Tuesday, December 3, 2013

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  


அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

33 comments:

அருணா செல்வம் said...

உண்மை தான். நிச்சயம் புரிந்து விடும்.
அல்லது நீங்களே புரியவைத்து விடுங்கள் இரமணி ஐயா.

பால கணேஷ் said...

எல்லாரோடயும் கம்யூனிகேட் பண்ணனும்னா தனித்தமிழ்ல மட்டும் பேசி என்ன பண்ணிர முடியும்? கோவைல ஒரு தடவை கண்டக்டர்கிட்ட ‘மலர் அங்காடிக்கு ஒரு சீட்டு கொடுங்கள்’ன்னு கேட்டதுக்கு, ‘எங்கிங்க போவணும்?’ என்று திரும்பக் கேட்டு, ‘பூ மார்க்கெட்டுக்கு ஒரு டிக்கெட் குடுப்பா’ என்றதும், ‘இப்படி முதல்லயே கேட்டிருக்கலாம்லீங்க’ என்றுவிட்டு டிக்கெட் தந்ததை மறக்க முடியவில்லை என்னால். அதன்பின் தனித்தமிழ் பேசும் ஆசையை விட்டுவிட்டேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழ் என்பது தமிழகத்தில் அரசியல் மொழியாகிவிட்டது.

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.4

கோமதி அரசு said...

கவிதை அருமை.
சுத்த தமிழ் பேசுவது கஷ்டம் தான்.

கவியாழி said...

விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்//ஆம்

இராஜராஜேஸ்வரி said...

புரியுமாறு பேசினால் போதுமே..!

தி.தமிழ் இளங்கோ said...

// ஏனில்லை எதிலும் தமிழ் ? //
நல்ல கேள்வி. புதிய தமிழ் சொற்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பழக்கத்திற்கு கொண்டுவர அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். பல தமிழ் சொற்கள் அரசு அறிவிப்பு, அரசு ஆவணங்கள் என்று அரசு சம்பந்தப்பட்டவற்றின் மூலமே பழக்கத்தில் வரும்.

ஸாதிகா said...

விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்//ரொம்ப சரி.த.ம 8

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேல் தூய தமிழில் பேசுவது சிரமம் என்றாகி விட்டது...

Unknown said...

நம்ம மதுரையில் பல்லாண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் சங்கத்திற்காக ஒதுக்கப் பட்ட நிலம் ,இன்னும் மண் மேடாகவே காட்சி தருவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ?தமிழ் எப்படி வளரும் ?
த.ம 1 ௦

Avargal Unmaigal said...

//"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்//

தூய தமிழில் பேசுகிறோமோ இல்லையோ ஆனால் மேலே சொன்ன 15 பொருட்களையும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்தாலே அதிசயம்தானே tha.ma 11

Yarlpavanan said...

எங்கும் எதிலும்
தனித் தமிழ் மலர வேண்டும்.
தேவைப்பட்டால் மட்டும்
பிறமொழி சேர்க்கலாம்.
ஆனால்,
எங்கும் எதிலும்
பிறமொழி பேசலாம்
தேவைப்பட்டால் மட்டும்
தனித் தமிழ் பேசலாம் என்ற நிலை
வந்துவிடக்கூடாதே!

poo@giasmd01.vsnl.net.in said...

நண்பரே!
மிகவும் புத்திசாலித் தனமாகக் கவிதை எழுதிவிட்டதாக நினைப்போ?

இன்றைக்கு 20% அளவு தமிழ் பேசினால் நாளைக்கு 20.01% ஆவது தமிழ்ப் பேசவேண்டும் என்பது உங்களுக்குப் புரியவில்லையென்றால் நீங்கள் தமிங்கிலர் என்று சொல்லிப் போங்களேன். முட்டாள் தனத்திற்கு ஓர் எல்லையில்லையா?

மிதிவண்டிப் பாகங்களுக்குத் தமிழிற் சொற்கள் இல்லையென்று சொல்லாதீர்கள், இருக்கின்றன. அவற்றை நாம் பயன்படுத்த மறுக்கிறோமே என்று முதலில் வெட்கப்படுவோம். இனிமேலாவது முயல்வோம். நாமெல்லோரும் தமிழைக் கைகழுவினால், அப்புறம் தமிங்கிலம் என்னும் கிரியோல் மொழியே நம்மிடை நிலைக்கும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

அன்புடன்,
இராம.கி.

nayanan said...

//அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்
//

இதில் உங்களின் இகழ்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது. ஊக்கம் தருமாறு எழுதியிருந்தால் தமிழுக்குப் பயனுள்ள பதிவாக மாறியிருக்கும்.

...நாக.இளங்கோவன்

s.vinaitheerthan said...

இராம.கி ஐயா அவர்கள் பதிவில் கொடுத்துள்ள விக்கிபீடியா தளத்தில் மிதிவண்டி உதிரிப் பொருட்கள் குறித்த சொற்கள் பெரும்பாலும் நாம் அறிந்த எளிமையான சொற்கள். சொல்லத்தொடங்கினால் வழக்கத்தில் வரக் கூடிய சொற்கள். எள்ளல் தவிர்த்து இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த திரு நாக.இளங்கோவன் எழுதியுள்ளது போல ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Anonymous said...

சுத்த தமிழ் பேசுவது கஷ்டம் தான்.
Vetha.Elangathilakam

துரைடேனியல் said...

அருமையான கவிதை. அழகான கருத்து. மொழி என்பது நமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே. இருந்தாலும் நாம் முடிந்த அளவு தமிழ் பேசலாமே என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. ஆனால் முழுக்கத் தமிழ் பேசுவது நடைமுறையில் இயலாத காரியமே. அது கவிதையில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அருமை.

ADHI VENKAT said...

உண்மை தான்.. எல்லா இடத்திலும் தனித்தமிழ் கடினம் தான்..

மணி மு. மணிவண்ணன் said...

”எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை” என்பதற்கு நீங்கள் என்ன புரிதல் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், தாய்மொழியில் படைத்த சொற்கள் நமக்கு எந்த வித அகராதியும் இல்லாமலேயே புரிந்து விடுகிறது. மக்காட் என்பதை எந்த அகராதியிலும் (ஆங்கிலம் உட்பட) தேடிப் பார்த்தாலும் கிடைக்காது (ஏனென்றால் அது mud guard). இந்த ஆங்கிலச் சொற்களை இடுகுறிப் பெயர்களாக எப்படிப் புரிந்து கொண்டாலும் அது அடுத்த கட்ட வளர்ச்சிச் சிந்தனைக்கு இட்டுச் செல்லாது. லத்தினிலும் கிரேக்கத்திலும் கலைச்சொற்கள் படைத்துக் கொண்டிருந்தவரை ஆங்கிலம் தேங்கித்தான் கிடந்தது. தன் மொழியிலேயே கலைச்சொற்களைப் படைக்கத் தொடங்கிய பின்னர்தான் கணினியியலைத் தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்துப் புரிந்து கொண்டு எண்ணற்ற செயல்களைச் செய்ய முடிகிறது. ஆங்கிலம் இந்தியாவில் மேட்டுக் குடி மொழி. கலைச்சொற்களைத் தமிழில் தருவதன் நோக்கமே எளிதாக யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இன்றைய தமிழர்கள் பலருக்கு ஆங்கில அறிவும் இல்லை. தாய்மொழியறிவு மங்கி வருகிறது. இதனால் படைப்புத்திறன் இல்லாமல் தேக்கநிலை அடைந்திருக்கிறோம். மொழியியல் என்ற துறையை மேலைநாட்டினர் படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் மொழியியல் கருத்துகளைத் தொல்காப்பியத்தில் எண்ணற்ற கலைச்சொற்களைக் கொண்டு எழுதியிருக்கிறார். எங்கே படைப்புத்திறன் வளமாக இருக்கிறதோ அங்கே தாய்மொழி தழைத்திருக்கிறது என்று பொருள். அதனால்தான், சீனாவும், ஜப்பானும், கொரியாவும் ஓங்கி நிற்கிறது. தமிழகம் தாழ்ந்து நிற்கிறது. இதுதான் என்னுடைய புரிதல்.

வெங்கட் நாகராஜ் said...

அரசியல் .....

ரசித்தேன்...

த.ம. 13

Unknown said...

தமிழில் மட்டும் பேச முயலாமல்...
தமிழ்நாட்டில் மட்டுமே உற்பத்தியாகும் மற்றும் தமிழனால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை உபயோகிக்கவும் முயலணும்! மொத்தத்தில் நாம் கண்டு பிடிக்காத டெக்னாலஜியை நாம் யூஸ் செய்யக் கூடாது!
பேண்ட் ஷர்ட் பனியன் ஜட்டி அணியாமல்..கோமணம், வேட்டி, மேல்துண்டு மட்டுமே அணிய வேண்டும்! அப்புறம் அந்த "கிரந்தம்" ..அதை மறந்துவிடாமல் மறந்துவிடுங்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்//

நல்லது. மொழியில் ஆங்காங்கே கொஞ்சம் கலப்படம் இருந்தாலும், நாம் சொல்வது பிறருக்கு நன்கு புரிய வேண்டும் என்பதே மிக மிக முக்கியம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

உஷா அன்பரசு said...

நீங்கள் சொல்ல வந்தது புரிகிறது...
த.ம-15

Anonymous said...

நாம் எதைப் பயன்படுத்துகின்றோமோ அது தான் நிலைக்கும், நூறாண்டுக்கு முன் தமிழில் மிகுந்த சமற்கிருத சொற்களே இருந்தன, இன்று அவை இல்லை, ஆங்கிலம் உண்டு, நூறாண்டு கழித்து ஆங்கிலமும் இல்லாமல் போகலாம், தமிழில் செந்தமிழாய் பேச வேண்டாம், இருக்கும் தமிழ் சொற்களை ஆங்கிலம் கலக்காமல் பேசினாலே போதும். ட்ரை பண்றேன் என்பதை முயல்கிறேன் எனக் கூற ஏன் நமக்குத் தயக்கம். மலர் அங்காடி என்பதை விட பூச்சந்தை எனக் கேட்டிருக்கலாம்.

தமிழில் பேச வெட்கம் இது ஒருவித தாழ்வு மனப்பான்மையே, புதிய பொருட்களை சந்தையில் வரும்போது ஆங்கிலச் சொற்களை முதல் 2 ஆண்டு தடைசெய்துவிட்டு தமிழில் அறிமுகப்படுத்திப் பாருங்கள், 3-ம் ஆண்டில் ஆங்கிலச் சொல்லை சேர்த்து விற்றாலும் தமிழில் தான் கேட்போம். தக்காளி, மிளகாய், பப்பாளி எல்லாம் இங்கு அறிமுகம் செய்யும் போது தமிழ் பெயர் வைக்கப்பட்டது எப்படி, இன்று தக்காளி என்பதைக் கூறினாலே நமக்குப் புரியுதா இல்லையா?

--- விவரணம் இணையதளம். 

G.M Balasubramaniam said...

சில வருடங்களுக்கு முன் சென்னையில் பேரூந்தில் பயணப் பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நடத்துனர் தூய தமிழில் பேசுவதை ஆச்சரியத்துடன் கவனித்த நினைவு.

செல்வா said...

நல்ல வேடிக்கை! ஆங்கிலேயனாலும் தூய ஆங்கிலத்தில் பேசமுடியாது :) தமிழ் விக்கிப்பீடியா 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசிய ஆழி பதிப்பகத்தின் திரு செந்தில்நாதன் ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். அவர் ஒரு தானுந்து (மகிழுந்து, "கார்") நிறுவனத்துக்கு ஓர் ஆவணத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது அந்நிறுவனத்தார் சொன்னார்களாம், சக்கரம் வேண்டாம் சார், வீல் என்றே 'போட்டுங்க' !! இப்படியான போக்குகள்தான் ஐயா சிறிதளவும் தமிழையும் வாழ விடாமல் செய்கின்றது.
கிண்டல் அடியுங்கள்!. அதில் உண்மை இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் ஏன் இப்படித் தாழ்த்திக்கொள்வதில், நம்மையே
சாய்த்துக்கொள்வதில் இத்தனை வன்மமகிழ்ச்சி என்றுதான் புரியவில்லை!
மிகவும் கெட்டிக்காரத்தன்மையாகச் சொல்லித் தன் குடும்பத்தையே அழிப்பார்களா? தன் பிள்ளைகளைச் சாக விடுவார்களா? தங்கள் சொத்துகளைச் சாகக்டையில் தள்ளுவார்களா? நல்வீணையைத் தெருவில் எறிவார்களா?
எங்கிருந்து வந்தது இந்த இழிபோக்கு?
சிலருக்கு வச்சா குடுமி அல்லது மொட்டை என்பதைத் தவிர ஏதும் தெரியாது போல! கலப்பில்லாமல் எந்த மொழியும் இல்லை. தமிழும் விதிவிலக்கில்லை. ஆனால் எந்த அளவுக்குக் கலப்பு என்பது மொழிக்கு மொழி வேறுபடும். கிண்டல் அடித்து நான்கு பேர்கள் சிரிப்பார்கள் என்பதற்காக உங்கள் பிள்ளைகளின் கால்களை வெட்டுவீர்களா இரமணி? வடிகட்டின தாழ்வுமனப்பான்மையாலும், அடிமை உணர்வாலும், அறிவின்மையாலுமே தம் மொழியை அழிக்கத் துணை போகிறார்கள் பலர். தூய தமிழ் பேச வேண்டாம், எழுத வேண்டாம், ஐயா, நல்ல தமிழில் பேசலாமே, எழுதலாமே! ஆயிரம் புதிய பிறமொழிச்சொற்களை வரவேற்று ஏற்கும் நாம், இருக்கும் தமிழ்ச்சொற்களை ஆளவும், புதிய சில தமிழ்ச்சொற்களை ஆளவும் ஏன் முற்படுவதில்லை? தாழ்வு மனப்பான்மையும், ஆங்கிலத்திலோ புரியாத மொழியிலோ பேசினால் பிறர் உயர்வாகக் கருதுவார்கள் என்னும் போலி நாகரீக உணர்வு. வெட்கப்பட வேண்டிய போலி உணர்வு இது!
அதாவது மானம், வெட்கம் என்னும் சொற்களுக்குப் பொருள் உணரும் மக்களுக்குத்தான் இது.
தள்ளு என்று ஒரு சொல்லில் சொல்வதை "push" பண்ணு என்றும் இழு என்பதை pull பண்ணு என்றும். நிறுத்து என்பதை stop பண்ணு என்றும் பேசும் பண்ணித்தமிழ், தமிங்கில மோகத்தால் எளிமையைத் துறக்கின்றோம், அறிவைத் துறக்கின்றோம், நமக்காக சிந்திக்கும் நம் தன்மையை இழக்கின்றோம். போலித்தன்மையைப் பெரிதாக மதிக்கின்றோம். மேலும் தமிழைக் குலைக்க நிறைய "கவிதைகள்" எழுதுங்கள்!! உங்கள் மனைவி, குழந்தைகள், தாய் தந்தையரின் கால்கள் கைகளை வெட்டுவது போல, சிலர் சிரிப்பார்கள் என்பதற்காக எழுதுங்கள்!
மேலே முனைவர் இராம.கி ஐயா அவர்கள் தந்த மிதிவண்டியின் உதிரிபாகங்களின் பெயரைப்பற்றிய தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தின் இணைப்பைக் கீழ்க்காணும் தொடுப்பில் இருந்து பெறலாம்: 15 உதிரிப் பாகங்கள் அல்ல, இன்னும் பல உள்ளன:
http://ta.wikipedia.org/s/14qu

கார்த்திக் சரவணன் said...

கலப்பின்றிப் பேசுவதென்பது இயலாத காரியம், கூடுமானவரை தவறின்றிப் பேசிப் பழகுவோம்.... த.ம.16

அப்பாதுரை said...

தமிழ் இல்லை எனினும் எங்கும் எதிலும் தமில் இருக்து.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான். தம்ழ்லயாது கடை பேர் வச்சதுக்கு பாராட்டலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

tha.ma

Angel said...

அருமை !

/விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்// சரியாக சொன்னீங்க
பதினெட்டாவது த ம

Angelin

மாதேவி said...

தனித் தமிழ் சிரமம்தான். முடிந்தவரை பேசுவது நல்லதே.

Post a Comment