Wednesday, March 30, 2011

கேள்வியே......கேள்விகளாய்.

.. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
 போகிற போக்கில் 
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
 அவனுக்கு எப்படி புரியச் சொல்வது ?

 கொத்துகிற தூரத்தில் சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
 சிறுமைகளும் துரோகங்களும்
 என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
 அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
 ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
 அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
 அவைகள் அடங்காது சீறிக் கொத்த
 ஒவ்வொரு கணமும்
 நான் நொந்து வீழ்வதும்
 ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
 சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
 உணர்வுகள் பொங்கிப் பெருக
 நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினை
 திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
 திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
 வார்த்தைகள் கிழிிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
 கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளை பிரித்துப் போட்டுக் காட்டும்
 பண்டித விளையாட்டா படைப்பு ?


இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
 இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
 இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
 எது நிர்ணயம் செய்யக்கூடும்?
பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
 ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனை கலைத்துவிட்டுப் போவதும்
 எங்கோ தலைதெறிக்கப் போகும்
 ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்
விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
 இணைகிற இணைப்பு வீணாகிப்போக
 வேண்டா வெறுப்பாக புணரும் நாளின்
 கரு தங்கிச் சிரிப்பதையும்
எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?

Friday, March 25, 2011

நீரோடு செல்கின்ற ஓடம்

நல்ல படிப்பு
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வபோது முனங்கி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குைற்க்க முயன்று
தோற்று வீழ்வாள் துணை

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

Monday, March 21, 2011

மனமூடை

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய….
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன
மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு
நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூடை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்
சிலசமயம் சிம்மாசனமாகி
அவனைத் திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
அவனுள் பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்


அவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்
எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட
உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்
அந்த மூடையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….

அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூடையை உயரப்பிடித்தபிடி
போவோர் வருவோரை உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உறக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்
அனைவர்க்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்துவிரிந்து அம்மணமாவது போலவும்
என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்
என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.

Friday, March 18, 2011

இப்படியும் ..........

எல்லாம் சரியாகத்தான் இருந்தது
எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருந்தார்கள்
நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன்
ஒரு முட்டாள் நண்பன்
என்னை ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
என்னிடம் மாட்டிக் கொள்ளாதவரையில்

ஒரு கெட்டிக்கார அயோக்கியனிடம் கூட
ஏமாந்து தொலைத்திருக்கலாம்
ஒரு முட்டாள் நண்பனிடம் ஏமாறுதல் என்பதை
என்னால் ஜீிரணிக்கவே இயலவில்லை

நொந்துபோய் திரிந்துகொண்டிருந்த எனக்கு
ஒரு நெருங்கிய நண்பன்தான் ஆறுதல் தந்தான்
"நீ யாரையும் ஏமாற்ற வேண்டாம்
யாரிடமும் ஏமாறவும் வேண்டாம்
அதற்காகவாவது ஏமாற்றுதல் குறித்து
கொஞ்சம் தெரிந்துகொள் " என்றான்
அது எனக்கு சரியெனத்தான் பட்டது

அந்த நண்பன் தான் என் கைப்பிடித்து
கொஞ்சம் கொஞ்சமாக
அந்த இருண்ட குகைக்குள் அழைத்துப் போனான்
அந்த அகண்ட குகையின் கனத்த இருள்
என் கண்களுக்குப் பழகப் பழக
நான் கதிகலங்கிப் போனேன்

இத்தனை காலமும்
எல்லாரிடத்தும்
எல்லாவகையிலும்
ஏமாந்து திரிந்தது
எள்ளவும் ஐயமின்றி
அப்போதுதான் புரிந்து தொலைந்தது
நான் மனம் வெறுத்துப் போனேன்

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம்
யாரும் ஏமாறுவதில்லை
அதிகம் அறிந்தவர்களிடம்தான்
அதிகம் ஏமாறுகிறார்கள்
ஏமாந்தவன் ஏமாற்றுபவனை
அடையாளம் காண்ாதவரையில்
ஏமாற்றுபவன் ஏமாறுபவனை விடுவிப்பதில்லை
ஏமாறுபவன் விழிக்க நேர்ந்தால்தான்
ஏமாற்ற வேறு இடம் தேடுகிறான்
ஏமாந்து கிடந்தவனும்
முற்றிலும் விழிப்படைவதில்லை
ஏமாந்தவனிடத்தும்
ஏமாந்த விஷயங்களில் மட்டும்
அதிகம் கவனம் கொள்கிறன்
மற்றபடி
அடுத்தவனிடத்தும்
அடுத்த விஷயங்களிலும்
அடிக்கடி ஏமாற
அவன் ஆயத்தமாகத்தான் இருக்கிறான்
ஆயத்தமானவர்கள் அதிகமாக அதிகமாக
ஏமாற்றுவோனுக்கு
ஏமாற்றுதல் கை வந்த கலையாகிப்போகிறது

இப்படியும்,இன்னமும்
கட்டுரை எழுதும் அளவு
ஏமாறுதல் குறித்து அதிகம் தெரிந்துபோனதால்
எல்லா ஏமாற்று வித்தையும் தெளிவாய் தெரிகிறது
எல்லா ஏமர்ற்றுக் காரர்களும் பெரிதாய் தெரிகிறார்கள்

இப்போது எனக்கு
தொடந்து ஏமாறுவதோ
தொடர்ந்து ஏமாற்றப்படுவதோ கூட
எரிச்சலூட்டுவதாக இல்லை
மாறாக
ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
என்னை அனைத்தையும்
தெரிந்து கொள்ள வைத்த
அந்த முட்டாள் நண்பன் மீது தான்
எரிச்சல் அளவுகடந்து வருகிறது

அந்த சனிப்பயல் மட்டும்
என்னை மிகச் சரியாக ஏமாற்றித் தொலைத்திருந்தால்
இத்தனை எழவுகைள்யும்
தெரிிந்து தொலைத்திருக்கவும் மாட்டேன் 
எவ்வளவு இழந்து தொலைத்தாலும்
எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது
எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்
என்ற் நல்ல நினைவுகளோடு
தொடர்ந்து சந்தோஷமாய் வாழ்ந்துகொண்டும் இருப்பேன்
v

Tuesday, March 15, 2011

அலைவோர்...பயணிக்க...

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

Friday, March 11, 2011

நேர்மை ஒளி

அரசுப்பணியில் உயர்பதவியில்
தேர்தெடுக்கப்பட்டிருக்கும்
தன் மைந்தனை அழைத்துக்கொண்டு
என் ஆசி பெற வந்திருந்தார்
என் நெருங்கிய உறவினர் ஒருவர்

அரசின் உயர்பதவியில் இருந்த
பிழைக்கத் தெரிந்த என் உறவினர் ஒருவரும்
நல்ல வசதி வாய்ப்புகளோடு
அடுத்த தெருவில்தான் இருந்தார்

"அவரிடம் முதலில் ஆசி பெற்றுவிட்டாயா" என
ஏனோ அவசர அவசரமாய்க் கேட்டாள் என் மனைவி
வந்திருந்த உறவினர் பதட்டப்படவில்லை
"தகவல் மட்டும் சொல்லிவிட்டேன் "என்பதோடு
தன் பேச்சை முடித்துக்கொண்டார்

பின் நான் இப்படிச் சொல்லலானேன்
"ஒவ்வொரு இந்துவும் தன்வாழ் நாளில் ஒருமுறையேனும்
காசி ராமேஸ்வரம் போய்வர எண்ணுவான்
ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ் நாளில் ஒருமுறையேனும்
மெக்கா மெதினா சென்றுவர எண்ணுவான்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் வாழ் நாளில் ஒரு முறையேனும்
வாடிகனை பெத்தலகேமை தரிசித்து வர எண்ணுவான்
இவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரே ஒருமுறை
அவ்வூர் சென்று வந்தாலே புண்ணியம்  என
நம்பிக்கை கொள்ளும்போது
அங்கேயே காலமெல்லாம் வாழ்வோருக்கு
எவ்வளவு புண்ணியமிருக்கும்"எனச் சொல்லி
அவர்கள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தேன்
அவர்கள் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை

பின் நானே தொடர்ந்து பேசினேன்
"ஊரின் பெருமையை உணர்ந்து
அவர்கள் அங்கு வாழ்ந்து வந்தால்
அவர்களுக்கும் அந்த ஊர் புண்ணியம் சேர்த்துத் தரும்
இல்லையெனில் எல்லா ஊரையும் போல
அந்த ஊரும் மிகச் சாதாரணமான ஊரே

அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்
மக்களுக்கு சேவை செய்ய
ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக
இதனைக் கருதி பணியாற்றினால்
நீ தான தருமங்கள் ஏதும்
தனியாகச் செய்ய வேண்டியதில்லை
உன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்
இல்லையெனில்
கண்ட கண்ட பிழைப்பைப் போல
அதுவும் ஒரு பிழைப்பு அவ்வளவுதான் " என்றேன்

தாக சாந்திக்கு மோர் குவளையுடன் வந்த மனைவி
தொடர்ந்து இப்படிப் பேசினாள்
"வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
மனதை செலுத்த வேண்டாம்
அங்ககீனமானவர்களுக்குத்தான்
ஊன்றுகோள்கள்  அவசியத் தேவை
ஆரோக்கியமானவனுக்கு அது
தேவையற்ற சுமை " என்றாள்

இப்போது என் உறவினரின் முகம்
கொஞ்சம் பிரகாசமாகத் தெரிந்தது
"இதற்காகத்தான் அங்கு விட்டு இங்கு
ஆசி பெற வந்தேன் " எனச் சொல்லி
என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்

உறவினரின் மகன் முகத்திலும்
கொஞ்சம்  தெளிவு தெரியத் துவங்கியது

இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி
எங்கள் இருவருக்குள்ளும்
கொஞ்சம் கொஞ்சமாய்
விரிந்து பரவத் துவங்கியது

Tuesday, March 8, 2011

தகுதியும் தலைமையும்

"சமத்தன் சந்தைக்குப் போனால்
சாமான் வாங்கமாட்டான் " என்பது
ஊரறிந்த பழமொழி
"சமத்தனுடன் சந்தைக்குப் போனாலும்
சாமான் வா ஙக முடியாது" என்பது
நானறிந்த புதுமொழி

நெருங்கிய நண்பனொருவனின்
புதுமனை புகுவிழாவிற்கு
திருமுருகன் திருவுருவப்படம்
பரிசளிக்கலாம் என எண்ணி
என் ஓவிய  நண்பனின்
உதவியை நாடினேன்

எத்தனை கடை ஏறி இறங்கிய போதும்
எத்தனை படங்கள் எடுத்துக்காட்டிய போதும்
அத்தனையும் சரியில்லை எனச்சொல்லி
எனக்கு வெறுப்பேற்றிக்கொண்டே வந்தான்

பொறுமை இழந்து நானும்
உண்மைக் காரணம் கேட்டபோது
முடிவாக இப்படிச் சொன்னான்

"அனைத்து படங்களிலும்
குறையொன்று உள்ளது
முருகனின் சிரசுக்கு மேலாக
வேலின் கூர்முனை உள்ளது
இது வைக்கப்பட்ட வீடு
நிச்சயம் உருப்படாது "என்றான்

முருகனின் உயரத்திற்கும்
வேலின் உயரத்திற்கும்
அப்படி என்ன சம்பந்தம்
எனக்கேதும் விளங்கவில்லை

பின் அவனே விளக்கலானான்
"முருகனின் வேல் ஆயுதமில்லை
அது ஞானத்தின் குறியீடு
ஞானம் முருகனை மீறியது இல்லை
அவனுக்குள் அடங்கியதற்குள்
அவனை அடக்குவதென்பது
அறிவீனமானது "என்றான்

"சரி இருக்கட்டும்
அதனால் என்ன " என்றேன் நான்

என்னை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்
அதில் ஏளனக் கலப்பு அதிகம் இருந்தது.
பின் தொடர்ந்து இப்படிச் சொன்னான்

"சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்
பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது
பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" எனச் சொல்லி
என்னை கடந்து போனான்.

வழக்கம்போலவே
ஏதும் விளங்காது
நான் கல்லாய் சமைந்து நின்றேன்

Saturday, March 5, 2011

யாதோ

கவிஞனாக அறிமுகமாயிருந்த 
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக்  கறுத்துப் போனது

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளை தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிகள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம்நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்

Wednesday, March 2, 2011

தேர்தல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'