Monday, June 27, 2011

எல்லோரும் கவிஞர்களே


சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா

இனிய நினைவில் தனித்து இரவில்
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல  நீயும்
உரத்துக்  கதற மாட்டியா

விதையாய் கவிதை அனவரி டத்தும்
வீணே  கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே  விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில்  குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரிந்து போனாலே -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே



Thursday, June 23, 2011

வாழும் வகையறிந்து.....

அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்


Tuesday, June 21, 2011

நமைச்சல்..

தனித்து நிற்கவா ?
உயரம் கூட்டிக் கா  ட்டவா ?
எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
அல்லது
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?
நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
சொறியாது இருக்க முடியவில்லை
எப்படி யோசித்த போதும்
ஒரு காரணமும் தெரியவில்லை
ஆனாலும்
எழுதாது இருக்க முடியவில்லை

Saturday, June 18, 2011

தோளில் ஆட்டைப் போட்டு...

ஞாபகமிருக்கா...
முதலில் பசி
நம் குடலில் உடலில்தான் இருந்தது
நமது பணிச் சூழல் காரணமாக அதை
நேரத்திற்குள்ளும்
 காலத்திற்குள்ளும் இணைத்தோம்
இப்போது நம் பசியை
கடிகாரம்  தீர்மானம் செய்து கொண்டிருக்கிறது

நினைவிருக்கா...
முதலில் நமது திருமணத்தை
பருவமும் சக்தியும்தான்
தீர்மானம் செய்து கொண்டிருந்தது
அதனை நாம்
வசதி வாய்ப்புகளோடு
இணைத்துவிட்டதால்
திருமணங்கள் இப்போது
பருவம் கடந்தும்
சக்தி இழந்த பின்னும்தான்
சாதாரண்மாக நடந்து கொண்டிருக்கிறது

யோசித்துப் பார்த்ததுண்டா...
முன்பெல்லாம் சந்தோஷத்தை
உடல் பலத்தோடும்
மன நலத்தோடும்
இணைத்து வைத்துருந்தோம்
காலப் போக்கில் அதனை
சௌகரியங்களோடும்
கேளிக்கைகளோடும்
இணைத்துப் பழகிவிட்டதால்
இப்போது சந்தோஷத்தை
வெளியிலிருந்து எதிர்பார்த்து
வீட்டு வாசலில் தவமிருக்கிறோம்

நெனைச்சுப்பார்த்துண்டா..
நம் முன்னோர்கள் எல்லாம்
அவர்களது வாழ்வை
அந்த அந்த நாளோடும் பொழுதோடும்
இணைத்து வைத்திருந்து
வாழ் நாளெல்லாம்
உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்
நாம் தான் இன்றை
நேற்றொடும் நாளையோடும்
குத்தகைக்கு விட்டு விட்டு
வாழ் நாளெல்லாம்
சவமாக வாழ்ந்து சாகிறோம்

புராண காலத்துஅரக்கன் கூட
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி
தன் உயிரை ஒளித்து வைத்தது கூட
அக்கிரமங்கள் செய்தாலும்
 சந்தோஷமாக  வாழ வேண்டித்தான்
நாம் தான்
உயிர்போன்ற அனைத்தையும்
நம்மை விட்டு
வேறெங்கோ விட்டுவிட்டு
ஆழமாக  புதைத்துவிட்டு
கடலுக்குள் வாழ்ந்துகொண்டே
 கடல்தேடி அலையும்
முட்டாள் மீன்போல
வாழ்வுக்குள் சுகம் தேடி
நாயாக அலைகிறோம்
வாழ் நாளெல்லாம் அலைகிறோம்

Wednesday, June 15, 2011

அஹம் பிரம்மாஸ்மி

கடற்கரையில்
கால்கள் நனைத்தபடி நின்றிருந்தேன்

 விரிந்து பரவியிருந்த  கடல் 
காற்றில் அலையும்
நீல வண்ண ஆடைபோலவும்
அலைகள்
வெண்ணிற மணிகள் கோர்த்த
முந்தி போலவும் பட்டது
நினைவும் அனுபவமும்தான்
அதை கடல் எனச் சொல்லிகொண்டிருந்தது

 சீறிவந்த அலையொன்றை
கைகளில் தாங்க முயல
அனைத்தும் வழிந்துபோய்
ஒரே ஒரு துளி மட்டும்
உள்ளங்கையில் தங்கி நின்றது

அதனை விளக்குபோல் தாங்கி
கரையேர முயல
"என்னை இறக்கி விட்டுப் போ"
என கூச்சலிடத் துவங்கியது

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை
"பேரண்டம்போல் விரிந்து கிடக்கும்
சமுத்திரத்தில் நீ ஒரு துளி
நீ குறைந்தால் என்னவாகிவிடப் போகிறது "

அது அலட்சியத்துடன்
"நீயாக எனக்கு பெயர் சூட்டிவிட்டால்
அது என் பெயர் ஆகி விடுமா?
நான் துளி இல்லை நான் கடல்"என்றது

"எனக்குப் புரியவில்லை
நீ எப்படி கடலாக முடியும்"என்றேன்

" நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்தியமில்லை
உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே
என்னைப் புரிந்து கொள்ள முடியும் " என்றது

நான் குழம்பிய நிலையில்
 கைகளைச் சாய்க்க
அது கடலோடு இரண்டரக் கலந்து போனது
நான் எப்படிப் பார்த்தபோதும்
எங்கும் கடல் மட்டுமே வியாபித்திருந்தது

Saturday, June 11, 2011

பார்வைகள்....

நீல
வானத் தட்டினிலே-காணும்
நிலவு சோற்றுருண்டை-நித்தம்
காணக் கண்சிமிட்டும்-விண்
மீன்கள் பருக்கைகள்

நீலக்
கடலின் நீரெல்லாம்-ஏழை
சிந்திய கண்ணீரே-அதில்
தவழும் அலையெல்லாம்-அவரைக்
கொல்லும் மன நிலையே

அனலாய்
தகிக்கும்  கதிரோனே-வறியோர்
வயிற்றில் பெரும்பசியாய்-பாலையில்
ஜொலிக்கும் கானல் நீர்-அவர்கள்
காணும் கனவுகளாய்

கடலாய்
செல்வம் நிறைந்திருந்தால்-உலகே
அழகிய பூங்காதான்-நீயே
அன்றாடக் காய்ச்சியெனில்-அதுவே
கொடிய நரகம்தான்

உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்


Wednesday, June 8, 2011

புதிய விதிகள்

பள்ளம் உண்டு மேடும் உண்டு சாலையிலே
பார்த்து மெல்லப்  போகும் நல்ல காளைகளே
இன்பம் உண்டு துன்பம் உண்டு வாழ்வினிலே
ஒன்றாய் உணரும் உள்ளம் வேண்டும் உயர்ந்திடவே

வளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை
வாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை
மலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை
மனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை

தடையை நொறுக்கித் தாண்டிச் செல்லும் நதியைப்போலே
தரையைப் பிளந்து தழைத்து நிமிரும் செடியைப்போலே
இரவை முடிக்க கிழக்கே தோன்றும் கதிரைப்போலே
தடைகள் நொறுக்கி துணிவாய் எழுவோம் மேலே மேலே

மேலே மேலே இன்னும் மேலேதொடர்ந்து செல்வோம்
வானம் கூட எல்லை இல்லை மீறிச் செல்வோம்
வீழ எழுவோம் தாழ உயர்வோம் சோம்பித் திரியோம்
நாமும் வாழ்ந்து உலகும் வாழ விதிகள் செய்வோம்

(கடந்த ஆண்டு ஒரு பள்ளி ஆண்டுவிழாவுக்காக
சிறுவர்களுக்காக  நான எழுதிக் கொடுத்த பாடல்)

Friday, June 3, 2011

ஜான் அப்துல் நாராயணன்

கடந்த வருட மழைக்காலத்தில்
சுகாதாரக் கேடும் அடைமழையும்
கைகோர்த்துக் கொள்ள
எங்கள் காலனியில்
கொள்ளை நோய்
பேயாட்டம் போடத் துவங்கியது

பழகிப் போன சோம்பல் நோயிலும்
அதிகார போதையிலும்
நெளிந்து கொண்டிருந்த அரசை
நாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப
கொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது
நாங்களும் திரு நீறுஅடித்து
பேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்
ஆயினும்
மூன்று வயதானவர்கள் மட்டும்
வசமாக மாட்டிக் கொண்டனர்

பெற வேண்டியதை எல்லாம்
சரியாகப் பெற்றுக்கொண்டபின்
"செய்ய வேண்டியதை எல்லாம்
முறையாகச் செய்துவிட்டோம்
இனி எங்கள் கையில் ஏதும் இல்லை
எல்லாம் அவன் கையில் " என
ஆகாசத்தைக் காட்டிவிட்டனர் மருத்துவர்கள்

நாங்கள் குழம்பிப் போனோம்
சங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி
மூவருக்குமாக வேண்டிக் கொள்வதென
ஏகமனதாய் தீர்மானித்தோம்

அப்போதுதான் பிரச்சனை
பூதாகாரமாய் கிளம்பியது
காரணம்
ஒருவர்  பெயர் ரஸாக்
அடுத்தவர் பெயர் ப்ரான்ஸிஸ்
மற்றொருவர் பெயர் விஸ்வனாதன்
எந்த முறையில் பிரார்த்திப்பது என
எழுந்த பிரச்சனை சங்கத்தை
மூன்றாக்கும்போல் வெடித்தது

திடுமென எழுந்த இளைஞன் ஒருவன்
"பிரார்த்தனைக்கு நாளைக்கு
ஏற்பாடு செய்ய்யுங்கள்
நான் சரிசெய்கிறேன்"என்றான்
எங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்
நம்பிக்கைஊட்டும்படியாக அவன்
பார்வைக்குத் தெரிந்ததாலும்
சரியெனச் சொல்லிவைத்தோம்

மறு நாள்
பிரார்த்தனைக்கு அனைவரும்
ஆவலாகக் காத்திருக்க
அதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்

இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்

மேடையில் மண்டியிட்டவன்
குரானைப் பிரித்து
வேதம்போல் படிக்கத் துவங்கினான்
அதிர்ச்சியில் எல்லோரும்
அவனையே பார்த்திருக்க
"ஆண்டவன் பரிபூரணன்
எல்லையில்லா அருளாளன்
அவனுக்கு எல்லாம் தெரியும்
நிச்சயம் அவர்களைக் காப்பான் " என்றான்

எல்லோரும் ஏதோ ஒருவகையில்
சமாதானமடைந்து போனார்கள்
எனக்கு மட்டும் ஒரு உறுத்தல்
"மூன்றுக்குள் இவன்
யாராக இருப்பான்
எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்"
என்றேன் என் நண்பனிடம்
"அது எப்படி முடியும் ? " என்றான் அவன்

"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்
நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து
அகமகிழ்ந்து போனான்

"தம்பி நல்லது செய்தாய்
உன்பெயரென்னப்பா " என்றேன் பரிவுடன்
என்னை இகல்பமாகப் பார்த்தவன்
"ஜான் அப்துல் நாராயணன் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
"கைக்குட்டை சரி வராது
வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்