Sunday, August 24, 2014

பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற


சொட்டு ஒண்ண மேலே விட்டுப் போகும்-அந்த
மேகம் என்னுள் தாகம் கூட்டிப் போகும்
"லுக்கு" ஒண்ண என்மேல் விட்டுப் போகும் -அவ
மோகம் என்னுள் நாகம் போலச் சீறும்

குளத்து மேல புரண்டு வந்த போதும்-காத்து
அனலை கக்கி மனசை வாட்டிப் போகும்
எனக்கு என்று முடிவு செஞ்ச போதும்-கள்ளி
பிணக்குக் காட்ட மனசு வெந்துச் சாகும்

ஆசை கோடி நெஞ்சில் பூக்கும் போதும்-வண்டை
சுத்த விட்டு காற்றில் ஆடும் பூவு
நேசம் கோடி நெஞ்சில் நிக்கும் போதும்-பொய்க்
கோபம் காட்ட பெருகும் நோவு நூறு

பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற-இதை
புரியாது ஓடும் முட்டாள் பூனைப் போல
மெச்சும் காதல் நச்சுக் காமம் வேற-இது
புரியாத பாவி மகளை என்ன சொல்ல ?

Saturday, August 23, 2014

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

Thursday, August 21, 2014

வெற்றி என்பது உணர்வது...

குழந்தைக்கு
செமிக்காது போய்விடுமோ எனக் கருதி
மிகத் தெளிவாய் உணர்ந்தே
பாலில் கூடுதலாய் நீரதைச் சேர்க்கிறேன்
கஞ்சப் பிசினாறி எனத்
தூற்றிப்போகிறது உலகு
கண்டுகொள்ளாது தொடர்கிறேன்

வெட்டுப்படுபவனின் பக்கமும்
நியாயம் இருக்கக் கூடுமெனக் கருதி
வெட்டருவாளை
அதிகக் கூர்ப்படுத்தாதே விடுகிறேன்
தொழிலில் தேர்ச்சியில்லை என
விட்டுவிலகுகிறது ஒரு பெருங்கூட்டம்
கலங்காது தொடர்கிறேன்

நியாயத்தின் பக்கமே
இருந்துவிட உறுதியுடனிருக்கையில்
நியாயங்கள் அணிமாற
நானும் மாறித்தொலைக்கிறேன்
பச்சோந்தியென பரிகசித்துப் போகிறது
பண்டிதர் பெருங்கூட்டம்
குழம்பாது தொடர்கிறேன்

எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...

Thursday, August 14, 2014

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

சுய நல நோக்கில் பொது நலத்தை கட்டுப்படுத்துவது
சர்வாதிகாரம் எனில்
பொது நல நோக்கில் சுய நலத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வதே
சுதந்திரம் என அறிவோம்

அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்