Monday, August 28, 2017

கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்

கருவண்டாகிச்
சதிகாரக் கண்ணன்
தன் தொடை துளைத்த போதும்
இரத்தம் ஆறாய்ப்
பெருக்கடுக்க
வலி தீயாய்ப்
பொசுக்கியபோதும்
அலுப்பில் அயர்ந்த
குரு நாதரின் துயில்
கலையக் கூடாதென
கற்சிலையாய் இருக்கிறான்
பாரதக் கர்ணன்

வறுமை தந்த
சோர்வும் நோவும்
மெல்லப் படுத்தியெடுக்க
அதன் காரணமாய்
அடிவயிற்றிலிருந்து கிளம்பும்
அடக்கவொணா இருமலை
அரைவயிற்றுப் பசியில்
மார்பில் அயர்ந்த குழந்தை
விழித்துவிடக் கூடாதென
உதடு கடித்து விழுங்கித்
தாய்மைக்கு இலக்கணமாகிறாள்
சித்தாள் முனியம்மா

ஒப்பு நோக்கின்
இரண்டில் ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லையாயினும்

என்றோ ஒருமுறை
நடப்பதற்கும்
அன்றாடம் நடப்பதற்குமான
வித்தியாசத்தில்

கர்ணனையும் மீறி
என் மனத்தில் உயர்கிறாள்
சித்தாள் முனியம்மா

6 comments:

Unknown said...

உண்மைதான்! எங்கே வலைப்பக்கம் காணோம் த ம 2

Thulasidharan V Thillaiakathu said...

சித்தாள் முனியம்மாள் உயர்ந்தவள்!! ரசித்தோம்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சித்தாள், பெரியாள்தான்.

G.M Balasubramaniam said...

நல்ல ஒரு ஒப்பீடு

அசோக்குமார் said...

அங்கு தூங்கி எழுந்து விழித்தது சாதியம் ஆணவம்;
இங்கு தூங்கி எழுந்து தமிழக தாய்மை

அப்பாதுரை said...

எதிர்பார்க்கவில்லை. கனம்.

Post a Comment