Saturday, July 29, 2017

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Thursday, July 27, 2017

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் சிறிது  ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர் 

Tuesday, July 25, 2017

காற்று வாங்கப் போனால் ....

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

உள்ளம் அதனில்  உடலில்
உடனே  சக்திக்  கூட்டும்  -எளிய
நல்லப்  பயிற்சி என்றால் --அது
நடக்கும் பயிற்சித் தானே

  எனவே நாளும்----

"காற்று வாங்கப் போனேன்
கவிதை வாங்கி வந்தேன் " -இந்தக்
கூற்றை நினைவில் கொண்டே    -நாமும்
காற்று  வாங்கப் போவோம்  

Friday, July 21, 2017

உனக்கும் வருமடி "வளர்மதி "ஆப்பு...

அண்ணே!
ஒரு சின்ன டவுட் அண்ணே
சமூகத்தைக் கெடுப்பது என்றால்
சமூக  அமைதியைக் கெடுப்பது
என்றால் என்ன அண்ணே ?

தம்பி
சமூகத்துக்கு எது எது
தேவையற்றதோ
எதை எதைச் செய்தால்
அது
இன்னும் நாசமாகுமோ
அதையெல்லாம் செய்வது
சமூகத்தைக் கெடுப்பது

என்ன செய்தாலும்
பொறுத்துக் கொண்டு
ஸ்மரணையற்றுக் கிடக்கும்
சமூகத்தைத் தட்டியெழுப்ப முயன்றால்
அது சமூக அமைதியைக் கெடுப்பது

சமூகத்தைக் கெடுக்க
உறுதுணையாய் இருந்தால்
சம்பள உயர்வு இரண்டு பங்கு
நிச்சயம் உண்டு

மாறாக
அதற்கு எதிராக
ஏதேனும் பிரச்சனை செய்தால்
தண்டனை என்பது
நிச்சயம் உண்டு

அண்ணே
அப்ப இந்த ஜன நாயகம்
மக்கள் உரிமை
அப்படி இப்படிச் சொல்றதெல்லாம்
என்ன அண்ணே

போடா மண்டு
எந்த ஊரில் இருந்துகிட்டு
என்ன என்னவோ எல்லாம்
உளறிக்கிட்டு

உன் வீட்டுக்கிட்டயே
கடையைத் திறந்தாச்சு
போய் ஒரு ஆஃப் அடிச்சிட்டு
பேசாமத் தூங்கு

இல்லாட்டி
உனக்கும் வருமடி
"வளர்மதி "ஆப்பு

Thursday, July 20, 2017

கமல் சார்....

கமல் சார்
இப்பத்தான் தெரிஞ்சது
நீங்க ஒரு பெண்ணை
அவ விருப்பத்துக்கு மாறா
கடத்திட்டுப் போய்
கொடைக்கானலிலே
மறைச்சு வச்சது

அதுக்கு ஆதாரம் தேடி
இப்பத்தான்
அந்தக் குகைக்கு
விசாரணைக் குழு போயிருக்கு

(இதில் தப்புவது கஸ்டம்
ஏன்னா அந்தக் குகைக்குப் பேரே
இப்ப குணா குகைதான் எப்புடீ )

அப்புறம் நீங்க
பரமக்குடி பார்ப்பானாமே
அது கூட
இப்பத்தான் தெரிஞ்சது

(இதிலும் தப்புவது மிக மிக கஸ்டம்
நீங்க படிச்ச ஸ்கூலில் இருந்து
ஆதாரத்தைத் திரட்டிட்டோம் )

ஏன்னா
திராவிடம் ஆரிய மாயையில
சிக்கிடப் பூடாது இல்ல

இன்னும்
நிறைய ஆதாரம் இருக்கு
அவசியமானா அப்ப  அப்ப
வெளியிடுவோம்

தெளிவாய்ச் சொல்லிடறோம்
நாங்க சினிமா எடுக்க
உங்கப் பக்கம் வரலை

நாங்க என்னவோ அரசியல்ல
படம் காட்டித் திரிவோம்
அதுக்கு நீங்க வராதீங்க

அதுதான் இருவருக்கும் நல்லது
புரியுதா ?
 

Tuesday, July 18, 2017

தமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...

பணம் பத்தும் செய்யும்
இது பழைய மொழி
பதினொன்று செய்வது
"அன்பே வா "காலம்
எதையும் செய்யும் என்பது
"சசியின்" காலம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
-----------
பணத்தைக் கொண்டு
எதையும் செய்யலாம் எனச்
சமூகச் சூழல் ஆன பின்பு

எதையும் செய்து
பணம் சம்பாதிக்கலாம் என்பது
இன்றைய தர்மம்
இப்படிப் பேசிச் சமாதானம் கொள்வோம்
--------------

பணம் பாதாளம் வரை
பாயும் எனில்
பக்கம் இருக்கிற
மாநிலச்சிறைக்குள்
பாய்வதில் என்ன ஆச்சரியம் ?
இப்படிக் கேட்டு எதிரியை மடக்குவோம்
---------------

விலையில்லா பொருட்கள் கொடுத்து
நம் வாயடைத்து
அரசுப்பணிகள்
அனைத்திற்கும்
விலை வைத்தது ராஜ தந்திரம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
----------------

தர்மம் நியாயம்
நீதி சட்டம் அனைத்தையும்
சந்தைப்படுத்தியது
அரசியல் சாகசம்
இப்படிச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்
--------------------
மறக்காது
சாக்கடை அரசியலும்
அதனைச் சகிக்கும் மனப்பாங்கும்
தமிழனுக்கே உரியது என
உலக அங்கீகாரம் பெறுவோம்
மீசையை முறுக்கிக்  கர்வமும் கொள்வோம்

Monday, July 17, 2017

ஒரு நீர்க்குமிழியே கூட....

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
கடந்து செல்ல நேரும்
புகைவண்டி நிலையமே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே கூடப்
அதனை உணர்த்திவிடுகிறது

வாழ்வின் முடிவினைப்
புரிந்து கொள்ள
இறந்துதான் ஆகவேண்டும்
என  அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

உலக வாழ்வின் நிலையாமை
குறித்துத் தெளிய
 நூறு  நூல்கள்
வேண்டும் என்பதில்லை

வண்ண்ங்களைப் பிரதிபலித்து
மயக்கித் தெறிக்கும்
 மிகச் சிறு நீர்க்குமிழியே  கூட
போதுமென்றாகிப் போகிறது

  

Saturday, July 15, 2017

பொலிடீசியன் பிகேவியரா/பிக் பாஸ் ப்ரொமோஷனா

நகரமயமானபின்னே
சேரிக்கான பொருளே
வேறுவகையாகிப்போனதே

வேளச்சேரி,கூடிவான்சேரியை
மட்டும் சொல்லவில்லை
கூவத்தோரம் இருப்பவர்களுக்கும்
சேர்த்துத்தான் சொல்கிறேன்

கிராமங்களில்
பழையபச்சேரிகள்
எனச் சொல்லப்பட்டதெல்லாம்
அம்பேத்கார் நகர் எனவே
பொதுப்பெயர் பெற்றுப் போக

சேரிகள் எனில்
பொருளாதார ரீதியாக
பின் தங்கியோர்
வாழும் பகுதி என ஆனபின்
ஜாதிப்பிரச்சனை ஏன் வருகிறது ?

அவர்களை முன்னேறாது
அவர்களாகவே வைத்திருத்தலே
தங்கள் நிலைப்புக்கு வசதி
எனக் கருதும் அரசியல் வியாதிகள்

அவர்களே மறந்துபோன
அவர்களுக்கான அடையாளங்களை
மீண்டும் நிலை நிறுத்த
முயல்வதுதான்
பொலிடீசியன் பிகேவியரா ?

இல்லை இது கூட
பிக் பாஸுக்கு மறைமுகமாய்
ப்ரொமோஷன் செய்யும் தந்திரமா ?

Friday, July 14, 2017

மாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்

மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் சில  மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை
புரிந்து கொண்டால் குழப்பமில்லை

உதாரணமாய்...

நில உடமைச் சமுதாயத்தின்
எச்சமாய் இருந்த
எங்கள் ஊர்
நான் சிறுவனாய் இருக்கையில்...

கீழக்கடைசியில் பச்சேரி
மேலக்கடைசியில் அக்ரஹாரம்
இரண்டுக்குமிடையில்
பிள்ளைமார தெரு
யாதவர் தெரு
நாடார் தெரு
தெற்குப் பகுதியனைத்தும்
சேர்வார் வீதி
அதை ஒட்டி
சௌராஸ்டிரா தெருவென
ஜாதியாகத்தான் பிரிந்திருந்தது

அறுபத்தியேழுக்குப் பின்
எழுந்த ஒரு பெரும்
சமூக நீதிப்புரட்சியில்
ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தில்
சாதிப்பெயர்கள் அனைத்தும்
அழித்தொழிக்கப்பட்டு

கீழக்கடைசியில் அம்பேத்கர் நகர்
மேலக்கடைசி ஈஸ்வரன் கோவில்தெரு
இரண்டுக்குமிடையில்
வ.வு.சி வீதி,மற்றும்
கோபாலகிருஷ்ணன் தெரு
காமராஜர் தெரு
தெற்குப்பகுதியனைத்தும்
மருதுபாண்டியர் தெரு
அதை ஒட்டி பிரஸ்ன்ன காலனி
என அரசின் உத்திரவால்
சமத்துபுரமாகிப் போனது

மனம் மாற்றி பெயர் மாற்றாததால்  
சில நாட்கள் பெயர்க்குழப்பமிருந்தது

விளக்கம் சொல்பவர்கள்
"அதுதாம்பா "எனச் சொல்லிப்
பழைய பெயரைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்

இப்போதெல்லாம்
பெயரிலேயே விளக்கம் இருப்பதால்
யாரும் குழம்புவதில்லை

ஆம்மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை

புரிந்து கொண்டால் குழப்பமில்லை


Thursday, July 13, 2017

அரண்மனை மெத்தைக் கூட....

பசித்தலில் குடலில் ஏதும்
பிரச்சனை இல்லை யென்றால்
புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே

பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும்  கூட
நிச்சயம் சுமைபோல் தானே

உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே

உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அரண்மனை மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே

பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே

பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே

கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்

இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம்  வெல்வோம் 

Wednesday, July 12, 2017

உடல் மொழி

"கொஞ்சம் அறிகுறி
தெரிகையிலேயே
அழைத்து வந்திருக்கலாமே
இப்படியா நோயை முற்றவிட்டு..."

அவ நம்பிக்கையில்
உதடு பிதுக்கினார் மருத்துவர்

"அவனுக்குத் தெரியலையே டாக்டர்
நாங்கள்தான் கண் இத்தனை
மஞ்சளாயிருக்கிறதே என
சந்தேகப்பட்டு...."வார்த்தைகளை
மென்று விழுங்கினார் தந்தை

சோர்வாய் மெல்லச் சிணுங்கி
அடி வயிற்றில்
மிக லேசாய் வலி கூட்டி
பின் பசியடக்கி
சிறு நீரின் நிறம் மாற்றி
பின் கண்களுக்கு அதை மாற்றி
உடல் பேசிய வார்த்தைகள் எதையும்
புரியும் அறிவில்லாததால்
நோய் முற்ற
ஒடுங்கி அடங்கிக் கிடந்தான் அவன்

அறிய வேண்டிய
ஆதார மொழியினை முதலில்
அறியப் பயிலாது

தாய் மொழி நீங்கலாய்
நான்கு மொழிகள் அதிகம் அறிந்திருந்த
அந்த மெத்தப் படித்த மடையன்

Tuesday, July 11, 2017

முக நூலும் நிஜ வாழ்வும்....

கண்ணில்பட்ட
நல்லவைகள்
சுவாரஸ்யமானவைகள்
பயனுள்ளவைகள்
அனைத்தையும்

யாம் பெற்ற இன்பம்
இவ்வையகமும் பெறட்டும்
எனும் பரந்த நோக்கில்

தாமதிக்காது
அடுத்த நொடியே
பகிர்ந்து வைக்கத் துடிக்குது

விரிந்த மனம்
முக நூலில்..

என்றேனும்
பயன்படலாம்
பயன்படாதும் போகலாம்
என்பவைகளைக் கூட

யாம் பெற்ற சுகம்
தனக்கும் தன் குடும்பத்திற்கும்
எனும் குறுகிய நோக்கில்

தாமதிக்காது
அடுத்த கணமே
மறைத்து வைக்கத் துடிக்குது

சுய நல மனம்
நிஜ வாழ்வில்...

ஆயினும்
எறும்பு ஊற ஊற
தேய்கிற கல்லது

காட்சியாய்
நெஞ்சுள் விரிகிறது
மிக லேசாய்
நம்பிக்கை ஊட்டிபடி


Monday, July 10, 2017

என் அப்பன் குதிருக்குள் இல்லை

ஆத்துல போடுவதாக இருந்தாலும்
அளந்துப் போடப்
பயிறுவிக்கப்பட்டவர்கள் நாம்

ஆகவே அளத்தல் சரிதான்

கறாராக என்பதுவும் சரிதான்

ஆனால் எதை எதனால் எப்படி ?

தூரத்தைத்  தராசில் நிறுத்தா ?

திரவத்தை அடிக் குச்சிக் கொண்டா ?

மணத்தை நாவின் மூலமா ?

ருசியைச் செவியின் மூலமா ?

இல்லையாயின்

மனம் கொள்ளும் நம்பிக்கைகளை

அறிவால் அளக்க முயல்வோமா?

காட்டு யானையை
பயிற்றுவிக்க
பயிற்றுவிக்கப்பட்டக்  கும்கியாய்

அனுபவத்தால்
அடைந்த சில
வழிமுறைகளை, நெறிமுறைகளை

சடங்காய் சம்பிராதயங்களாய்
வகுத்து வைத்திருக்கிறோம்

(பல விஷயங்கள் கண்ணை
மூடிக்  கொண்டு  ஏற்கும்படியாய்

சில விஷயங்கள் அடியோடு
அறுத்தெறியும்படியாய்  ) 

குட்டியில் சங்கிலியால்
கட்டப்பட்ட யானை
பலங்கொண்டதும் சணலுக்கு
அடங்கிடும் கதையாய்....

புரிந்துத் தொடர்கிற
புரிந்து மறுக்கிற
இருவரும்
நிச்சயம் புத்திசாலி

மாறாக
நாத்திகம் என் உயிர் மூச்சு

கோவிலுக்கு வந்தது
மனைவிக்காக என்பது

காவி உடுத்தியபடி
உத்திராட்சம் அணிந்தபடி
பகுத்தறிவு மேடையில் நாடகமாடுவதும்  

நிச்சயம்
இரசிக்கத் தக்கதில்லை

மாறாக
ஊரை ஏமாற்றுவதாய் நினைத்து
தன்னையே ஏமாற்றிக் கொள்ளும்
............................... கூட

(சமீபத்தில் ஒரு பகுத்தறிவுக் கூட்டத்
தலைவர் தன் அறுபதாம் கல்யாணத்தினை
அதற்கான கோவிலில் சென்று
செய்து கொண்டார்

அப்போது நிருபர்கள் கேட்டக் கேள்விக்கு
இது  என் தனிப்பட்ட விஷயம் என்றார்

ஒரு ஆதீனத் தலைவர் எப்போதும்
எப்போதும் கடவுள் மறுப்பாளர்களைச்
சுற்றியே காட்சித் தருவார்

இந்த இரண்டுக்கும்  இந்தப் பதிவிற்கும்
எந்தச்சம்பந்தமில்லை

ஆம் என் அப்பன் குதிருக்குள் இல்லை )

Sunday, July 9, 2017

இவனும் அதுவும்

நண்பன்
அவனைத்தேடி வந்தால்
இவனும் போகலாம்
என இருந்தான்

அவனும் வரவில்லை
இவனும் போகவில்லை

பின்னொரு நாளில்
அவனும் அதையே சொல்ல
இவன் மிக நொந்து போனான்

காதலை
முதலில்அவள் சொன்னால்
தானும் சொல்லலாம்
என  இவன் இருந்தான்

அவளும் சொல்லவில்லை
இவனும் சொல்லவில்லை

பின்னொரு நாளில்
அவளும் அதையே சொல்ல
இவன் மனம் வெந்து போனான்

....................................................

...................................................

......................................................

அறிவுக்குப்
பிடிபடுமாயின் "அதனை "
முழுதாய் நம்பலாம்
என இவன் இருந்தான்

அது பிடிபடவும் இல்லை
இவன் நம்பவும் இல்லை

அந்திம நாட்களில்
இவன் நம்பத் துவங்க
"அது "பிடிபடத் துவங்க
இவன் மிகச் சிதைந்தே போனான்

Friday, July 7, 2017

பேராசையும் தேவையும்

தேவைகள் மட்டும்
எவையென அறிந்திருந்து
பேராசைகள் குறித்து
ஏதுமறியாது
நிம்மதியாய் இருந்தார்கள்
நம் பாட்டன்மார்கள்

தேவைகள் குறித்தும்
பேராசைகள் குறித்தும்
ஒரு தெளிவிருந்தும்
பேராசைகள் தேவையற்றவை என
தெளிவாய் இருந்தார்கள்
நம் தகப்பன்மார்கள்

தேவைகள் எவை
பேராசைகள் எவை என்கிற
பெருங்குழப்பத்தில்
இரண்டிலும் பாதியே நிறைவேற
எப்போதும் பதட்டத்தில்
வாழ்ந்தோம்  நம் காலத்தவர்கள்

பேராசைகளே தேவைகளென்றாக
எந்தத் தேவையும் அடையாது நீள
புலிவால்பிடித்த நாயராய்
பிடிக்கவும் இயலாது விட்டுவிடமும் முடியாது
நொடிதோறும்திண்டாடுது
இன்று நம் குலத்தோன்றல்கள்

ஆம்
ஆதி முதல்  இன்றுவரை
 கூடியும்  குறைந்தும்
 ஒன்று போலவும் நேரெதிர்போலவும்
ஒளிபோலும்  நிழல் போலும்
பம்மாத்துக்காட்டி
உலகினைத் தம் போக்கில்   இயக்கிப் போகுது
பேராசையும் தேவையும்

தமிழ்மண ஓட்டுப் பட்டை- ஒரு சிறு சந்தேகம்


இது எப்பத் தெரியாது
ஏன் தெரியாதுன்னு
யாருக்கும் தெரியாது

ஆனா
தெரிய வேண்டிய நேரத்தில
மிகச் சரியா தெரியாமப் போகுது

நான் எப்ப வருவேன்
எப்படி வருவேன்னு
யாருக்கும் தெரியாது

ஆனா
வரவேண்டிய நேரத்தில
மிகச் சரியா வருவேன்னு
முத்து ரஜினி சொன்ன "பஞ்சை "
உல்டாவா நினைவுபடுத்தியபடி

இது எனக்கு மட்டும்தானா/

Wednesday, July 5, 2017

வாடித் தவிக்குது பதிவர் உலகு

வாடித் தவிக்குது பதிவர் உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

தேரின்றி நடக்கும்
திருவிழா போலவும்
நீரின்றித் தவிக்கும்
காவிரி போலவும்

கண்ணனைக் காணாத
கோகுலம் போலவும்
வெண்நிலவைத் தேடும்
வானமதைப் போலவும்

வண்ணமதைப் பூணாத
ஓவியத்தைப் போலவும்
வண்ணமலர் இல்லாத
பூங்காவைப் போலவும்

கோலமது வரையாத
வெளிவாசல் போலவும்
தாளமது சேராத
சுகராகம் போலவும்

வாடித் தவிக்குது பதிவர உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

பதிவர் மனமதில் உள்ளதனை-இங்கே
பதிவாய்  நானும் தந்து விட்டேன்
இனியும் தாமதம் செய்யாது-பதிவினைத்
தந்தெமை மகிழ்ந்திடச் செய்வீரே

(எழுதாது இருக்கும் நம்  மனம் கவர்ந்த
பதிவர்கள் அனைவருக்கும்
பதிவர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளாய்  )

Tuesday, July 4, 2017

நாங்கள் திட்டம் போட்டு கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்

ரோடெல்லாம்
துருப்பிடித்த ஆணிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துருப்பிடித்த ஆணி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களைத்  திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்த்திடேயாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

நீ அவல்  கொண்டுவா
நான் உமி கொண்டுவருகிறேன்
ஊதி ஊதிச்  சாப்பிடுவோம்
எனும் சாமர்த்திய நண்பனைப்
பார்த்ததுண்டா ?

நீ சம்பாதிப்பதையெல்லாம்
வரியாகக் கட்டு
நாங்கள் திட்டம் போட்டு
கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்
என்கிற  அரசுகளுக்கும் இதற்கும்
என்னதான் வித்தியாசம்  ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
நமக்கும் அவர்களுக்கும் என்னதான்  வேறுபாடாம் 

Monday, July 3, 2017

விதையும் கருவும்

குனிந்து
மிக எளிதாய்
மண் மீதே
எடுத்துக் கொள்ளும்படியாகவா

உயர்ந்து
வளர்ந்து
முயன்று
பறித்துக் கொள்ளும்படியாகவா

புதையல்போல்
கவனமாய்த்
தோண்டி
அள்ளிக் கொள்ளும்படியாகவா

விளைவித்தப் பலனை
எப்படித் தருவது என்பதை
விதைப்பவன் முடிவு செய்வதில்லை
அதை விதையே முடிவு செய்து கொள்கிறது

விதைப்பவன் பணி
விதைப்பதும்
அதனைப் பாதுகாப்பாய்த்
தொடர்ந்துப் பராமரிப்பது மட்டுமே

ஒருமுறை
வாசித்து
முடித்ததும்
புரிந்து கொள்ளும்படியாகவா

கொஞ்சம்
முயன்று
பின் எளிதாய்
தெரிந்து கொள்ளும்படியாகவா

அதன் போக்கில்
மெனக்கெட்டுப்
பயணித்துப் பின்
உணர்ந்து மகிழும்படியாகவா

உறுத்தும் படைப்பினை
எப்படித் தருவது என்பதனை
படைப்பாளி முடிவு செய்வதில்லை
அதைக் கருவே முடிவு செய்து கொள்கிறது

படைப்பாளியின் பணி
அதனை ஏற்பதுவும்
தாய் போலப் பொறுப்பாய்
ஈன்றுப் புறந்தருதல் மட்டுமே

(இதனை எழுதப் பின்னூட்டம் மூலம்
கரு தந்துக் காரணமான வை.கோ அவர்களுக்கும்
ஜி.எம் .பி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி )

Sunday, July 2, 2017

வாயிற்காப்போர்கள்..

குளிரூட்டப்பட்ட
தன் அலுவலக அறையில்
இடையூறுகள் ஏதுமின்றி
இயல்பாகவும் , மகிழ்வாகவும்
பணியாற்றிக் கொண்டிருந்தான் என் நண்பன்

"எப்படி  இது சாத்தியமாகிறது
என்னால் இப்படி முடியவில்லையே ஏன் ?"
என்றேன்

"இது பெரிய விஷயமில்லை
வாயிற்காப்போர்கள் விஷயத்தில்
மிகக் கவனமாய் இருந்தால் போதும் "
என்றான் சிரித்தபடி

"நான் அலுவலகத்தைக் கேட்கவில்லை
உன்னைக் கேட்கிறேன்
எப்படி உன்னால் இயல்பாகவும்
மகிழ்வாகவும் எப்போதும்.."

நான் சொல்லி முடிக்கும் முன்
"நானும் அலுவலகத்தை மட்டும்
சொல்லவில்லை
என்னையும் சேர்த்துத்தான் "என்றவன்
தன் காதுகள் இரண்டையும்
வாயையும் தொட்டுக் காட்டி
இரு கண்களையும் மெல்லச் சிமிட்டினான்

மூலச் சூத்திரம் மெல்லப் புரிந்தது



Saturday, July 1, 2017

காலச் சூழல்...

நாங்கள்  சிறுவனாய் இருந்தபோது
தீயவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடித் தேடி
கண்டுபிடிக்கும்படியாய்
எங்கோ ஒளிந்து கொண்டு
கொஞ்சம் பயந்தபடியும்...

நாங்கள்  வாலிபனான போதும்
அவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடினால்
கிடைக்கும்படியாய்
கொஞ்சம் தூரத்தில் எட்டாதபடி
தன்னை மறைத்தபடியும்...

இன்றைய நிலையில்
அவைகள் இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால் விலகிப்போனாலும்
விடாது தொடர்கிறபடி
கொஞ்சம் அசந்தாலும் வீழ்த்திவிடுகிறபடி
திமிராய் தான் தோன்றித்தனமாய்..

இப்போது நல்லவைகளும்
இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால்முன்பு தீயவைகள்
இருந்ததுபோல்
தன்னை மறைத்தபடியும்
நிறையப் பயந்தபடியும்...