Showing posts with label கவிதை -போல. Show all posts
Showing posts with label கவிதை -போல. Show all posts

Thursday, July 16, 2020

அபுரியும் புரியும்...

விலகி ஒதுங்கிச் செல்லமுடியாதபடி
அந்த அபுரிக் கவிஞரை
இப்படிச் சந்திக்க நேரும் என
நான் நினைக்கவே இல்லை.

அவரும் நான் தப்பித்துவிடாதபடி
என் கைகளைப் பிடித்தபடி..

"இன்னமும் அப்படித்தான்
எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் போலவே "
என்றார் சிரித்தபடி..

"அப்படியென்றால் எப்படி "
என்றேன் அப்பாவியாய்...

"புரிகிறமாதிரி
ரொம்பப் புரிகிறமாதிரி..."
என்றார்

"என்ன செய்வது
அவ்வையின் ஆத்திச்சூடியே
ஆரம்பமாயும்
அழவள்ளியப்பாவே
தொடர்ச்சியாகவும்
அம்புலிமாமாவே
பிடித்ததாகவும்
ஆனதாலோ என்னவோ
இப்படித்தான் எழுத வருகிறது "
என்றேன் அப்பாவியாய்.

"அது சரி.அதற்காக இப்படியா
கோவணம் கூட இல்லாமல்
அம்மணயாய் விட்டமாதிரி.."என்றார்
சரி கிண்டலடிக்கிறார் எனப் புரிந்தது

நான் மௌனமாய் இருந்தேன்..

என்னை மீண்டும் சீண்டும் விதமாய்
"இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்  ?"
என்றார்

நியூட்டனின் மூன்றாம் விதியை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது
சரி செய்து வெளியிடவேண்டும் " என்றேன்

"எங்களைப் போன்றவர்களுக்கே
அதை  எழுதுவது கஷ்டம்
உம்மைப்  போன்றவர்களுக்கு
சொல்லவேண்டியதே இல்லை..
சரி..அதிலென்ன குழப்பம் " என்றார்

"மூன்றாம் வகுப்பு படிப்பவனுக்கும்
தெளிவாகப் புரிகிறமாதிரி
ரொம்ப எளிமையாய் அமைந்து விட்டது
அப்படியே வெளியிட்டால்
அது எப்படி சரியாக வரும் எனத்தான்
ஒரே குழப்பமாய் இருக்கிறது " என்றேன்

அபுரி என்ன நினைத்தாரோ
முகத்தை அழுந்தத் துடைத்தபடி
"கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது
அப்புறம் சந்திப்போம்"
எனச் சொல்லியபடி நடையை கட்டினார்.

வெகுநாள் பாரம் ஒன்றை
இறக்கிவைத்த திருப்தியில்
நானும் நடக்கத் துவங்கினேன்

Saturday, March 28, 2020

மனமாகும் குற்றாலம்..

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

Friday, March 6, 2020

விந்தையே வியக்கும் விந்தை..

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது  விந்தை

ஆம் ..
அதிசயமே அதிசயிக்கும்
அதிசயப் பெண்போல

விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான் 

Thursday, August 2, 2018

காதலும் கவிதையும்

"காதலர்கள் காதலில் தோற்று
தற்கொலை செய்துகொள்வது
தொடர்ந்து நடக்கிற போதும்...

கவிதைகள் என்கிற பெயரில்
குப்பை கூளங்கள்
தொடர்ந்துப் பெருகிடும் போதும்...

காதலும் கவிதையும் மட்டும்
எப்படி நித்தமும் புத்தம் புதிதாய்த்
தழைத்தபடியே இருக்கிறது

பதினாறு வயது மார்க்கண்டேயனாய்
எப்படி இளமைத் துடிப்புடன்
நிலைத்தபடியே இருக்கிறது " என்றான்
புதிதாய்க் காதல்வலையில் சிக்கிய நண்பன்

" எல்லாம்
அசட்டுத் துணிச்சலும்
குருட்டு நம்பிக்கையும்
 தரும் பலத்தால் தான் "என்றேன் சிரித்தபடி

"இது காதலை அறியாதவனின்
பொறாமைப் புலம்பல் " என்றான் எரிச்சலுடன்

"அரசியல் செய்யவில்லை என்றால்
அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லை
அப்படித்தான்
காதலிக்கவில்லை என்றால்
காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்

"எனக்குத் தேவை
 புத்திசாலித்தனப் புலம்பல் இல்லை
ஏற்றுக் கொள்ளும்படியான
தெளிவான விளக்கம் " என்றான்

"பகைவனின் கோட்டைக்குள்
காதலி இருக்கிறாள் எனில்..

கிடைக்கும் நூலேணி பிடித்தோ
ஒட்டடை நூல் பிடித்தோ
ஏறும் அசட்டுச் துணிச்சலையும்...

ஒரு சந்தம் கிடைத்ததென்றால்
ஒரு சொல் கவர்ந்ததென்றால்...

அதைக் கொண்டே
ஒரு காவியம் இயற்றிவிடலாம் எனும்
குருட்டு நம்பிக்கையையும்

நிச்சயம்
காதல் உணர்வும்
கவிதை மனமும் மட்டுமே தரும்.

அதனால்தான்
காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..

குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்

தொடர்ந்து கொண்டிருக்கிறது "என்றேன்

இதனை ஒப்புக் கொண்டானா
எனத் தெரியவில்லை
ஆனால் பதில் கேள்வி எழுப்பவில்லை

Wednesday, May 9, 2018

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...

படைப்பாளிக்கு
இது வரமா இல்லை சாபம்தானா ?

முன்னிரவில் விசையுடன்
அடிமனத்திலேயே
மையம் கொண்ட  "அது "

வளர்ந்து நகராது
அல்லது
கரைந்து மறையாது

விசையுடன் அவனை  இம்சிக்க...

அதன்  போக்கை
கணிக்கத் தக்கவனாய் இராது
கவனிக்காத தக்கவானாய் மட்டுமே
இருக்க முடிவதால் ...

கனத்ததை விழுங்கிய
கருநாகமாய்
மெல்ல மெல்ல ஊர்கிறது
அவனது உறக்கத்தையும்  விழுங்கியபடி
இன்றைய இரவும் ..

துணைக்கு யாருமற்று
தானே பிரசவிக்க நேர்ந்த
ஒரு ஜீவனின் அவஸ்தையுடன்
உலாவத் துவங்குகிறான்
பேயாய் இந்த நடு இரவிலும்...

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய்
இது படைப்பாளிகளுக்கேயான
வரமா இல்லை சாபம்தானா எனும்
விடைதரா கேள்வியைச் சுமந்தபடியும் ...


Monday, May 7, 2018

என்னருமைத் தமிழ்த் தாயே...

தெரியாதவருக்குச்
சொல்வதைப் போல
எதையும் விளக்கிச் சொல்லிவிடாது
மிகவும் எச்சரிக்கையாய் ..

தெரிந்தவருக்கு
ஞாபகம்செய்வதைப் போலவே
எதையும் மிகவும் எளிமையாய்
மிகச் சுருக்கமாய்...

பாண்டியத்தைக்
காட்டும்படியாய்
எந்தப் பெரும் வார்த்தையையும்
தவறியும் பயன்படுத்தி விடாது

வசனகவிதைக்கும்
உரை நடைக்கும் இடையினில்
மிகச் சரியாய் புரியும் படியாய்
மிக மிக எளிமையாய்

மிகப் பெரும்பிரச்சனையும்
நாளும் விட்டு விடாது
தொட்டுப் போக முனைகிறேன்
சமூக அக்கறையின் காரணமாய்..

நித்தமும்
கரிக் கங்கினை வெறும் கையால்
இடம் மாற்றும்
அப்பத்தாவின் லாவகமாய்...

"போற்றுவோர்
போற்றாட்டும் புழுதி வாரி
தூற்றுவோர் தூற்றட்டும் "என்ற
மன நிலை மாறாமலே

பிரச்சனைகளை
நடு நிலைக் கண்ணோட்டத்தோடு
நாளும் அணுகுகின்ற
நல்லமனப் பாங்கினையும்
  
வார்த்தையோடு விளையாடும்
சூட்சுமமும் எனைவிட்டு
மாறாதுக்  காத்திடுவாய்
என்னருமைத் தமிழ்த் தாயே

Saturday, April 28, 2018

..தனக்கான காலம் கடந்தும் ..

காலங்கடக்கும்
சக்தியுள்ள கவிதைக்கான
கரு ஒன்று
வளர்ச்சியடைய விரும்பாது
அவனுள்
கருவாகவே சுழன்று கொண்டிருக்கிறது
தனக்கான காலம் கடந்தும்  ..

அவன் படைப்பின் மீதான
சிலரின் விமர்சனம்
ஒருதலைப்பட்சமானதுதான்
என்றாலும்
இவ்வளவு உணர்சிவசப்படுதல் பிடிக்காது

அவனைப் பாராட்டும் பலரின்
பாராட்டுக்கள் எல்லாம்
மிக நியாயமானதுதான்
என்றாலும்
இவ்வளவு பெருமிதம் கொள்வதை விரும்பாது

சம நிலையடையும்
சமயம் வரட்டும் என்று...

கருவாகவே சுழன்றுகொண்டிருக்கிறது
காலம் கடக்கும் சக்தி கொண்ட
வெகு அற்புதமான கரு ஒன்று.
தனக்கான காலம் கடந்தும்  ..
.

Monday, April 16, 2018

கவிதைக் கரு

கனல் புணர
மனம் குளிர்ந்து
ஒளியாய் உருக்கொள்ளும்
பாக்கியமற்று

காற்றின் அணைப்பில்
மனம் வெறுப்புற்று
மெல்ல மெல்லக் கரையும்
கற்பூரமாய்

உணர்வுப் புணர்வில்
மதிமயங்கி
கவியாக உருவாகும்
பாக்கியமற்று

சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக்  கரு

என்றும் போலவே
மாறாது
இன்றும் இப்போதும்

Thursday, April 5, 2018

அந்த முறையே கவிதை எனநாம் தெளிவோம்

சொல்ல நினைப்பதை
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்

Monday, October 16, 2017

முக நூல் சாரம்

எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே முக நூல் நியதியும்
முக நூலின் சாரமுமாகும்

முக நூல் பகவான்

( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூட
சுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்
செய்து கொண்டிருப்பவர்களுக்காக )

Monday, August 28, 2017

கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்

கருவண்டாகிச்
சதிகாரக் கண்ணன்
தன் தொடை துளைத்த போதும்
இரத்தம் ஆறாய்ப்
பெருக்கடுக்க
வலி தீயாய்ப்
பொசுக்கியபோதும்
அலுப்பில் அயர்ந்த
குரு நாதரின் துயில்
கலையக் கூடாதென
கற்சிலையாய் இருக்கிறான்
பாரதக் கர்ணன்

வறுமை தந்த
சோர்வும் நோவும்
மெல்லப் படுத்தியெடுக்க
அதன் காரணமாய்
அடிவயிற்றிலிருந்து கிளம்பும்
அடக்கவொணா இருமலை
அரைவயிற்றுப் பசியில்
மார்பில் அயர்ந்த குழந்தை
விழித்துவிடக் கூடாதென
உதடு கடித்து விழுங்கித்
தாய்மைக்கு இலக்கணமாகிறாள்
சித்தாள் முனியம்மா

ஒப்பு நோக்கின்
இரண்டில் ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லையாயினும்

என்றோ ஒருமுறை
நடப்பதற்கும்
அன்றாடம் நடப்பதற்குமான
வித்தியாசத்தில்

கர்ணனையும் மீறி
என் மனத்தில் உயர்கிறாள்
சித்தாள் முனியம்மா

Sunday, August 27, 2017

எங்கள் ஐயனார்சாமி

சிறு வயதில்
வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?

Monday, August 14, 2017

பொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்களும்

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
நேரத்திற்குக்   கிடைத்துவிடும்
ஆனால் நம்  இஷ்டம்போல்
குலைக்கத் தான் முடிவதில்லை "
என்று குறைபட்டுக்குக்  கொண்டது
கொழுத்திருந்த  அது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
யாரைப்பார்த்தும்குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்று சலித்தது
எலும்பும்  தோலுமாய்
காட்சியளித்த இ து 

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

(சிறந்த சமூக மனிதனாய்
தகுதிப்படுத்திக் கொள்வோம்
சுதந்திரச்  சுகத்தை
முழுமையாய் அனுபவிப்போம்
அனைவருக்கும் இனிய
சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் )   

Tuesday, August 8, 2017

புதிதாய்ப் பிறக்கவேண்டும்

''மொத்தம்
கழிந்தது
இருப்பு
இந்த மூன்றில்
எந்த இரண்டு இருந்தாலும்
மற்றொன்றை
எளிதாய் கண்டு விடலாம்
ஆனால்... "எனத் தயங்க

இதைக் கேட்ட நண்பன்
மிகப் பலமாய்ச் சிரித்தான்

"சுற்றி வளைத்து
எங்கு வருகிறாய் எனப் புரிகிறது
உனக்கு உன் மொத்த வாழ்நாள்
தெரிய வேண்டும் அப்படித்தானே "
என்றான்

நானும் மௌனமாய்த் தலையாட்ட


அவனே  தொடர்ந்தான்

"கழிந்த நாட்களை
கணக்கிட்டுக் கொள்

அதனுடன்
நீ விழிப்பதால்
சேருகிற நாளினை
கூட்டிக் கொள்

இப்போது கிடைப்பது
உன் மொத்த வாழ் நாள்

இப்போது இரண்டு கிடைத்து விட்டதல்லவா
இதில் கழிந்ததைக் கழி
இனி அடுத்தது கிடைப்பது
மிக மிக எளிதுதானே "
எனச் சப்தமாய் சிரிக்கிறான்

நான் மெல்லத் தயங்கியபடி
"அப்படியானால் விடை எப்போதும்
ஒன்றாகத்தானே இருக்கும் "

"ஆம் உண்மையும் அப்படித்தான்
மாறி மாறி இருக்காது
ஒன்றாகத்தான் இருக்கும்

புரிந்தவன் ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறக்கிறான்
கிடைத்த  நாளில்
முழுமையாய் வாழத் துவங்குகிறான்

புரியாதவனோ
உன்னைப் போல்
தேடி அலைந்து
அன்றையும்
கழிந்த நாளாக்கி
வாழாதுத் தொலைக்கிறான்" என்கிறான்

கொஞ்சம் புரிந்தது போலிருந்தது

நாளை முதலாவது
புதிதாய்ப் பிறக்கவேண்டும்

Sunday, August 6, 2017

"வாடா போடா " நண்பர்கள்...

"வாடா போடா "
நண்பர்கள் அதிகம்
உடனிருக்கையில் இருந்த
இளமைத் துள்ளலும்
தைரியமும் மகிழ்வும்

"வா, போ "
நண்பர்களிடம்
விட்டக் குறையாய்
தொட்டக்குறையாய்
விடாதுத் தொடர்ந்ததும்

இப்போது
"வாங்க போங்க "
நண்பர்களிடமும்
இருப்பது போன்ற
பாவனையில் என்
நட்பைத் தொடர்கிறேன்

பிறந்த சூழலில் வாய்த்த
புழுதி வீதியும்
அந்த எருமை குளிக்கும் குளமும்
கிட்டிப் புல் விளையாட்டும் தந்த
 நீங்காதச் சுகத்தை

இன்று வசதி வாய்ப்புகள் தரும்
பிரதான சாலைகளில்
நவீன நீச்சல் குளங்களில்
நவ நாகரீக  விளையாட்டுகளில்
நாளும்தேடிச் சோரும்
என்வயதுப்பெருசுகள் போலவும்

( வலைத்தளம், மற்றும் முக நூல் நண்பர்கள்
அனைவருக்கும்  
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ) 

Saturday, July 29, 2017

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Monday, July 17, 2017

ஒரு நீர்க்குமிழியே கூட....

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
கடந்து செல்ல நேரும்
புகைவண்டி நிலையமே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே கூடப்
அதனை உணர்த்திவிடுகிறது

வாழ்வின் முடிவினைப்
புரிந்து கொள்ள
இறந்துதான் ஆகவேண்டும்
என  அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

உலக வாழ்வின் நிலையாமை
குறித்துத் தெளிய
 நூறு  நூல்கள்
வேண்டும் என்பதில்லை

வண்ண்ங்களைப் பிரதிபலித்து
மயக்கித் தெறிக்கும்
 மிகச் சிறு நீர்க்குமிழியே  கூட
போதுமென்றாகிப் போகிறது

  

Friday, July 14, 2017

மாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்

மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் சில  மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை
புரிந்து கொண்டால் குழப்பமில்லை

உதாரணமாய்...

நில உடமைச் சமுதாயத்தின்
எச்சமாய் இருந்த
எங்கள் ஊர்
நான் சிறுவனாய் இருக்கையில்...

கீழக்கடைசியில் பச்சேரி
மேலக்கடைசியில் அக்ரஹாரம்
இரண்டுக்குமிடையில்
பிள்ளைமார தெரு
யாதவர் தெரு
நாடார் தெரு
தெற்குப் பகுதியனைத்தும்
சேர்வார் வீதி
அதை ஒட்டி
சௌராஸ்டிரா தெருவென
ஜாதியாகத்தான் பிரிந்திருந்தது

அறுபத்தியேழுக்குப் பின்
எழுந்த ஒரு பெரும்
சமூக நீதிப்புரட்சியில்
ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தில்
சாதிப்பெயர்கள் அனைத்தும்
அழித்தொழிக்கப்பட்டு

கீழக்கடைசியில் அம்பேத்கர் நகர்
மேலக்கடைசி ஈஸ்வரன் கோவில்தெரு
இரண்டுக்குமிடையில்
வ.வு.சி வீதி,மற்றும்
கோபாலகிருஷ்ணன் தெரு
காமராஜர் தெரு
தெற்குப்பகுதியனைத்தும்
மருதுபாண்டியர் தெரு
அதை ஒட்டி பிரஸ்ன்ன காலனி
என அரசின் உத்திரவால்
சமத்துபுரமாகிப் போனது

மனம் மாற்றி பெயர் மாற்றாததால்  
சில நாட்கள் பெயர்க்குழப்பமிருந்தது

விளக்கம் சொல்பவர்கள்
"அதுதாம்பா "எனச் சொல்லிப்
பழைய பெயரைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்

இப்போதெல்லாம்
பெயரிலேயே விளக்கம் இருப்பதால்
யாரும் குழம்புவதில்லை

ஆம்மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை

புரிந்து கொண்டால் குழப்பமில்லை


Thursday, July 13, 2017

அரண்மனை மெத்தைக் கூட....

பசித்தலில் குடலில் ஏதும்
பிரச்சனை இல்லை யென்றால்
புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே

பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும்  கூட
நிச்சயம் சுமைபோல் தானே

உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே

உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அரண்மனை மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே

பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே

பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே

கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்

இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம்  வெல்வோம் 

Wednesday, July 12, 2017

உடல் மொழி

"கொஞ்சம் அறிகுறி
தெரிகையிலேயே
அழைத்து வந்திருக்கலாமே
இப்படியா நோயை முற்றவிட்டு..."

அவ நம்பிக்கையில்
உதடு பிதுக்கினார் மருத்துவர்

"அவனுக்குத் தெரியலையே டாக்டர்
நாங்கள்தான் கண் இத்தனை
மஞ்சளாயிருக்கிறதே என
சந்தேகப்பட்டு...."வார்த்தைகளை
மென்று விழுங்கினார் தந்தை

சோர்வாய் மெல்லச் சிணுங்கி
அடி வயிற்றில்
மிக லேசாய் வலி கூட்டி
பின் பசியடக்கி
சிறு நீரின் நிறம் மாற்றி
பின் கண்களுக்கு அதை மாற்றி
உடல் பேசிய வார்த்தைகள் எதையும்
புரியும் அறிவில்லாததால்
நோய் முற்ற
ஒடுங்கி அடங்கிக் கிடந்தான் அவன்

அறிய வேண்டிய
ஆதார மொழியினை முதலில்
அறியப் பயிலாது

தாய் மொழி நீங்கலாய்
நான்கு மொழிகள் அதிகம் அறிந்திருந்த
அந்த மெத்தப் படித்த மடையன்