தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது
இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்...
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது
'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை
'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை
'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி
அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை
முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?
கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்
ஆனாலும் என்ன.....
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன
8 comments:
வணக்கம் சகோதரரே
நல்ல ஆழமான அழகான கவிதை.
/தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது/
உண்மை. ஆனால் உண்மைகளை கவிதையாக்கிய அவன் உணர்வுகளை உறவுகள் புரிந்து கொள்ளாது அவனை தனிமைபடுத்தியது கொடுமையே....
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை என்றில்லாமல் எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும்.
சங்கல்பத்தில் ப் வருமா என்ன?
கவிஞனைப் புரிந்து கொள்ளாமல் ஒதுக்குவது வேதனைதான்.
கவிஞனையும் கவிதையையும் புரிந்துகொள்ளாமல் கடந்துபோவோர் கல்மனம் படைத்தோராவர். இவர்களைப்பற்றி கவிஞர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
பெரும்பாலான வாசகர்கள் கருவில் தாங்கள் இருக்கிறோமோ என்றே நினைக்கிறார்கள் முன்பு படைக்கப் பட்ட போது என்ன பின்னூட்டம் எழுதினேன் நினைவில்லை இப்போது தோன்றியது இது
இவ்வாறெல்லாம் கவிஞன் படும் அவஸ்தைகள் ஒருபுறம் இருக்க,
கவிதா ஞானம் குறைவான என்னைப்போன்ற (ட்யூப் லைட்ஸ்) சிலர்,
நேரம் ஒதுக்கி, ’யாதோ’ சொல்லும் மிக உயர்ந்த கருத்துச் செறிவுகள் உள்ள
ஒருசிலக் கவிதைகளைப் படித்து புரிந்துகொண்டு,
அதற்கேற்ப ஓர் பின்னூட்டமிட சங்கல்ப்பம் செய்துகொண்டு முயற்சிப்பது என்பது,
ஒரே நேரத்தில் இரட்டைப்பிரஸவம் நிகழ்வது போல சற்றே சிரமமாகத்தான் உள்ளது.
மனதில் தற்காலிகமாகத் தோன்றியிருந்த பிரஸவ வைராக்யங்கள் + வலிகள் + வேதனைகள் அனைத்தும், குழந்தைகளின் முகத்தினைப் பார்த்ததும் மறைந்தும் மறந்தும் விடுவதுபோலவே ...... ஆக்கத்தின் தாக்கத்தில் கண்டுண்டு, வாசகனை மயங்கிப் போகவும் வைத்து விடுகின்றன. எனவே இதுபோன்ற பிரஸவ இன்பங்கள் தொடரட்டும்
பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.
பாதிக்கப்படுகின்ற வேளை தான்
படைப்பாளியின் உள்ளத்தில்
படைப்புகள் பிறக்கின்றன.
ஆமாம் கவிஞனின் உணர்வு பூர்வ நிலையை விளக்கிய விதம் அருமை பாராட்டுக்குரியது
Post a Comment