Monday, January 30, 2017

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பெடுக்கும் வல்லமை....

தவறாது நித்தமும்
தீமைக்கு எதிரான
அணியினில் ஒரு துளியாய்
போராட்டத்தில் ஒரு குரலாய்
இலக்கியத்தில் ஒரு வரியாய்
ஏதும் முடியவில்லையெனில்
குறைந்த பட்சம்
அதற்கு எதிராக
ஒரு முகச்சுழிப்பை
பதிவு செய்தபடி
 நாம் தினமும்  கடந்து போவதால்

தவறாது நித்தமும்
சரியானவைகளுக்கு ஆதரவான
அணியினில் ஒரு துரும்பாய்
இயக்கத்தில் சிறு அலையாய்
பதிவுகளில் ஒரு எழுத்தாய்
குறைந்த பட்சம்
அதற்கு ஆதரவாய்
ஒரு சிறு புன்னகையை
பதிவு செய்தபடி
நாம் தினமும்  கடந்து போவதால்

ஒவ்வொரு நாளும்
திரு நாளைப் போல
மகிழ்வூட்டிப் போவதோடு

ஒவ்வொரு நொடியையும்
அர்த்தப்படுத்தியும்
அழகுப்படுத்தியும் போவதோடு

மிக நேர்த்தியாய்....
பாரதியின் கூற்றினைப் போல

ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறப்பெடுக்கும்
வல்லமையும் தந்து போகிறது

உங்களைப் போலவே
எனக்கும் 

Sunday, January 29, 2017

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்..

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

"வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் "
என்கிறேன்

 சரியாகப்  புரியாது விழிக்கிறான்
எப்போதும்
வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

நேர்மறையும் எதிர்மறையும்

"எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவரில் ஒருவன்
தெளிந்துச்  சிரிக்க

மற்றவன்  வழக்கம்போல்
குழம்பித் தவித்தான்  

Saturday, January 28, 2017

எவரை .ஆளவைப்பது எவரை வேகவைப்பது ...



எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

எவரை  ஆளவைப்பது
எவரைப்   பொறாமையில்
வேகவைப்பது
அது  ஆண்டவனுக்குத் தெரியும்
நிலை மறந்ததுதான்  
தன்நிலை அறியப்    பயிலவேண்டும்

ஒரு வரிதான் ஆயினும் இதுவல்லவோ திருவரி...

நாவின்
மேற்புறம் பார்த்தே
உடலின் நோய்க்கூறுகளைக்
கணித்துவிடுகிறார்
திறமையான மருத்துவர்

குழந்தையின்
அழுகுரலின் தன்மையறிந்தே
குழந்தையின் தேவையைப்
புரிந்துகொள்கிறாள்
பாசம் மிக்க தாய்

நுனி நூலின்
தரம் அறிந்ததுமே
துணியின் தரத்தை
மதித்து விடுகிறார்
கைதேர்ந்த வியாபாரி

இளைஞனின்
பார்வை படியுமிடம் அறிந்தே
அவன் கண்ணியத்தை
அளந்து விடுகிறாள்
புத்திசாலிப் பெண்

படைப்பின்
வார்த்தைகளைக் கொண்டே
படைப்பாளியின் உள்மனத்தைச்
கணித்து விடுகிறான்
பண்பட்ட வாசகன்

"உள்ளத்தில் உண்மை ஒளி
உண்டாகின் அது
வாக்கினில் உண்டாம் "
இது ஒரு வரிதான் ஆயினும்
படைப்பாளிக்கு
இதுவல்லவோ திருவரி

Friday, January 27, 2017

பெரியகுளமும் மன்னர் குடியும்

எத்தனை உயரியப்
பதவியே ஆயினும்
எத்தனைச்
சிறந்த பொருளே ஆயினும்

நிழல் போல் உன்னை
விடாது தொடர
வேண்டுமாயின்

அதனை அடைவதற்கான
வரிசையிலும்
முயற்சியிலும் இரு

மிக முக்கியமாக
அதன் மீது அதீதப்
பற்றுக் கொள்ளாமலும்

 அடைந்தே தீர்வதென
புறக்கடை  வழிகளில்
முயற்சிகள்  செய்யாமலும்

அடைவதற்கென
செயற்கையான
புறவேஷங்கள்  புனையாதும் 

மிக முக்கியமாய்
அதனை அடைந்தால்
அதிகம் துள்ளாமலும்

மிக மிக முக்கியமாய்
அதனை இழந்தால்
துளியும் துவளாமலும்

மிகச் சுருக்கமாக
ஆரவார அலைகளற்ற
"பெரிய குளம்" போலவும்..

மாறாக..... அது
"மன்னர் குடியே " ஆயினும்
........................................................
....................................................
...........................................................

(தொடர வேண்டுமா என்ன ? )

Thursday, January 26, 2017

எங்கள் எளிய இனிய முதல்வரே

அமைதிக்கும்
இயலாமைக்கும்
வித்தியாசம் தெரியாதவனே
அமைதியைக்
குறைவாய் மதிப்பிடுகிறான்

பொறுமைக்கும்
எருமைமாட்டுத்தனத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவனே
பொறுமையைக்
குறைவாய் மதிப்பிடுகிறான்

பணிவிற்கும்
பயத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவனே
பணிவினைக்
குறைவாய் மதிப்பிடுகிறான்

அமைதியாய்
பொறுமையாய்
பணிவாய்
மிக மிக நேர்த்தியாய்
செயலாற்றும்

எங்கள் முதல்வரே
எளிய இனிய முதல்வரே

கடல் நீரை மறைத்திருக்கும்
பனிக்கட்டிகள்
கடலல்ல

இன்று
கட்சியைக் கைப்பற்றியவர்கள்
தொண்டர்களின்
மனப்பிரதிபலிப்புமல்ல

பதவியால் பெருமைகொள்பவர்கள் 
மக்களின்
மனமறிந்தவர்களுமல்ல

வெள்ளைக் கோழிக்கு
வர்ணம் பூசி
வெகு நாட்கள்
ஏமாற்றமுடியாது

மழை வந்தால்
அது வெள்ளைக் கோழியென
உலகுக்குத் தெரிந்துவிடும்

அப்படித்தான்
தேர்தல் வந்தாலும்....

இதுவரை
குடியரசு  நாளில்
எந்தத்  தமிழக  முதல்வரும் பெறாத
பேறு  பெற்றதுக்  கூட
அதிர்ஷ்டத்தினால்  அல்ல
அது
இறைவனின் ஆசியால் தான்

இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்களுடன்...

Wednesday, January 25, 2017

அனுமார் வாலில்வைக்கப்பட்ட....

தலைமையின்றித் தானாய்
சுயம்புவாய்
ஆர்ப்பரித்து எழுந்த
மாணவரின் எழுச்சி...

அன்றைய
உப்புச் சத்தியாகிரகம் போல
அனைத்துதரப்பு மக்களையும்
அணைத்துச் சென்ற
அதன் வீச்சு...

காரணம்
ஜல்லிக்கட்டு எனக்
கொண்டாலும்

அதன் வேராக இருந்தது
மைய அரசும்
மா நில அரசும்
அதிகாரத்திலிருக்கிற
மமதையில்

மக்கள் நிலை குறித்துச்
சற்றும் சிந்தியாது

மக்கள் நலனுக்கெனச்
சொல்லிச் செய்கிற
சுயநலத் தகுடுத்தித்தினங்களுக்கு
எதிரான கோபப் பெரும்மூச்சே

இருத் தலைமைகளுமிதை
புரிந்து கொண்டால்
நாட்டுக்குமட்டுமல்ல
அவர்களுக்கும் நல்லது


இல்லையெனில்
மாணவரிடை புகுந்து
காவாலிகளால்

அல்லது
காரணம் வேண்டிக் காவலர்களால் 

வைத்ததாகச் சொல்லப்படும்
அந்தப் பெருந்தீ
நீறுபூத்த  நெருப்பாகத்
தொடர்ந்திடவும்

அதுவே  அனுமார் வாலில்
வைக்கப்பட்டதாக
மாறிவிடவுமே   கூடுதல் சாத்தியம்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

நிராயுதபாணியான
மிக மோசமான எதிரியையும்
இன்று போய் நாளை வா எனச் சொல்லிய
அவதாரப் புருஷர்களும்...

பகைவனுக்கருள்வாய் என
ஆண்டவனை வேண்டும்
பரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...

வாடிய பயிரைக் கண்டு  வாடிய
கருணை மிக்க
அருளாளர்களும்

யாது ஊரே யாவரும் கேளிர்
எனும்  சொற்றோடர்  மூலம்
நம்மினத்தின்
விரிந்த மனப்பாங்கை
வெளிச்சமிட்டுக் காட்டியவர்களும் 

நமது நாட்டில்தான் சாத்தியம் எனும்
அளவு கடந்த
பெருமிதத்தோடு...

இந்த நாட்டில் குடிமகனாய் இருத்தலே
பெரும் பாக்கியம்  எனும்
அதீதச் செருக்கோடு

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

(இன்னும் நமக்கேயான பெருமிதங்களைப்
பின்னூட்டத்தில் தொடரலாமே )

Monday, January 23, 2017

நடுத்தரம் என்னும் இரண்டும் கெட்டான்

வரவிருப்பதால்
செலவு செய்தும்
செலவு இருப்பதால்
தினம் உழைத்தும்
வாழுவோர் மத்தியில்

சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தவகையில் சேர்த்தி ?

காரியமாற்றுதலால்
புகழடைந்தும்
புகழடைந்ததால்
காரியமாற்றியும்
திரிவோர் மத்தியில்

சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தவகையில் சேர்த்தி?

சிந்திப்பதால்
எழுதுபவராகவும்
எழுதுவதால்
சிந்திப்பவராகவும்
திகழ்வோர் மத்தியில்

சில சமயம்
இரண்டுமாகவும்
பலசமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்த வகையில் சேர்த்தி ?

உயர்வுக்குப்
போராடுபவராகவும்
போராடுவதால்
உயர்ந்தோராகவும்
சிறந்தோர் மத்தியில்

சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்த அணியில் சேர்த்தி ?

சாவதற்காக
தினம் வாழ்ந்தும்
வாழ்வதற்காக
தினம் செத்தும்
இருப்போர் மத்தியில்

சில சமயம்
இரண்டுமாகவும்
பல சமயம்
இரண்டுமற்றும்
இருக்கும் இவர்கள்
எந்தக் கணக்கில் சேர்த்தி ?

Saturday, January 21, 2017

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக் கடந்து நிலைத்து நிற்கு தென்றால்

சந்தாக் கட்டி சண்டை போடும்
சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு

சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு

சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்

ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே

ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி

கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி

வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்

நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே

உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை

உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து  நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்

உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்

( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )

Friday, January 20, 2017

நிமிரச் செய்து போகிறது புதிய தலைமுறை....

கொசு ஒழிக்க விதம் விதமாய்
பொருட்களைப் பயன்படுத்தி
ஓய்ந்துப் போனது
எங்கள் தலைமுறை

சாக்கடையை ஒழித்துவிடத்
துணிந்துக் களத்தில்
இறங்கிவிட்டது
இன்றைய தலைமுறை

விஷமரம் ஒழிக்க இலை நசுக்கி
கிளை நறுக்கி சக்தி இழந்து
தவித்துப் போனது
எங்கள் தலைமுறை

ஆணிவேர் அறுத்து மரத்தை
அடியோடுச் சாய்த்து
வெற்றியடையுது
இளைய தலைமுறை

தலைமைக்குப் பின்னோடி
பிரச்சனைக்குத் தீர்வுத் தேடி
சோர்ந்துச் சாய்ந்தது
எங்கள் தலைமுறை

பிரச்சனையைத் தலைமையாக்கி
தலைவர்களை மூச்சிறைக்க
பின் தொடரச் செய்துவிட்டது
இளைய தலைமுறை

தகவல் தொடர்பு
யானைகளைக் கொண்டு
பிச்சையெடுத்துப்
பெருமை கொண்டது
எங்கள் தலைமுறை

தகவல் தொடர்பினைக்
கூர்வாளாக்கி
போராட்டக் களத்தை
கூர்மைப்படுத்திப்
பெருமைப் பெற்றது
புதிய தலைமுறை

அனைத்து முறைகளிலும்
நம்பிக்கையிழந்து
புலம்பி நித்தம்
ஓயத் துவங்கியது
எங்கள் தலைமுறை

புதியவகைஅணுகுமுறையில்
நிமிரத் துவங்கி
எங்கள் தலமுறையையும்
மெல்ல மெல்ல
நிமிரச் செய்து போகிறது
புதிய தலைமுறை

காளைகளுக்குக் கோவில் கட்டுவோம்

வாடிவாசலில்
பொங்கலிடுவோம்
ஜல்லிக்கட்டு
வாடிவாசலில்
பொங்கலிடுவோம்

அங்குப் பற்றிய
அக்கினிக் குஞ்சே
தமிழர்கள் நெஞ்சினில்
ஊழிக்கால நெருப்பாய்
உக்கிரம் கொண்டதால்...

திமிலுக்குப்
பூச்சூட்டுவோம்
காளைகளின்
திமிளுக்குப்
பூச்சூட்டுவோம்

உரமேறிய
இளைஞர்களின்
உள்ளங்களில் அதுவே
உணர்வேறக்
உண்மைக்காரணமானதால்...

காளைகளுக்குக்
கோவில் கட்டுவோம்
ஜல்லிக்கட்டுக்
காளைகளுக்குக்
கோவில்கட்டுவோம்

ஜாதிமதமென
கட்சியே சதமென
பிரிந்துகிடந்தோரை
தமிழினமென
ஒன்றாகச் சேர்த்ததால்...

தலைமைக்குப்
பின்னன்றி
பிரச்சனைக்குப்பின்
தலைமைகளை
அணிவகுக்க வைத்ததால்...

அதிகாரத்தின்
அலட்சியத்தை
முதன்முதலாய்
அடங்கவைத்ததால்
அலறவைத்ததால்....       

Thursday, January 19, 2017

அரவாணி -அது ஒரு குறீயீடு

மணம்  முடித்த மறு நாளில்
கணவனை  இழப்பதை
அறிந்தே  இழந்த
கைம்பெண்ணை மட்டும் குறிப்பதல்ல
 அரவாணி என்பது......

அது ஒரு குறியீடு

கூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடித்து
மறு நாள் யாருமற்ற அனாதையாய்
பொட்டிழந்த முகமாய்
பொட்டல் காடாய்
அனைத்து அலங்காரங்களையும்
இழந்து  அலங்கோலமாய்க் கிடக்கும்
அந்த மாசித் திருவிழா மைதானம் போல்

உறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்
மண மலர்களின்  வாசம்
விருந்து உபச்சாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடிந்து
குப்பை கூளமாய் இருளடைந்து
வெறுமையில் வெம்பிக் கிடக்கும்
தனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்
அந்த ராசியான திருமண மண்டபம் போல்

முள்வெட்டி ஒதுக்கி
பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
குலவை ஒலியுடன்  பொங்கலிட்டு
பழங்கதைகள் பலபேசி
உறவுகளோடு பகிர்ந்துதுண்டுப்  பசியாறி
வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற
மீண்டும் இருளிலும் தனிமையிலும்
கிடக்கும் அவலம் குறித்துப்  புலம்பும்
அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்

உயிருள்ளவைகளோ உயிரற்றவைகளோ
உச்சம் தொட்ட மறு நொடியில்
அதலபாதாளத்தில் வீழந்தவைகளை எல்லாம்
அதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்
அதீத   அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்

குறீயீடாகக் காட்டிச் செல்லும்
அதிகப் பொருள் கொண்ட
அற்புதச் சொல் அது

மணம் முடித்த மறு நாளில்
கணவனை இழப்பதை
 அறிந்தே இழந்த
கைம்பெண்ணை  மட்டும் குறிப்பதல்ல
அரவாணி  என்பது

அது ஒரு அவலத்தின்  குறியீடு

Wednesday, January 18, 2017

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து
நானும் என்  மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்..

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்...

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்

" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது
குழம்புக்கு ருசியில்லை

ஆயினும்
அவைகளின் இருப்புத்  தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தான்   "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்

Tuesday, January 17, 2017

ஒரு பெரியாரோ ஒரு பெருந்தலைவரே ஒரு அண்ணாவோ ஒரு கலைஞரோ ஒரு புரட்சித்தலைவரோ........

"அவருடன் "இணைபோல
இருந்ததால்  நான்
 என ஒருவர்

"அவருக்கு "மகனாக
இருப்பதால் நான்
என ஒருவர்

"அவருக்கு " உறவாக
இருப்பதால் நான்
என ஒருவர்

"அவருடனே "  தொடர்ந்து
இருந்ததால் நான்
என ஒருவர்

நம் தமிழகத்தின்
தலைமையின்
தலையெழுத்தெல்லாம்
இப்படி
ஆகிப்போனதால்தான்

" சுயத் தகுதியாக "
நானிருப்பதால்   நான்
எனும்படியாக

ஒரு பெரியாராகவோ
ஒரு பெருந்தலைவராகவோ
ஒரு அண்ணாவாகவோ
ஒரு கலைஞராகவோ
ஒரு புரட்சித்தலைவராகவோ

இனித்  தமிழகத்தில் தோன்ற
நிச்சயம் சாத்தியமில்லை
எனப்படுகிறது எனக்கு

இதன் தொடர்சியாய்..

தலைமையாசிரியருக்கு
விசுவாசமாக இருந்த
கடை நிலை ஊழியன்
பாடம் நடத்தவும்

மருத்துவருக்குத்
துணையாயிருந்த
எடுபிடி ஊழியன்
அறுவை சிகிச்சை செய்யவும்

விமானப் பயணிகளுக்கு
சேவையினைச் செய்த
விமானப் பணிப்பெண்
விமானம் ஓட்டவும்

இனி நிச்சயம்  தமிழகத்தில் சாத்தியமே
எனவுமே படுகிறது எனக்கு

இது எனக்கு மட்டும்தானா ?

இல்லை  ..... ?

Monday, January 16, 2017

காலத்தை வென்றவரை காவியமானவரை...

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான்,
 தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை  நம்முள்
விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை
காவியமானவரை
இந்த நூற்றாண்டுப்   பிறந்த நாளில்
 நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்திப் பெருமிதம் கொள்வோம்

Friday, January 13, 2017

தமிழர் திரு நாளிதன் உட்பொருள் அறிந்து...

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

Monday, January 9, 2017

இதுவே நம் ஜனநாயகத்தின் பலம் ?

நிழலை நிஜமென
நம்பத் துவங்கி
வெகு நாளாகிவிட்டது

கவர்ச்சியே நிலைக்குமென
நம்பத் துவங்கி
அதுவே நிஜமும் ஆகிவிட்டது

இப்போது தன்மானம்
குறித்துப் பேசி எங்களை
சராசரி ஆக்க முயலவேண்டாம்

பதவியின் சுகம்
அறியாத வரையில்

அதிகார போதையில்
வீழாத வரையில்

முதுகெலும்பு குறித்தும்
மண்டியிடிதல் குறித்தும்

நாங்களும் பேசியவர்கள்தான்
மீசையை முறுக்கியவர்கள்தான்

புலிவால் பிடித்துவிட்டோம்
இதை விட்டுவிட முடியாது

சேர்ப்பதையும்
விட்டுவிடமுடியாது
சேர்ந்ததையும்
விட்டுவிடமுடியாது

தேர்தல் காலங்களில்
உங்களை நாங்கள்
புரிந்து கொள்வதைப் போல

அது அல்லாத காலங்களில்
நீங்கள் எங்களைப்
புரிந்து கொள்ளுங்கள்

அதுவே  இருவருக்கும்  நல்லது
இன்னும் இலக்கியத் தரமாய்ச் சொன்னால்
(நம்மை நம்பி  நாசமாகிக் கொண்டிருக்கும் )
நம் ஜன நாயகத்திற்கும்,,,,,, ( ? )

Saturday, January 7, 2017

உள்ளும் புறமும் அவரவர் அளவுக்கு

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Friday, January 6, 2017

ஆண்டவனின் வேண்டுதல்

வானம் பார்த்து
மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி
காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பதும்
என்னை  "வைதுப் " பிழைப்பதுவுமே
உலகில் பெரும் பிரச்சனை

அர்ச்சனை செய்தால்
அள்ளிக் கொடுக்கவோ
செருப்படிக்  கொடுத்தால்
சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக
பொதுவாக இருந்தவனை
மொழியாக  விளக்காக  நீங்கள்தான்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாகத்   தெளிவாக
இருந்தவனை
கோவில்  சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்தி
நீங்களும்
சிதறுண்டுப்  போனீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே
உங்கள் தேவைக்கேற்றார்ப்போல
உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

எங்கும் நிறைந்த  என்னை
வெளிச்சமிட்டுக்காட்ட
ஊடகமும் ஏஜெண்டுகளும்
தூதர்களும்
தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

வெட்டவெளிதன்னை
மெய்யென்றுணரும்
பக்குவம்  வரும் வரையில்

பொருளுள்  என்னைத்
தேடித் திரியும்
பேதமை  ஒழியும் வரையில்

என்னை நீங்கள்
உணரப்  போவதில்லை

 உறுதியாகவும்
இறுதியாகவும்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து
என்னைப் புகழ்ந்து
அல்லது மறுத்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும்
என்னைச்  சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

Thursday, January 5, 2017

அனுபவக் கனல்

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்துக்  கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
கேட்பாரின்றிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை

சிதறிக் கிடப்பவைகளைச்
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்படவும்  ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

மீண்டும் மீண்டும்....

மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்

பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..

மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிறத் திமிறத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய்ப்  படர்கின்றன
தலைமுறையைத்  தாண்டியும்
நிழலாய்த்  தொடர்கின்றன

பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல

நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிறத் திமிற த் திணிக்கப்பட்டவையே

எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது

இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்

Tuesday, January 3, 2017

காலமும் வாழ்வும்

நாங்கள்  பயணித்துக்கொண்டிருந்த
புகைவண்டிப் பெட்டிக்குள் 
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி
எப்படி வந்தது எனத் தெரியவில்லை

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும்
 திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்
மிக மிக சந்தோஷமாய்
பெட்டிக்குள் வளைய வந்து கொண்டிருந்தது
அந்த வண்டி குறித்த
எவ்விதப்  புரிதலுமின்றி
 அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும்
 எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 
அந்த அதிசயப் புகைவண்டி

Sunday, January 1, 2017

குழப்பத்தில் தள்ளாடும் சராசரிகளுக்கான கைத்தடி...

சந்தோஷத்திற்கும்
அதைக் கொண்டாடுவதற்கும்
காரணங்கள் தேவையில்லை

காரணங்களின்றியே
சந்தோஷமாய் இருக்கும்
உபாயம் அறிந்தவன்
காரணங்கள் தேடி அலைவதே இல்லை

இந்த சூட்சுமம் அறியா சராசரியோ
கிடைத்த சந்தோஷ தருணங்களில் கூட
அதை இரசித்துக் கொண்டாடாது
காரணங்களை விமர்சித்துத் திரிகிறான்

"இது ஆங்கில வருடப் பிறப்பு
தமிழருக்கு இது தேவையா ?"
என இனப்பற்றைச் சொறிந்து ...

"பொங்கல் திருவிழா
இது கதிரவனை வணங்குவோருக்கானது
இது இஸ்லாமியருக்குத் தேவையில்லை "
என மதப்பற்றைக் கீறி ..

"ஆயுதங்களுக்கு எதற்குப் பூஜை ?
அது மடத்தனமில்லையா "
எனப் பகுத்தறிவு வாதம்  முழங்கி...

........................
சராசரியானவன்
சந்தோஷமாய்
இருக்கக் கிடைத்த அபூர்வத் தருணங்களைக் கூட
தொலைத்துத் திரிகிறான்

காரணங்களின்றியே
சந்தோஷமாய் இருக்கும்
சூட்சுமம் அறிந்தவனோ
அந்தத் தருணங்களில்
சந்தோஷத்தின் உச்சம் தொடுகிறான்

ஏனெனில்
அவனுக்கு நிச்சயமாய்த் தெரியும்
சந்தோதோஷமாய் இருப்பதற்கு
காரணத் தேவை இல்லவே இல்லை என்பதும்

காரணங்கள் எல்லாம்
குழப்பத்தில் தள்ளாடும்
சராசரிகளுக்கானக்  கைத்தடிதான்  என்பதுவும்...