Thursday, January 19, 2017

அரவாணி -அது ஒரு குறீயீடு

மணம்  முடித்த மறு நாளில்
கணவனை  இழப்பதை
அறிந்தே  இழந்த
கைம்பெண்ணை மட்டும் குறிப்பதல்ல
 அரவாணி என்பது......

அது ஒரு குறியீடு

கூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடித்து
மறு நாள் யாருமற்ற அனாதையாய்
பொட்டிழந்த முகமாய்
பொட்டல் காடாய்
அனைத்து அலங்காரங்களையும்
இழந்து  அலங்கோலமாய்க் கிடக்கும்
அந்த மாசித் திருவிழா மைதானம் போல்

உறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்
மண மலர்களின்  வாசம்
விருந்து உபச்சாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடிந்து
குப்பை கூளமாய் இருளடைந்து
வெறுமையில் வெம்பிக் கிடக்கும்
தனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்
அந்த ராசியான திருமண மண்டபம் போல்

முள்வெட்டி ஒதுக்கி
பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
குலவை ஒலியுடன்  பொங்கலிட்டு
பழங்கதைகள் பலபேசி
உறவுகளோடு பகிர்ந்துதுண்டுப்  பசியாறி
வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற
மீண்டும் இருளிலும் தனிமையிலும்
கிடக்கும் அவலம் குறித்துப்  புலம்பும்
அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்

உயிருள்ளவைகளோ உயிரற்றவைகளோ
உச்சம் தொட்ட மறு நொடியில்
அதலபாதாளத்தில் வீழந்தவைகளை எல்லாம்
அதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்
அதீத   அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்

குறீயீடாகக் காட்டிச் செல்லும்
அதிகப் பொருள் கொண்ட
அற்புதச் சொல் அது

மணம் முடித்த மறு நாளில்
கணவனை இழப்பதை
 அறிந்தே இழந்த
கைம்பெண்ணை  மட்டும் குறிப்பதல்ல
அரவாணி  என்பது

அது ஒரு அவலத்தின்  குறியீடு

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

உண்மைச்சம்பவம் அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தான் ஐயா...

G.M Balasubramaniam said...

சில அரவாணிகள் நடந்து கொள்ளும் முறையால் அவர்கள் மீது இனம் தெரியா புரிதல் இல்லாமல் போகிறது

Thulasidharan V Thillaiakathu said...

வேதனைதான். இவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதால் இந்நிலை. ஆனால் இவர்களிலும் ஒரு சிலர் தங்களை முன்னேற்றிக் கொண்டு பிறருக்கும் உதவுபவர்களும் இருக்கின்றார்கள். பாவம்!

Thulasidharan V Thillaiakathu said...

ஜிஎம்பி சார் அவர்கள் அப்படி நடந்து கொள்வதற்கு யார் காரணம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பெற்றோர் உடன் பிறந்தவர்களாலேயே ஒதுக்கப்படுபவர்கள். அங்கு தான் பிரச்சனைகள் தொடங்குகிறது. அடுத்து சமூகம்.... இது நான் அப்படிப்பட்ட மூவரைப் பேட்டி கண்ட போது அறிந்தது. கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில். அதனைப் பதிவாகவும் போட்டிருக்கிறேன் சார்..

கீதா

வெங்கட் நாகராஜ் said...

வேதனை...

Post a Comment