Friday, May 29, 2015

ஸ்பான்சார் ( 3 )

அதிக நேரம் காக்க வைக்காமல்
சிறிது நேரத்திலேயே
ஹாலுக்கு வந்த டாக்டரின் மகன் சட்டென
சோபாவில் அமர்ந்து கொண்டு

" சொல்லுங்க மாமா எப்படி இருக்கேள்
எனக்கு உண்மையில் நேரடியாக நீங்களே
எங்கள் வீட்டிற்கு வந்தது பாக்கியம்தான்
இன்று நீங்கள் வரவில்லையெனில் நாளை
நிச்சயம உங்கள் வீட்டிற்கு நான் வந்திருப்பேன்
மாமி மற்றும் எல்லோரும் சௌக்கியமா "
எனச் சகஜமாகப் பேசத் துவங்கினான்

எனக்குத் தான் எப்படிப் பேசத் துவங்குவது
எனத் தெரியவில்லை.

முன்னெல்லாம் அவனை வாடா போடா
என்கிற பாணியில் தான் பேசிப் பழக்கம்.
இப்போது அப்படிப் பேசும்படியான
சூழலில் அவன் இல்லையெனப் பட்டதால்...

" அப்பா வேலை விஷயம் வந்த விஷயம்
எல்லாம் சொன்னார்.ரொம்ப சந்தோஷம்
நீங்கள் வந்திருப்பதாகவும் பார்க்க விரும்புவதாகவும்
சொன்னார்கள்.நான் இப்போது ரிடையர் ஆகிப்
ஃப்ரியாகத்தானே இருக்கிறேன்.அதுதான்
இப்படி லாத்தலாக வந்தேன் " எனச் சொல்லி
முடிப்பதற்குள் இடைமறித்த அவன்..

"மாமா தேவையில்லாத மரியாதையெல்லாம்
வேண்டாம்  அது எனக்கும் அன்ஈஸியாக. இருக்கும்
உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்
எனவே எப்போதும் போல என்னடா ஹரி
என்கிற மாதிரியே பேசுங்கள்."
எனச் சொல்லிச் சிரித்தான்

நான் உண்மையில் இதுவரை டாக்டரின் பையன்
எனச் சொல்லி வந்த காரணமே அவன் பெயர்
மறந்து போனதால்தான்,அவன் பிடி கொடுத்தது
கொஞ்சம் வசதியாகப் போயிற்று

"ஆமாண்டா ஹரி. எனக்கும் ஒருமாதிரியாகத்தான்
இருந்தது.ஆனாலும் பார்த்து ரொம்ப நாள் இடைவெளி
ஆகிப் போனதா நீயும் வளர்ந்து பெரிய ஆளாக
பெரிய அதிகாரியாகத் தோண ஆரம்பிச்சயா
அதுதான் சின்னத் தயக்கம்." எனச் சொல்லிக்
கொண்டிருக்க ஹரியின் தாயார் ஒரு தட்டில்
சாக்லேட் மற்றும் பழங்களை ஒரு தட்டில்
வைத்து "சாப்பிட்டுக் கொண்டே பேசுங்கோ "
எனச் சொல்லிப் போனார்

இனியும் சுற்றி வளைக்க விரும்பாது "
என்னைப் பார்க்கணும்னு எல்லோரிடமும்
சொல்லிக் கொண்டிருந்தததாகக் கேள்விப்பட்டேன்
அது எதற்காக இருக்கும் என எண்ணி எண்ணி
நானும் ரொம்பக் குழம்பிப் போனேன்
அது என்ன எனத் தெரிந்தால் என் குழப்பம் தீரும்"
என்றேன்

அவன் சொல்லத் துவங்கினான்

உண்மையில் ஒன்றுமில்லை என நாம் நினைத்துக்
கொண்டிருக்கிற பல சிறு சிறு விஷயங்களில் கூட
இத்தனை இருக்குமா என்கிற மலைப்பு
என்னுள் அதிகரித்துக் கொண்டே போனது

(தொடரும் )

Monday, May 25, 2015

ஸ்பான்ஸர் ( 2 )

டாக்டரின் பையன் அவனா இவன் என்று
ஆச்சரியப்படும்படியாக மிகவும்
மாறிப் போயிருந்தான்

மிக உயர்ந்த பதவியில் இருப்பதற்கான
மிடுக்கும் செல்வச் செழிப்பின் பூச்சும்
என்னையும் அறியாது எழுந்து நிற்கச்செய்தது

உள்ளே நுழைந்து என்னைப் பார்த்ததும்
சட்டென ஆச்சரியமுற்று என் பெயருடன்
அங்கிள் என்கிற வாரத்தையையும் சேர்த்து
" என்ன ஆச்சரியம். நானே உங்கள் வீட்டிற்கு
நாளை வரலாம் என இருந்தேன்
நீங்கள் வந்திருப்பது ரொம்பச் சந்தோஷம்
இருங்கள் ஒரு நொடியில் உடை மாற்றிக்
கொண்டு வந்து விடுகிறேன் " எனச் சொல்லி
உள்ளே போனான்

அவனுடைய கல்லூரி நாட்களில்
எங்கள் வீட்டின் முன்பு உள்ள சாலையில்
தினமும் மாலையில் நடக்கும் கிரிக்கெட்
விளையாட்டில் தினமும் இவனும்
கலந்து கொள்வான்

சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த
விளையாட்டு காலை ஆறு மணி முதல்
பத்து மணி வரையும் மாலையில்
நான்கு மணி தொடங்கி இருட்டும்
வரையும் தொடரும்

எனக்கும் கிரிகெட்டில் அதிகம் ஆர்வம் உண்டு
என்பதாலும் சிறு வயதில் போட்டிகளில்
கலந்து கொண்டு விளையாடும் அளவு
கிரிக்கெட்டில் தேர்ச்சி இருந்ததாலும்
நான் நடு வயதுக் கடப்பவனாக
அப்போது இருந்தாலும் ஆர்வமாக அவர்களுடன்
விளையாட்டில் கலந்து கொள்வேன்

எங்கள் சாலை கொஞ்சம் போக்குவரத்து
இருந்த சாலையாக இருந்தது

பஸ் லாரிபோக வழிவிட்டு ,.....

யாரும் வந்தால் கொஞ்சம் பௌலிங்கை நிறுத்தி ....
.
தப்பித் தவறி யார் மீது பந்து விழுந்து விட்டால்
( இரப்பர் பந்துதான் ஆனாலும் )
அவர்களைச் சமாதானப் படுத்தி..

அவ்வப்போது வீட்டு ஜன்னலை பதம் பார்க்கிற
அல்லது வீட்டினுள் போகிற நிலையில்
ஏற்படுகிற கோபதாபங்களை சரிப்படுத்தி...

இவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள்

இரண்டு அணிகளாகப் பிரிகையில் ஆட்கள்
குறைந்தால் ஒரு பக்கம் சேர்ந்தும்
மிகச் சரியாகப் பிரியுமானால நடுவராகவும்
எல்லாம் சரியாக இருந்தால் வாசல் பெஞ்சில்
பார்வையாளராகவும் இந்தத் தெரு விளையாட்டில்
என்னை  நானும் முழுமையாக இணைத்துக்
கொள்வேன்

ஜென்ரேஷன் கேப் என்பதாலோ அல்லது
இயல்பாக வெளியில் அமர முடியவில்லை
என்பதாலோ எனது தெருவில் இவர்கள்
விளையாடுவதற்கு கொஞ்சம் அதிருப்தி இருந்தது

பேட் ஸ்டம்புகளை வாங்கி வீட்டில் வைத்திருப்பது..

வாசலில் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பது..

இடையிடையே விளையாட்டில் கலந்து கொள்வது
பந்து உடைந்து போனாலோ அல்லது
சிக்ஸரில் பக்கத்தில் இருந்த ஒரு காலி மனை
முள் புதருக்குள் காணாமல் போனாலோ
உடன் வீட்டில் ஸ்டாக் வைத்திருக்கிற பந்திலிருந்து
விளையாட்டு நிற்காமல் எடுத்துக் கொடுப்பது..

இப்படி பலவகைகளிலும் நானும் இந்த விளையாட்டில்
என்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும்

இந்த தெருவிலுள்ள சங்கத்தில் நான் நிர்வாகியாக
இருந்ததால் இங்கு விளையாடுவ்து பலருக்கு
பிடிக்கவில்லையென்றாலும் எனக்காக கொஞ்சம்
சகித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

நான் ஊரில் இல்லாத நாட்களில் கொஞ்சம்
தள்ளியிருந்த விளையாட்டுத் திடலில் விளையாடப்
போவார்களே ஒழிய இங்கு விளையாட மாட்டார்கள்

அந்த அளவு இந்தத் தெரு விளையாட்டுக்கு நான்
பக்க பலமாக இருந்திருக்கிறேன்

அந்த விளையாட்டுக் குழுவில் இந்த
டாகடர் பையனும் இருந்திருக்கிறேனே ஒழிய
வேறு எந்த வகையிலும் எனக்கும் அவனுக்கும்
அதிக நெருக்கமில்லை

அதனால் அவன் என்னை ஞாபகம் வைத்திருப்பது
ஆச்சரியமளிக்க வில்லையென்றாலும் அவசியம்
வீடு தேடி வந்து பார்க்கவேண்டும்  என்று
சொல்லி இருந்ததும் பரிசுப் பொருள் எனக்கென
வாங்கி வந்திருக்கிறேன் எனச் சொல்லி இருந்ததும்
எதற்காக என்பது விளங்காததால் வந்த குழப்பம்
தீராமல் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தேன்

(தொடரும் )

Sunday, May 24, 2015

ஸ்பான்சர்

வெகு நாட்களுக்குப் பின் நான்முன்பு குடியிருந்த
ஏரியாப் பக்கம் போக வேண்டி இருந்தது

இப்போது புதிதாக வீடு கட்டி
குடியிருக்கும் பகுதியும் முன்னர்
இருந்த பகுதியும் அதிகத் தூரம்
இல்லையென்றாலும் நேரமின்மை மற்றும்
வேலைப் பளுவின் காரணமாக அதிகம்
அந்தப் பக்கம் செல்ல முடியவில்லை

கடந்த வாரம் அந்தப் பகுதியில் கொஞ்சம்
வேலை இருந்ததாலும் நேரமிருந்ததாலும்
அப்படியே அங்கு பழக்கமானவர்களையும்
சந்தித்து வரலாம் எனப் போனேன்

கொஞ்சம் நெருக்கமானவர்களிடம்
பேசி கொண்டிருந்தபோது ஒரு நண்பர்
அங்கு குடும்ப நண்பராக இருந்த ஒரு
டாக்டரின் பெயரை குறிப்பிட்டு அவருடைய
மகன் பத்தாண்டுகளுக்குப் பின்
ஸ்டேட்ஸில் இருந்து வந்திருப்பதாகவும்
அவன் அவசியம் என்னப் பார்க்க
வர வேண்டும்எனச் சொல்லிக்
கொண்டிருப்பதாகவும் சொன்னார்

அவர் அப்படிச் சொன்னது எனக்கு
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

காரணம் அப்படி அவன் தேடி வந்துப்
பார்க்கும்படியாக ஒரு நெருக்கமான
பழக்கமோஅல்லது இந்தப் பத்து ஆண்டுகளில்
ஒரு சிறு தொடர்போ அவனுடன் இருந்ததில்லை

அப்படி இருக்க என்னை அவசியம்
பார்க்க விரும்புவதாகவும் வேறு சிலரிடம்
என் வீடு போகும் வழியும் விலாசமும்
கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொல்ல
என்னால் ஆச்சரியப் படாமல் இருக்க
முடியவில்லை

சரி அப்படி யென்றால் அங்கிருந்து வந்திருப்பவனை
அலைய விடவேண்டாம்.நாமே அவன் வீடு சென்று
பார்த்துவிட்டு வரலாம் என்ப் போனேன்

நான் போன சமயம் அவன் வீட்டில் இல்லை

அவனுடைய அப்பா டாக்டர் மட்டும் இருந்தார்

சற்று வயதாகி விட்ட படியால் இப்போது
பிராக்டீஸ் செய்வதில்லை என பல்வேறு
விஷயங்களைப்பேசிக் கொண்டிருந்தபோதே
அவனுடைய பையன் இப்போது இருக்கும்
கம்பெனி குறித்தும் அவன் நிலை குறித்தும்
சொல்லச் சொல்ல எனக்குப் பிரமிப்பாக இருந்தது

அவரும் அவனுடைய பையன் வந்ததிலிருந்தே
என்னைப் பார்க்க விரும்புவதாகவும்
அமெரிக்காவில் இருந்து சில பரிசுப் பொருட்கள்
எனக்காக வாங்கி வந்திருப்பதாகவும் சொல்ல
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை

ஒருவேளை வேறு யாரையோ நானாக நினைத்து
இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறானா என்கிற
குழப்பம் எனக்குள் விஸ்வரூபம் எடுக்கத்
துவங்கிவிட்டது

சரி இருந்தது இருந்து விட்டோம்.
ஒருவேளை அவன்என்னைத் தேடிக் கொண்டு
வந்து விட்டு அதுநான் இல்லை என்பது போன்ற
நிலை வந்தால்இன்னும் தர்மசங்கடமாகிப் போகும்
அதற்குஇங்கிருந்தே பார்த்துவிட்டுப் போய் விடுவது
உத்தமம் எனக் கருதி நானும் அவர்களுடன்
தற்கால அரசியல் நிலவரம், ஏரியா வளர்ச்சி நிலவரம்
எனப் பொதுவான விஷயம் குறித்துப்
பேசிக் கொண்டிருக்க வீட்டு வாசலில் கார் வந்து
நிற்கும் சபதம் கேட்டது

டாக்டரும் "இதோ பையனே வந்து விட்டான் "
என மெல்ல இருக்கையை விட்டு எழ நானும்
அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற
குழப்பத்துடன் எழுந்து வாசல் பக்கம் திரும்பினேன்

(தொடரும் )

Monday, May 11, 2015

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து  ஏறுவோம்
விந்தை போலக் கனவு யாவும்
நிஜமாய் மாறவே -அந்தச்
சொர்க்கம் கூட மண்ணில் வந்து
நிலைத்து  வாழவே  

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-உலகில்
காணு கின்ற   பொருட்கள் எல்லாம்
அணுவால்  ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
நொறுக்கி நகருமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும்  வாழ்வில்
வெற்றி வெற்றியே 

Sunday, May 10, 2015

தொடர் ஓட்டம்

எப்போது  பள்ளி ஆண்டு விழா
போட்டிகளைக் காண வந்தாலும்
தொடர் ஓட்டம் நடக்கும் போட்டியையே
காணவிழைவார் அப்பா
குறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்
அந்த " ரிலே " ஓட்டம்

அவரது அதீத ஆர்வத்தில்
ஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து
ஒருமுறை விளக்கம் கேட்டேன்

"இது எல்லா போட்டியையும் போல அல்ல
இந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்
ஒருவர் பின் தங்கினாலும்   தோல்விதான்
குறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்" என்றார்

'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது
எல்லா போட்டிகளையும் போல
இதற்கும் சில விதிகள் " என்றேன்

 "நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்
உன் தாத்தாதான்  எனக்கு விளக்கினார்
அந்தக் குச்சி என்பது
பாரம்பரிய குடும்பப் பெருமைக்கும்
செல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு
நான் விரைவாக ஓடி
உன்னிடன் சேர்ப்பது போலவே
உன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்
ஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க
நான்கு தலை முறை ஆகிவிடும் " என்றார்

நான் புரியாது விழித்தேன்
அவரே தொடர்ந்தார்

"இப்படியும் சொல்லலாம்
செல்வச் செழிப்பில்  வாழ்ந்தாலும்
முறையாக வளர்க்காத  உழைப்பாளியின்  மகன்
சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை  அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் " என்றார்

அப்போது சரியாகப் புரியவில்லை ஆயினும்
கால ஓட்டத்தில் புரியத் துவங்கியது

 நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்

Saturday, May 9, 2015

தலைமை பண்புப் பயிற்சி

கரை புரண்டோடும் ஆற்றில் நீந்துபவன்
முன்னேறிச் செல்லவில்லையாயினும்
இருக்கிற இடத்தில் இருக்கவாவது தொடர்ந்து
நீந்திக்கொண்டிருக்கவேண்டும் என்பதைப் போல

இன்றைய போட்டி நிறைந்த காலச் சூழலில்
உச்சம்தொட இயலவில்லையாயினும்
தொடர்ந்து நம் நிலையிலேயே தொடரக் கூட
நாம் தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் 
அயற்சியின்றி மேற்கொள்ளவேண்டியுள்ளது

அந்த வகையில் உலகளாவிய 
சேவை இயக்கமான அரிமா இயக்கத்தில்
2003 முதல் இணைந்திருந்தாலும் தொடர்ந்து
உறுப்பினர், பொருளாளர், செயளாளர் ,தலைவர்
மாவட்டத் தலைவர் என பல பொறுப்புக்களை
வகித்திருந்தாலும் இன்னும் தலைமைப்பண்பினை
கூர்தீட்டிக் கொள்ளத் தொடர்ந்து பயிற்சி
மேற்கொள்ளத்தான்வேண்டியுள்ளது

அதற்காக வருகிற 13 ஆம் தேதி முதல்
20 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற
இருக்கிற தலைமைப் பண்புக்கான 
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள நானும் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதனை 
நமது பதிவுல நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

தங்கள் அன்பான வாழ்த்துக்களை வேண்டி  .... 

                                                                                                                                                                                                                                                                                                                                        

Tuesday, May 5, 2015

Chithra festival in Madurai




இதற்கு முன்னர் எல்லாம் தொட்டி கட்டி
லாரியில் நீர் கொண்டு வந்து நிறைத்து வைத்து
அழகர் இறங்கியதே அதிகம் நடந்துள்ளது

இம்முறை ஆற்றில் கரை தொட்டு நீர் ஓட
கரையோரம் மேடு படுத்தி அழகரை 
இறக்கியது கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கிறது மதுரை மக்கள் அனைவருக்கும்