எங்களூரில் எனக்குத் தெரிந்த அரசியல்வாதி
ஒருவர் இருந்தார்.அரசியல்வாதி எனச்
சொல்வதை விட பாட்சா படத்தில்
அண்ணனுக்கெல்லாம் அண்ணன் எனச்
சொல்வதைப் போல அரசியல்வாதிக்கெல்லாம்
அரசியல்வாதி எனக் கூடச் சொல்லலாம்.
அந்த அளவு பொதுப்பணத்தைச் சுருட்டுவதில்
அவர் பெரும் கில்லாடி..
எந்த ஒரு பொது அமைப்பென்றாலும் தானும்
அதில் உடன் அவரை இணைத்துக் கொள்வார்
எந்த அரசியல் மாற்றம் வரினும் தவறாது
ஆளும் கட்சியின் பக்கமே இருப்பதாகத்
தன்னைக் காட்டிக் கொள்வார்
.
அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அவருடைய
வயதை உத்தேசித்தும் நாகரீகம் கருதியும்
எதிர்ப்புத் தெரிவிக்காது முணுமுணுப்பதோடும்
முகம் சுழிப்பதோடும் கடந்து போவதை
சாதகமாக்கிக் கொண்டு
எந்த அமைப்பாயினும் அதில் முன்ணணி நிர்வாகிஆகி/
அல்லது அப்படி இருப்பதுபோல் காட்டிக்
கொண்டு தன் சுருட்டல் வேலையை
ஆரம்பித்து விடுவார்
.ஒருமுறை ஏமாந்தவர்கள் சுதாரித்துக்
கொண்டது தெரிந்தால் அதற்காகச் சங்கடம்
கொள்ளமாட்டார்.
ஏமாந்தவர் குறித்து ஏதாவது
வதந்தியைப் பரப்பிவிட்டு அடுத்து சில
புதியவர்களைப் பிடித்துவிடுவார்..
அவருக்கென்று எப்படி தொடர்ந்து
இப்படி ஏமாறும்படியான ஆட்கள் அமைகிறார்கள்
என நாங்கள் எங்களுக்குள் ஆச்சரியப்பட்டுப்
பேசிக் கொள்வதுண்டு..
சரி.இவ்வளவு வயதானபின் இவருக்கு
அறிவுரை சொல்வது வீண் எடுபடாது
எனத் தெரிந்த் கொண்டு அவரைப் பற்றித்
தெரிந்தவர்கள் அவரை விட்டு ஒதுங்கிவிடுவோம்.
மிக நெருங்கியவர்களிடம் மட்டும்
விவரம் சொல்லி ஏமாறாது காப்பாற்றிவிடுவோம்.
இவருடைய வாரிசுகள் எல்லாம் படித்து
நல்ல வேலைக்குச் சென்றுவிட்டதால்
அவர்களிடத்தில் இதுபோன்ற சில்லுண்டித்தனம்
துளியும் இல்லை.அவர்கள் பெருந்தன்மை
கொண்டவர்களாக இருந்தார்கள்.
எனவே இவருடைய சுருட்டல் குணம்
இவரோடு தொலைந்துவிடும் என்ற
நம்பிக்கையோடு எல்லோரும் இருந்தோம்.
ஒரு நாள் காலை வேளையில் நடைப்பயிற்சிக்காக
அவருடைய வீட்டைத்தாண்டிச் செல்லவேண்டி
இருந்தது..
வாசலில் நின்றுகொண்டிருந்தவர் என்னை அழைத்து
கையில் வைத்திருந்த ஒரு பேப்பரைக் கொடுத்து
இதை இருபது நகல் எடுத்து வரும்படிச்
சொன்னார்,
அது ஏதோ ஒரு அமைப்பின் நிகழ்வுக்கான
சுற்றறிக்கையாக இருந்தது..
நான் செல்லுகிற வழியில் ஒரு ஜெராக்ஸ்
கடையும் இருந்ததால் மறுக்க முடியவில்லை
"எடுத்துக் கொண்டு வா. காசை வந்ததும்
வாங்கிக் கொள் " என்றார்
எப்போதும் இப்படித்தான் சொல்வார்
அவரிடம் ஒரு பைசா நகராது
நாங்களும் இதுபோன்ற சின்னச் செலவு
என்றால் வராது எனத் தெரிந்தே
செய்து கொடுத்து விடுவோம்
.அப்போது என் பையில் இருபது
ரூபாயும் இருந்தது
அதனை வாங்கிக் கொண்டு நான்
புறப்படுகையில் உள்ளே இருந்து அவரின்
பேரன் வேகமாக ஓடி வந்து
"நானும் மாமா கூட கடைக்குப் போறேன்"
என்றான்,
ரொம்ப சூட்டிக்கான பையன்
வயது எட்டு இருக்கும்.அவனுடைய
பேச்சும் செயல்பாடுகளும் அவன்
வயதுக்கு மீறியதாக இருக்கும்
அவர் கூட அவ்வப்போது என் வளர்ப்பு
எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்..
அவரும் " சரி ஆசைப்படுகிறான்
கூட்டிக் கொண்டு போய் ஜெராக்ஸ் எடுத்து
இவனிடம் கொடுத்து அனுப்பி விட்டுக் கூட
நீ தொடர்ந்து வாக்கிங் போ
வருகிற வரை தூக்கிக் கொண்டு
அலைய வேண்டாம் " என்றார்.
இதில் உள்ள சூட்சுமம் உங்களுக்கும்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்
ஜேராக்ஸ் நகல் கொடுக்கும்போது
ரூபாய் கேட்பதற்கோ அல்லது
அவர் சாக்குச் சொல்வதற்கோ கூட
வாய்ப்பிருக்கிறது
பின்னால் இதை ஒரு பணமாக நான்
கேட்க வாய்ப்பில்லை.
( ஒருவேளை வேண்டுமென்றே கேட்டால்
"சரியான பிசுனாரி ஒரு பொதுக் காரியத்துக்கு
இருபது ரூபாய் செலவளிக்கக் கூட
மனசில்லாதவன் என ஆயிரம் ரூபாய் அளவு
பிரச்சாரம் செய்யது துவங்கி விடுவார் )
சரி எனச் சொல்லிவிட்டு அவனையும்
அழைத்துக் கொண்டு ஜெராகஸ் கடைக்குப்
போய் நகல் எடுக்கக் கொடுக்கையில்
கடைக்கு முன்னால் இருந்த மிட்டாய்
பாட்டிலைக் காட்டி
"இதுல ரண்டு வாங்கிக் கொடுங்க மாமா"
என்றான்
வாங்கிக் கொடுப்பது ஒரு பெரிய
பிரச்சனை இல்லை.
ஆனால் என்னிடம் அப்போது
இருபது ரூபாய்தான் இருந்தது..
அவர் இருபது நகல் எடுக்கச் சொல்லி
இருந்ததால் அதற்குத்தான் சரியாக இருக்கும்
எனவே அவனுக்குப் புரியும்படியாக
வாங்கிக் கொடுக்கமுடியாத சங்கடத்துடன்
" உங்கள் தாத்தா இருபது ரூபாய்தான்
கொடுத்து விட்டார். இருபது ஜெராக்ஸ்க்கு
அதுவே சரியாகப் போய்விடும்
நான் சாய்ந்திரம் ஆபீஸ் விட்டு
வரும் போது கூட ஐந்து மிட்டாயாக
வாங்கித் தருகிறேன் " என்றேன்
அவன் தலையை ஒரு பக்கமாகச்
சாய்த்து என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான்
ஏதாவது வில்லங்கமாக மௌடீகமாகப்
பேசும்போதோ அல்லது செய்யும் போதோ
அவருடைய தாத்தா இப்படித்தான் செய்வார்,
அச்சு அசலாய் அவன் அப்படியே
செய்தது கூட எனக்கு ஆச்சரியம்
அளிக்கவில்லை..
அடுத்து இப்படிச் சொன்னான்.
"எங்கத் தாத்தா இருபது இருக்கான்னு
எண்ணியா பார்க்கப் போறார்.
பதினெட்டு எடுத்துட்டு எனக்கு
மிட்டாய் வாங்கிக் கொடுங்க மாமா "
என்றான்