Monday, November 30, 2015

சூழ் நிலைக் கைதிகள்

பிறப்பிடமும் இருப்பிடமும்
சேறுதான் சகதிதான் ஆயினும்
அவைகளுடன் எவ்வித சம்பந்தமுமின்றி
புனித நெருப்பாய்
...
வான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை

தர்ம நியாயங்களை
வலிமையே தீர்மானிக்கிற
ஆரண்யங்களில்
வலிமை மிக்கதாக இருப்பினும் கூட

சைவமாகவே  நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை

தன் இருப்பும் பிழைப்பும்
நோயுடனும் நோயாளியுடனும் தான் ஆயினும்
அவைகளின் நிழல் தன் மீது படராது
ஆரோக்கியத்தின் சின்னமாய்


நாளும்வல்ம் வந்து
நம்பிக்கையூட்டுகிறார்
நாமறிந்த மருத்துவர்

அழகும் இளமையும்
செல்வமும் செழிப்பும்
சுற்றிச் சுற்றி வந்து
பாதத்தில் வீழ்ந்த போதும்
அறிவுத் துடுப்பை வலித்து
உடற்படகின் துணையோடு

உன்னதக் கரைசேர்வதில்தான்
கருத்தாய் இருக்கிறான்
நிஜமான யோகி

நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி

தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்

Sunday, November 29, 2015

.கசாப்புக் கடை தேடும் வெள்ளாடுகள்..

.பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்

கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுறை  அவனை சந்தித்த போது..
நேர்வழியில்அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்

காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்

காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்

காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.

காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல

உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய

அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்

"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்

"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

"எதற்கு " என்றேன்

"அவரிடம் மனப் பயிற்சி பெற்றால்
எல்லாம் சரியாகி விடுகிறதாமே "
என்றான்
 
நான் பதிலேதும் சொல்லவில்லை

எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்

புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்டு  அலைவது  போலவும் பட்டது

Friday, November 27, 2015

நரகமாகிவரும் சொர்க்கம்

ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

Thursday, November 26, 2015

அதிருப்தி

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Wednesday, November 25, 2015

குறைகளும் குற்றங்களும் ...

தவறு என்பது தவறிச் செய்வது
இவன் வருந்தியாகனும்

தப்பு என்பது தெரிந்து செய்வது
இவன் திருந்தியாகனும் என

தவறுக்கும் தப்புக்கும்
தெளிவான எளிமையான விளக்கத்தை
"பட்டுக்கோட்டையார்" அளித்ததைப்போல்

குறைகளுக்கும் குற்றங்களுக் கும்
யாரும்  சரியாக விளக்கம் அளிக்காததால்தான்

குறைகளைக்  குற்றங்களாகவும்
குற்றங்களைக்   குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து  செய்கிறோமோ ?

நிவாரணப் பணிகளில் தொய்வு
இவைகள்  குறைகளே

இது  இயற்கையின் பெரும் சீற்றம்
நிச்சயம்  அனுமானிக்க முடியாதவையே
ஆதலால்  பொறுத்துக் கொள்ளக் கூடியவை

கட்சிகள் அரசியல் செய்வதை
கண்டு கொள்ளவேண்டியதில்லை

மோசமான நகரமைப்பு
நிச்சயம்குற்றங்களே

அதிகாரம் அளித்திருந்தும்
முறையாக  செயல்படுத்தாததால்
மன்னிக்க முடியாதவைகளே

பொறுப்பில் இருந்த கட்சிகள் இரண்டும்
தண்டிக்கப் படவேண்டியவைகளே

எப்படிச் செய்யப்போகிறோம் ?

Tuesday, November 24, 2015

சராசரி என்பதே விதி

அனைவரும் பார்ப்பதையே
கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கவும்

அனைவரும் உணர்வதையே
கொஞ்சம் வித்தியாசமாய் உணரவும்

அனைவரும் சொல்வதையே
கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லவும்

தெரிந்திருப்பதால்
அவர் படைப்பாளி

" விளக்கம் " கொடுத்தால் மட்டுமே
விளங்கித் தொலைக்கும்படி
ஒரு குழப்பம்  கொள்ளும்படி

"இவைகள் "  சொல்லப்பட்டால் மட்டுமே
என வரையரை செய்துள்ளோர்
வரையரைக்குள் அடங்கும்படி

"இப்படிச் " சொல்லப்பட்டால் மட்டுமே
அது தரப்பட்டியலில் சேரும் என்போர்
மனமது குளிரும்படி...

சொல்லத்தெரிந்திருந்தால்
அவரும் படைப்பாளி

ஆயினும் .....

பின்னதே  சரியெனில்
படைப்புலகில்
மறுப்பேதுமின்றி
அவரே பிரபலப்  படைப்பாளி

 முன்னதே சரி எனில்
சந்தேகத்திற்கு இடமின்றி
அவரைச்  சராசரி என்பதே
படைப்புலகின் விதி 

Monday, November 23, 2015

இறுதிப் போட்டி ?

உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் பார்வையாளனாக

காலமும் உயிரும்  நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து அலுத்து
ஓய்ந்த  உடலது
இயலாது தன் நுனியை
மெல்லத் தொய்யவிட

எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல

ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல

ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அந்த    நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?

Sunday, November 22, 2015

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

Friday, November 20, 2015

இருளும் மௌனமும் ...



அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?

இருளைக் குறைந்த ஒளி என்பான்
பாவேந்தன் பாரதி

அவன்வழியில் யோசிக்கையில்
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது

விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி

அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்

உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்
எதிர்மறை எண்ணப்புயலையும
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது

அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்

நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ

அது போதும் எனக்கு

கதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்

வெற்று உரலை வேதனையுடன் இடித்தபடி....

கண்டதும்
கண்களை இமைக்கவிடாது
சுண்டி இழுக்கும்படியாய்
ஒரு அருமையான தலைப்பும்..

ஆரம்பமே
அமர்க்களமாய் இருக்கிறதே என
எண்ண வைக்கும்  படியாய்
சுவாரஸ்யமான பல்லவியும்

கருவிட்டு விலகாது
சங்கிலிக் கண்ணியாய்த்
தொடர்ந்து மயக்கும்
அசத்தலான சரணங்களும்

மூன்றையும்
மிக நேர்த்தியாய் இணைத்து
அட டா என தலையாட்டவைக்கும்
அருமையான முடிவும்

மிகச் சரியாய் அமைந்தால்
ஒரு கவிதை எழுதி விடலாம் என
அனுதினமும் காத்திருக்கிறேன்

உங்களைப் போலவே நானும்..
வெற்று உரலை வேதனையுடன் இடித்தபடி....

Thursday, November 19, 2015

அழகு .....

பூமிக்கு நீர் நதி அழகு 
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

பழைய பஞ்சாங்களுக்குப் பஞ்சாங்கம்.....

பழைய பஞ்சாங்களுக்குப் பஞ்சாங்கம் குறித்துத்
தெரியும் இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை

அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்புஆரியப்பட்டர் என்பவரால் அறுபது
வருடங்களாகக்  காலத்தைப் பிரித்துக் 
கணிக்கப்பட்டது.

அது குறித்த முழுமையான விளக்கத்தை ஏதும்
எழுதப் போவதில்லை.எதேச்சையாக வேறு ஏதோ
ஒரு காரியத்திற்காகப் புரட்டுகையில் இது இப்படி
இருப்பதாக என் உறவினர் சொன்னார்

அதை அப்படியே பகிர்ந்துள்ளேன்

நம்புபவர்கள்  தொடர்ந்து நம்புவார்களாக

வழக்கம்போல் இது எதேட்சையான நிகழ்வு என
நம்புபவர்கள் அப்படியே தொடர்வார்களாக

வாழ்த்துக்களுடன்...............



Tuesday, November 17, 2015

வரங்களைக் கூட கொடிய சாபமாக்கி...



வெறித்துப் பயந்து ஓடும்
தன்மை கொண்ட பூனையாயினும்
முழு வழியையும் அடைத்துத்
தாக்கக் கூடின்
அது தப்பிக்கக் கழுத்தில்தான் பாயும்

பள்ளம் பார்த்து
தானே ஒதுங்கி ஓடும் நீராயினும்
அதன் போக்கனைத்தும் அடைத்துத்
தொலைப்போம் ஆயின்
அது நம் போக்கை அடைக்கத்தான் செய்யும்

வறுமையில் வயிறு
ஒட்ட ஒட்டக் கிடப்பவன்
பாடம் கற்காது போயின்
செல்வச் சேர்க்கையின் போது
அது நிச்சயம் உதவாதே போகும்

கோடையில் நீர்த்தேடி
தினம் அலைந்துத் தொலைப்பவன்
அதன் அருமை புரியாது போயின்
அது அதிகம் கிடைக்கையில்
நிச்சயம் அது வீணாய்த்தான் போகும்

ஓட்டைப் பானையில்
நீர்ப்பிடிக்கும் மூடனாய்
இயற்கையின் பால பாடங்களையே
அறியாத மூடனாய்
இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறோம் ?

வலியக் கிடைக்கும்
வரங்களைக் கூட
கொடிய சாபமாக்கி
அவதிப்படும் மூடர்களாய்
இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் ?

Monday, November 16, 2015

வளரும் சேவை இயக்கம்

நாங்கள்  இருக்கிற  சங்கத்தின் மூலம்  சேவைகளைத்
தொடர்வதுடன்  புதிதாக ஒவ்வொரு ஆண்டும்
ஒரு புதிய சங்கத்தைத் தோற்றுவிப்பதை  எங்கள்
தலையாயக் கடமையாகக்  கொண்டு செயலாற்றி
வருகிறோம்

அந்த வகையில்  இந்த ஆண்டு மதுரை திரு நகரில்
மதுரை திருநகர்  பெஸ்ட்   என்னும் பெயரில்  டாக்டர்
எம் சுப்ரமணியம் அவர்கள் தலைமையில்  சேவையில்
ஈடுபாட்டுடன் உள்ள   சமூகத்தில்  உயர்ந்த
அந்தஸ்தில் உள்ளவர்களாகத் தேர்ந்தெடுத்து
மாவட்ட  ஆளுநர் எஸ்  இராமசுப்பு பி.எம் ஜே  எப்
அவர்கள்மூலம்  உலக அரிமா சங்கத்தில்
ஒரு அங்கீ கரிக்கப்பட்ட சங்கமாக   இணைக்க
ஆவன செய்தோம்

அந்த நிகழ்வு  சில புகைப்படங்களை  இங்கு
பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

ஆளுநர்  ,புதிய தலைவர் டாக்டர் சுப்பிரமணியம்
மற்றும் அவர்களது சங்க உறுப்பினர்கள்





அங்கீகரி க்கப்பட்ட  பட்டயத்தைஆளு நர் வழங்கியதும்
வாழ்த்துக் கூறும்அமைச்சரவைச்
செயலாளர்லயன் எஸ்  ஸ்ரீதர்   அவர்கள்

பின் வரிசையில்  மோஹன் மண்டலத் தலைவர் ,
ஆளு நர் எஸ் இராம சுப்பு அவர்கள்
டிலைட்  அரிமா சங்கத் தலைவி
உமா மேடம் அவர்கள்,தலைவர்
டாக்டர் சுப்ரமணியம்  ,துணை
ஆளுநர்  தி தனிகோடி அவர்கள்
லயன்ஜெயக்கொடிஅவர்கள்
அடுத்தது அடியேன்

புதிய  நிர்வாகிகளுக்கும்  உறுப்பினர்களுக்கும்
வாழ்த்துக் கூறுவது  அடியேன் 

எங்கள் அரிமா  சங்க  வழிபாட்டில் "நான்
அரிமா கூட்டங்களில்  கலந்து கொண்டு
விருந்து உண்ணுகிற போது  ..." என்கிற  வாசகம்
உண்டு.அந்த வகையில் எப்போதும் கூட்டம் முடிந்து
ஒரு சிறப்பான விருந்து இருக்கும் .அதையும்
தாராள மனமுடைய    சிலர்  தாமாகவே முன் வந்து
பொறுப்பேற்றுக் கொள்வார்கள்

அந்த வகையில்  இன்றைய கூட்டத்திற்கான
மொத்த செலவையும்   தலைவர் டாக்டர் சுப்ரமணியம்
அவர்களும் செயலாளர் இராமதாஸ் அவர்களும்
பொருளாளர் மோஹன் நாராயணன் அவர்களும்
ஏற்றுக் கொண்டு சிறப்புச் செய்தார்கள்



இக்கூட்டத்தில்  கல்விச் சேவையாக
பொருளாதர நிலையில் பின்தங்கிய  நிலையில் இருந்த
பள்ளி மாணவிகளுக்கு  பண உதவியும்
ஏழை  கு டும்பங்களை மிகச் சரியாகத்   தேர்ந்தெடுத்து
உதவி செய்ததும்  மகிழ்வளிப்பதாக  இருந்தது

நான் என்பதை நாம் என மாற்றி

உறவுகளை வளர்ப்பது
சேர்ப்பதில் கொள்ளும் சுகத்தை
கொடுத்துக் காண்பது
ஜாதி மத குறுகிய எல்லைகள் கடந்து
மனித நேயம் வளர்ப்பது
இவைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில்
இணைப்பில் இருப்பது
சுகமாகத்தான் இருக்கிறது


பக்கம் பக்கமாய்  பதிவு  எழுதவதை விட  இதுபோல்

சிறு சிறு   பொது நல காரியங்கள்  தவறாது  செய்வதுதான்
அதிக மகிழ்வளிப்பதாக  உள்ளது

நீங்களும் நிச்சயம் மகிழ்வீர்கள்  என்பதற்காகவே

இதை  இங்கு பகிர்கிறேன்

வாழ்த்துக்களுடன்...


Sunday, November 15, 2015

"ததாஸ்து "

வெள்ளிக் கிண்ணத்தில்
அமுதத்தை ஏந்தியபடி
தாயின் தவிப்போடு பிரபஞ்சம்
வெளியே பரிதவித்திருக்க

தாளிடப்பட்ட சிறிய வீட்டினுள்
தாழ்பாள் அகற்றத் தெரியாது
பசியுடன்
தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்

வேண்டும் வேண்டும்
என நேர்மறையாககேட்பதையெல்லாம்
அள்ளிக் கொடுக்கும் ஆர்வத்தில்
பிரபஞ்சம்
வெளியே துடித்துக் கொண்டிருக்க

வேண்டாம் வேண்டாம்
என எதிர்மறையாக வேண்டாதையெல்லாம்
தொடர்ந்து கேட்டபடி
துயரத்தில்
உழன்றுகொண்டிருக்கிறோம் நாம்

நேர்மறையான  வேண்டுதலுக்கு
வாரி வழங்கவும்
"அது அப்படியே ஆகட்டும் " என
ஆசி வழங்கவுமே
அருளப்பட்ட பிரபஞ்சச் சக்தியிடம்

எதிர்மறையானவைகளைக்
கேட்டுக் கேட்டே
எதுவும் கிடைக்காது
நொந்து போகிறோம் நாம்
ஏமாற்றத்தில் வெந்து சாகிறோம் நாம்

ஒளி வேண்டிக் கேளாது
இருள் விலகக் கேட்டும்
வளம் வழங்கக் கேளாது
வறுமை போக்கக் கேட்டும்
சுகம் நிறையக் கேளாது
துயர் நீக்கக் கேட்டும்  

நாமும் வாழ்வில் எதுவும் பெறாது
 பிரபஞ்சத்தையும் கொடுக்க விடாது
வாழ்வில்
"தப்பாட்டம் "ஆடி  நோகும் நாம்

இனியேனும்
பிரபஞ்ச சக்தியை புரிய முயல்வோமாக

இனியேனும்
கேட்கத் தெரிந்து
பெறவேண்டியதைப் பெற முயல்வோமாக

தட்டத் தெரிந்து
 திறவாத வாயில்களைத் திறக்க அறிவோமாக

தேடத் தெரிந்து
அடையாத உச்சங்களை அடைந்து மகிழ்வோமாக

Saturday, November 14, 2015

மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "

ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
இலக்கற்றுத் திரியும் விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "

Friday, November 13, 2015

இது கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்கிற இடம்

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம நீ  கொடுத்தது
உன்னிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தைக்  கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்திப்  பெருத்த" கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான்  நண்பன்

" நம்பி( க் )"கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

நம்பி வெறுங் "கை "யுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

முழுதும் நம்பி
அள்ளவென்றே அண்டாவுடன் வருபவர்கள்
அதிகம்  கொண்டு போகிறார்கள்
.
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

நண்பன்
கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது
ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

Thursday, November 12, 2015

நேரு மாமா பிறக்கும் முன்பும்....

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை  
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

முரண் சுவையும் நகைமுரணும்

"நெருப்பில் பூத்த மலர் "
அழகியச் சொற்றொடர்
இலக்கியத்தில் முரண் சுவை

நடைமுறைச் சாத்தியத்தில்
யதார்த்தத்தில் நகைமுரண்

"தண்ணீரில் நிற்கும்போதும் வேர்ப்பது "
இனிக்கிற வாக்கியம்
கவிதைக்கு முரண் சுவை

யதார்த்தமாய் சிந்திக்கையில்
நடைமுறையில் நகைமுரண்

"கட்சியே குடும்பமாய்.."
வித்தியாசமான அணுகுமுறை
அரசியலில் முரண்சுவை

"குடும்பமே கட்சியாய் .."
அரசியலில்  நகைமுரண்

வேறு கோணத்தில் பார்க்க
முரண்சுவை  நகைமுரணாவதை
சொல்லிப் போனவிதம் முரண் சுவை

இந்த விதண்டாவாதத்தை
ஒரு கவியாக்கிக் கொடுத்தது
 நிச்சயம்  நகைமுரண்

Wednesday, November 11, 2015

கலிகாலத்தில் பிழைக்கும் இராஜ இரகசியம்

மன வயிற்றில்
கொதிகலனாய் எரியும்
தன் முனைப்புப் பசிக்கு
இரைதேடி
வெறிபிடித்தலையும்
மிருகங்களுக்கு
ஞான போதனை செய்து
வெறிகூட்டிவிடாது
கொஞ்சம் உணவிட்டுப் போ
அது தவறென நிச்சயம் தெரிந்தாலும்...

நம்பிக்கைத் துரோகம்
எதிரிக்குச் சாத்தியமில்லை
உடன் ஒட்டித் திரியும்
நண்பானாலேயே
ஆகச் சாத்தியம் எனத் தெரிந்தும்
மனம் சுருக்காது
இருப்பதில் சிலவற்றை
எடுத்தே வைத்திரு
அது  ஏமாளித்தனம் எனத் தெரிந்தாலும்...

பகுத்தறிவின் பகட்டுவேஷமும்
பக்திமானின் பகல்வேஷமும்
ஏமாற்றுக் காரர்களிடம்
சிக்கிவிட்ட சாகச முகமூடி எனச்
சந்தேகமின்றித் தெரிந்தாலும்
ஒருபக்கமும் சாயாதிரு
வீட்டுக்குள் விபூதியும்
வெளியிடத்தில் கருப்புச்சட்டையுமே
பிழைக்கும் வழியெனப் புரிந்து கொள்
இது பச்சோந்தித்தனம் எனத் தெரிந்தாலும்....

சமத்துவமும் சகோதரத்துவமும்
அடிமனதில் இருந்தாலும்
கண் சிவப்பையும்
முறுக்கு மீசையையும்
பார்வையில் இருக்கும்படி
எப்போதும் பராமரி
பிரச்சனைகுரியவன் எனும்படியான
பாவனைப் பராமரிப்பே
கலிகாலத்தில் பிழைக்கும் இராஜரகசியம்
இது மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும்...

Tuesday, November 10, 2015

மூலம் அறியும் ஞானம்....

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

காலமதைப் பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

கருவின் நோக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
மூலம் அறியும் ஞானம் பெறுவோம்
எச் செயலிலும்
எளிதாய் சுகமாய்ச் சிகரம் தொடுவோம்

மாயக் கட்டுகளை ப்பிய்த்தெறிந்து.....

குடலுக்கு
உணவிடுபவனை விட
உடலில்
கிச்சு கிச்சு மூட்டுபவர்களே
நம்மை அதிகம்  கவர்கிறார்கள்

உடற்  சக்தி
பெருக்குதலைவிட
வெளிப்பூச்சே
நம்மை அதிகம் கவர்கிறது

திரு விழா நாட்களில்

வகை வகையாய்
உண்டு களிக்கக் காரணமானவர்களை
முற்றாக மறந்து

அழகழகாய்
கண்டு களிக்கத் தக்கவர்களையே
கண்டுச் சொக்குகிறோம்

உறவுகளை நண்பர்களை
கண்டு  அளவளாவி
மகிழ்தலை விடுத்து

முட்டாள் பெட்டிக்குள்
முழு நாளையும் திணித்து
முடங்கிக் கிடக்கிறோம்

நம் நேரமதை சக்தியை
நம் பொருளை
நயவஞ்சகமாய் கவருபவர்களில் மயங்கி

பண்டிகைகள் கொண்டாடும்
மூல காரணம் தெரியாது
சம்பிரதாயங்களில் சறுக்கிவிழுகிறோம்

திரு விழாக்கள்
பண்டிகைகள்
பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை அல்ல

அதன் காரணம் மறந்த
நம் எதிர்திசைப் பயணமே
எல்லா மடத்தனத்திற்கும் மூல காரணம்

இவைகளையெல்லாம்
என்றுநாம்  அறியப் போகிறோம் ?

மாயக் கட்டுகளைப் பிய்த்தெறிந்து
என்றுநாம்  தெளியப் போகிறோம்

Monday, November 9, 2015

வெறும் நாளும் திரு நாளும்...

தானும் மகிழ்ந்திராது
தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்க முயலாது
கடக்கிற நாளது
திரு நாள் ஆயினும்
அது வெறும் நாளே.

தானும் மகிழ்ந்து
தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்கச் செய்யும்
எந்த நாளதும்
வெறும் நாளாயினும்
அதுதான் திரு நாளே.

நம் வாழ்வில்
இனி வரும் நாளெல்லாம்
திரு நாளாகவே இருக்க
அருளவேணுமாய்
வாலறிவனை வேண்டி
என் வாழ்த்துக்களை
வழங்கி  மகிழ்கிறேன்

வாழ்த்துக்களுடன்....

Sunday, November 8, 2015

இதழ்கள் இரண்டும் .....

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
பொங்கும்  இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
இன்பம் நிலைக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

மனைவி கூட நமக்குப் புத்தன்தானே

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்தியக்  களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல.....

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
வெறுமனே இருக்கத் துவங்கிவிடுவேன்

அதிகாலையில் இருந்து
அடுக்களையில்  தினமும்
தனியாய்ப்  போராடி
அனைவருக்கும்  முகம்பார்த்து
இதமாகப்  பரிமாறி முடித்து .....

அவசரம் அவசரமாய் உண்டு
அது தரும்   அலுப்பில்
சிறிதும் ஓய்வெடுக்க முயலாது......

பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
மீண்டும் அடுத்த வேளைக்கென
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைப புரிந்தது  முதல்....

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததில் உடன் லயிக்கத் துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட
 நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட
நமக்குப் புத்தன்தானே

Saturday, November 7, 2015

பிரம்ம இரகசியம்

அதிக அளவு உணவு
சத்தானதில்லை
அதில் சக்கைகளே
அதிகம் இருக்கும்

குறைந்த அளவாயினும்
சத்தானதே சரியானது
அது சுகமானதும் கூட
அது சரியானதும் கூட

அதிகம் நேரம் பேசுவது
சிறப்பானதில்லை
அதில் தேவையற்றவை
அதிகம் இருக்கலாம்

குறைந்த நேரமாயினும்
தேவையானதே சரியானது
அது முறையானதும் கூட
பயன்தருவதும் கூட

நாம் கதையை விட்டும்
கட்டுரையை விட்டும்
கவிதையை தேர்ந்தெடுக்கும்
இரகசியம் தெரிந்தவர்களுக்தானே
இந்த பிரம்ம இரகசியம் புரியும்
மற்றவர்களுக்குப் புரியுமா என்ன ?

Friday, November 6, 2015

மாதாந்திர தொடர் சேவை


நான் சார்ந்திருக்கிற அரிமா சங்கத்தில்
அகில உலக அளவில் தலைவராக இருக்கிறவர்கள்
சில சேவைத் திட்டங்களை நிறைவேற்றும்படி
அறிவுறுத்துவார்கள்

மாவட்ட ஆளு நராக 
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களும் தம்முடைய
மாவட்டத்திற்கு ஏற்றவகையில் சில 
சேவைத் திட்டங்களை நிறைவேற்றும்படி 
அறிவுறுத்துவார்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு மாவட்ட ஆளு நராகத்
தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருக்கிற 
லயன் இராம சுப்பு பி எம் ஜே ஃப் அவர்கள்
இளம் தலைமுறைகளை உருவாக்குவோம்,
கண்களை வாழ்வைப்போம்,பசிப்பிணி ஆற்றுவோம்
பசுமைகாப்போம் என்கிற திட்டங்களோடு
மாதந்திர தொடர் சேவைத் திட ஒன்றையும்
செய்தல் வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்

வட்டாரத் தலைவர் என்கிற முறையில்
எனது வட்டாரத்தில் உள்ள  சங்கங்களின்
சேவைத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற
தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு
அந்த சேவைத் திட்டங்களில் கலந்து கொண்டு
சிறப்புச் செய்வதும் எனது பணியாகும்

அந்த வகையில் இன்று எனது வட்டாரத்தில்
உள்ள சிறந்த சங்கமான டிலைட் அரிமா சங்கப்
பொறுப்பாளர்கள் கள்ளிக்குடி கிராமத்தில்
ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு
இரத்தவகையை சோதித்து பதிவு செய்து 
கொடுத்ததோடு ஹீமோகுளோபின் 
சோதனையும் செய்து கொடுத்தார்கள்

இந்த நிகழ்வுக்கு என்னால் ஆன உதவிகளைச் 
செய்ததோடு கலந்து கொண்டு சிறப்பிக்க முடிந்ததும் 
மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக இருந்தது

எண்ணத்தால் இமயம் அசைப்பதை விட
இதுபோல்  சிறு சிறு செயல்களால் துரும்பசைப்பதுவே
வாழ்வதற்கு அர்த்தம் கொடுப்பதாகவும் இருக்கிறது

...



Thursday, November 5, 2015

நிஜமும் நிழலும்

வனவாசம் முடிந்து திரும்பும்
ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும்
பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா
நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய்
இருளோடு இருளாய்
இறுகிப் போய்க் கிடந்தாள்...

இளமையை யும்
அழகையும்
 உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட
 ஊர்மிளை

அடக்குமுறைக்குப்
பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்தப் 
பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"
எனப் பணிகிறாள்

மெல்ல உதடு  சுழித்துப் 
புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "
என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது

Wednesday, November 4, 2015

தேர்தல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும்
மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச் செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஷ  அணிகளாகவே
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி
ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம் பிழைப்புத் தேடி

இனி அடுத்த விளையாட்டு
எப்போது வரும்  என
ஆவலாய் விசாரித்தபடி ..

Tuesday, November 3, 2015

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

 ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாதுத்  திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

 மூழ்கிவிடாது
ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில்
எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
எல்லை  மீறியதே  இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததைத்  தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்

எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்

நாங்கள் என்றும்  எப்போதும்
ஏணியாகவும் தோணியாகவும்
தொடர்ந்து  மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே
மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

என்று இளவரசியை மணந்து சொகுசாய் வாழப் போகிறோம் ?

சிறு வயதில்
நானறிந்த அரக்கனின் உயிரெல்லாம்
அவனிடத்தில் இருந்ததே இல்லை

அது எப்போதும்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலைதாண்டி
இருண்ட குகையின்
ஒரு கூண்டுக் கிளியிடம் தான் இருந்தது

முட்டாள் வீரர்கள் எல்லாம்
நேரடியாய் மோதி
வீணாய் வீர மரணமடைய
புத்திசாலி இளவரசன்
ஒருவன் மட்டுமே
கிளிதேடிப் போவான்

அரக்கனைக் கொன்று
இளவரசியையும் மணப்பான்

இப்போதும்
அரக்கனாய் அழிச்சாட்டியும் செய்யும்
அனைத்து தீவினைகளுக்குமான உயிர்
அனைத்து அழிவுகளுக்குமான உயிர்
நிகழ்வுகளில் இல்லை
நிகழ்த்துபவனிடமும் இல்லை
சூழ்நிலைகளிலும் இல்லை

அது  அரசின் அரவணைப்பில் இருக்கிறது
அது"பார்"களில் இருக்கிறது
அது பாட்டிலில் இருக்கிறது

அன்றைய முட்டாள்
வீரர்கள் போல்
சவத்துடன் மோதி
சக்தியை இழக்காமல்
என்று
நிஜத்துடன் மோதி
நிம்மதி பெறப்போகிறோம்

பள்ளியை விட்டு
கோவில்களை விட்டு
எட்டத் தள்ளி என்றில்லாமல்

மக்களை விட்டு
தமிழகம் விட்டு
நாட்டை விட்டு
தள்ளி வைக்கப் போகிறோம்

என்று நாமும்
புத்திசாலி இளவரசனாகப் போகிறோம் ?

என்று சுகவாழ்வேனும் 
இளவரசியை மணந்து
சொகுசாய் வாழப் போகிறோம் ?

விசித்திரப் பூதங்கள்

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்ற
 எந்த அரசும் விசித்திர பூதங்களே

அதனால்தான்..
குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தும் அவை களுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரிவதே இல்லை

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவை களுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரிவதே இல்லை

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு பொருட்டாய் இல்லை

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை

ஏனெனில்
எதிர்ப்பாளர்களை மிகச் சரியாக்க் கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய்
அதிகார ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை

நாம் இப்படிப  பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை

Sunday, November 1, 2015

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்