Sunday, July 26, 2020

எங்கள் கலாமே


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் சிறிது  ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர் 

Wednesday, July 22, 2020

குழந்தையும் உடலும்

தன் அசௌகரியம் காட்டச்
சிணுங்குகின்ற குழந்தையாய்
உடலும் தன் அசௌகரியம் காட்ட
மெல்லச் சிணுங்கியது

நான் கண்டு கொள்ளவில்லை.

கண்டுகொள்ளப்படாத கோபத்தில்
வீறிடும்  குழந்தையாய்
உடலும் தன் கோபத்தை
வலியாய்க் காட்டியது.

இப்போது முன்போல்
என்னால் கண்டு கொள்ளாதிருக்கமுடியவில்லை

குழந்தையின் தேவையை
உடன் கவனிக்கும் தாயாய்
நானும் உடல் கவனிக்கத் துவங்கினேன்

ஒரு நாள் என் பாட்டி ..
"அழும்போதுதான் கவனிப்பாய் என
குழ்ந்தை அறிந்துகொண்டால்
குழ்ந்தை பின் எதற்கெடுத்தாலும்
அழத் துவங்கும்
பின் அதுவே ஒரு நோயாகிப் போகும்
எனவே அதற்குச் செய்யவேண்டியதை
அது கேட்கும் முன் செய்யப் பழகு " என்றாள்

இதை உடலுக்கும் பொருத்திப் பார்த்தேன்
மிகச் சரியாய்ப் பொருந்தியது

இப்போதெல்லாம் உடல்
வருத்தும் வரை நான் காத்திருப்பதில்லை
அது வருத்தும் முன்பே
உடற்பயிற்சியால் அதனை வருத்தியெடுத்துவிடுகிறேன்

இப்போது அது
குழந்தை சிணுங்குவதற்குப் பதில்
சிரிப்பதைப் போலவே
வலிகாட்டுவதற்குப் பதில்
சுகம்காட்டிச் சிரிக்கிறது..


Saturday, July 18, 2020

கொ .முன் ..கொ .பின்

அறிமுகமானவர்கள்
பழக்கமானவர்கள்
நண்பர்கள்

இப்படியொரு  நீண்ட பட்டியல்
வெகு நாட்களாய்  என்னிடமிருந்தது .

உங்களிடமும் இருக்கக்கூடும்

கொரோனாவுக்கு முன்
இப்பட்டியல்  முரணின்றி
வரிசைக்கிரமமாகவே
இப்படித்தான் இருந்தது ..

கொரோனாவுக்குப் பின்
ஏனோ இதில் பெரும் வரிசைக்  குழப்படி ..

புதிய அறிமுகம்  ஏதுமில்லை
அது ஒரு பிரச்சனையில்லை

பழக்கமானவர்கள் பலர்
அறிமுகமானவர்கள்  போலவும்
இது கூட  ஏற்றுக் கொள்ளக் கூடியதே

அறிமுகமானவர்கள் சிலர்
நண்பர்கள் போலவும்
இது இந்தச் சூழலில்  பாராட்டப்படக் கூடியதே

ஆயினும்
மிக நெருங்கிய  நண்பர்கள்
அல்லது
அப்படி நம்பிக் கொண்டிருந்த  நண்பர்கள்
பழக்கமானவர்கள் ஆகிப்  போனதைத்தான்
ஜீரணிக்கமுடியவில்லை

ஆயினும்  என்ன
பட்டியலை மிகச் சரியாக
வரிசைப்படுத்தியமைக்காக
கொரோனாவுக்கு நன்றி சொல்லிப் போகிறேன்

பட்டியலை  நீங்களும் சரிபாருங்கள்
நீங்களும் ஒருவேளை
நன்றி சொல்ல வேண்டியதாக இருந்தாலும்  இருக்கும்   


Thursday, July 16, 2020

அபுரியும் புரியும்...

விலகி ஒதுங்கிச் செல்லமுடியாதபடி
அந்த அபுரிக் கவிஞரை
இப்படிச் சந்திக்க நேரும் என
நான் நினைக்கவே இல்லை.

அவரும் நான் தப்பித்துவிடாதபடி
என் கைகளைப் பிடித்தபடி..

"இன்னமும் அப்படித்தான்
எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் போலவே "
என்றார் சிரித்தபடி..

"அப்படியென்றால் எப்படி "
என்றேன் அப்பாவியாய்...

"புரிகிறமாதிரி
ரொம்பப் புரிகிறமாதிரி..."
என்றார்

"என்ன செய்வது
அவ்வையின் ஆத்திச்சூடியே
ஆரம்பமாயும்
அழவள்ளியப்பாவே
தொடர்ச்சியாகவும்
அம்புலிமாமாவே
பிடித்ததாகவும்
ஆனதாலோ என்னவோ
இப்படித்தான் எழுத வருகிறது "
என்றேன் அப்பாவியாய்.

"அது சரி.அதற்காக இப்படியா
கோவணம் கூட இல்லாமல்
அம்மணயாய் விட்டமாதிரி.."என்றார்
சரி கிண்டலடிக்கிறார் எனப் புரிந்தது

நான் மௌனமாய் இருந்தேன்..

என்னை மீண்டும் சீண்டும் விதமாய்
"இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்  ?"
என்றார்

நியூட்டனின் மூன்றாம் விதியை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது
சரி செய்து வெளியிடவேண்டும் " என்றேன்

"எங்களைப் போன்றவர்களுக்கே
அதை  எழுதுவது கஷ்டம்
உம்மைப்  போன்றவர்களுக்கு
சொல்லவேண்டியதே இல்லை..
சரி..அதிலென்ன குழப்பம் " என்றார்

"மூன்றாம் வகுப்பு படிப்பவனுக்கும்
தெளிவாகப் புரிகிறமாதிரி
ரொம்ப எளிமையாய் அமைந்து விட்டது
அப்படியே வெளியிட்டால்
அது எப்படி சரியாக வரும் எனத்தான்
ஒரே குழப்பமாய் இருக்கிறது " என்றேன்

அபுரி என்ன நினைத்தாரோ
முகத்தை அழுந்தத் துடைத்தபடி
"கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது
அப்புறம் சந்திப்போம்"
எனச் சொல்லியபடி நடையை கட்டினார்.

வெகுநாள் பாரம் ஒன்றை
இறக்கிவைத்த திருப்தியில்
நானும் நடக்கத் துவங்கினேன்

Wednesday, July 15, 2020

உணர்வினை உலுக்கிய எதுவாயினும்

உண்ர்வினை உலுக்கிய
நிகழ்வோ
செய்தியோ
காட்சியோ
கேள்வியோ
அது எதுவாயினும்
நீங்கள் படைப்பாளியெனில்
உடன் அதை படைப்பாக்கிவிடுங்கள்

கால தாமதம் செய்யின்
அறிவும் தர்க்கமும்
அதனை கூர்மழுங்கச் செய்துவிடும்...

தீக்குள் விரலை வைக்க
குளுமையைத் தீண்டக்
கிடைத்த  சுகமும்

தீம்தரிகிடத் தித்தோமும்...

உணர்வின் உச்சத்தில்
வந்துவிழுந்த  மாணிக்கக் கற்களே

சமமன நிலையில்
இவைகள் ஜனிக்க வாய்ப்பேயில்லை.

நட்சத்திரச் சமையல்காரர். ஆயினும்
அவர் சமைத்த அதி அற்புத உணவாயினும்
சமைத்த சூட்டில் அமைந்த ருசி
பின் சூடேற்றிச் சாப்பிடக் கிடைக்க
நிச்சயம் சாத்தியமே இல்லை

என்வே
நீங்கள் படைப்பாளியெனில்
உணர்வினை
உலுக்கிய எதுவாயினும்.....

Tuesday, July 14, 2020

காலத்தின் கட்டாயம்

முன்பு
அலுவலகத்தில்
பணிசெய்த காலத்தில்
என் உடனடி அதிகாரி
வட இந்தியராக இருந்தார்

அவர் ஏனோ
தமிழ் கற்றுக் கொள்ள விரும்பவில்லை
அவருக்காக நானும்
ஹிந்தி கற்றுக் கொள்ள மெனக்கெடவில்லை

இருவருக்கும் ஆங்கிலம்
தெரிந்திருந்ததால்
தொடர்பு கொள்வதில் பிரச்சனையில்லை

இப்போது
இங்கு அடுக்கு மாடி குடியிருப்பில்
காவலர்முதல் அனைத்துப் பணியாளர்களுமே
வட இந்தியர்களாகவே..

அவர்கள் ஏனோ
தமிழ் கற்றுக் கொள்ள முயலவில்லை
என்னால் அவர்களுடன்
தொடர்பு கொள்ளாது
நாளைக்கடத்தச் சாத்தியப்படவில்லை

தவிர்க்க இயலாது
காலத்தின் கட்டாயத்தில்
இப்போது இந்தி கற்றுக் கொண்டிருக்கிறேன்

1965 போராட்டத்தில்
கலந்து கொண்டு கைது செய்யப்பட்டதை
நேற்றுவரை
பெருமைக்குரியதாய் சொல்லிக் கொண்டிருந்த நான்  

Sunday, July 5, 2020

..மனித்த பிறவியும் வேண்டுவதே....

சிலிர்க்கச் செய்து
மனச் சொடெக்கெடுத்துப் போகும்
ஒரு அற்புதப் படைப்பு...

நம் பின்னடைவுத் தூரத்தை
மிகத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டி
நம்முள் ஒரு வெறுமையை
விதைத்துப் போக...

நாம் இனியும்
எழுதத்தான் வேண்டுமா எனும்
எதிர்மறை எண்ணத்தை
விளைவித்துப் போக...

படித்ததும் சட்டென
முகம் சுழிக்கச் செய்வதோடு
மனக் கசப்பையும் கூட்டிப் போகும்
ஒரு மோசமான படைப்போ

நம் கருத்தேர்வை
நம் மொழிப் பாண்டித்தியத்தை
நாம் உணரும்படியாய்
நமக்கே விளக்கிப் போக

நாம் இனிதான்
அவசியம் எழுதுதல் வேண்டுமெனும்
நேர்மறை உணர்வினை
உசுப்பேற்றிப் போகிறது

அதற்காக வேணும் இனி
மோசமான படைப்புகளும்
நிச்சயம் வேண்டியதே...

மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்பதைப் போலவே...

Saturday, July 4, 2020

முள்ளும் கொரோனாவும்

சாலையோரம்
எப்படி கிடத்தப்பட்டேனோ அப்படியே
துளியும் நகரமுடியாதபடி
எப்போதும் கிடக்கிறேன் நான்.

ஏதோ ஒரு சிந்தனையில்
வழி மீது விழியின்றி
என் மீது மிகச் சரியாய்
மிதித்து "உச்" கொட்டுகிறீர்கள் நீங்கள்

பின் எவ்வித
கூச்சமின்றி குற்றவிணர்வின்றி
"நான் " குத்திவிட்டதாக
"என் மீதே " பழிசுமத்துகிறீர்கள்...

தவறு செய்வது  நீங்கள்
பின் ஏன் காலங்காலமாய்
"என்னைப்" பழிக்கிறீர்கள்...

சீனச் சந்தையில்
இயற்கைக்கு நேர்ந்த
புத்திப் பேதலிப்பில்
எப்படியோ பிறந்து விட்டேன் நான்

தூக்கி நகர்த்தாது
இம்மியும் நகர இயலாத என்னை
உலகமெலாம் கணந்தோரும்
தூக்கித் திரிகிறீர்கள் நீங்கள்

பின் இப்போது
எவ்வித பொறுப்புமின்றி தெளிவின்றி
"நான் " பரவுவதாக
"என் மீதே " பழிபோடுகிறீர்கள்

பரப்புவது நீங்கள் 
பின் ஏன் உலகோரேல்லாம்
"என்னைப்" பலியாக்குகிறீர்கள்

Thursday, July 2, 2020

கொரோனாவும் நீதி நூல்களும்.

அரசும்
வலைத்தளங்களும்
முக நூலும்
இன்னபிறவும்
கொரோனா குறித்து
விரிவாக விளக்கியும்

நம் மக்கள்
முகக்கவசம் அணியாதும்
சமூக இடைவெளிக் கடைப்பிடிக்காதும்
கொரோனாத் தொற்றை
அசுர வேகத்தில்
பரவச் செய்வது ஏன் ?

கொரோனா குறித்து
அறிந்தது எல்லாம்
அறிந்ததாகக் கொள்ளமட்டுமே
பிறருக்கு பகிர்ந்து கொள்ளமட்டுமே
தாம் கடைபிடிப்பதற்கு அல்ல என்பதில்
தெளிவாய் இருப்பதால்தானோ ?

ஒரு வகையில்
இந்தத் தெளிதல் கூட...

நீதி நூல்களும்
நீதியை எளிதாய்ப் போதிக்க வந்த
இதிகாசங்களும் புராணங்களும்
காலம் காலமாய் இருந்தும்
ஆயிரமாயிரமாய் இருந்தும்
..
அநீதியும்
அக்கிரமங்களும்
வன்மமும் துரோகங்களும்
புற்றீசல் போல்
பல்கிப்பெருகுவது தெரிந்தும்
பாடாய்ப்படுத்துவது புரிந்தும்

அவையெல்லாம்
காலம் காலமாய்
போற்றத் தக்கதாய்
பாதுகாக்கத் தக்கதாய்
வைத்திருக்கவேண்டியவையன்றி
கடைபிடிக்க வேண்டியவையல்ல என்பது
நம் இரத்தத்தில் கலந்துவிட்டதால் தானோ ?