Wednesday, November 30, 2016

பின்னணி பாராது பின்னணி தொடரின்.....

முந்தைய காலங்களில்

முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..

உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்

இன்றைய காலங்களில்

முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்

ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்

இனியும் வரும் காலங்களில்

முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..

எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
 நம் நிலை  நிச்சயம்
கையறு நிலையே

உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே 

Tuesday, November 29, 2016

மீன்பிடிப் போட்டி...

குளம் கலக்கும் குணம்
குளம் அழிக்கும் குணம்
மீன் பிடிக்க
நினைப்பவர்களுக்கே வரும்

குளம் ஆக்கும்  மனம்
குளம் காக்கும் குணம்
நீரின் அருமை
அறிந்தவர்களுக்கே தகும்

மீன் பிடிப் போட்டியில்
சேறும் சகதியும்
குளத்து நீரை
சாக்கடையாக்கியத் தினங்கள்

ஒரு கெட்டக்
கனவினைப் போல
மெல்லக் கடந்து போக

மெல்லத் தெளியத்
துவங்குது
எங்கள் ஊர்க்குளத்து நீர்

துவேஷமும் வெறுப்பும்
மெல்லப் படிய
சீராகிடும் மனம் போலும்  

Monday, November 28, 2016

காலம் கடக்கும் பேராசை...

காலங்கடக்கும் பேராசை
துளியும் எனக்கில்லை
அதன் காரணமாகவே
என்படைப்புகளுக்கும்
அந்தப் பேராசை துளியுமில்லை

பொசுக்கும் மணற்பரப்பில்
வெற்றுக் காலுடன்
தகித்து வருவோனுக்கு
கொஞ்சம் ஒதுங்க இடம்தரும்
ஒற்றைப் பனைமரமாய்...

நீண்டு விரிந்த நெடுஞ்சாலையில்
தன் எடை மீறிய சுமையுடன்
ஒடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் நிமிர இடம் தரும்
ஒரு கற்சுமைதாங்கியாய்...

கொட்டும் பெருமழையில்
முற்றாக நனைந்து ஊறி
நடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் ஒடுங்க இடம் தரும்
ஒரு பாழடைந்த கோவிலாய்..

தனிமை தரும் வெறுமையில்
சூழல் கூட்டும் கொடுமையில்
நசுங்கித் தவிப்போனுக்கு
கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே
இலக்கியம் எனக் கொண்டதால்...

என் படைப்புகளுக்கு
காலம் கடக்கும் ஆசை
துளியும் இல்லை
அதன் காரணமாகவே
எனக்கும் அந்தப் பேராசை
என்றும் எப்போதும்
வருவதே  இல்லை 

Sunday, November 27, 2016

தகவல்கள்... தகவல்கள்.. தகவல்கள்...தலைவலிகள் ..

அந்தப்புரச் சுகமும்
அரியணைச் சுகமும்
பங்கப்படாதிருக்க
அரசனுக்கு அன்று
தகவல்கள் அவசியமாக இருந்தது..

ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டிய
தங்கமாயிருந்தது

அதனாலேயே
படைபலத்தை விட
ஒற்றர்பலம்
அதிகத் தேவையாக இருந்தது

அறிவின் பசியடக்க
வாய்ப்பின் வாசலறிய
பின்னடையாதிருக்க
அனைவருக்கும் பின் நாளில்
தகவல்கள் தேவையாயிருந்தது

ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டியப்
பொக்கிஷங்களாக இருந்தது

அதனாலேயே
புத்திசாலித்தனத்தை விட
தகவல்களைச் சேகரித்தவன்
வெற்றியாளனாய் இருந்தான்

மன அமைதியும்
வாழ்வின் முன்னேற்றமும்
சாத்தியப்பட
அனைவருக்கும் இன்று
தகவல்கள் ஒருதடையாக இருக்கிறது

ஆம் தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது

Saturday, November 26, 2016

ஊமையாய் ஒரு சமூகம் ....ஒரு உலகாண்ட சமூகம்

எந்த ஒரு
பெரும் தவறினையும்
தவறியும்
எவரும்
கண்டுபிடிக்கமுடியாதபடி
மிகச் சரியாகச்
செய்யத் தெரிந்தவர்கள்
கொள்ளும் தொடர் வெற்றியையும்

எந்த ஒரு
மிகச் சரியானதையும்
தவறியும்
எவரேனும்
கண்டுமகிழும்படி
மிகச் சரியாகச்
செய்யத் தெரியாதவர்கள்
காணும் தொடர் தோல்வியினையும்

நாள்தோறும்
கண்டு

மனம் புழுங்கி
வெந்து
வேதனைப்பட்டு
மெல்ல மெல்ல
நம்பிக்கை இழந்து
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
ஊமையாய் ஒரு சமூகம்
ஒரு உலகாண்ட சமூகம்

அது ஒரு சுகலயம்...

மொட்டாகி
மெல்ல மெல்ல
விரிந்து
மணந்து
அழகூட்டும் மலரை.

பறித்து
மாலையாக்கிப் பார்க்க...
அது ஒரு அழகு

செடியின் அணைப்பிலேயே
துயிலப் பார்க்க
அது ஒரு அழகு

உறக்கத் தில்
எதனிலோ
மயங்கி
இரசித்துச் சிரிக்கும்
மலரனைய மழலையை

அணைத்து
முத்தமிட
அதுஒரு பெரும் சுகம்

எட்ட நின்று
அப்படியே இரசிக்க
அது ஒரு தனிச்சுகம்

குளிர் ஊற்றென
மெல்லச்சுரந்து
பரவி
நிறையும்
கவித்துவ உணர்வை

சொல்லில்
அடக்கிப் பார்க்க
அது ஒருஅருந்தவம்

அதனுள்
விழிமூடி ஒன்றிட
அது ஒரு சுகலயம்

Friday, November 25, 2016

"கவிதையைக் கேள்வி ஆக்கு "


"என்ன செய்வ திந்தக் கையை "
என்றேன்.
 
"என்ன செய்வ தென்றால்.."
என்றான் சாமி.
 
"கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங்கல்
தாங்காதஉறுத்தல்
வடிவத் தொல்லை "
என்றேன்.

"கையைக் காலாக் " கென்றான்

            .....................சி. மணி


"என்ன செய்வதிந்தக் கவிதையை  "
என்றேன்

"என்ன செய்வதென்றால்... "
என்றான் சாமி

"அர்த்தம் பொருத்தம் என்றிருந்தால்
பிரச்சனை இல்லை .
இல்லையேல்
படிக்கும் போதும்
நினைக்கும் போதும்
இந்தக் கவிதை ,
வெறும் சொல்லடுக்கு
வார்த்தைத் தொங்கல் .
தாங்காத உறுத்தல்
வடிவத்தொல்லை "என்றேன்

"கவிதையைக் கேள்வி ஆக்கு    "
என்றான்

Thursday, November 24, 2016

மோடிஜிக்கு கடைக்கோடியிலிருந்து...

என் நெருங்கிய நண்பன் வருடத்திற்கு
இரண்டுமுறையேனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
ஒரு கிடாவெட்டிற்கு ஏற்பாடு செய்து
உறவினர்கள் மற்றும் நண்பர்களையெல்லாம்
அழைத்து மிகப் பிரமாதமாக விருந்துக்கு
ஏற்பாடு செய்துவிடுவான்

சில கிடாவெட்டுக்குச் சொல்லும் காரணம்
எனக்கே பல சமயம் இது தேவையா எனத் தோன்றும்

இந்த வாரம் நடந்த கிடாவெட்டுக்குப் போயிருந்தபோது
இந்தக் கிடாவெட்டும் தேவையா எனத் தோன்றியதால்
"ஏன் இப்படி அனாவசியமாகச் செலவு செய்கிறாய் ?"
எனப் பொறுமைக் காக்காது கேட்டும் விட்டேன்

அவன் சொன்ன பதில் எனக்கு மிகவும்
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

"உண்மையில் நான் வேண்டுதலுக்காக
கிடா வெட்டுவதில்லை.கிடா வெட்டுவதற்காகத்தான்
வேண்டிக் கொள்கிறேன்

காரணம் நான் மிகச் சராசரிக் குடும்பத்தைச்
சேர்ந்தவன்தான் என் உறவும் நட்பு வட்டமும் கூட
இன்னமும் அப்படித்தான்.

நான் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த
வியாபாரம் என் உழைப்பினாலும்,அதிர்ஷ்டத்தினாலும்
ஏதோ நல்லபடியாகப் போவதால் வீடு, கார் எனச்
செட்டிலாகிக் கொண்டிருக்கிறேன்

என்னால் முடிந்த அளவு தனிப்பட்ட முறையில்
பிறருக்கு வெளியே தெரியாமல்
உதவிக் கொண்டிருந்தாலும் கூட
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டத்தில்
மிக லேசாக பொறாமையும் கொஞ்சம் விலகலும்
இருப்பதை உணர முடிகிறது

இதை இந்த விருந்து சரி செய்து விடுகிறது
நானும் என்னை மனத்தளவில் சரி செய்து கொள்ள
முடிகிறது " என்றான்

எனக்கு இவன் பதில் உண்மையாகவும்
நேர்மையாகவும் படுகிறது

இதையே மோடிஜி வேறுவகையாக யோசிக்கலாம்

இந்த 500/1000 செல்லாததாகிய விவகாரத்தில்
அதிகம் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மற்றும்
நடுத்தர மக்கள்தான்

உண்மையில் கறுப்புப்பணமக்கள் பாதிக்கப்
படுகிறார்களா இல்லையா என்பது கூட
இனி போகப் போகத்தான் தெரியும்

இந்த நிலையில் என் நண்பனைப் போல
மோடிஜியும் நம் போன்ற கீழ்த்தட்டு மற்றும்
நடுத்தர மக்களின் திருப்திக்காகவேணும்

கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கட்டாதுத் திரிகிற
பலரின் பெயர்களை பகிங்கிரமாக வெளியிடுவதோடு
அதில் ஒரு சிலர் மீதாவது உடன் நடவடிக்கை
எடுப்பார் ஆயின்,

இந்தக் கிடாவெட்டு உறவினர் மத்தியில்
இவர் பணம் வந்தும் மாறாது இருக்கிறார் என்கிற
நம்பிக்கையைக் காப்பாற்றுவது மாதிரி,

பிரதமர் பொதுமக்கள் சார்ந்துதான் இருக்கிறார்
எதிர்க்கட்சிகள் சொல்வது போல
அந்தப் பகாசுரப் பணமுதலைகள் பக்கம்
இல்லை என்கிற எண்ணத்தையாவது
தோற்றுவிக்கும் அல்லவா

ஊதுகிற சங்கை நாமும் ஊதி வைப்போம்
காது எப்படி இருக்கிறது என்பது போகப் போகத்
தானாகத்தெரிந்துவிடும் தானே 

Tuesday, November 22, 2016

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

Monday, November 14, 2016

யாருமறிந்த பரம இரகசியம்

வருகிற 19 ஆம் நாள் இடைத்தேர்தல்
நடைபெற இருக்கிற மூன்று தொகுதிகளில்
அடியேன் வசிக்கிற திருப்பரங்குன்றம்
தொகுதியும் ஒன்று

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
செய்தியைக் கூட கேட்க முடியாது சுமார்
இருபத்திரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட
வாக்குவித்தியாசத்தில் வென்ற அ.இஅ.தி.மு.க
வேட்பாளர் எஸ் எம் சீனிவேல் அவர்கள்
மரணமடைந்ததால் ஏற்பட்டக் காலியிடத்திற்காக
நடைபெறுகிற இந்த இடைத்தேர்தலின் முடிவு
எப்படி இருக்கும் என பிற மாவட்டங்களில்
இருந்து எனது  நண்பர்கள் தொடர்ந்து
கேட்டுக் கொண்டிருப்பதால் இதை
எழுத வேண்டியுள்ளது

பொத்தாம் பொதுவாக எல்லோரும் இடைத்தேர்தல்
என்றால் அதிகார துஸ்பிரயோகம், மற்றும்
பணப்பலம் இவற்றால் ஆளும்கட்சி வெல்லும்
எனச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாலும்
உண்மை அது மட்டும் இல்லை

வேட்பாளர்களைப் பொருத்த மட்டில்
நிஜப் போட்டியுள்ள அஇஅதிமுக மற்றும்
திமுக வேட்பாளர்களில்,

ஏற்கென்வே இந்தத் தொகுதியில்
வென்று தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை
என்கிற கருத்து அஇஅதிமுக வேட்பாளர் குறித்த
எதிர்மறையான  அபிப்பிராயம் உள்ள போதும்,

தி.மு.க  வேட்பாளரைப் பொறுத்தமட்டில் ,
மருத்துவராய் இருந்து தனது சொந்த டிரஸ்ட் மற்றும்
அரிமா சங்கம் முதலானவைகளில் தன்னை
இணைத்துக் கொண்டு ,தொடர்ந்து சேவைகள்
செய்து கொண்டிருக்கிறவர் என்ற போதும்,

, இளையவர் இனியவர்
அணுக எளிதானவர் என்கிற நேர்மைறையான
அபிப்பிராயம்  கொண்டவர்  என்ற போதும்

இந்தத் தொ குதியையே
பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதும்,

இந்தத் தொகுதியில் அ.இ அ.தி.மு.க வேட்பாளரே
 அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு
இன்றைய நிலவரப்படி
உள்ளதெனில் அதற்கான முழுமையான காரணம்

பணபலம்,அதிகார துஸ்பிரயோகம் என மட்டும்
எனச் சொல்லிவிட முடியாது

மாறாக அ.இ.அ.தி.முக கட்சித் தலைவர்களின்
மிகச் சரியான தேர்தல் வியூகமும்,
அதற்கேற்றார்ப்போல கட்டுக் கோப்போடு
செயல்படும் தொண்டர்களின் செயல்பாடும் என்றால்
நிச்சயம்அது மிகை இல்லை

கட்சி கடந்து பொது வாக்காளர்களையும்  கவரக் கூடிய
ஆளுங்கட்சிக்கு இணையாக அனைத்து விதத்திலும்
ஈடு கொடுக்கக் கூடிய ஒரு வேட்பாளர் கிடைத்தும்
இந்தத் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குவித்தியாசத்தில்
தோல்வியத் தழுவுமாயின்,

அதற்கான காரணம் அவர்களாகத்தான்
இருக்கமுடியுமே தவிர,
வேறு ஜால்ஜாப்புகள்  எல்லாம்
நிச்சயம் சப்பைக்கட்டுகளே எனக் கொள்ளலாம்

பார்ப்போம்....

Saturday, November 12, 2016

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Thursday, November 10, 2016

மவுலிவாக்க கட்டிட இடிப்பு பற்றி விசுவின் இதயக்குமுறல்

வஸந்த காலம் உன் வாசல் வர

உனக்கு பேசவும் எழுதவும் வர
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை
மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில்
"மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும்
நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம்
உன் வாசல் கதவைத் தட்டும்