Friday, October 26, 2012

அந்தப்புரங்களில் கிரீடம் தவிர்த்தல்....

 எதிர்படும் பெரும்பாலோரின் தலைகளிலும்
அவரவர் தகுதிக்குத் தக்கபடி
தகரம் முதல் தங்கம் வரையிலான
நீண்டு உயர்ந்த கிரீடங்கள்

பிறர் செய்து தராது
அவரவர்களாக செய்து கொண்டதால்
அனைத்துக் கிரீடங்களும்
தலைக்குச் சிறிதும் பொருத்தமின்றி
மிகப் பெரியதாகவே ....

கண்களை மறைப்பதை தவிர்ப்பதற்காகவும்
கழுத்தில் விழுவதை தடுப்பதற்காகவும்
இரு கைகளாலும் கிரீடத்தை இறுகப் பற்றியபடி
வாழ்வின் சுமை குறைக்கும் சூத்திரம் தேடி
எல்லோரும் செக்குமாடாய்த் திரிகின்றனர்
சுமை அந்தக் கிரீடமே என அறியாமலேயே...

கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்
இடுப்பு வேட்டி அவிழ்ந்ததும் தெரியாது
அடுத்தவர்களின் அம்மணம் கண்டு
முகம் சுழித்தபடி மிகச் சலித்தபடி
வாழ்வின் சுகம் தேடி 
எப்போதும் பந்தயக் குதிரையாய்  பறக்கின்றனர்
சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே

தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை
புரிந்த சிலர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்
வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்

26 comments:

Seeni said...

அய்யா!

வாழ்கை தத்துவங்கள்...

அருமையா-
எளிமையா-
சொல்லிடீங்க அய்யா!

திண்டுக்கல் தனபாலன் said...

புகழ் போதையை உங்கள் பாணியில் சும்மா நச்சென்று அருமையாக சொல்லி விட்டீர்கள்...

நன்றி...
tm2

குறையொன்றுமில்லை. said...

தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை
புரிந்த சிலர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்
வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்

எவ்வளவு அழ்காக சொல்லி விட்டீர்கள்.

கவியாழி said...

இன்றைய பத்திரிக்கை செய்திக்கு பொருத்தமாக உள்ளது

----------------------------------------------

தலைக்கு பொருந்தாத கிரீடம் போல
தலைக்கனம் கொண்டோரின் பேச்சும்
பல சமயங்களில் சிக்கலில் முடிகிறது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பிறர் செய்து தராது
அவரவர்களாக செய்து கொண்டதால்
அனைத்துக் கிரீடங்களும்
தலைக்குச் சிறிதும் பொருத்தமின்றி
மிகப் பெரியதாகவே ...//
எப்படி சார் யோசிக்கிறீங்க!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 4

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

த.ம. 5

அகலிக‌ன் said...

தலை கணம், தற்பெருமை இவை இரண்டும் மன பாட்டிலுக்குள் அடைக்கப்படவேண்டிய பூதங்கள். வெளியேறிவிட்டால் நம்மை விழுங்கிவிடும். சிறப்பான உதாரணங்களோடு சொல்லியவிதம் பிரமிப்பூட்டுகிறது. நன்றி.

Anonymous said...

ஐயா! ஒரு க்ரீடத்தை வைத்து மனிதனிடம் இருக்கும் ஆணவத்தை விட்டொழித்தால்தான் வாழ்வு என்பதை மிக இயல்பாகவும் அழகாகவும் கூறிவிட்டீர்களே! மிகவும் ரசித்தேன் ஐயா!
பகிர் வுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

த.ம. 6

சசிகலா said...

சுமையின்றி சுகம்பெறும் ரகசங்களை அற்புத வரிகளால் விளங்க வைத்தீர்கள் நன்றி ஐயா.

G.M Balasubramaniam said...


கிரீடங்கள் அவரவர் தகுதிக்குத் தக்கபடி செய்து கொண்டால் , தலைக்கு சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்குமா ரமணி சார்.?

NKS.ஹாஜா மைதீன் said...

அருமை சார்........

சின்னப்பயல் said...

//சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் //
நல்ல பதம்..அருமை :)

Thozhirkalam Channel said...

வாழ்வின் சுமை குறையும் சூத்திரம் தேடி எல்லோரும் அலைகின்றனர் சுமை அந்த கிரீடம் என்றே தெரியாமல்
இந்த வரிகள் அருமை
வாழ்க்கையை புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
சிலர்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //


கிரீடங்கள் அவரவர் தகுதிக்குத் தக்கபடி செய்து கொண்டால் , தலைக்கு சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்குமா ரமணி சார்.?


அவரவர் தகுதிக்குத் தக்கபடி
தகரமாகவோ தங்கமாகவோ செய்துகொள்கிறார்கள்
ஆனால் எல்லோரும் தலையை விட பெரிதாகவே
செய்துகொள்கிறார்கள் எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ ?
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

பால கணேஷ் said...

கிரீடங்கள் ஏதுமற்ற வாழ்வு இனிமையாக அமையும் என்பது மிகமிகச் சரியான விஷயம். தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். அருமை ஸார்.

தி.தமிழ் இளங்கோ said...

// தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் //

ஊடலின் தோற்றவர் வென்றார்; அது மன்னும்
கூடலின் காணப்படும் - குறள் 1327

என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக உள்ளன உங்களின் கவிதை வரிகள்.

பூங்குழலி said...

மிக மிக அருமை

சாந்தி மாரியப்பன் said...

நிதர்சனமான கவிதை.

சுதா SJ said...

சூப்பர் கவிதை.... உண்மைதான் தலையில் இருக்கும் கீரிடம் மிக மிக ஆபத்தானதுதான்....

மனிதனை நல்வழியில் போக சொல்லும் உங்கள் கவிதைகள் எல்லாமே பாராட்டப்பட வேண்டியது.

ஸ்ரீராம். said...

கிரீடங்களே தேவையில்லை என்ற கருத்தில் முடிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். ஜி எம் பி சாரின் கேள்வி ஆதரவு கொடுத்தது. யோசித்துப் பார்த்தால் சிறிய க்ரீடமாவது இல்லாமல் ஒரு மனிதன் இருந்தால் ஆச்சர்யம்தான் என்று தோன்றியது.

ராஜி said...

கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்
இடுப்பு வேட்டி அவிழ்ந்ததும் தெரியாது
>>>>>
பதவி மோகத்தில் தான் ஆடும் ஆட்டம் பலருக்கு புரிவதில்லை. அந்த பதவியை எதோ ஒரு நாள் இழந்துதான் ஆகனும்ன்னு உணர்வதுமில்லை. உணர்ந்தால்?!

துரைடேனியல் said...

//தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை
புரிந்த சிலர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்
வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்//

- ஆஹா.. அற்புதம்... அழகு கவிதை. சிந்தனை விருந்து.

அப்பாதுரை said...

கடைசி வரிகள் அற்புதம்.
தலை இறந்த பின்னும் கிரீடம் உலவும் கேடும் உண்டு :-)

RAMA RAVI (RAMVI) said...

//சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே//

மிகவும் அருமையான கவிதை. புரிந்து கொண்டவர்கள் வாழ்த்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்..அருமை.

Post a Comment