Tuesday, November 3, 2015

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

 ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாதுத்  திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

 மூழ்கிவிடாது
ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில்
எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
எல்லை  மீறியதே  இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததைத்  தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்

எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்

நாங்கள் என்றும்  எப்போதும்
ஏணியாகவும் தோணியாகவும்
தொடர்ந்து  மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே
மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

20 comments:

Kasthuri Rengan said...

nice

தி.தமிழ் இளங்கோ said...

நாங்கள் யார்? வாக்காளர்களாகிய நாம்தான். ஒன்றும் சொல்வதற்கில்லை. உணர்ச்சிகரமான கவிஞரின் வார்த்தைகள்!

Kasthuri Rengan said...

vote1

S.P.SENTHIL KUMAR said...

அருமை அய்யா, சிந்திக்க வைத்த சிறப்பான கவிதை!
த ம 4

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

கிளிப்பேச்சு பேசி இலவசங்களில் பூரித்துச் சொத்தை, உரிமையை மறந்த பதர்கள்...
அருமை ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

நன்று...

sury siva said...

அப்பாவி கணவன்மார்களைச் சொல்கிறீர்களோ ?

எல்லா வரிகளுக்குமே பொருந்துகிறது.


இருந்தாலும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
வீட்டுக்காரியிடம் பைனலா கேட்டுக்கிறேன்.
எதுக்கு பொல்லாப்பு வயசான காலத்துலே !
இத்தனை நாள் நல்ல பெயர் எடுத்தாச்சு.

சுப்பு தாத்தா

Yaathoramani.blogspot.com said...

sury Siva //

அட ஆமாம்
நீங்கள் சொன்னவுடன்தான்
எனக்கும் அப்படித் தெரிகிறது
நானும் உங்க்களைப் போல்
கொஞ்சம் சரி செய்து கொள்கிறேன்
சுவாரஸ்யமான பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி

sury siva said...

//நீங்கள் சொன்னவுடன்தான்
எனக்கும் அப்படித் தெரிகிறது//
அதுவும்
முட்டாள் யானை என்று வர்ணித்தீர்களே !1
அது மூன்று லோகத்துக்கும்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும்
பொருந்தும்.

அப்படி இருக்கச்சே,
எனக்குத் தான் இந்த வர்ணனை அப்படின்னு
பெருமை அடிச்சுக்கக் கூடாது.

இது என் துணைவியார் லீகல் ஒபினியன்.
சுப்பு தாத்தா.

ராமலக்ஷ்மி said...

அருமை.

இளமதி said...

மாற்றம் சொல்லில் மட்டுமே இருக்கிறதே!
மாறாதா ஒருபோதும்...
சிந்தனைச் சிதறல் கவியாகச்
சிறப்பாக இருக்கிறதையா!
வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

நம் சக்தி அறியாமல் இருக்கிறோம் என்பதே தெளிவுதானே

”தளிர் சுரேஷ்” said...

அருமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

அருமையான கவிதை சிந்திக்க வேண்டும் இன்னும் யானை போல இனி இருக்கக்கூடாது.

கீதமஞ்சரி said...

ஆளும் வர்க்கத்தைப் பற்றி அடங்கிக்கிடக்கும் வர்க்கம் முன்வைக்கும் வரிகள்... எப்படி அடங்கிக்கிடக்கிறோம் என்பதை அறியமுடிந்தவர்களால் ஏன் அடங்கிக்கிடக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள இயலாமை அவலம். அருமையான வரிகள். பாராட்டுகள் ரமணி சார்.

Thulasidharan V Thillaiakathu said...

நமது உரிமையும் சக்தியும் நமக்கே தெரியலையோ....நல்ல வரிகள்...நண்பரே!

Unknown said...

நம் பலம் நமக்கு தெரியாவிட்டாலும் 'அவர்களுக்கு ' தெரிகிறது :)

KILLERGEE Devakottai said...

நல்ல கருத்தை உள்ளடங்கியது நன்று
தமிழ் மணம் 10

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிந்திக்க தூண்டும் வரிகள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.

Post a Comment