Tuesday, November 21, 2017

சுவாரஸ்யமான கேளிக்கைகளில், நாம் மயங்கி நிற்கையில்,

வருமான வரி ரெய்டு
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்
என மனம் மயக்கும் சுவாரஸ்யமான கேளிக்கைகளில்,
நாம் மயங்கி நிற்கையில்,

மந்திரிகள் யாரும் வாயசைக்காது
ஒரு அரசு ஆணையாக,பிறப்பு இறப்புச்
சான்றிதழுக்கான கட்டணங்களை அரசு
பன்மடங்கு உயர்த்தி ஆணையிட்டுள்ளது

இருமடங்கு மூன்று மடங்கு என இல்லாமல்
இருபது  முதல் ஐம்பது  மடங்கு உயர்த்தப்பட்டிருக்கும்
இக்கட்டணங்கள் குறித்து மக்களுக்காக
கவலைப்படும்படியாக நடித்துக் கொண்டிருக்கும்
எந்த அரசியல் கட்சிகளும், பேனைப் பெருமாளாக்கும்
எந்த ஊடகங்களும் கூட இதை கண்டு கொள்ளாதிருப்பதை
என்னவென்று சொல்வது ?


Monday, November 13, 2017

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்