர்
பாராட்டி வைத்ததும், எங்கள் பகுதியிலும்
செய்யுங்கள் நாங்களும் எங்கள் பங்களிப்பைத்
தருகிறோம் என்பதெல்லாம் எங்களுக்கு
பெரும் மகிழ்ச்சியைச் தரவில்லை
மாறாக சில நாட்கள் கழித்து ஒரு நாள்காலை
நடைப்பயிற்சி மேற்கொள்ளுகையில்
அந்தச் செடிகளை தன்னுடைய செடிகளாக
மதித்து ஒரு பள்ளி மாணவி இரசித்து
நீரூற்றிக் கொண்டிருந்தாள்
நிச்சயமாக இனி இந்தச் செடிகள் குறித்து
நாங்கள் கவலை கொள்ளவேண்டியதில்லை
அது அரண்மனை போலல்லாது நிச்சயம்
கோவில்கள் போல என்றும் பொலிவுடன்
திகழும் என்ப்தைச் சொல்லவும் வேண்டுமோ ?