Wednesday, June 20, 2018

காலா ( 2 )

(http://yaathoramani.blogspot.com/2018/06/blog-post_13.html க்குத் தொடர்ச்சியாக )
 )

காலா வெளியாகி முதல் வார ஞாயிறு
என்பதால் கொஞ்சம் முன்னதாகவே போகலாம்
என நினைத்து அரை மணி நேரம் முன்னதாகவே
தியேட்டருக்குப் போனோம்

நான்கு தியேட்டர் உள்ள வளாகம் என்றாலும்
கூட்டம் அவ்வளவாக இல்லை. மிகக் குறிப்பாய்
நம்மவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள்.
அதில் மிக லேசாகப் புன்னகைத்தவரை நெருங்கி
எப்போது அனுமதிப்பார்கள் எனக் கேட்டுச்
சினேகம் ஏற்படுத்திக் கொண்டேன்

"நீங்கள் ரஜினியின் தீவீர இரசிகரா " என்றார்
அவர்

"இல்லை அப்படியெல்லாம் இல்லை
ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் " என்றேன்

"இல்லை பொதுவாக இங்கு முதல் வாரத்தில்
அபிமான நடிகரின் தீவிர ரசிகர்கள் தவிர யாரும்
படம் பார்க்க வரமாட்டார்கள். காரணம்
முதல் வாரத்தில் டிக்கெட் விலை 20 டாலர்
மறுவாரம் என்றால் 7 டாலர் தான். அதுதான்
கேட்டேன் " என்றார்

"என்ன் இருபது டாலரா அப்படியானால்
வந்திருக்கமாட்டேனே.என் பெண் ஆன்லயனில்
டிக்கெட் எடுத்துக் கொடுத்துப் போய்ப் பார்த்து
வாருங்கள் என்றாள்.டிக்கெட் விவரமெல்லாம்
சொல்லவில்லை " என்றேன்

"சரிதான் சொன்னால் நிச்சயம் நீங்கள் வேண்டாம்
எனச் சொல்லிவிடுவீர்கள் எனச் சொல்லாமல்
இருந்திருக்கலாம். ஆன் லயன் டிக்கெட் என்றால்
நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். நேரடியாக
இந்த வழியாக உள்ளே செல்லலாம் " என
ஒரு வழியைக் காட்டினார்.

நான்கு தியேட்டர் உள்ள அந்த தியேட்டர்
வளாகத்தில் டிக்கெட்டைக் காண்பித்து
உள்ளே சென்று அமர்ந்தோம்,எமக்கு முன்பாக
ஒரே ஒரு குடும்பம் மட்டும் அமர்ந்திருந்தது

நாங்கள் எங்களுக்கு விருப்பமான இடத்தை
தேர்வு செய்து அமர்ந்தோம்
அப்போதுதான் புறப்படும் முன்பு என் பெண்
எப்போதும் சொல்லும் "அப்பா அமெரிக்கா வந்தால்
எப்பவும் நீ ஒரு பழக்கத்தை விடணும்.ஒன்னு
இந்தியாவுடன் எதெற்கெடுத்தாலும்
கம்பேர் பண்ணிப் பார்ப்பது மற்றொன்று
எந்தச் செலவையும்
ரூபாய்க்கு கன்வெர்ட் பண்ணிப் பார்ப்பது "
எனச் சொன்னது ஞாபகம் வந்தது

என்னால் கம்பேர் பண்ணிப் பார்க்காமல் எப்படி
இருக்கச் சாத்தியம்.எண்பது பைசா டிக்கெட்டே
அதிகம் என்று எழுபது பைசாவுக்கு முயன்ற நான்
ஒரு டிக்கெட் ஏறக்குறைய 1300/ ரூபாய் என்றால்..?

அனேகமாக என் வாழ் நாளில் அதிகப்
பணம் கொடுத்துப் பார்க்கிற படம் இதுதான்
நிச்சயம் கடைசியாக இருக்கும்
இனி எப்போது இங்கு சினிமா டிக்கெட் எடுத்து
போனாலும் விலை விசாரித்துதான் போக வேண்டும்
என முடிவெடுத்துக் கொண்டிருக்கையில்
தவிர்க்க இயலாமல் நான் முதன் முதலாகப் பார்த்த
சினிமாவின் ஞாபகம் நெஞ்சில் நிழலாடியது

மெல்லச் சிரித்துக் கொண்டேன்.விவரித்தால்
உங்களாலும் சிரிக்காமல் இருக்க முடியாது

( தொடரும் )

Wednesday, June 13, 2018

காலா







ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் )
வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என
நான் எண்ணும் ஒரு திரைப்படம்  வெளியாகும் .
ஒருமுறை கபாலி ,ஒருமுறை
பாகுபலி 2 ,இப்போது  காலா

நான் சிறுவயதில் மதுரையை ஒட்டிய ஒரு
சிறிய கிராமத்தில்வளர்ந்தவன் .
அங்கு சினிமா என்றால்
எங்கள் ஊரில் டெண்ட்   கொட்டகையில்
வெளியாகும் சினிமாதான்

அதுவும் காலாண்டு   அரை அரையாண்டு
முழு ஆண்டுதேர்வு விடுமுறைக்கு
தலா ஒருபடம் வீதம் வருடத்திற்குமூன்று படம்
மற்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு
வெளியாகும் ஒரு சிறப்புத் திரைப்படம்.
அதுதான் வாய்க்கும்
(இந்தச் சிறப்புத் திரைப்படம் கூடுமானவரையில்
ஒரு புரட்சித்தலைவரின் படமாகத்தான் இருக்கும் )

இந்தப் படம் பார்க்கக் கூட அதிக மெனக்கெட
வேண்டியிருக்கும்விடுமுறை முடிந்து
பள்ளிக்கூடம் போனதும் லீவில்
என்ன படம் பார்த்தாய் என்பதுதான் உடன் படிக்கும்
மாணவர்களின் முதல் கேள்வியாயிருக்கும் .
பார்க்கவில்லை என்றால்அதுவே ஒரு தகுதிக்
 குறைவு போல் மதிக்கப்படும்

அதற்காகவே வீட்டில்   அழாத குறையாக அடம் பிடித்து
ஒரு திரைப்படம்  எப்படியும் பார்த்து விடுவோம்
வீட்டிலும் இதை சாக்காக வைத்து பல்ப் துடைப்பது
மாடி கூட்டுவது ,கொல்லைப்புற அறையைச் சுத்தம்
செய்ய வைப்பது முதலான பல வேலைகளை
வாங்கி விடுவார்கள்   என்பது வேறு விஷயம்

அப்படிப் பார்த்துப் போய்ப் கதை சொன்னால் கூட
நம்பாமல் கதை யாரிடமோ கதையை கேட்டு
கதை விடுகிறாய் என சொன்னதற்காக சினிமா
டிக்கெட்டைக் கூட பத்திரமாய் கொண்டு போய்
காண்பித்த நிகழ்வெல்லாம் இப்போதும் நினைவில்
இருக்கிறது

இப்படி சினிமா பார்த்துப் போய் பெருமையைப்
பீத்தலாம் எனப் போனால் வசதியான வீட்டுப்
பசங்க இரண்டொருவர் டவுனில் படம் பார்த்து விட்டு
அந்தப் பெருமையைப் பீத்த நாங்கள்
ஒன்று மத்தவர்களாய்கவனிக்கப்படாமல் அவர்கள்
பீத்தலுக்கு அடிமையாகிஅவர்கள் சொல்கிற
கதையைக் கேட்க வாய்ப்பிளந்துக்கிடப்போம்

அதிலும் சுப்பையான்னு ஒரு பையன் .ஒரு சினிமா
கதையைப் பகுதி பகுதியாய்  நான்கு ஐந்து நாள்
சுவாரஸ்யம் குறையாமல் சொல்வான்
முத்து  மண்டபம்  என்று ஒரு சஸ்பென்ஸ் படம்
அதில் கொலைகாரன் யாரென்று சொல்லாமல்
எங்களை ஐந்து நாள் திண்டாடவிட்டு பின் ஒரு நாள்
இரக்கப்பட்டு முடிவைச் சொன்னான் .அதுவும்
அவன் புத்தகத்திற்கு அட்டைப்போட்டுக் கொடுத்த பின்பு

இப்படி வளர்ந்த சூழ் நிலையில் பின் உயர் நிலைப்
பள்ளி வந்ததும்   டவுனில் சினிமா பார்ப்பதற்காக
காசு சேர்த்த கதை ,காலைப்  பத்து மணி
காட்சிக்குப் போய்தொடர்ந்து இரண்டு காட்சிக்கு
 டிக்கெட் கிடைக்காது போயும் மனம் தளராது
நள்ளிரவுக்கு காட்சிப் பார்த்து
ஊருக்கு நடந்தே திரும்பிய கதை ,பெண்கள் மற்றும்
சிறுவர்களுக்கென இருந்த 70 பைசா டிக்கெட்
எடுப்பதற்காக  (பெரியவர்களுக்கு 80 பைசா )  முட்டி
மடித்து குள்ளமாய் நடந்த கதை ,என எம் வாழ்வோடு
பின்னிப்பிணைந்த சினிமா தொடர்பான
நினைவுகள் எல்லாம் இந்தக் காலா படம் பார்க்க
அந்தத் திரைப்படத் தியேட்டர் வாயிலில் காரை விட்டு
இறங்கியதும்  தொடர்ச்சியாய் வந்து போனது
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை

                                                                  ( தொடரும்   )

   

Monday, June 4, 2018

மூல மந்திரம்

உயிரின் அருமை
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்

உடல் மீது
கவனம்  கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்

உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய் 
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்

நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக்  காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்

'எதிரிலிருக்கும்  கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல்  அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு

 "உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே  " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன 
திரு மூலரின்  வாக்கினைப்
புரிந்த நமக்கு

"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர்  காக்கும்
மூல மந்திரம்  "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?

Friday, June 1, 2018

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்