Sunday, December 29, 2013

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்  )

Friday, December 27, 2013

குழந்தைகளோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவை  உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

இவை எதற்கும் நேரமில்லையெனில்
கவலை கொள்ளவேண்டாம்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

Wednesday, December 25, 2013

சிகரம் தொட்டு மகிழ்வோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

Monday, December 23, 2013

இன்றுபோல் என்றும் வாழ்க

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Saturday, December 21, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Thursday, December 19, 2013

இணைத்துக் கொள்வதில்உள்ள உண்மையான சுகம்

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

(வெறுமனே பதிவுகளை  படித்துச் செல்வதை விட
 பதிவர்களை  இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில்  உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை   )

Tuesday, December 17, 2013

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

Sunday, December 15, 2013

தலை நகரப் பதிவரே/தலையாயப் பதிவரே

சிறந்ததை மட்டுமே செய்தாலும்
அதனைச் செய்வதற்குரிய
முழுத் திறன்பெற்றுச் செய்தாலும்
செய்வதனைத் தொய்வின்றித்
தொடர்ச்சியாகச் செய்தாலும்
சுவாரஸ்யமாகச் செய்தாலும்
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும்
தொடர்ந்து முன்னணியில் இருக்கும்படியாகவும்
செய்வதென்பது எத்துறையிலும் எவர்க்கும்
என்றும் நிச்சயம் சாத்தியமில்லை

மிக நிச்சயமாக பதிவுலகில் அது சாத்தியமே இல்லை

அது எப்படியோ  நமது தலைநகரப் பதிவரே
பதிவுலகின் தலையாயப் பதிவரே
உங்களுக்கு மட்டும் அது சாத்தியமாகி இருக்கிறது

செப்டம்பர் 2009 இல் குரங்கு நீர் வீழ்ச்சியில்
நண்பர் நடராஜனுடனான அனுபவத்தை
நகைச்சுவைத் ததும்ப தலைக் காவிரிபோல்
சொல்லத் துவங்கி இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு  அனுமாரில் தொடர்ந்து கொண்டிருக்கும்
நேர்த்திஎம்மில் ஏற்படுத்திப் போகும் பிரமிப்பும்

சந்தித்ததும் சிந்தித்ததும் என்கிற தலைப்பிற்கு ஏற்ப
அன்றாட நினைவுகள் குறித்த ஆழமான சிந்தனையை
அழுத்தமாகவும் அதே சமயம எவர் மனமும்
புண்படாமல்  சொல்லிப்போகும் பக்குவமும்

பயணப்படும் இடங்களிலெல்லாம் பதிவர்களை
மனதில் கொண்டு அனைத்துத் தகவல்களையும்
சேகரித்து அருமையாகக்  கொடுப்பதோடு
அற்புதமான புகைப்படங்களையும் பகிர்ந்து
 பதிவர்களுக்கும்உங்களுடன் பயணிப்பதைப் போன்ற
மனத் திருப்தியை ஏற்படுத்திப்போகும் திறனும்

பதிவர்கள் சந்திப்பு எனில் (குடும்பத்தில் அனைவரும்
பதிவர்கள் என்பதால்)குடும்பத்தோடு
கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது
அதில் குடும்ப விழாவில் கலந்துகொள்வதுபோல்
மனமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு
அது குறித்தப் பதிவில்அனைவரின்
 புகைப்படங்களையும் பெயரோடு வெளியிட்டுச்
 சிறப்புச் செய்த பாங்கும்---

எம்மில் ஏற்படுத்திப் போகும் மதிப்பு.பிரமிப்பு----

தமிழ்மண தரவரிசைப்பட்டியலில்
 5 ஆவதாகத் தொடர்வதை விட

300 ஐ நெருங்கிய பின்தொடர்பவர்களைக்
கொண்டிருப்பதைவிட

2 இலட்சத்தை நெருங்கும் பக்கப் பார்வையாளர்களைக்
கொண்டதை விட

600 தரமான பதிவுகள் தந்தப்
பிரமிப்பை விட

கூடுதலானது எனச் சொன்னால்
நிச்சயம் அது மிகைப்படுத்தப்பட்டதல்ல

இந்தப் பதிவில் நான் தங்கள் பெயரைக் குறிப்பிடவேண்டிய
அவசியமே இல்லை
(அது சூரியனை லைட் அடித்து காண்பிப்பது போலாகிவிடும் )

ஏனெனில்
இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர்
தமிழ்ப் பதிவுலகில் உங்களையன்றி
வேறு யாருமில்லை என்பதை பதிவர்கள் அனைவரும்
அறிந்ததுதானே ?

தங்கள் சாதனைகள் தொடர பதிவர்கள்
அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள்
                                                                                                                                                                            

Friday, December 13, 2013

வரம்வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Thursday, December 12, 2013

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Tuesday, December 10, 2013

பாரதிக்கு தமிழன்னை பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா 

Sunday, December 8, 2013

உலகில் காணும் காட்சி யாவும் கவிதைக் கோலம் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

Thursday, December 5, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
திசைத் தெரியா  வெளிதனில்
என்னை விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை

விழாதிருக்க எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு

குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

Tuesday, December 3, 2013

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  


அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Sunday, December 1, 2013

பித்தலாட்டப் போதனைகள்

ஏழையின் எளிமையது
இகழ்ந்துதினம்  தூற்றப்பட
செல்வரவர்  எளிமையதோ
சிறப்பாகப் பேசப்படும்

பலவீனன் பொறுமையது
ஏளனமாய் பார்க்கப்பட
பலசாலி பொறுமையோ
கவனித்துப் போற்றப்படும்

முட்டாளின் அடக்கமது
எரிச்சலூட்டும் உணர்வாக
அறிவாளியின் அடக்கமதோ
சிகரத்தில் வைக்கப்படும்

தொண்டனின் பலவீனம்
தண்டனைக்கு உரியதாக
தலைவனின் பலவீனம்
பல்லக்கில் ஏற்றப்படும்

உழைப்போரின் தெய்வங்கள்
வெட்டவெளியில் காய்ந்திருக்க
கொழுத்தோரின் தெய்வமதோ
தங்கத்திலே தகதகக்கும்

மனிதஜாதி இரண்டென்பது
பாலினத்தில் மட்டுமல்ல
மனிதநீதி  அதுகூட
இரண்டெனவேத் தெளிந்திடுவோம்

அனைத்திலுமே சமத்துவத்தை
அடைகின்ற வரையினிலே
பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம்