Monday, December 31, 2012

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Friday, December 28, 2012

காலமும் கவிஞனும்

கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?
கவிஞன் தினமும் பார்க்கிறான்

ஒரு கையில் தூரிகையையும்
மறுகையில் கூர்வாளையும்
ஏந்தித் திரிபவனை
நீங்கள் சந்திப்பதுண்டா ?
கவிஞன் தினமும் சந்திக்கிறான்

ரசித்து ரசித்து
ஒரு படைப்பை உருவாக்கி மெருகேற்றி
பின் அதை சிதைத்து அழித்து ரசிப்பவனை
நீங்கள் உணர்ந்ததுண்டா ?
கவிஞன் தினமும் உணர்கிறான்

பருவ உருவ மாறுதல்மட்டுமின்றி
அத்தனை மாறுதலுக்கும் காரணமாயிருந்தும்
பிடிபடாது திரிபவனை
நீங்கள் புரிய முயன்றதுண்டா ?
கவிஞன் புரிந்து கொண்டிருக்கிறான்

காலனுக்கு ஏதுவாக
காரிய மாற்றிக் கொண்டிருந்தும்
பழியேற்கா பாதகனை
நீங்கள் அறிய முயன்றதுண்டா ?
கவிஞன் தெளிவாய் அறிந்திருக்கிறான்

அதனால்தானே
எதனையும் எளிதாய் மென்று விழுங்கி
ஏப்பமிட்டு ரசிக்கும் அவன்
"காலமான"தாக்கிச் சிரிக்கும் அவன்
கவிஞனிடம் மட்டும் காலிடறி விழுகிறான்

அதனால்தானே
காலத்திற்கே காலனாகும் கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப்  போகிறான்
காவியமாகியும் போகிறான்

Tuesday, December 25, 2012

தொடர் பயணம்

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ  இல்லை

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்பவர்கள்
என்றுமே  
தேங்கி நிற்பதோ
சோர்ந்து சாய்வதோ இல்லை

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு 
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை 

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
 என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.

Monday, December 24, 2012

"காலத்தை வென்றவன் காவியமானவன் "

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்


Saturday, December 22, 2012

உபதேசம்


அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்


Monday, December 17, 2012

உலகம் அழிவது நல்லதுதானோ ?


எதிர்படுபவர்கள் எல்லோருடைய பேச்சிலும்
உலக அழிவு குறித்த பேச்சு இருந்தது

அவர்கள் உரையாடலில்
பார்த்து முடித்த திரைப்படம் போல
படித்து முடித்த புத்தகம் போல
இதுவரை வாழ்ந்த வாழ்வு குறித்த
அங்கலாய்ப்பே  அதிகம் இருந்தது
அதில் சந்தோதோஷமானது அதிகம் இல்லை

இருபத்தொன்றுக்குள் செய்து முடிக்கவேண்டிய
நீண்ட பட்டியல் இருந்தது
அதில் உடலால் அனுபவிக்க வேண்டியதே
அதிகம் இருந்தது
சுய நலமே கூடுதலாக இருந்தது
பொது நலமென்பது அறவே இல்லை

அவர்களது உடல் மொழியில்
பரபரப்பு இருந்த அளவு
எதிர்பார்ப்பு தெரிந்த அளவு
மயன் காலண்டரின் மீது கொண்ட
நம்பிக்கை தெரிந்த அளவு
பயமோ வருத்தமோ துளியும் இல்லை

காரணமறிய முயன்ற போது
எல்லோரும்  மிகத் தெளிவாக இருந்தார்கள்
"நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும
நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்
எல்லோரும் அழிந்து போகையில்
கவலைப் பட என்ன இருக்கிறது
ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் " என்றார்கள்

மனதையும் உலகையும்
இனியும் பயன்படுத்த இயலாதபடி
அதிகம் முறைகேடாய்ப் பயன்படுத்தி
கழிவாக்கிவிட்டாமோ என பயமாய் இருக்கிறது
மயன் காலண்டர்படி  உலகம் அழிந்தால் கூட
நல்லதுதானோ எனப் படுகிறது எனக்கு

Friday, December 14, 2012

புலம்பி அலையும் பொது நலம்


உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்


Wednesday, December 12, 2012

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்


நமக்கு உயிரளித்து
உலகில் உலவவிட்டவர்களை விட
நமக்கு கல்வி கொடுத்து
செம்மைப் படுத்தியவர்களை விட
நாம் சறுக்கியபோது
விழாது காத்தவர்களை விட
நாம் சோர்ந்தபோது
நமக்கு ஊக்கமளித்தவர்களை விட

நம் பொழுதை நாமே அறியாது
நம்மிடமே களவாடியவர்கள்
நம் சிறுவாட்டுப் பணத்தை
சிதறாது பறித்தவர்கள்

சுயமாக ஏதுமின்றி
ஆட்டுபவனுக்கு ஏற்றார்ப்போல
ஆடம் மட்டுமே தெரிந்தவர்கள்

குரலெத்துப் பாடாது
சிறந்த பாடகனுக்கு
வாயசைப்பு  கொடுப்பவர்கள்

முதலீடு ஏதுமின்றி
அடுத்தவன் முதலீட்டில்
ஆட்டம் காட்டுபவர்கள்

வாலிபம் இருக்கிறவரையில்
காதல் காட்சிகளில்
புகுந்து விளையாடி

நடுவயதில் தவறாது
சமூக அக்கறையை
வசனத்தில் மட்டுமே காட்டுபவர்கள்

சேர்த்த பணத்தைப் பாதுகாக்க
அவ்வப்போது வாய்ஸ் கொடுத்து
தன்னை பலப்படுத்திக் கொள்பவர்கள்

பாலுக்கும் பூனைக்கும்
பாதுகாவலாய் இருப்பதுபோல்
இரு துருவங்களுக்கும்
இதமாய் இருப்பவர்கள்

எப்படி இப்படிக்
கொண்டாடப்படுகிறார்கள்
எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை

என்ன செய்வது
கூடலழகர் பெருமாள் கோயில் கூட
ஒயின்ஸ் ஷாப்புக்குப் பின்னால் என
அடையாளம் காட்டப் படுவது போல

மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது

ஒரு வகையில் இந்தப்
பதிவின் தலைப்பைப் போலவும்

Monday, December 10, 2012

கவிதை என்பது உணர்வு கடத்தி


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


Sunday, December 9, 2012

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

Saturday, December 8, 2012

நிஜமும் நிழலும்


வனவாசம் முடிந்து திரும்பும் ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும் பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய் இருளோடு இருளாக
இறுகிப் போய்க் கிடந்தாள்
இளமையை யும் அழகையும் உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட ஊர்மிளை

அடக்குமுறைக்குப் பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்த பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"எனப் பணிகிறாள்

மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது


Tuesday, December 4, 2012

நிஜமாகும் கட்டுக்கதை

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Monday, December 3, 2012

சில சந்தேகங்கள்


 சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?


Wednesday, November 28, 2012

சாணக்கியத் தனத்தை தொடருங்கள்


அரசியல் வித்தகரே
தமிழகத்துச் சாணக்கியரே
எந்தச் சோதனையையும் சொந்தச் சாதனையாக்கி
மக்களை முட்டாளாக்குவதை
கைவந்தக் கலையாகக் கொண்ட
தமிழகத்தின் மூத்தத் தலவரே

இப்போதும் எங்களை மண்ணைக் கவ்வ விட்டு
நீங்கள்  வெற்றி வாகை சூடியதை எண்ணி எண்ணி
எத்தனை மகிழ்வு கொள்கிறோம் தெரியுமா ?

அன்னிய முதலீடு ஆபத்தானதுதான்
பல லட்சம் பேர் வாழ்வாதாரம்
பாதிக்கப்படக் கூடும்தான்
அதற்காக மந்திரியாயிருக்கிற மகனை
விட்டுக் கொடுக்கமுடியுமா ?
சட்டத்தின் கோரக்கைகள் தேடுகிற
பேரனைக் காக்க வேண்டாமா?
இன்னும் மகள் பிரச்சனை
நில ஆக்கிரமிப்புப் பிரச்சனை என
பூதாகாரமாய் ஆயிரம் பிரச்சனை இருக்க
மக்கள் பாதிப்புக்காக
இருக்கிற பதவியையும் விட்டு விட
நீங்கள் என்ன உள்ளூர் அரசியல்வாதியா ?

கடலில் தூக்கிப்போட்டாலும்
எங்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்
என எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
எப்படி அடித்தாலும் தாங்கிக் கொள்ளும்படியான
தடித்த தோள்களைப் பெற்ற நாங்கள்
இதையும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்

மருமகன் இறந்த பின்புதான்
வாஜ்பாயீ தலைமையிலான அரசு
ஒரு மதசார்புள்ள கட்சியின் அரசு என்பதை
எத்தனைத்  தெளிவாகப் புரிந்து கொண்டு
எங்களுக்கும் புரிய வைத்தீர்கள்
அதைப் போன்றே
கடைசி ஆறு மாதத்தில்
இவர்களுக்கு எதிரான ஒன்றை
கண்டுபிடிக்காமலா போய்விடுவீர்கள் ?
நீங்கள் சொல்வதை
நாங்களும் நம்பாமலா போய்விடுவோம்

சில ஆண்டுகளாக உங்களை
குடும்பத் தலைவராக பார்த்துப் பழகிய நாங்கள்
இந்த  முடிவுக்கு குழம்பவில்லை
தங்களை அரசியல் தலைவராக
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்
தங்கள் முடிவால் குழம்பித் தவிக்கிறார்கள்
அவர்களை அப்போது
சரிபண்ணிக் கொள்வோம் தலைவரே
இப்போது தங்கள்
சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
முத்தமிழ் வித்தகரே


Tuesday, November 27, 2012

முக நக அக நக


ஒவ்வொரு முறை
அவனைச் சந்திக்கையிலும்
மகிழ்ச்சியினை புன்னைகையாய்
வெளிப்படுத்த முயல்வேன்  நான்

நான் புன்னகைத்ததை
உறுதி செய்து கொண்டபின்
மிக மிக யோசித்து
மெல்ல இதழ் விரிப்பான் அவன்

ஒவ்வொருமுறை
அவனை நெருங்குகையிலும்
ஆர்வமாய் அழுத்தமாய்
கை குலுக்க முயல்வேன் நான்

எனது ஆர்வத்தை
தவிர்க்க முடியாதவன் போல்
செய்யக் கூடாததைச் செய்பவன்போல்
சோர்வாய் கை நீட்டுவான்

ஒவ்வொருமுறை சிந்திக்கையிலும்
அவனை சந்தித்தது முதல்
அதுவரை நடந்தவைகளை
விஸ்தாரமாய்ச் சொல்லி
மனம் கவர முயல்வேன் நான்

தவிர்க்கமுடியாதவன்போல்
ஒரு சிறிய நிகழ்வை
பதிலுக்குச் சொல்லவேண்டுமே என்பது போல்
சுருக்கமாய் சொல்லி முடிப்பான் அவன்

சிலநாளாய் எனக்குள்ளும்
மிக லேசாய்  இவன் நமக்கு நண்பன்தானா
இவன் தொடர்பு தேவைதானா எனும் நினைவு
மனத்தைத் தொட்டுத் தொட்டு விலகிப் போக
குழம்பிக் கிடந்தேன் நான்

திடுமென்று எதிர்பாராது தேடிவந்த அவன்
தன்னை பாதித்த ஒரு நிகழ்வினை
மிக மிக  விஸ்தாரமாய்
தொடர்ந்து பேசி முடித்தான்

திரும்பிப் போகையில்
"ஏதோ உன்னிடம் மட்டும்
சொல்லவேண்டும் போல இருந்தது "என்று
கண் கலங்கிப் போனான்

முக நக என்பதற்கும் அக நக என்பதற்கும்
உண்மையான அர்த்தம் மெல்லப் புரிய
நன்பர்களைப் பெறுவதும் வெல்லுவதும் குறித்து
புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்டதற்கு
வெட்கித்தலை கவிழ்ந்து போனேன்


Monday, November 26, 2012

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

புதையாது ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில் எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
மதம் கொள்வதே இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததை தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்
எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்
நாங்கள் என்றும்  எப்போதும்
துளியும் மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

Friday, November 23, 2012

என்னை விட்டு விடுங்களேன் பிளீஸ்


வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை  "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை

வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
மொழியானதும் விளக்கானதும் நீங்கள்தான்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாக புரியாது தெளிவாக இருந்தவனை
கோவிலாக்கி சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

Thursday, November 22, 2012

முரண்


கூந்தலைச் சரியாக முடியாது
பொட்டுவைக்கக் கூட மறந்து
அழுக்கேரிய மஞ்சள் சரடுடன்
மிகச் சாதாரணமான நூல் சேலையணிந்து
ரேசன் கடையில் புகை படிந்த ஓவியமாய்
அந்தப் பெண்ணைப் பார்க்க
அவள் வறுமை தெரிந்தது
ஆயினும் அவள் மேல் ஒரு
மரியாதை இருந்தது

கூந்தலை நாகரீகமாகப் பின்னி
மிகப் பெரிய பொட்டுவைத்து
அன்றுதான் கட்டியது போன்ற புதிய சரடுடன்
மிக நவ நாகரீமாய் உடையணிந்து
பஜார் வீதியில் அலங்கார விளக்காய்
அவளைப் பார்க்கையில்
கவர்ச்சி இருந்தது
ஆயினும் அவள் மேல் அதீத
வெறுப்பே படர்ந்தது

இப்போதெல்லாம் ஏனோ
பட்டங்களையும் பட்டயங்களையும்
சாட்சிகளையும் விரித்து வைப்பதிலேயும்
அடுத்தவர்களை முற்றாக கவர்வதிலேயும்
அதிக கவனம் கொள்கிறவர்களைவிட
இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது


Wednesday, November 21, 2012

வஸந்த வாழ்வு எளிதாய்ப் பெற


உனக்கு பேசவும் எழுதவும்
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம் உன் வாசல் கதவைத் தட்டும்

Sunday, November 18, 2012

பரிணாமம்


அவனை அவர்கள் முதன் முதலாகப்
பார்த்தபோது.....

பிறரை விட நிஜமாக வளராது
வளர்ந்ததாகக் காட்ட
கட்டைக் கால்களை
இணைத்துக் கொண்டிருந்தான்

எல்லோரும் கலைக்கூத்தாடி என
இகழ்ச்சியாய்ப் பார்த்தார்கள்

பின்னர் சில நாட்களில்
பிறர் பார்வையைக் கவர்வதற்காக
வண்ண வண்ண ஆடைகள்
அணிந்து திரிந்தான்

எல்லோரும் கோமாளியோ என
குழம்பியபடி ஒதுங்கினார்கள்

அடுத்து வந்த நாட்களில்
பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக
சப்தமெழுப்பியபடியே
சுற்றிச் சுற்றி வந்தேன்

ஒருவேளை பைத்தியமோ என
பயந்தபடி விலகினார்கள்

முடிவாக

கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம் எனப்
புரியத் துவங்கியதால்
கும்பலைவிட்டு
கவனமாக ஒதுங்கத் துவங்கினான்

எட்ட நின்று அவனைக்
கவனித்தவர்கள் இப்போது
அவனருகில் வரத் துவங்கினார்கள்

நெருங்கியவர்களை
ஒரு பொருட்டாகவே  கருதாது
சூழல் மறந்து சுயம் இழந்து
அவனுள் கரையத் துவங்கினான்

கவனிக்கத் துவங்கியவர்கள்
இப்போது அவன் காலடியில் அமரத் துவங்கினர்

பூரண விழிப்பைக் கண்டவன்
இமைகளைத் திறக்க
எதிர் நின்ற கூட்டம் கண்டு
அதிர்ந்துதான் போனான்

காலடியில் அமர்ந்தவர்கள்
எதையெதையோக் கொடுத்து அவனிடம்
எதையேனும் பெறுவதற்காக
கண்விழித்தபடி தவித்துக் கொண்டிருந்தார்கள்

முதன் முதலாக
அவனது இருப்பிடம் அது இல்லை என்றும்
தவிப்பவர்களுக்காக கொடுப்பதற்கு
தான் இன்னும் அதிகம்
பெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்

ஒரு நாள் அதிகாலையில்
சுபவேளையில்
மக்கள் கூட்டம் அவனைத்
தரிசிக்கக் கூடுகையில்;;

அவன் அங்கு இல்லாது இருந்தான்

Saturday, November 17, 2012

மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "


ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
இலக்கற்றுத் திரியும் விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "


Wednesday, November 14, 2012

ஆதலினால்...... காமம் கொள்வோம் உலகத்தீரே

காதல்
காற்று வெளியிடை
அவள் சௌந்தர்ய ரூபங்களை
உன்னதங்களுடன் ஒப்பிட்டு மகிழுகையில்..

காமம்
தனிமையில் இருளில்
அவள் அங்கங்களின் திரட்சியில்
ஆழ்ந்துக் கிறங்கி உன்மத்தம் கொள்கிறது

காதல்
கொடுப்பதிலும் பகிர்வதிலும்
அவசியமானால் இழப்பதிலும்
தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கையில்

காமம்
ஆக்கிரமிப்பதிலும் எடுப்பதிலும்
அவசியமானால் அழிப்பதிலும்
எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது

காதல்
ஆற்று நீராய் பரவி
ஆழமாய் ஊடுருவி
அன்பு வேரை உயிர்ப்பிக்க முயலுகையில்

காமம்
கொடும் நெருப்பாய்ப் பற்றி
உடலெரித்து உணர்வெரித்து
வாழ்வெரிக்க முழுமூச்சாய் முயல்கிறது

காதலில் காமம்
உப்பாய் சுவைசேர்த்து
சுவை சேர்த்து சுகம் சேர்த்துப் போக

காமமோ காதலில்
விஷமாய் ஊடுருவி
புயலாய் சிதைத்தும் சீரழித்துமே போகிறது

காமத்தில் காதல்
விஷக் குட த்தில் துளிப் பாலாக

காதலில் காமமோ
பாற்குடத்தில்  தேனாகிப் போகிறது

ஆகையினால்
 உலகத்தீரே
காமத்தை அடியோடு வேரறுப்போம் வாரீர்
காதலின் மேல்
மாறாத காமமது கொண்டிடுவோம் வாரீர்

Tuesday, November 13, 2012

குழந்தையோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்


Sunday, November 11, 2012

ரஜினி போலத் தானும் ஆக

 ஒருவன்
தலையைச் சீவி தலையைச் சீவி
திரும்பக் கலைக்கிறான்-கேட்டா
ரஜினி  போலத் தானும் ஆக
ரிகர்சல் என்கிறான்

ஒருவன்
முழுங்கி முழுங்கிப் பேசிப் பேசி
நம்மைக் குழப்புறான்-கேட்டா
கமலைப் போல தானும் அறிவு
ஜீவி என்கிறான்

 ஒருவன்
கார ணங்கள்  இன்றி தினமும்
ஏனோ நடக்கிறான்-கேட்டா
அஜீத் பாணி இதுதான் என்று
சைசாய்  சிரிக்கிறான்

 ஒருவன்
கோபம் வந்தால் நண்பனையும் 
போட்டுத்  தாக்கறான்- கேட்டா
கேப்டன்  எந்தன் தலைவன்  என்று
கண்கள் சிவக்கிறான்

இங்கு
 காணு கின்ற   இளைஞர் எல்லாம்
நடிகர் போலவே -தினமும்
வீணேத்    தன்னை  எண்ணிக் கொண்டு
மகிழ்ந்து திரிகிறான்

ஒருவன் 
சொல்லச்  சொல்லத்  திரும்பச் சொல்லும்
கிளிகள் தன்னையே -கூ ண்டின்
உள்ளே  வைத்து காட்சிப் பொருளாய்
 ரசிக்கத் தெரிந்தவன் ...

ஒருவன்
இயக்க இயக்க  இயங்கிச் செல்லும்
நடிகன் அவனையே  -தன்னை  
இயக்க விட்டு மந்தை ஆடாய்
 சுயத்தை  இழக்கிறான்

உலகில்
சிறிய பொருளே  ஆனால்  கூட
அசல்  அசலுதான் -இந்தச்
சிறிய கருத்தை இளமை   நெஞ்சில்
பதியச் சொல்லுவோம்

இனியும்
நடிகன் ஒருவன்  தலைவன் ஆகும்
நிலையை   ஒழிப்போம் -அதற்கு
முடிந்த வரையில் நம்மால் ஆன
உழைப்பை விதைப்போம்  


Friday, November 9, 2012

சிறு பிரிவுகள்

அவன் வீட்டில்
அன்றுதான்
அவன் அவனை அன்னியனாய் உணர்ந்தான்

வீடு நிறையப் பொருளிருந்தும்
எது எங்கிருக்கிறது என்றும்
எது எதற்கானது என்றும்
எதற்கடுத்து எது என்றும்
அதை எப்படிப் பயன்படுத்துவதென்றும்
எதுவுமே புரியவில்லை அவனுக்கு

விழித்தது முதல்
மெத்தையில் சாயும் வரை
அறுவை சிகிச்சையின் போது
அடுத்து  அடுத்துக்  கருவிகளை
மிக நேர்த்தியாய்    எடுத்துத் தரும்
தாதியாய் இருந்தவள்
இன்றில்லை என்றபோதுதான்
கையறு நிலை என்ற சொல்லின் பொருளும்
இரு கையிழந்தவன்  படும் துயரும்
தெளிவாய்த்  தெரிந்தது அவனுக்கு

 இந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....

திருமணம் முடிந்த  சில நாட்களில் 
ஏதோ  ஒரு நாளில்
ஒரே ஒரு நாளில்
ஏதோ ஒரு பொருளை
 தேடித் தரத்  தாமதமானதற்காக 
தான்  ஆடிய ருத்ர தாண்டவம்
நினைவுக்கு வர
வெந்துதான்   போனான்
மிகவும் நொந்துதான்  போனான்

 என்ன செய்வது
 "மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்பதுபோல
சில ஆணாதிக்க  ஜென்மங்கள்
பட்டுத் திருந்தி 
சம நிலைப்பெறக் கூட
இதுபோன்ற  சிறு பிரிவுகள்
அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது        

Wednesday, November 7, 2012

விளங்குவதும் விளங்காததும்

தனித்துவமும் ஜன ரஞ்சகமும்
நேர் எதிரானவைகளாக இருப்பதைப் போன்றே
பயனும் சுவாரஸ்யமும்
எப்போதும்
எதிர் துருவங்களாகவேத்  திரிகின்றன

 பயனற்றதாயினும்
சுவாரஸ்யமாய் தரத் தெரிந்தவன்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
புகழடைந்தவனாகவும் விளங்க

சுவாரஸ்யத்தைப் புறம் தள்ளி
பயனுள்ளதை மட்டுமே தருபவனோ
ஊருக்குத்   தெரியாதவனாகவும்
உலகுக்கு "  விளங்காத "வனாகத்தான்  தெரிகிறான்

 ஆயினும் என்ன
 கால  நெருப்பு தீண்டுகையில்

விளங்கியவன் படைப்பு
எரிந்து கருகி
எதற்கும் விளங்காது  போக

 விளங்காதவன் படைப்போ
 சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை  கொண்டு
ஒளி விளக்காய்  விளங்கத்தான்   செய்கிறது

என்ன செய்வது 
 காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன்   கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண்  மயிலுக்கும்  
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
விளங்கித் தொலைக்கிறது 


Sunday, November 4, 2012

காலமும் வாழ்வும்

ஆற்றின் போங்கில்
படகு போவது அறியாது
படகும் துடுப்பும்
தனக்குக்தான் கட்டுப்பட்டதென
உணர்வுப்பூர்வமாய்
அறிவுப் பூர்வமாய்ச்
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்
படகில் பயணிக்கும் இருவர்

மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிறது
அகன்று  விரிந்த பெருவெளி 

Friday, November 2, 2012

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
இன்றே ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
சிறிதால் ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Wednesday, October 31, 2012

வரம் வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணியும்
என்னைவிட்டு  நகர்வதில்லை

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Sunday, October 28, 2012

நாம் ஏன் பதிவர்களாய்த் தொடர்கிறோம் ?

கோழையை வென்று
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது சிறந்ததாகப் படுகிறது

கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
கொஞ்சம் உயர்ந்ததாகத்தான் படுகிறது

முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது

நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது

சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
 

Friday, October 26, 2012

அந்தப்புரங்களில் கிரீடம் தவிர்த்தல்....

 எதிர்படும் பெரும்பாலோரின் தலைகளிலும்
அவரவர் தகுதிக்குத் தக்கபடி
தகரம் முதல் தங்கம் வரையிலான
நீண்டு உயர்ந்த கிரீடங்கள்

பிறர் செய்து தராது
அவரவர்களாக செய்து கொண்டதால்
அனைத்துக் கிரீடங்களும்
தலைக்குச் சிறிதும் பொருத்தமின்றி
மிகப் பெரியதாகவே ....

கண்களை மறைப்பதை தவிர்ப்பதற்காகவும்
கழுத்தில் விழுவதை தடுப்பதற்காகவும்
இரு கைகளாலும் கிரீடத்தை இறுகப் பற்றியபடி
வாழ்வின் சுமை குறைக்கும் சூத்திரம் தேடி
எல்லோரும் செக்குமாடாய்த் திரிகின்றனர்
சுமை அந்தக் கிரீடமே என அறியாமலேயே...

கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்
இடுப்பு வேட்டி அவிழ்ந்ததும் தெரியாது
அடுத்தவர்களின் அம்மணம் கண்டு
முகம் சுழித்தபடி மிகச் சலித்தபடி
வாழ்வின் சுகம் தேடி 
எப்போதும் பந்தயக் குதிரையாய்  பறக்கின்றனர்
சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே

தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை
புரிந்த சிலர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்
வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்

Thursday, October 25, 2012

பெண்ணே நீ புதிராகவே இரு

காலங்காலமாய்
இப்போதிருப்பதைப் போலவே
பெண்ணே நீ
எப்போதும்
புதிராகவே இரு
ஒப்பிட முடியாத
உன்னதமாகவே இரு

உணர்வின் வெளிப்பாடு ஒலியிலிருந்து
மொழியாகிய காலம் முதல்

எண்ணத்தின் விரிவு கனவாகி
கற்பனையாகிய நாள் முதல

உன்னை அடைதலே வெற்றியின்
அடையாளமெனக் கொண்ட கணம் முதல்

வாள்வீச்சு சாதிக்காததை சொல்வீச்சு
சாதிக்குமென்பதைக் கண்ட நொடி முதல்

முகமது நிலவென இதழது மலரென
கார்மேகம் குழலென சங்கதே கழுத்தென

இயற்கையில் துவங்கி

டெலிபோன் மணியென மெல்போர்ன் மலரென
ஃபிஃப்டி கேஜ் தாஜ்மகாலென நடமாடும் சாக்லேட் என

இன்று எதிர்படும் உன்னதங்களுடனெல்லாம்
 
சலியாது ஒப்பிட முயன்றும்
எதனுள்ளும் அடங்காது திமிறும்
உன்னதமே,எழிலே,அற்புதமே,ஆனந்தமே

எப்படி முயன்றபோதும்
ஏன்   விரும்புகிறாய்
எதற்காக வெறுக்கிறாய்
ஏன்  அரவணைக்கிராய்
எதற்காக  கழுத்தறுக்கிறாய்

 என   எவராலும்  எப்போதும்

புரிந்து கொள்ள இயலாத
ஆழ்கடல் அதிசயமே
பூவுலக ரகசியமே
சூட்சுமப் பெட்டகமே

நீ புரிந்து போனால்
வாழ்வின் சுவை குன்றிப் போகும்
உன்னை மிகச் சரியாக ஒப்பிட முடிந்தால்
எங்கள் கற்பனைகள் வறண்டு போகும்

எனவே
என்றும் போல
எப்போதும்போல
பெண்ணே நீ
புதிராகவே இரு
மனிதர்கள் எல்லாம் உன்னைப் புரிய முயன்று
வாழ்வை சுவாரஸ்யப்படுத்திக் போகிறோம்
தனித்துவமாகவே இரு
உன்னை ஒப்பிட முயன்று என்போல்
சராசரிகள் கூட கவிஞராகிக் போகிறோம்

Tuesday, October 23, 2012

மங்கையரைக் கௌரவிக்கும் திரு நாள்


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை

மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான் காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை ஆதியிலேயே
 மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும் கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்

காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும் செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்

அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும் சக்தி மிக்கவளுமான மலைமகளை
இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே  குழந்தையாய் முழுமையாக
அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக

கணவனாக அவளுக்கு இணையாக
சேர்ந்திருக்கும் நாளில் பின்னிருந்து இயக்கும்
 சக்தியாக தாரமாக

வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக

 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம்
கண்கண்ட முப்பெரும் தேவியராய்த்
திகழ்வதாலேயே மங்கையரைக் கௌரவிக்கும்
நாளாகவே இந்த நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்

அவர்களது தியாக உள்ளங்களை
இந் நாளில் சிறிதேனும்
 நாமும் கொள்ள முயல்வோம்

அவர்களோடு இணந்து இந்தச்
சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

Monday, October 22, 2012

பதினாறு வயது உளறல்கள் அல்லது ! விஞ்ஞானக் காதல்!

அவன் அவசரமாய் அல்லது
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ?
அவன் அழகாய்ப் பிதற்றினான்

"இங்கு கூட இயற்பியல்  வகுப்பில்
உன் எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள்

"இயற்பியல் வகுப்பிலா ?என எதிர்காலம் குறித்தா "
அவன் அதிசமாய்க் கேட்டான்

அவள் இப்படி செய்தி அனுப்பினாள்
"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்
இப்படி படிக்கிற நேரத்தில்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
 நாளை  நீ
நடு ரோட்டில்தானே நிற்கவேண்டும் ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

Saturday, October 20, 2012

படைப்பாளி (?)

உணவுக்கான மூலப் பொருட்களில்
சுவையையும் மணத்தையும்
இயற்கை மிக நேர்த்தியாகச்
சேர்த்து வைத்திருக்க
அதனை மிகச் சரியாகச் சேர்மானம்
செய்தலதை மட்டுமே செய்தவன்
சமையல் சக்கரவர்த்தியாகிப் போகிறான்

அடுப்படியில்
வெக்கையிலும் புழுக்கத்திலும்
வெந்தபடி நளபாகம் செய்தவன்
வெறுமனே இருக்க
அதனை பணிவாகத்
தருதலைச்  செய்வபவன் தான்
அன்பளிப்புப் பெற்றுப் போகிறான்

காட்டை மேட்டைத்
தன்  கடின உழைப்பால்
நிலமாக்கித் தோட்டமாக்கி
உலகுக்கு உயிரளிப்பவன்
வறுமையில் வெந்து சாக
இடையில் இருப்பவனே
கொள்ளை லாபம் கொள்கிறான்

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உயர்விலும்
தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவள்
துணைவியாய்  மட்டுமே
அங்கீகரிக்கப் பட்டிருக்க
பொருளீட்டிக் கொடுத்தலை மட்டுமே செய்தவன்
குடும்பத் தலைவனாகிப் போகிறான்

வார்த்தைகளுக்கான
அர்த்தங்களும் உணர்வுகளும்
மிக நேர்த்தியாய் ஏற்கெனவே
நிர்மானம் செய்யப்பட்டிருக்க
அதனைக் கோர்வையாய்
அடுக்கிக் கொடுத்தலை மட்டுமே செய்பவன்
"படைப்பாளி "யாகிப் போகிறான்

Thursday, October 18, 2012

புரியாப் புதிர்

புரிந்ததை
புரிந்து கொண்டபடி
புரியும் படியும்
சொல்லிப் போனேன்
இது சராசரிக்கும் கீழே என
முகம் சுழித்துப் போனார்கள்

புரியாததை
நான் புரிந்து கொண்டபடி
புரியும்படியே
சொல்லிப் போனேன்
இது பரவாயில்லை என்றார்கள்

புரியாததை
புரிந்து கொள்ளாமலேயே
புரியாதபடியே
சொல்லிப்போகிறேன்
அருமை என்கிறார்கள்

இதுவரை எனக்கு
இதில் எது சரியெனத் புரியவில்லை
உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா ?

Tuesday, October 16, 2012

"அது "

\உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயா ஜாலம் காட்டுகிறது
"அது "

விழியற்றோர் கைகள் எட்டும் மட்டும்
பார்வையுடையோர் தெரிகிற மட்டும்
பயணிக்க முடிந்தோர் எல்லை வரையிலும்
கற்பனையுடையோர் முடிந்த மட்டும்
அறிய முயன்ற போதும்
புரிந்து கொள்ள முயன்ற போதும்

அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது

தொடர்ந்து
உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயஜாலம் காட்டிக்
குழம்பவிட்டுச் சிரிக்கிறது
"எது "வென
எவரும்
என்றும்
 அறிந்து கொள்ளவே  முடியாத
"அது " 
  

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்

பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..

மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய் படர்கின்றன
தலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன

பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல 

நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவையே

எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது

இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்

Saturday, October 13, 2012

கரண்டும் மூடும் இணைந்திருந்தா

அது இருந்தா இது இல்லே
இது இருந்தா அது இல்லே
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தால்
இணைத்துப் பார்க்க நேரம் இல்லே

பசியில் துடிச்சா சோறு இல்லே
சோறு இருந்தா பசியே இல்லே
பசியும்  சோறும் சேர்ந்து இருந்தா
பிச்சுப் போட நேரம் இல்லே

குளிராய் இருந்தா போர்வை இல்லே
போர்வை இருந்தா குளிரே இல்லை
குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
புத்தி தூங்க விடுவ தில்லே

பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா  பணிவு இல்லே
பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
நேரம் நமக்கு நல்லா இல்லே

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே

Wednesday, October 10, 2012

( நாத்திக ஆத்திக, ) பார்வை (2),

நாத்திகன் மீண்டும்......

"எனக்கே கேட்கச் சங்கடமாகத்தான் உள்ளது
பாற்கடலாம்
பாம்புப் படுக்கையாம்
சகலத்தையும் வெல்லும் சக்ராயுதமாம்
ஒருக்களித்துப் படுத்திருக்க
அருகில் பக்கத் துணையாய்
செல்வத்திற்கு அதிபதியாம்\
இவர்தான் காக்கும்கடவுளாம்
ஒன்றுக்கொன்று
ஏதாவது சம்பந்தமிருக்கிறதா
நீயே சொல் " என்றான்

ஆத்திகன் இப்படி ஆரம்பித்தான்

"உதவிடவென்றே
எப்போதும் எழுந்தோட ஏதுவாய்
தளர்ந்த நிலையில் இருப்பவனும்

அவசியமெனில்
தீமையினை அழித்தொழிக்கத்தக்க
வல்லமை மிக்கவனாய் இருப்பவனும்

மாறாக் கருணையையும்
குறையாத செல்வத்தையும்
எப்போதும் தன்னருகே
துணயாகக் கொண்டிருப்பவனும்தானே

என்றென்றும்  உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும்

நான் திருமாலை மட்டும் சொல்லவில்லை
காப்பவனுக்குரிய
தகுதியையும்  சொல்கிறேன் "என்றான்

Monday, October 8, 2012

ஆத்திக நாத்திகப் பார்வை

நாத்திகன் இப்படி ஆரம்பித்தான்

"தொப்புள் கொடியிலிருந்து
ஒரு தாமரைக்கொடியாம்
அதிலொரு தாமரைப் பூவாம்
அதில் நான்கு முகங்களுடனும்
மனைவியுடன்
கையில் வேதப்புத்தகங்களுடன் ஒருவராம்
அவர்தான் படைப்பவராம்

கேட்கவே கேலிக் கூத்தாயில்லை "

ஆத்திகன் பதட்டமடையவில்லை

"படைப்பவன் எப்போதும்
நாற்திசைகளிலும் நடப்பதை
அறியும் திறன் படைத்தவனாகவும்
முன்னோர்களின் பொக்கிஷங்களைக் கற்று
கைப்பிடிக்குள் கொண்டவனாகவும்
எப்போதும் பக்கத் துணையாக
கற்றலையும் நுண்ணறிவையும் கொண்டவானகவும்
இருந்தால்தானே
நல்ல படைப்புகளை தர ஏதுவாகும்

கூடுதலாக
மார்க்ஸுக்கு வாய்த்த ஒரு
ஏங்கெல்ஸ்  போல
மலர் கைகளில் வைத்துத் தாங்கக் கூடிய
செல்வந்தனும் கருணை மிக்கவனும்
படைப்பாளின் திறனறிந்தவனும் இருந்தால்
கூடுதல் சிறப்புதானே "  'என்றான்

"என்ன சொல்ல வருகிறாய்
எனக்கேதும் புரியவில்லை '
எரிச்லுற்றான் நாத்திகன்   

" எந்தக் கதைக்கான காரணத்தையும்
 எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும்
புரிந்து கொள்ள முயன்றால்
இதுவும் புரியும்" என்றான் ஆத்திகன் 

 "அப்படியானால்
பிரம்மன் இருக்கிறான் என்கிறாயா
 பிரம்மன்தான் படைக்கிறான் என்கிறாயா "
ஆவேசப்பட்டான் அவன்

"இல்லையில்லை
அப்படிச் சொல்லவில்லை
படைப்பவன் பிரம்மன் போல்
திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
படைப்பவன் எல்லாம்
 நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "
அமைதியாகச் சொன்னான் இவன்


( அச்சப்பட வேண்டாம் அடுத்தது திருமால் )

Sunday, October 7, 2012

ஒரு சிறு நிகழ்வு-தொண்டர்களின் செயல்பாடு

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை
சாலையில் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டால்
ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் எப்படி
நடந்து கொள்வார்கள்-ஒரு ஜாலி கற்பனை 

அ.இ.அதி.மு.க:

பிரச்சனையே இல்லை.சட்டென பாய்ந்து எடுத்து
பையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவான்

தி.மு.க :

சட்டென அவசரப்பட்டு எடுத்துவிடமாட்டான்.
காலால் மறைத்து வைத்துக் கொண்டு
யாராவது பார்க்கிறார்களா என நோட்டம் விட்டு
பின் நைசாக எடுத்து பையில் போட்டுக் கொண்டு
கிளம்பி விடுவான்

காங்கிரஸ் :(தமிழ் நாடு மட்டும் )

பார்த்ததும் குனிந்து எடுத்து விடமாட்டான்
எடுத்துக்  கொடுக்க யாராவது வருகிறார்களா
என சாலையை நோட்டம் விட ஆரம்பித்துவிடுவான்

கம்யூனிஸ்ட்:

தானும் எடுக்கமாட்டான்
அடுத்தவரையும் எடுக்கவிடமாட்டான்

( ஒரு நிகழ்வில்கட்சித்  தொண்டரின்  பெயரை
முதலில்  சொல்லாமல்  மைமாக  நடித்து
 மட்டும் காட்டினேன்

எல்லோரும்  தொண்டர்களை
மிகச் சரியாக கணித்தார்கள்
ரசித்துப் பாராட்டவும் செய்தார்கள்

 மற்ற பிரதான கட்சித் தொண்டர்கள்  குறித்து
பதிவர்கள் ஜாலி  கற்பனையைத் தொடரலாமே)

Friday, October 5, 2012

கருப்புச் சட்டை கலைஞருக்கு....

.அரசியல் சாணக்கியரே
கருப்பில் துவங்கி
மஞ்சளுக்குப் போய்
மீண்டும் கருப்புக்கு வந்தது
அதிக மகிழ்வளிக்கிறது

மகளைப் புணர முயலும்
தந்தை குறித்த அருமையான
"கான்ஸ்டெபிள் கந்தசாமி "
காவியத்திலிருந்து
குறளோவியத்திற்கு வந்ததும்

குடிபோதையில் தங்கையைக்
கூடவரும் அண்ணன் குறித்த
"மறக்கமுடியாத "காப்பியத்திலிருந்து
தொல்காப்பியப் பூங்காவிற்கு வந்ததும்

"ராஜாஜியின் ஆண்மையற்ற பேச்சு "
"அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை "
"திராவிடத்தின் இருப்பிடம்" முதலான
காலத்தால் அழியாத
அநாகரீகமான பேச்சினை தொடராது
அரசியல் நாகரீகம் குறித்து
அதிகம் தொடர்ந்து பேசுவதும்
எங்களை மிகவும் கவருகிறது

இப்படி
இலக்கியம்.அரசியல் மேடைப்பேச்சு
அனைத்திலும் முற்றிலும் மாறி
பிராயச் சித்தம் செய்துவரும் தாங்கள்

குடும்பமாய் இருந்த கழகத்தை
குடும்பத்திற்குள் அடக்காது "விடுவிக்கும்
பிராயச் சித்தத்தை
என்று செய்யப்போகிறீர்கள் ?
குடும்பப பாசத்தை  விட
தொண்டர்களின் நேசமே  உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?

Wednesday, October 3, 2012

மர்ம இடைவெளி-2

நான் சிறுவனாய் இருந்தபோது
எந்த எக்ஸ்பிரஸ் பஸ்ஸாயினும்
எங்கள் கிராம வழி செல்லும் எல்லாம்
எங்களூரில் நின்றுதான் போகும்
நாங்கள் சௌகரியமாக இறங்கிக் கொள்வோம்

நான் இளைஞனான காலத்தில்
எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம்
புறவழிச் சாலைவழியே சென்றுவிடும்
நாங்களும் ஊருக்கு வெளியில் இறங்கி
ஊருக்கு வரப் பழகிக் கொண்டோம்

நான் நடுவயதைக் கடக்கையில்
நாற்கரச் சாலைகளூம்ம் ஐந்து கரச் சாலைகளும்
எங்கள் ஊருக்கு வெகு தொலைவில் செல்ல
இப்போது நாங்கள் அங்கே இறங்கி
அங்கிருந்து ஊர் வர
அடுத்த பஸ்ஸுக்கு காத்திருக்கிறோம்

வேகமும் நாகரீகமும் வளர வளர
அரசின் மக்களுக்கான நலத் திட்டங்கள் பெருகப்பெருக
எங்கள் கிராமத்திற்கும்
அந்தப் பிரதான சாலைக்குமான
இடைவெளி சிறிதும் குறையாது
ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது மட்டும்
எனக்கு இதுவரை விளங்கவே இல்லை

Monday, October 1, 2012

கொள்கைகளுக்கு அஞ்சலி செய்வோம்

ஆண்டுக்காண்டு
வலிமை மிக்க ஆயுதங்களை
உற்பத்தி செய்யதலும்
அதன் பயன்படுத்துவதற்கு இசைவாக
நாட்டுக்கு நாடு
வன்மம் வளர்த்தலுமே
சரியானதாக இருக்கிற உலகுக்கு
நிராயுதபாணிப் போராட்டத்தைப் போதித்த
"அவரின்" போதனை எப்படிச் சரிவரும் ?

அன்னிய முதலீடுகளும்
பன்னாட்டு நிறுவனங்களுமே
நம் கால் வயிறுக்கு
கஞ்சி ஊற்றும் என
நம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு
"அவரின்"கிராமப் பொருளாதாரமும்
சுயசார்புத் தத்துவங்களும்
எப்படிச் சரியானதாக இருக்கும் ?

நுகர்வுக் கலாச்சாரமே
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்
உணர்வைத் திருப்திப்படுத்துதலே
வாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்
சந்தேகமின்றி இருக்கும் நமக்கு
"அவரின்" அமைதித் தேடலும்,புலனடக்கமும்
எப்படிப் பொருந்தி வரும் ?

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்
 "
வாழ்க காந்தி மகான் "

Sunday, September 30, 2012

கவிஞனாக-எளிய வழி

கவிதைத் தாயின் கருணை  வேண்டி
நாளும் தொழுதிடு-அவள்
பாதம் பணிந்திடு-நெஞ்சில்

தகிக்கும் உணர்வை சொல்லில் அடக்கி
கொடுக்கத் துடித்திடு-கவியாய்
நிலைக்கத் துடித்திடு-நாளும்

தவிக்கும் உந்தன் தவிப்பைக் கண்டு
கருணை கொள்ளுவாள்-தாயாய்
பெருமை கொள்ளுவாள்-முதல்

அடியை எடுத்துக் கொடுத்து உன்னைப்
பாடச் சொல்லுவாள்-அவளே
பாடல் ஆகுவாள்-அவள்-

பார்வை பட்ட கணமே நீயும்
மாறிப் போகலாம்-ஏதோ
ஆகிப் போகலாம்-உடன்

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்-மயக்கும்

வார்த்தை ஜாலம் வடிவ நேர்த்தி
ஏதும் இன்றியே-துளியும்
தெளிவு இன்றியே-மிரட்டும்

சீர்கள் அணிகள் எதுகை மோனை
அறிவு இன்றியே-புலவர்
தொடர்பும் இன்றியே-

நினைவைக் கடந்து கனவை அணைந்து
கிறங்கிப் போகலாம்-உன்னுள்
கரைந்தும் போகலாம்-காட்டில்

விதைப்போர் இன்றி தானே வளரும்
செடியைப் போலவே-முல்லைக்
கொடியைப் போலவே-உன்னுள்

விரைந்துப் பெருகும் உணர்வு நதியில்
நீந்திக் களிக்கலாம்-உன்னை
மறந்துக் களிக்கலாம்-என்றும்

நிறைந்த ஞானம் உயர்ந்த கல்வி
ஏதும் இன்றியே-கவிதை
வானில் உலவவே -நாளும்        (கவிதைத் தாயின் )

Wednesday, September 26, 2012

துவக்கமல்ல முடிவே முக்கியமானது

துவக்கத்தைவிட முடிவு முக்கியமானது என்பது
விளையாட்டுக்கு மட்டுமல்ல
தலைமைக்கும் மிகச் சரியாகப் பொருந்தும்

அடுத்தத் தெரு தலைவராயினும் சரி
அகில உலகத் தலைவராயினும் சரி
யாரும் பிறப்பெடுக்கையிலேயேபெருந்தன்மையோடும
தலைமைப் பண்போடும் பூவுலகில் அவதரிப்பதில்லை

சராசரியாக அவர்கள் வலம் வருகையில்
அவர்களது சுய நலத்தைக் கீறிச் செல்லும்
ஒரு சிறு நிகழ்வு அல்லது அதிர்வு
அவர்களது சிந்தனைக்குள் தீமூட்டிப்போகிறது

அது
ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக
மன்னனால் கொல்லப்பட்ட தனது சகோதரனின் 
மரணமாகவோ
பயணச் சீட்டு கையிலிருந்தும் அவமதிக்கப்பட்ட
நிகழ்வாகவோ
எப்படி முயன்ற போதும்
தன் இனத்திற்கு முக்கியமளித்து
தன்னைப் புறக்கணித்த தலைமையின்
அலட்சியமாகவோ
கூட இருந்திருக்கக் கூடும்

சராசரிகள் சுய நலக் கீறலை
மருந்திட்டு ஆற்றிக் கொள்ளவோ முயல்வோ
அல்லது தனி நபர் தாக்குதலாய் எண்ணி
பழி கொள்ளத் துடிக்கையிலே
தலைவர்கள் மாறுபட்டு சிந்திக்கிறார்கள்
பிரச்சனையின் ஆணிவேரைக் தேடிப் பிடித்து
அதனை அடியோடு அழித்தொழிக்க முயல்கிறார்கள்

காலம் காலமாய் வேறூன்றிப் போன கயமைகளை
சமுகத்தின் களங்கங்களை சாபகேட்டினை அவலங்களை
அடியோடழிக்கும் அதீத முயற்சியில்
தன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை
அனைத்தையும் ஆகுதியாக்கி  
தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்

மாறாக சிலர் மட்டும்
தன் முயற்சியால் உயரப் பறந்தும் உச்சம் தொட்டும்
அழுகிய மாமிசப் பிண்டங்களைத் தேடும் வல்லூறாய்
மீண்டும்வட்டமடித்து துவக்கத்திற்கே வந்து சேர்ந்து
தான்.  தன் சுகம். தன் குடும்ப நலம் என
தன்னை தன் மனத்தைச் சுருக்கிக் கொண்டு
அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டு
சமூகத்தின் அவலச் சின்னமாகிப் போகிறார்கள்
ஒரு தலைமுறை கெடக் காரணமாகியும் போகிறார்கள்

எனவே
துவக்கத்தை விட முடிவு முக்கியமானது என்பது
விளையாட்டுக்கு மட்டுமல்ல
தலைமைக்கும் மிகப் பொருந்துமென்பது
மிகச் சரி தானே ?

Sunday, September 23, 2012

அரவாணி -அது ஒரு குறீயீடு

மணம்  முடித்த மறு நாளில்
கணவனை  இழப்பதை
அறிந்தே  இழந்த
கைம்பெண்ணை மட்டும் குறிப்பதல்ல
 அரவாணி என்பது......

அது ஒரு குறியீடு

கூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடித்து
மறு நாள் யாருமற்ற அனாதையாய்
பொட்டிழந்த முகமாய்
பொட்டல் காடாய்
அனைத்து அலங்காரங்களையும்
இழந்து  அலங்கோலமாய்க் கிடக்கும்
அந்த மாசித் திருவிழா மைதானம் போல்

உறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்
மண மலர்கள் வாசம்
விருந்து உபச்சாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடிந்து
குப்பை கூளமாய் இருளடைந்து
வெறுமையில் வெம்பிக் கிடக்கும்
தனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்
அந்த ராசியான திருமண மண்டபம் போல்

முள்வெட்டி ஒதுக்கி
பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
குலவை ஒலியுடன்  பொங்கலிட்டு
பழங்கதைகள் பலபேசி
உறவுகளோடு பகிர்ந்துதுண்டு பசியாறி
வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற
மீண்டும் இருளிலும் தனிமையிலும்
கிடக்கும் அவலம் குறித்து அழுது புலம்பும்
அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்

உயிருள்ளவைகளோ உயிரற்றவைகளோ
உச்சம் தொட்ட மறு நொடியில்
அதலபாதாளத்தில் வீழந்தவைகளை எல்லாம்
அதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்
அதிக அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்

குறீயீடாகக் காட்டிச் செல்லும்
அதிகப் பொருள் கொண்ட
அற்புதச் சொல் அது

மணம் முடித்த மறு நாளில்
கணவனை இழப்பதை
 அறிந்தே இழந்த
கைம்பெண்ணை  மட்டும் குறிப்பதல்ல
அரவாணி  என்பது

அது ஒரு அவலத்தின்  குறியீடு

Friday, September 21, 2012

படைப்பாளியின் பலவீனம் ?

யாரும் கேட்டுவிடக் கூடாது என
மெல்லிய விசும்பலுடன்
யாரும் பார்த்துவிடக் கூடாது என
விழி  ஓரத்து நீரைத் துடைக்கும்
அந்தப் பெண்மணியைக் கண்டவுடன்
அவள் யாரெனத் தெரியாத போதும்
காரணம் எதுவெனத் தெரியாத போதும்...

அதுவரை  நண்பர்களுடன்
உல்லாச  ஊஞ்சலாடிக் கொண்டிருந்த நான்
சிதைந்து போகிறேன்
சின்னாபின்னப்பட்டுப்போகிறேன்

கோபம் போல
கோடை மழை போல
மாலையின்றி
சட்டென வரும் இரவு போல
தடம் மாறி குடிசைக்குள்
கண் இமைப்பதற்குள் நுழையும்
கனரக வாகனம்போல்
சுனாமி போல்
என்னுள்ளும் ஒரு சோகம்
புயலாய் விரைந்து வீசி
என்னை  நிலை குலையச் செய்து போகிறது
என்னுள் வெறுமையை விதைத்துப் போகிறது

நான் சோர்ந்துச் சாய்கிறேன்

" என்ன ஆனது உனக்கு
இதுவரை சரியாகத்தானே இருந்தாய் "
அக்கறையுடன் கையைப்பற்றுகிறான்
ஆருயிர்  நண்பன்

 "இல்லையில்லை இப்போதுதான்
சரியாய் இருக்கிறேன்
நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தாம்
சரியில்லாத பொழுதுகள் "என்கிறேன்

குழம்பிப்போய் பார்க்கிறான அவன்

எனக்கும்  அதற்கு மேல்
எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை

அவனும்  படைப்பாளியாய் இருந்தால்
ஒருவேளை என்னைப் புரிந்து   கொண்டிருப்பானோ ?


Wednesday, September 19, 2012

ஓடுதலின் சுகமறிவோம்

மைதானத்தின் மேடையில்
சுகமாய்  அமர்ந்தபடி
ஓடிச் ஜெயித்தவனுடன் சேர்ந்து மகிழ்ந்து
ஓடித் தோற்றவனுடன் சேர்ந்து வருந்தி
தனக்கென  ஏதுமற்று
தெருக் கல்லாய் இருந்தே
நொந்துச் சாவோரே உலகில் சரிபாதி
அவர்கள் உணர்வு நமக்கெதற்கு?
அவர்கள் உறவும் நமக்கெதற்கு ?

பந்தயத்தில்  இணைந்திருந்தும்
முன் செல்பவனை எண்ணி வருந்தி
பின் தொடர்பவனை எண்ணி மகிழ்ந்து
ஓடுதலின் சுகம் மறந்து
ஓடுதலின் பயன் மறந்து
கடலலையில் வீழ்ந்த துரும்பாய்
கலங்கிச் சாவாரே உலகில்  மறுபாதி
அவர்கள் மன நிலை நமக்கெதற்கு ?
அவர்கள் இழி நிலையும் நமக்கெதற்கு ?

பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி
வெற்றிக்கான முயற்சியில்
சிறிதளவும் தொய்வின்றி
ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே   வெல்ல முயல்பவர்

மிகச் சிலரே
 ஆயினும்

அவரே வாழ்வைப் புரிந்தவர்
அவரே வழிகாட்டவும் தகுந்தவர்

அவர் வழி என்றும் தொடரப்  பழகுவோம்
என்றென்றும் எதையும் வென்று மகிழ்வோம்

Sunday, September 16, 2012

புரியாத சில புதிர்கள்

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
டஜன் கணக்கில் இருக்க
பூர்வ புண்ணிய  பாக்கிய ஸ்தானங்க்களின்
தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை

இலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கண  இலக்கியம் பூரணமாய் அமைய
 இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும்  ஏனோ
ஒரு கவிதை எழுத வரவில்லை

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரீசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க
சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலவரின் வாரீசுகள்  எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற்ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
புரியத்தான் இல்லை
 

Friday, September 14, 2012

மதத்தின் பெயரால்..மனிதனைப் பிரிப்பது...

என்னுடையது சிறந்தது
என்னுடையதும் சிறந்தது
என்பதற்கும்
என்னுடையது மட்டுமே சிறந்தது
என்பதற்கும் வேறுபாடு இல்லையா ?

கடவுள் ஒருவரே என
அவரவர்கள் சொல்லி கொள்வதற்கும்
கடவுள் ஒருவரே
அவர் இவர் மட்டுமே என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா இல்லையா  ?

இல்லையெனச் சொல்பவர்களுக்கும்
இருக்கிறது எனச் சொல்பவர்களுக்கும்
இடையினில் முரண் எனில் சரி
நம்புபவர்களுக்கிடையில்
வாதப் பிரதிவாதம் என்பது
கேலிக் கூத்தாக இல்லையா ?

மாறுதல் ஒன்றே மாறாதது
எனபதற்கு மறுப்பற்ற
இந்த விஞ்ஞான யுகத்தில்
விஞ்ஞானத்தின்  முழுப்பயனையும் ருசித்தபடி
பழமைச் சேற்றில் காலூன்றி நின்று
கத்தி தூக்குதல் தவறா இல்லையா ?

உடல் மூலம்  செயல் மூலம் மனம் அடக்கி
அடங்கிய மனம் மூலம் அறிவொளி பெருக்கி
வாழும் உலகை சொர்க்கமாகப் பிறந்ததே
எந்த மதமும் எந்த மார்க்கமும்
இதனை அறியாது புரியாது
குள்ள நரிகளின் ஊளையினை
சங்கீதமெனப் புகழ்தலும் தொடர்தலும்
முட்டாள்களின் செயல்தான்  இல்லையா ?
மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான்  இல்லையா ?

Thursday, September 13, 2012

நல்லோர் நட்பு

நெருக்கிக் கட்டப்பட்ட
மணமிக்க
ரோஜா மலர் மாலைதான் ஆயினும்
பிணத்தின் மீது
போடப்பட்ட மறு நொடி முதல்
நாற்றமெடுக்கத் தொடங்கி
முகம் சுழிக்கச் செய்து விடுகிறது

மங்கல நிகழ்வு முடிந்து
நாட்கள் பல கடந்த பின்னும்
வாடி உதிர்ந்தது போக
ஒட்டிக்கொண்டிருக்கிற
ஒன்றிரண்டு இதழ்களிலும் கூட
மலர்ந்த போது இருந்த மணம்
தொடரத்தான் செய்கிறது

Tuesday, September 11, 2012

தமிழ் பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

Monday, September 10, 2012

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

Saturday, September 8, 2012

பதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்

எம் படைப்புகள் எல்லாம்...

ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை
எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
மனம் கீறிப்போகும்
சிறுச்  சிறு அல்லல்களை
அதிக மசாலாக் கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

Friday, September 7, 2012

ஏன் ? எதற்கு ? எதனால்?....

உற்பத்தியாளனைவிட
விற்பவன்
அதிக லாபம் பெறுவது
சரியா ?

மூல ஆசிரியனைவிட
உரை ஆசிரியன்
அதிகம் அறிந்தவன்போல் நடிப்பது
எதற்கு ?

சரக்கு மாஸ்டரைவிட
பறிமாறுபவனே
பாராட்டும் டிப்ஸும் பெறுவது
முறையா?

காரியமாற்றுபவனை விட
சோம்பி நிறபவன்
அதிகம் அலுத்துக்  கொள்வது
சரியா ?

சொற்பொழிவாளரை விட
மொழிபெயர்ப்பாளர்
தன்னை உயர்த்திக் காட்ட முயல்வது
தவறில்லையா ?

சிறப்பு விருந்தினரைவிட
அறிமுகம் செய்பவனே
அதிகம் அலட்டிக் கொள்வது
சரிதானா ?

வித்துவானைவிட
முன் வரிசை ரசிகனின்
அதிக  அங்க சேஷ்டைகள்
கூ டுத்ல் இல்லையா  ?

ஆண்டவன் குறித்து
ஆத்திகனை விட
நாத்திகனே அதிகம் சிந்திப்பது
அவசியம்தானா  ?

செய்து முடிப்பவனை விட
துரும்பசைக்காதவனின்  விமர்சனத்திற்கு
முக்கியத்துவ ம் தருவது
ஏற்கக் கூடியதா?

இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா  என்ன ?

Thursday, September 6, 2012

எழுதாத எழுத்தாளர்களுக்கு....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும் 
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் ச்ரியாகச் சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதினில் கொண்டு

எழுதாது இருப்பதாலேயே
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Tuesday, September 4, 2012

பெண்ணெழுத்து

ஆட்சிப்பொறுப்பில்
மக்களின் தலையெழுத்தை
நிர்ணயிக்கும் நிலைக்கு
உய்ரந்திருந்த போதும்

பல்வேறு நிர்வாக நிலைகளில்
ஆணுக்கு நிகர் என்பதனைத் தாண்டி
 முயன்று முதலெழுத்தாய்
முன்னேறிய போதும்

சமூகத்தின் பல்வேறு தளங்களில்
ஆணுக்கு மிகச் சமமாய்
சமுக மாற்றத்திற்கு உயிர் மெய்யாய்த்
திகழ்கிற போதும்

குடும்ப உறவுகளில் மட்டும்
பெண்ணென்பவள் இன்னும்
தனித்து இயங்க இயலாது
ஒரு ஒற்றெழுத்தாகவோ
துணையெழுத்தாகவோ மட்டும்
இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?

பெயரில் ஆயுதம் இருந்தும்
அதிகம் பயன்படுத்தப்படாது துருப்பிடித்திருக்கும்
ஆயுத எழுத்தைப் போல
சக்தி சக்தியெனச் சொல்லியே
மூலையில் அமர்த்தி சாமரம் வீசி
செயல்படவிடாது ஏய்க்கும்
ஆணாதிக்கச் சமூகத்தினைப் புரியாத வரையில்
பெண்ணினத்தின் தலையெழுத்தும்
ஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ  ?

Sunday, September 2, 2012

ரூப அரூப ரகசியம்

ரூபங்களை விட
அரூபங்களே சக்திமிக்கவை
ரூபங்கள் அரூபங்களின்
இச்சைக்கு ஆடும்
கருவிகள் மட்டுமே

ரூப அரூப ரகசியம் அறிந்தவன் எவனும்
ரூபத்தின் வழி அரூபத்தை அணுகுவதில்லை
அரூபத்தின் வழியேதான்
ரூபத்தை அறிய முயல்கிறான்

ரூபங்கள்
வெறும் சுற்றுச் சுவர் மட்டுமே
அதனை விலக்கியோ அல்லது தவிர்த்தோ
உள் நுழைந்தால் ஒழிய
அரூப தரிசனம் சாத்தியமே இல்லை

ரூபத்தின் வழி
பார்த்துப்பழகியவன் மட்டுமே
ஓவியத்தின் வெளிக் கோடுகள் இல்லாது போயின்
திருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல்
மூச்சுத் திணறிப்போகிறான்

அரூபவத்தின் வீரியம் அறிந்தவன்
அலைகளைத்  தாண்டி கடலையும்
எண்ணம்  தாண்டி மனத்தையும்
மிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்

ரூப விழியினில் பார்வையாய்
ரூப உடலினில் உயிராய்
ரூப வார்த்தைகளுக்கும் பொருளாய்
ரூபச் செயல்களின் அர்த்தமாய்
ஊடுருவிக்கிடக்கும்  அரூபத்தை
அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்

Saturday, September 1, 2012

தங்கக் கவிதையும் கவிதைத் தங்கமும்

மிக ஆழத்திலிருந்து
எடுக்கப்படுவதனாலோ என்னவோ
இரண்டுக்குமான மதிப்பு
என்றென்றும்
கூடிக்கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது

குன்றாத மதிப்பினால் மட்டுமல்லாது
காலச் சூழலுக்கு தக்கவாறு
தன்னை உருமாற்றி
நிலை நிறுத்திக் கொள்ளும்
திறத்தினாலே கூட
இவையிரண்டும்
என்றென்றும்
இளமைத் திறனுடன்
இருப்பதாகப் படுகிறது

அழகைச் சார்ந்தும்
உணர்வைச் சார்ந்தும்
இன்னும்  மிகச் சரியாகச் சொன்னால்
அழகுப் பெண்களைச் சார்ந்தும்
அதிகம் இருப்பதாலேயே
இவையிரண்டின்  கவர்ச்சியும்  மோகமும்
 என்றென்றும்
குறையாது கூடிக்கொண்டேச்
செல்வதாகப் படுகிறது

 இரண்டுக்குமான ஒற்றுமை
இதுபோல நிறைய இருப்பினும்
ஒன்றிருக்குமிடத்தில்
ஒன்றில்லாது இருப்பதும்
ஒன்றை ஒன்று நெருங்கிவிடாது
 இரண்டும் விலகியே திரிவதும்
ஏன் என்பது மட்டும்
எப்படி யோசித்த போதும்
 துளியும் விளங்குவதில்லை

ஆயினும்
ஒன்றின் பாதையில்
பாதி சென்றவன் மடடுமே
மற்றொன்றை எண்ணி  ஏங்குகிறான்
ஒன்றைக் குறித்து தெளிவாக  அறிந்தவன் எவனும
மற்றொன்றை  விட்டு
விலகி இருக்கவே   விரும்புகிறான்

ஏனெனில்
பார்வைக்கு நாணயத்தின்
இருபக்கம்போல் காட்டிக்கொள்ளும் 
அவைகள் இரண்டும் உண்மையில்
இரு  வேறு துருவங்கள் என்பது
தெளிந்தவனுக்குத்தான் தெளிவாகத்தெரியும்  


Thursday, August 30, 2012

"போல " இருப்பதே நிஜம்

உண்மையானவனாய் இருப்பதைவிட
உண்மையானவனைப்போல இருப்பது
அதிகத் துயர் தராது
அது எளிதானதும் கூட

நேர்மையானவனாய் இருப்பதைவிட
நேர்மையானவனைப்போல் இருப்பது
அதிகச் சிரமம் தராது
அதுதான் ஆகக் கூடியதும் கூட

புத்திசாலியாய் இருப்பதைவிட
புத்திசாலியைபோல் இருப்பது
எளிதில் பிறரைக் கவரும்
அதிலதான் அதிக வசீகரமும்  கூட

சக்திமிக்கவனாய் இருப்பதைவிட
சக்திமிக்கவன் போல் இருப்பது
 பாதித்துயர் அழிக்கும்
அதுவே பாதுகாப்பானது  கூட

நண்பனாய் இருப்பதை விட
நண்பனைப்போல்  இருப்பது
ஏமாற்றத்தை அடியோடு அழிக்கும்
அதுதான் பிழைக்கும் வழி கூட

போல இருப்பது போலி என்பது
இலக்கணத்திற்குத்தான் பொருந்தும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது
பழமொழிக்குத் தான் சரி

இக்காலச் சூழலில்
 "போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
 "மின்னுவது " மட்டுமே
 பொன்னாக மதிக்கப்படும்

என்வே...... ( உண்மையானவனாய்.... )

Wednesday, August 29, 2012

நினைவுகூறல் கடமை அல்லவா

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

 மீள் பதிவு  

Monday, August 27, 2012

அந்த நீலக் கடல்


அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது
அந்த நீலக்கடல்

 கடற்கரையோரம்
யாருமற்ற தனிமையில்
"இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை "
என்கிற திடமான முடிவுடன்
கடல் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்
இளைஞன் ஒருவன்

தன்னுடன் விளையாடத்தான்
அலைகள் தத்தித் தத்தி வருவதான நினைப்புடன்
கரைக்கும் கடலுக்கும் இடையில் ஓடி
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி

"காமத்தில் திளைப்பவர்களுக்குத் தேவை
அடர் இருளும் யாருமற்ற தனிமையும்
தூய காதலுக்குத் தேவை
காற்று வெளியும் கடற்கரையும்தான் "
காதல் மொழிகள் பேசி
காதலியைக் கரைத்துக் கொண்டிருந்தான்
காதலன் ஒருவன்

ஒவ்வொரு பருவத்திலும்
கடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை
நெருக்கத்தை நேசத்தை
அசைபோட்டபடி கடல் தாண்டிய வெறுமையில்
எதையோ தேடிக்கொண்டிருந்தார்
பெரியவர் ஒருவர்

என்றும் போல
எப்போதும் போல
தனக்கென ஏதுமற்று
கண்போருக்குத் தக்கபடி
மிகச் சரியாகப் பொருந்தியபடி
அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
அந்த நீலக் கடல்

Friday, August 24, 2012

பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-


 பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 சென்னைப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன் இந்த விழா
மிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
 "எப்படையும் " மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும்

Wednesday, August 22, 2012

நீரோடு செல்கின்ற ஓடம்

நல்ல படிப்பு 
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வப் போது புலம்பி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குறைக்க முயன்று
தோற்று வீழ்வாள் துணைவி

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

 மீள்பதிவு 

Monday, August 20, 2012

நடிப்பறியா நடிகர்கள்

ஒத்திகையற்ற அரங்கேற்றம்
சோபிப்பதில்லை
முதல் ஒத்திகையில்
நடிகனுக்கு கதாபாத்திரத்தை
அறிமுகப் படுத்தும் இயக்குனர்
பின்னர் தொடர்கிற ஒத்திகைகளில்
கதாபாத்திரத்தின் இயல்பறியவும்
அதனுடன் இணையவும்
பின் அதுவாக மாறவுமே
பயிற்சியளிக்கிறார்

அதனால்தான்
ஒத்திகையின் போது
நடிகன் முதலில் அவனை
மறக்கக் கற்பிக்கப்படுகிறான்
பின் படிப்படியாய்
கதாபாத்திரமாகவே
மாறக் கற்பிக்கப்படுகிறான்

அரங்கேற்ற நாளில்
தன்னை முற்றாக மறந்த
கதாபாத்திரமாகவே மாறிய நடிகன்
அவனது அத்துணை நாள் முயற்சியும்
முழுமையடைந்ததாய் அறிகிறான்
பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறான்

 நடிப்பின்  இலக்கண மறியாத
நாடகத்தின் சூட்சுமம் அறியாத
பேதை நடிகனோ
மாறவும் தெரியாது
தன்னை மறக்கவும் தெரியாது
தான் தானாகவே இருந்து
அவனும் கஷ்டப்படுகிறான்
நம்மையும் கஷ்டப்படுத்துகிறான்.......

தினம் இரவில் கண் மூட
வாழ்நாளெல்லாம்
அந்தப் "பெரிய இயக்குனர் "
ஒத்திகை நடத்தியும்
மரண அரங்கேற்றத்தில்
முழுமையாய்
இணைத்துக் கொள்ளவும்
மாறிக் கொள்ளவும் அறியாது
நாம் நாமாகவே  இருந்து
துடிக்கிற தவிக்கிற
அஞ்ஞான மனிதர்கள்
நமமைப்போலவே


Sunday, August 19, 2012

கவிதையும் குழந்தையும்

விரும்பி வருந்தி
அணைக்க அழைக்கையில்
பழுப்புக்காட்டி ஓடி மறையும்
எதிர்பாரா நேரத்தில்
மனம் குளிர
மடியில் விழுந்து புரளும்......

சில சமயம்
பெரிய தோரணைக்காட்டி
சின்னஞ்சிறு கதைகள் பேசும்
பல சமயம்
கைக்கடக்கமாய்க் கிடந்து
பல அரியதை உணரக் காட்டும்....

கடலாய் மலராய்
காவியமாய் ஓவியமாய்
ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்னுயரம் காட்டும்
இன்சுவையும் கூட்டும்.....

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள்  சொர்க்கத்தைச் சேர்க்கும் ...

சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப்  போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?

Saturday, August 18, 2012

" யாதோ"

கவிஞனாக அறிமுகமாயிருந்த 
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக்  கறுக்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்


மீள்பதிவு