Sunday, August 27, 2017

எங்கள் ஐயனார்சாமி

சிறு வயதில்
வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?

11 comments:

KILLERGEE Devakottai said...

இப்படி எல்லார் ஊரிலும் ஐயனாருக்கு பிரச்சனைதான்.

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

அருமை அருமை. வார்த்தைகள் வந்து விளையாடுகின்றன. பழைய ரமணி சாரின் எழுத்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஏன் என்னாச்சு ஐயனாருக்கு... எங்கள் நாட்டில் இப்படி எல்லாம் கிடையாது.. படங்களில் நாடகங்களில் இப்படி எல்லையில் இருக்கும் அழகிய கிராமியச் சூழலோடு கூடிய ஐயனாரைப் பார்த்து ஆசைப்படுவேன்.. நேரில் சென்றும் பார்க்க ஆசை.

Avargal Unmaigal said...

@athiraஐயனாரை நேரில் சென்று பார்க்க ஆசை என்றால் நேராக நான் ஒருக்கும் இடம் வந்துவிடுங்கள் மியாவ்

வெங்கட் நாகராஜ் said...

அம்மாவின் கிராமத்தில் ஐயனார் சிலை உண்டு. ஓரிரு முறை சென்றதுண்டு.

முற்றும் அறிந்த அதிரா said...

///Avargal Unmaigal said...///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வார்த்தைகள்! ஐயனாரை வைத்தே மாறி வரும் சமூகத்தை நாகரீகத்தைச் சொல்லிய விதம் அருமை!

துளசி, கீதா

G.M Balasubramaniam said...

பயப்பட வேண்டும் என்னும் எண்ணத்திலேயே செய்யப்பட்டதோ உருவகப் படுத்தப்பட்டதோ ஐயனார் சிலைகள்?

நிஷா said...

ஊரைக்காக்கும் சாமிக்கே இப்ப காவலா? அதான் சாமி நொந்து நூலாகிட்டார்

நிஷா said...

G.M Balasubramaniam said...பயப்பட வேண்டும் என்னும் எண்ணத்திலேயே செய்யப்பட்டதோ உருவகப் படுத்தப்பட்டதோ ஐயனார் சிலைகள்?////////// இல்லாவிட்டால் நள்ளிரவுக்காவாலிகளை நடுங்க செய்வது எப்படி ஐயா?

Post a Comment