Wednesday, October 31, 2018

தலைப்பும் கவிதையும் கவிஞனும்

தயிருக்குள் தயிராகவே
தனைமறைத்த வெண்ணையாய்க்
கவிதைக்குள் புலப்படாது மறைந்திருந்து

கவிஞனின் தேடுதல் நிறைவுற
மெல்லத் தலைக்காட்டும் நற்தலைப்பும்

மொட்டுக்குள் நேர்த்தியாய்
மறைந்திருக்கும் இதழ்களாய்த்
தலைப்புக்குள் சூட்சுமமாய் ஒளிந்திருந்து....

கவிஞனின் சிந்தனை ஒளிபட
மெல்ல விரியும் பூங்கவிதையும்

கண்ணுக்கினிய காட்சியாய்
நிகழ்வாய் உணர்வாய்
அரூபமாய் எங்கெனும் ஒளிர்ந்திருந்ததை

கண்டு உணர்ந்து இரசித்து
கவியாக்கி மகிழும் கவிஞனும்

ஒன்றுக்குள் ஒன்றாயும்
ஒன்றின்றிலிருந்து ஒன்றாயும்
ஒன்றின்றி ஒன்று இல்லையாயினும்..

அவைகளுக்கான இடம் விட்டு நகராதும்
இடைவெளிக் காக்கும் நாசூக்கும் கூட...

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டுமென
வாழ்வின் சூட்சுமம் ஒன்றை
சொல்லாது சொல்லித்தான் போகிறது

Tuesday, October 30, 2018

நீதி மன்றமும் நியாய சபையும்

குற்றவாளிக் கூண்டில் பதட்டத்தில்
கைகளைப் பிசைந்தபடி நீதிபதியைப் பார்க்கிறேன்
அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்

"எனவே சந்தர்ப்பச் சாட்சியங்களை தீர விசாரித்த
வகையில் இவர் மீதுள்ள குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபணம் ஆன படியால்...."

அவர் தொடர்ந்து படிக்கிறார்

நான் சத்தமாய்க் கதறுகிறேன் " ஐயா நல்ல
விசாரிங்க ஐயா.. இது ஒரு தப்புத்தான்
ஏதோ ஒரு கோபத்தில் நடந்து போனது.
மத்தபடி ஊருக்கு ஆயிரம் நன்மை
செய்திருக்கிறேன் ஐயா......கொஞ்சம்
கருணை காட்டுங்க ஐயா....

என்னை இடைமறித்த நீதிபதி ' இது
நியாய சபையல்ல. உன்னைப்பற்றி
முழுவதும் தெரிந்து கொள்வதற்கு
நீ செய்த இந்தக் குற்றம் குறித்து மட்டுமே
இந்த மன்றம் கவனத்தில் கொள்ளும்....
எனவே நீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய
10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை
இந்த நீதிமனறம் உறுதி செய்கிறது...

இதற்கு மேல் என் செவியில் எதுவும்
விழவில்லை.சடாரென மயங்கிக் கீழே சரிகிறேன்.

நான்விழித்துப் பார்க்கையில் எம கிங்கரர்கள்
புடை சூழ வேறு ஒரு குற்றவாளிக் கூண்டில்
நிற்கிறேன்

எதிரே சிம்மாசனத்தில் ஆஜானுபாவனாய் அமர்ந்திருந்த
எம தர்மன் தீர்ப்பை வாசிக்கக் துவங்குகிறார்

கொஞ்சம் தைரியத்தை கூட்டியபடி "ஐயா
விசாரிக்கவே இல்லை. அதற்குள் தீர்ப்பைப்
படிக்கிறீர்களே ..." என்கிறேன்

அவர் கடகடவென சிரித்தபடி "சாட்சி, சந்தர்ப்பம்
மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் உங்கள்
நீதிமன்றங்களில் தான்.இங்கு நாங்கள் எவரையும்
விசாரிக்க வேண்டியதில்லை.உன் பிறப்பு முதல்
இறப்பு வரையிலான செயல்பாடுகள் எல்லாம்
எங்களுக்கு அத்துப்படி... எனவே...

அவர் படிக்கத் துவங்க எனக்குள் எண்ணைக்
கொப்பறை சவுக்கு,முள்படுக்கை எல்லாம்
நினைவுக்க் வர உடல் நடுங்கத் துவங்குகிறது

அவர் தொடர்கிறார் " இவர் கோபத்தில்
சில பாவங்களைச் செய்திருந்தாலும் கூட
அதையும் தாண்டிய வகையில் ஏழை எளிய
மக்களுக்கு தன்னாலான சேவையை தொடர்ந்து
செய்துள்ளபடியால்..இவரை இரண்டாம் நிலை
சொர்க்கத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்..

என்னால் நம்பவே முடியவில்லை.என்னைக்
கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன்.

" ஐயா இப்படின்னு தெரிஞ்சா இன்னும் நிறைய
நனமை செய்திருப்பேனே. முதல் நிலைக்குப்
போயிருப்பேனே.. ஐயா ஐயா இன்னொரு
சந்த்ர்ப்பம் கொடுங்கையா.. ஐயா.. ஐயா..

நான் கதறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை வலுக்கட்டாயமாக அங்குள்ள பல்லக்கில்
ஏற்றுகிறார்கள்..

நான் திமிரத் திமிர என் முகத்தில் சட்டென
ஏதோ ஈரப்பதம் தென்பட முகத்தைத் துடைக்கிறேன்

எதிரே பித்தளைச் செம்புடன் என் மனைவி..

Monday, October 29, 2018

ஆனந்தத்தின் அற்புதம்

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Saturday, October 27, 2018

மார்கெட்டிங்கும் பிசினெஸ்ஸும்

'இத்தனை நாள் நான் பிஸினெஸ்ஸில்
இருக்கிறேன் எனத்தான் பேரு
நிஜமாகவே இந்த பயிற்சி வகுப்புக்குப் போய்த்தான்
மார்கெட்டிங்கிற்கும் பிசினெஸ்ஸுக்குமான
வித்தியாசம் புரிந்தது "என்றான் நண்பன்

நான் மெல்லச் சிரித்தபடிக் கேட்டேன்
"இந்தப் பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு செலவு"

'ஒரு முழு நாளுக்கு பத்தாயிரம்
உணவு உட்பட "என்றான்

'இதோ வெளியே எட்டிப்பார்
அந்தப் பயிற்சி இலவசமாகவே "என்றேன்

வெளியே நடுரோட்டின் கொட்டடித்துக்
கீரிப் பாம்புச் சண்டையென கூட்டம் கூட்டி
நல்ல கூடம் சேர்ந்ததும் தன் தாயத்தின்
மகிமையை விளக்கி விறபனை செய்து
கொண்டிருந்தான் அந்தப் பாம்பாட்டி

நண்பனின் முகம் இறுகிக் கொண்டிருந்தது.