ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் )
வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என
நான் எண்ணும் ஒரு திரைப்படம் வெளியாகும் .
ஒருமுறை கபாலி ,ஒருமுறை
பாகுபலி 2 ,இப்போது காலா
நான் சிறுவயதில் மதுரையை ஒட்டிய ஒரு
சிறிய கிராமத்தில்வளர்ந்தவன் .
அங்கு சினிமா என்றால்
எங்கள் ஊரில் டெண்ட் கொட்டகையில்
வெளியாகும் சினிமாதான்
அதுவும் காலாண்டு அரை அரையாண்டு
முழு ஆண்டுதேர்வு விடுமுறைக்கு
தலா ஒருபடம் வீதம் வருடத்திற்குமூன்று படம்
மற்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு
வெளியாகும் ஒரு சிறப்புத் திரைப்படம்.
அதுதான் வாய்க்கும்
(இந்தச் சிறப்புத் திரைப்படம் கூடுமானவரையில்
ஒரு புரட்சித்தலைவரின் படமாகத்தான் இருக்கும் )
இந்தப் படம் பார்க்கக் கூட அதிக மெனக்கெட
வேண்டியிருக்கும்விடுமுறை முடிந்து
பள்ளிக்கூடம் போனதும் லீவில்
என்ன படம் பார்த்தாய் என்பதுதான் உடன் படிக்கும்
மாணவர்களின் முதல் கேள்வியாயிருக்கும் .
பார்க்கவில்லை என்றால்அதுவே ஒரு தகுதிக்
குறைவு போல் மதிக்கப்படும்
அதற்காகவே வீட்டில் அழாத குறையாக அடம் பிடித்து
ஒரு திரைப்படம் எப்படியும் பார்த்து விடுவோம்
வீட்டிலும் இதை சாக்காக வைத்து பல்ப் துடைப்பது
மாடி கூட்டுவது ,கொல்லைப்புற அறையைச் சுத்தம்
செய்ய வைப்பது முதலான பல வேலைகளை
வாங்கி விடுவார்கள் என்பது வேறு விஷயம்
அப்படிப் பார்த்துப் போய்ப் கதை சொன்னால் கூட
நம்பாமல் கதை யாரிடமோ கதையை கேட்டு
கதை விடுகிறாய் என சொன்னதற்காக சினிமா
டிக்கெட்டைக் கூட பத்திரமாய் கொண்டு போய்
காண்பித்த நிகழ்வெல்லாம் இப்போதும் நினைவில்
இருக்கிறது
இப்படி சினிமா பார்த்துப் போய் பெருமையைப்
பீத்தலாம் எனப் போனால் வசதியான வீட்டுப்
பசங்க இரண்டொருவர் டவுனில் படம் பார்த்து விட்டு
அந்தப் பெருமையைப் பீத்த நாங்கள்
ஒன்று மத்தவர்களாய்கவனிக்கப்படாமல் அவர்கள்
பீத்தலுக்கு அடிமையாகிஅவர்கள் சொல்கிற
கதையைக் கேட்க வாய்ப்பிளந்துக்கிடப்போம்
அதிலும் சுப்பையான்னு ஒரு பையன் .ஒரு சினிமா
கதையைப் பகுதி பகுதியாய் நான்கு ஐந்து நாள்
சுவாரஸ்யம் குறையாமல் சொல்வான்
முத்து மண்டபம் என்று ஒரு சஸ்பென்ஸ் படம்
அதில் கொலைகாரன் யாரென்று சொல்லாமல்
எங்களை ஐந்து நாள் திண்டாடவிட்டு பின் ஒரு நாள்
இரக்கப்பட்டு முடிவைச் சொன்னான் .அதுவும்
அவன் புத்தகத்திற்கு அட்டைப்போட்டுக் கொடுத்த பின்பு
இப்படி வளர்ந்த சூழ் நிலையில் பின் உயர் நிலைப்
பள்ளி வந்ததும் டவுனில் சினிமா பார்ப்பதற்காக
காசு சேர்த்த கதை ,காலைப் பத்து மணி
காட்சிக்குப் போய்தொடர்ந்து இரண்டு காட்சிக்கு
டிக்கெட் கிடைக்காது போயும் மனம் தளராது
நள்ளிரவுக்கு காட்சிப் பார்த்து
ஊருக்கு நடந்தே திரும்பிய கதை ,பெண்கள் மற்றும்
சிறுவர்களுக்கென இருந்த 70 பைசா டிக்கெட்
எடுப்பதற்காக (பெரியவர்களுக்கு 80 பைசா ) முட்டி
மடித்து குள்ளமாய் நடந்த கதை ,என எம் வாழ்வோடு
பின்னிப்பிணைந்த சினிமா தொடர்பான
நினைவுகள் எல்லாம் இந்தக் காலா படம் பார்க்க
அந்தத் திரைப்படத் தியேட்டர் வாயிலில் காரை விட்டு
இறங்கியதும் தொடர்ச்சியாய் வந்து போனது
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை
( தொடரும் )