Tuesday, January 31, 2012

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
ஞானம் 100
எங்ஙனம் சாத்தியம்  ?

பட்டினத்து அடிகளின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?
 

Sunday, January 29, 2012

கடவுளும் கடவுள் வாழ்த்தும்......

எல்லோருக்கும் எப்போதும்
மாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்
எனக்கென்னவோ சில நாட்களாய்
குழப்பம்தான் வருகிறது

துவங்கிய நிகழ்வு
தடங்கலி ன்றி முடிய
கடவுள்வாழ்த்து அவசியமென
எல்லோரும் நம்புகிறோம்
தவறாதும் சொல்லுகிறோம்

ஆனாலும்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்மகன் வாழ்வில்
அது ஏன் தவறாகிப் போனது?
அம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்
கடவுள் வாழ்த்தினை
கணக்கில் கொள்வதா?
அல்லது
கொள்ளாமல் விடுவதா?
என்று எழுந்த கேள்வியே
கவிஞனைக் கொல்வதா?
அல்லது 
கொல்லாமல் விடுவதா? என்ற
குழப்பத்தினை உண்டாக்கி
முடிவில்
கடவுள்வாழ்த்துக் கணக்கே
அவனைக் கொன்றும் போட்டதால்.....

தடங்களின்றி காரியம் முடிய
கடவுள்வாழ்த்து
அவசியத் தேவையா?
அல்லது
அனாவசிய சேர்க்கையா?
என்கின்ற பெருங்கேள்வி என்னை 
குழப்பிக்கொண்டே இருந்தது

குழப்பத்தின் உச்சத்தில் நான்
ஓய்ந்துபோய் உறங்கிப் போக
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்
கனவில் வந்து நின்றான்.

அவன்
கமலப்பாதங்களைத் தொட்டு வணங்கி
என் கேள்வியை நான் கேட்கும் முன்பே
கையமர்த்தி என்னை அமரச்சொல்லி
கண்கலங்க இப்படி சொன்னான்

"கடவுள்வாழ்த்துக் கணக்கில் நான்
என் கண்மணியை இழந்தாலும்
ராம காதையில் 
நானதைச் சொல்ல மறந்தேனா?
கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து 
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது 
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்
அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது"எனி
கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்

நான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது
விடிந்தும் இருந்தது
என்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ
தொலைந்தும் இருந்தது

Thursday, January 26, 2012

பண்பாடும் கலாச்சாரமும்

பொருளின் நிலையும் தரமும் மாறுபடுகையில்
பழைய அளவு கோல்கள் கொண்டு
அளக்க முயல்வதே பத்தாம் பசலித்தனம்தான்

குடிப்பவனெல்லாம் முன்பு தீயவனாய்த் தெரிந்தான்
நல்லவேளை இப்போது
எல்லோரும் குடிப்பதால் அப்படியில்லை
குடித்து "சலம்புபவன்  " மட்டுமே தீயவனாகிறான்
இப்படிக் கொள்வது கூட ஒருவகையில்
அனைவருக்கும் வசதியாகத்தானே இருக்கிறது ?

பிறன்மனை நோக்காமையே  முன்பு
பேராண்மையாய் பேசப்பட்டது
நம்முடைய நல்ல காலம் இப்போது அப்படியில்லை
சிறு வீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே
இப்போது  பேராண்மை தீர்மானிக்கப் படுகிறது
இது கூட ஆண்களுக்கு ஒரு நல்ல
வாய்ப்பாகத்தானே படுகிறது ?

லஞ்சம்வாங்குதல் கூட முன்பு
கேவலமாகத்தான் கருதப்பட்ட்டது
நல்லவேளை இப்போது அப்படி நினைப்பதில்லை
லஞ்சம் வாங்கியும் காரியம் முடிக்காதவனே
இப்போது கயவனாகக் கருதப்படுகிறான்
இந்த மாறுதல் கூட அனைவருக்கும்
ஏற்புடையதாகத்தானே இருக்கிறது ?

தன் கொள்கைக்கு முன் உதாரணமாய் திகழ்பவரே
முன்பு தலைவராக ஏற்றுக் கொள்ளப் பட்டார்
நல்லவேளை இப்போது அந்தக் கருமாந்திரம் இல்லை
தன் கொள்கைக்கு தானே எமனாக இருந்தாலும்
மேடையில் சிறப்பாகப் பேசத் தெரிந்தவரும்
எதிரணியை மிக நன்றாக ஏசத் தெரிந்தவருமே
தலை சிறந்த தலைவராகிறார்
அந்தத் தலைமையும் அனைவருக்கும்
 உடன்பாடாகத்தானே  இருக்கிறது ?

எந்த அளவுக்கும் சரிப்பாடாத வகையில்
பொருளின் தரமும் நிலையும்
அடியோடு மாறுகிற வரையில்
இப்போது போல
அள்வுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்
அதுதான் நாகரீகமானது மட்டுமல்ல
புத்திசாலித்தனமானதும் கூட
ஊரோடு ஒட்டி வாழலே
நம்து கலாச்சாரம் கற்றுத் தந்த   
உயரிய  பண்பாடு இல்லையா ?

Tuesday, January 24, 2012

கவிதைச் சித்தாந்தமும் அரசியல் வேதாந்தமும்

அளவுக்கு மீறிய நெருக்கத்தில்
பொருளின் உண்மைத் தன்மை
கண்ணுக்குத் தெரியாமல்தான் போகும்
அது கல்லானாலும் சரி
உயிர்த் தோழியானாலும் சரி

ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் தொடர்ந்திட
வாரிசுப் போர்
தவிர்க்க முடியாததாகிவிடும்
மாமன்னர்கள் காலமாயினும் சரி
மக்களாட்சி காலமாயினும் சரி

உடல் வலிமை எத்தகையதாயினும்
கால் பலமற்றவன் அடுத்தவன் முதுகினை
அண்டித்தான் வாழவேண்டும்
அது பயில்வானாயினும் சரி
பணபலமுள்ளவன் ஆயினும் சரி

எத்தகைய  வீரியமிக்க விதையாயினும்
மண்ணில் நட்டுத்தான் உயிர் பெறக்கூடும்
ஆகாயப் பந்தலில் நடமுடியாது
அது ஆதிகாலத்து ஆலமரமாயினும் சரி
இருபதாம் நூற்றாண்டு "அரச"மரமாயினும் சரி

படிமங்கள் குறியீடுகளென
எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி

Sunday, January 22, 2012

மத்யமர்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டாலும் கூட
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்  மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது

ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Friday, January 20, 2012

கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படி கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்த" கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான நண்பன்

"அவர்களை நம்பி "கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை
வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்
அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்.
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

Thursday, January 19, 2012

இங்கு எல்லாம் இப்படித்தான் ...

வார்த்தைகளை வரிசைக்   கிரமமாய்
மிகச் சிறப்பாக கோர்க்கத் தெரிந்தவன் இங்கே
கவிஞனெனப் பெயர் பெறுகிறான்
கருகுறித்து இங்கு யாருக்கும் கவலையில்லை

மனிதர்களை  எப்படியேனும் எது கொடுத்தேனும்
மிக அதிகமாகச் சேர்க்கத் தெரிந்தவன்
தலைவன் ஆகிப் போகிறான்
நோக்கம் குறித்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை

எதைச் சொல்லியேனும் வெறியேற்றி மனிதர்களை
பல கூறாய் பிரிக்கத் தெரிந்தவன்
மதத் தலைவன் ஆகிப் போகிறான்
மதத்தின்  நோக்கம்  குறித்து எவருக்கும் அக்கறையில்லை

எது நடந்த  போதும் தன்சுகத் தேடலில்
தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்
சமூ க நலன் குறித்த கவலைகள் அவனுக்கில்லை

 எது எப்படி நடந்தபோதும்
தர்ம நியாயங்களைவிட 
"தன் ஒழுங்கு முறையை  "காப்பதிலே மட்டும்
இயற்கை அதிக அக்கறை கொள்ளுகையில்
மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும்  ?


Monday, January 16, 2012

பதிலறியாக் கேள்வி

வித்யா கர்வம் தந்த மிடுக்கில்
அவர் கண்களில் தெரியும்
மேதமைத்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதற்காகவே நானும் கவிஞனாகத் துடித்தேன்

ஆயினும் "எப்படி" எனத்தான் தெரியவில்லை

அவர் அறிந்தோ அறியாமலோ
அவரது காலகள் தரையில் இருந்தபோது
"கவிஞனாவது எப்படி " என்றேன்

"படி நிறையப் படி
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
எவ்வப்போது முடியுமோ அப்போதெல்லாம் "என்றார்

நான் படிக்கத் துவங்கினேன்

எழுத்து புரிந்தது
எழுதுவோனின் எண்ணம் புரிந்தது
சில போது ஆடையிடும் அவசியமும்
சிலபோது அம்மணமாய் விடும் ரகசியமும்

ஆனாலும் கூட எப்படி எனப் புரிந்த எனக்கு
"எதனை" என்கிற புதுக் குழப்பம் வந்தது

இப்போது அவர் தளர்ந்திருந்தார்
நான் வாலிபனாய் வளர்ந்திருந்தேன்

"கண்ணில் படும் அனைத்தையும் பார்
எல்லோரையும் போலல்லாது வித்தியாசமாய்
இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில்
இனி யாரும் பார்க்க முடியாத கோணத்தில் " என்றார்

நான் பார்க்கத் துவங்கினேன்

பார்க்கத் தெரிந்தது
பார்வையைச் சார்ந்தே பொருளிருப்பதும்
பார்வைபடாத பகுதிகளே அதிகம் இருப்பதும்
உள் இமையை திறக்கும்  உன்னத ரகசியமும்

ஆனாலும் கூட எதனைஎனப் புரிந்த எனக்கு
"ஏன் " என்கிற பெரிய குழ்ப்பம் வந்தது

இப்போது அவர் பழுத்தவராய் இருந்தார்
நான் தளரத் துவங்கியிருந்தேன்

முன்னிரண்டு கேள்விகளுக்கு
சட்டெனப் பதில் சொன்னவர்
இப்போது ஏனோ மௌனம் சாதித்தார்
பின் மெல்லிய குரலில்
"இதுவரை எனக்குத் தெரியவில்லை
உனக்கு ஒருவேளைதெரியக் கூடுமாயின்
அடுத்தவனுக்கு அவசியம் சொல் " என்றார்

இப்போது பதிலறியா கேள்வி என்னிடத்தில்
நான் அலைந்து கொண்டிருக்கிறேன்

Friday, January 13, 2012

பட்டவைகள் துளிர்க்க...

இருள்
தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

பட்டுப்போனவைகள் கூட
மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

Thursday, January 12, 2012

நெடுஞ்சாலைத் தெரு ஓரம்

குடிசையிலே பிறந்து தொலைத்து
தெருவோரம் வாழ்ந்தே சாகும்
நடைபாதை மனிதன் உடலில்
கஸ்தூரி மணமா  கொஞ்சும் ?

அடுப்பினிலே இல்லா தீயை
அடிவயிற்றில் தேக்கி வைத்து
நொடிதோரும் சாவோன் வாயில்
திருக்குறளா வந்து கொட்டும் ?

மழையின்றி போனால் தூக்கம்
மறைவின்றி ரோட்டில் போகம்
முறையின்றி வாழ்வோன் நெஞ்சில்
முகிழ்த்திடுமோ மனித நேயம் ?

நாயோடு நாயாய் வாழ்வு
நச்சுநதிக் கரையே வீடு
நோயோடே பிறப்போன் நெஞ்சில்
ந்னனெறியா பிறந்து தழைக்கும் ?

மிதிபட்டுத் துடிப்போன் தன்னை
மிதித்தவனே மிரட்டும் கொடுமை
சரியாகிப் போகும் காலம்
வருவதுதான் எந்தக் காலம் ?

உடலதனில் கைகள் மட்டும்
உறுதிபெற்றால் சரியோ சொல்வீர்
சமவளர்ச்சி ஒன்றே என்றும்
சரியான வளர்ச்சி அன்றோ

முடிந்தவரை அவர்கள் வாழ்வை
உயர்த்திடவே வழிகள் காண்போம்
அதுகூடக் கடினம் எனிலோ
மனதிலேனும் கருணை  கொள்வோம்


 (சமீபத்தில் குடிசைப் பகுதியில் நடந்து
செல்லுகையில் காருக்கு குறுக்கே  ஒரு குழந்தை
வந்து விட காரில் இருந்து இறங்கிய ஓட்டு நர்
காரின் கீழிறங்கி கடினமான வார்த்தையை
உபயோகிக்க குடிசை வாழ் மக்கள் அதைவிட
கடினமான வார்த்தைகள் பேசிவிட சூழல்
அசிங்கமாகப் போய்விட்டது
நான்  இடையில் புகுந்து இருவரையும்
சமாதானப்படுத்தி விட்டுகையில் இருந்த பிஸ்கெட்
பாக்கெட்டை குழந்தை கையில்
கொடுத்துவிட்டு நடக்கலானேன்.டிரைவர்  என்னை
ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்
எனக்கென்னவோ குடிசை வாழ் மக்கள்அப்படி இருக்க
நாமும் ஒருகாரணமாக இருப்பதுபோல் பட்டது.
அதனடிப்படையில் எழுதியது இது )


Tuesday, January 10, 2012

அமானுஷ்யம் -சிறுகதையாகவும் கருதலாம்

இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்

அப்போது நான மதுரையின் தென்பகுதியில்
அரசுப் பணியில் இருந்தேன்அதிகாரம் அதிகம் உள்ள
அரசுப் பணி என்பதாலும் அதிகமாகமக்கள் தொடர்பு
உள்ள துறை என்பதாலும் கொஞ்சம் அதிக
பணி நெருக்கடி இருக்கும்.குறிப்பாக
அரசியல்வாதிகளின் கெடுபிடியும்
மக்கள் பிரதி நிதிகளின் கெடுபிடியும் அதிகம் இருக்கும்

மதுரையில் சீதோஷ்ணம்  மட்டும் இல்லை அரசியலும்
எப்போதும் கொஞ்சம் அதிக சூடாகவே இருக்கும்
அதனால் சட்டத்திற்கு புறம்பாக மக்கள்
நலத் திட்டங்களில்கொஞ்சம்அப்படி இப்படி
இருக்கவேண்டியிருக்கும்.
அப்படி இருக்கிறஊழியருக்கு கொஞ்சம் கூடுதலாக
அதிகாரமும் இருக்கும்கொஞ்சம் லாபமும் இருக்கும்

நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில்
இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்று
பழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாக
எதுவும் செய்யமாட்டேன்.
அதே சமயம் அதிகாரமிக்க அரசியல்வாதிகள்
சில தவறான சிபாரிசுக்கு வந்தால் அதை எப்படி
சட்டத்திற்கு உட்படுத்துவதுஎன அவர்களுக்கு விளக்கி
அதை சட்டப்படியே செய்து கொடுக்க முயல்வேன்
இது கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்றாலும்
எனக்கு பங்கு கொடுக்கவேண்டியதில்லை
என்பது ஒரு வசதிஎன் மூலம் வருகிற சிபாரிசுகளில்
தவறு இருக்காது என்பதால்மாவட்ட அளவில்
காரியம் சட்டென முடிந்துவிடும்.என்பது
இன்னொரு வசதிஇதுவும் ஒரு வகையில் லாபம்
என்பதால்  அரசியல்வாதிகள்என்னையும் மாற்ற
முயலாமல் சகித்து வைத்துக் கொள்வார்கள்

எனவே என்னை அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்
அதிகாரிகளுக்கும் பிடிக்கும்

இது மக்கள் நலத் திட்ட தொடர்புடைய அதிக
பணப் புழக்கமுள்ளஊழல் செய்வதற்கு அதிக
வாய்ப்புள்ள துறை என்பதால் பிற துறைகளைவிட
அதிக உயர் அதிகாரிகளின் ஆய்வும்அதிகம்  இருக்கும்.
அதில் கூட "சர்ப்ரைஸ் செக்  "எனச்சொல்லக்கூடிய திடீர்
ஆய்வுகள் அதிக இருக்கும்
எப்போது எந்த உயர் அதிகாரி சென்னையில் இருந்து
வருவார்எந்தப் பகுதியைப் பகுதியைப் பார்வையிடுவார்
என்கிற பயம்கீழ்மட்டத்தில் பணியாற்றுகிற
எல்லா அதிகாரிகளுக்கும்எப்போதும் இருக்கும்
அவர்கள் அனைவரும் அப்படி
திடீரென ஒரு அதிகாரி வந்தால்எப்படிச் சமாளிப்பது என
ஒரு திட்டமும் வைத்திருந்தனர்
விமான நிலையத்திற்கு அருகில் நான் பணிசெய்யும்
பகுதி இருப்பதாலும்ஊழல் பிரச்சனை ஏதும் இருக்காது
என்பதாலும் உடன்என் பகுதியைக் காட்டிவிடுவது
என ஏகமனதாக தீர்மானம் செய்து செயல் படுத்தி
வந்தனர்.எனக்கும் அது உடன்பாடுதான்
ஆனால் அதில் ஒரு சிரமம்இருந்தது.
இங்குதான் கதையே ஆரம்பிக்கிறது

சென்னையில் இருந்து கள ஆய்வுக்கு வருகிற
அதிகாரிகள் மக்களிடம்நேரடியாக பேசித்
தெரிந்து கொள்ளவும் விரும்புவார்கள்
அந்த மக்கள் மூலம் மாலை மரியாதை பெறுவதையும்
அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வருவதையும்
மிகவும் விரும்புவார்கள்நான் அதற்கு ஏற்றார்ப்போல
எப்போதும் எனது வண்டியில்
கேமராவும்நாலைந்து சால்வைகளும் எப்போதும்
வைத்திருப்பேன்.அதைமக்கள் பிரதி நிதிகளிடம் கொடுத்து போடவைப்பதோடு அதைமறு நாள் பத்திரிக்கையில்
வரவைப்பதற்கான ஏற்பாடுகளையும்
மிகஅழகாக செய்துவிடுவேன்

சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக
உயர் மட்ட அதிகாரிகள்கூடுதலாக வந்து விடுவார்கள்.
அப்போது சால்வை கூடுதலாக வேண்டி இருக்கும்
அவசரத்தில்  மதுரையில் போய்
வாங்கிவரவும் முடியாதுஅதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்துவைத்திருந்தேன்

எனது பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு
கருப்பண்ணசாமிகோவில் இருந்தது
ரொம்ப துடியான சாமி.மதுரையில் இருந்து
தூத்துக்குடி வழியாகச் செல்லுகிறஅனைத்து
வாகன ஓட்டிகளும்அங்கு வண்டியை நிறுத்தி
கருப்பணசாமிக்கு மாலைஅணிவித்து கும்பிட்டுவிட்டு
சிறிது இளைப்பாறிவிட்டுத்தான் போவார்கள்.
வண்டி வாகனம் கிடாவெட்டு என
அந்த கோவில் எப்போதும்ஜே.ஜே என இருக்கும்
.நானும்செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலைசாத்தி
கும்பிட்டுவிட்டுச் செல்வதால் அந்தக் கோவில் பூசாரி
எனக்கு ரொம்பப் பழக்கம்

அவரிடம் ஒரு நாள் இதுபோல கூடுதலாக அதிகாரிகள்
வந்த சமயம்அவசரத்திற்கு நான்கு மாலைகள்
வேண்டும் எனச் சொல்லஅவரும் என்னுடைய
சூழல் கருதி மாலைகள் கொடுத்ததோடு
"இனி எப்போது அவசரத்திற்கு  மாலை வேண்டுமென்றாலும்
இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால்
கருப்பணசாமிக்குமாலைக்கான பணத்தை உண்டியலில்
போட்டுவிட்டுஎடுத்துச் செல்லுங்கள் "என
எ னக்கு அனுமதி கொடுத்திருந்தார்.
நானும் அடிக்கடி தேவையானபோதுமாலைகளை
எடுத்துக் கொள்வதும்  அதற்குண்டான
காணிக்கையினைஉண்டியலில் செலுத்துவதுமாக
காலத்தைஓட்டிகொண்டிருந்தேன்
இதனால் நானும் கோவில் பூசாரியும் மிகவும்
நெருங்கிய பழக்கம்உள்ளவர்கள் ஆகிப் போனோம்

வழக்கம்போல அரசுப் பணியாளர்களுக்கு
எல்லோருக்கும் நேரும்பிரச்சனை எனக்கும் நேர்ந்தது
.மூன்றாண்டுகளுக்கு மேலாக
தொடர்ந்து ஓரிடத்தில் இருக்கக் கூடாது  என்கிற
உத்திரவினைபுதிதாக வந்த அரசு மிக் கண்டிப்பாக
அமல்படுத்தவேண்டும் என உத்தரவிட்டது
நான் ஏறக்குறைய  ஆறு ஆண்டுகளுக்கு மேலாக
ஒரே இடத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தவன்
என்பதால்எனக்கும் மாறுதல் தவிர்க்க
முடியாததாகிவிட்டது.நானும் குடும்ப சூழல்
காரணமாகசில காலம் வெளியூரில்
பணியாற்றலாமே எனமதுரையின் மேற்குப்
பகுதிக்குமாறுதல் பெற்றுக் கொண்டு
சென்றுவிட்டேன்எனக்கும் கோவிலுக்கும்
பழைய பகுதிநண்ப்ர்களுக்குமான தொடர்பு
முற்றிலுமாகஒரு மூன்று வருடம்
துண்டிக்கப் பட்டுப் போய்விட்டது

கடைசியாக ஓய்வு பெற ஓராண்டு மட்டும்
இருக்கிற  நிலையில்வீட்டை ஒட்டிய பகுதில்
வேலை பார்த்தால் கொஞ்சம்அலைச்சல் குறையும்
எனவும்ஓய்வுகாலச் சலுகைகள் பெற வசதியாக
இருக்கும் என எல்லோரும் சொல்ல
எனக்கும் அதுவே சரியெனப் பட்டதால் உயர்
அதிகரிகளிடம் பேசிமீண்டும் நான பணியாற்றிய
பழைய பகுதிக்கே  மாறுதல்பெற்றுக் கொண்டு
வந்துவிட்டேன். ஆனால் பழையவேகம் எல்லாம்
குறைந்து போனதுமுன்பு போல அதிகம் அலைய
முடியவில்லை என்பதால் அதிகமாகவண்டியை
பயன்படுத்தாமல் பஸ்ஸிலேயே போவதும
வருவதுமாகஎனது பணி சுமையையும் குறைத்துக்
கொண்டேன்.அவசிய மானால்அரசு வாகனத்தைப்
பயன்படுத்துவதை இல்லையேல்இரண்டு
சக்கர வாகனத்தையே பயன்படுத்தி வந்தேன்.

ஒரு குறிப்பிட்ட நாளில் பஸ் அதிகம் போகாத
ஒரு உள்ளடங்கியகிராமத்திற்கு போகவேண்டி வந்தது.
இரு சக்கர வாகனத்தில் போனால்தான்
போய்வருவது எளிதாய்  இருக்கும் என வண்டியை
எடுத்துக் கொண்டுபோய்வேலைகளை முடித்துவிட்டு
வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தேன்
அப்போது சாலையின் மேல் அந்தக் கோவில்
பூசாரி நின்று கொண்டு கையை காட்டினார்.
அவர் வீடு அந்தப் பகுதியில்தான் இருந்தது
அங்கிருந்து கோவில் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும்
எப்போதும் அங்கிருந்து வருகிற தெரிந்த வண்டியில் ஏறி
கோவிலில் இறங்கிக் கொள்வது எப்போதும் 
அவர் பழக்கம் நானும் பலமுறை அவ்வாறு
 கோவிலில் இறக்கி இருக்கிறேன்

அவர் முன்பு போல இல்லை  வய்தின். காரணமாக
உடல்தளர்ந்து போயிருந்தார்எனவே வண்டியில்
ஏற்றுவதுசரியாக வருமா என குழப்பமாக இருந்தது
வயதானகாலத்தில்சரியாக பிடித்துக்கொள்ளாமல்
விழுந்துவிட்டால்அது வேறு பிரச்சனை ஆகுமே
என பயமாக இருந்தது .அவர் என்னுடைய
ஒப்புதலைக் கூட  பெரிய விஷயமாக
எடுத்துக்கொள்ளவில்லைஎனது வண்டியின்
பின்னிருக்கையில் ஒரு பக்கமாககால்களைப்
போட்டுக்கொண்டு போகும் படி சைகை காட்டினார்
எனக்கும் வேறு வழியில்லை,அவரே தைரியமாக
அமரும்போதுநமக்கென்ன என வண்டியை
ஸ்டார்ட் செய்து ஓட்டத் துவங்கினேன்

வயதானவர் அமர்ந்திருக்கிறார் என்கிற ஜாக்கிரதை
உணர்வில்மிக மிக மெதுவாகத்தான் வண்டியை
ஓட்டிவந்தேன்மிகச் சரியாக  கோவில் அருகில்
வந்ததும் வண்டியை நிறுத்திஅவரை இறங்கச் சொல்லித் திரும்பினேன்.வண்டியில் அவர் இல்லை
எனக்கு திடுக்கிட்டுப் போனது .இவ்வளவு
ஜாக்கிரதையாகஓட்டிவந்தும்தவற விட்டு விட்டோமே
என்கிற பயத்தில்மீண்டும் அவரைவண்டியில்
ஏற்றிய  இடம் சென்று பார்த்தேன்.
எங்கும் இல்லைஒருவேளை மிகச் சரியாக
ஏறுவதற்கு முன்பே நான் வண்டியைஎடுத்திருக்கலாம்
என என்னை நானே சமாதானம்
செய்து கொண்டுஅலுவலகம் சென்று விட்டேன்

மறுதினம் அந்தப் பகுதி கவின்சிலர் ஒரு வேளையாக
என்னிடம்வந்திருந்தார்.அவரிடம் பல்
விஷயங்களைப் பேசிவிட்டுஎன் மீது தவறு  இருக்கிற
பயத்தில் மிக மேதுவாகப்  பேச்சுக் கொடுத்தேன்
" நேற்று கருப்பணசாமி கோவில் பூசாரி
ஆஸ்பத்திரி மேட்டில்லிப்ட் கேட்டார். அவசரத்தில்
நிறுத்தாமல் வந்துவிட்டேன்எதுவும் சொனாரா "
என சம்பந்தமில்லாமல் சுற்றி வளைத்துக் கேட்டேன்
 அந்த கவுன்சிலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"சரி நேற்று விழவைத்து விட்டு வந்தது  நாந்தான் என
நானே உளறித்தொலைத்துவிட்டேனோ " எனத் தொன்றியது

அவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்
" யார் அந்த பெருசா ?" என்றார்

"ஆமாம் " என்றேன்

" நேற்றா " என்றார்

" ஆமாம் " என்றேன்

அவர்மிக நிதானமாக

"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு
மேலாகிவிட்டது "என்றார்


Monday, January 9, 2012

இது வேறு உலகம்-தனி உலகம்

வீட்டு வரியைக் கட்டச் சொன்னா
முறைச்சுப் பார்க்கிறன்-எங்க
வீடு ஓடு அதுக்குப் போயி
நூறா என்கிறான்-தினமும்
ரோட்டு ஓர ஒயின்ஸ் கடையில்
டேரா   போடுறான்-அவன்
கேட்ட காசை கொடுத்துக் குடிச்சு
"மட்டை " ஆகுறான்

வீட்டுச் செலவு விஷமாய் ஏற
கையப் பிசையரான்-பழைய
பாக்கி வேற கழுத்தைப் பிடிக்க
நொந்து சாகறான்-எதுக்கும்
நேத்திக்கடனை தீர்த்துப் பார்க்க
"குறிகள் " கேட்டதும்-கடனை
சேத்து வாங்கி கோவில் போயி
"மொட்டை " போடறான்

நாட்டு நடப்பு குறித்து தினமும்
விளாசித் தள்ளுறான்-பேப்பர்
பாத்துப் பாத்து  நாட்டு நிலையை
நன்றாய் அலசரான்-தேர்தலில்
ஓட்டு கேட்டு  வந்தால் போதும்
எல்லாம் மறக்கறான்-நைசா
ஓட்டு வீட்டில் எட்டு என்று
"நோட்டு "கறக்கிறான்

காற்றின் போக்கில் துடுப்பை வலிக்க
பயணம் சிறக்குமே-என்றும்
நேர்மை போக்கில் செயலும் தொடர
வாழ்வு சிறக்குமே-இந்த
ஏற்ற மிக்க செய்தி அவர்கள்
அறியச் செய்குவோம்-"அவர்கள் "
ஏற்றம் காண நம்மால் ஆன
பணியைத தொடருவோம்

Saturday, January 7, 2012

அழகே... இயற்கையே உனக்கு எதிரியாய் ..

இயற்கை உனக்கு எதிராய் இருக்கு
வெளியே வீணே வராதே-அந்த
ரகசியம் தன்னை உனக்கும் சொல்வேன்
எவருக்கும் அதைநீ சொல்லாதே

மேகத் துணியில் நாளும் துடைத்தும்
மருவு சிறிதும் நீங்காது-தொடரும்
சாபம் போல தொடரும் துயரை
நிலவு தாங்கச் சகியாது-உன்
மோகம் கூட்டும் முகமது கண்டு
மனதில் எரிச்சல் தாங்காது-தினமும்
கோபம் கொண்டு வானில் திரியும்
இரவு முழுதும் தூங்காது

கண்கள் இரண்டைக் கவரும் வண்ணம்
காட்சி தந்த போதும்-தினமும்
உண்ண உண்ண தெவிட்டா சுவையை
அள்ளித் தந்த போதும்-உன்
கன்னக் கதுப்பே இனிக்கும் கனியென
மயங்கி நாளும் சாகும்-காளையர்
எண்ணம் தன்னை அறிய கனியும்
உன்னைப் பகையாய்க் காணும்

மலர்ந்து சிரித்து மகிழ்ச்சிப் பரப்பி
மனதைக் கவர்ந்த போதும் -நல்ல
மணத்தைக் கொடுத்து மனதில் காதல்
உணர்வை நிறைத்த போதும்-உனது
இதழின் சுவையே இதமே பதமே-என
உளறும் இளைஞர் காணும் மலரும்
உன்னை  எண்ணி வாடும்

உறுப்பு உறுப்பாய் சொல்லிப் போக
விஷயம் நிறைய இருக்கு-உந்தன்
சிறப்பு தன்னை எண்ண எனக்குள்
பொங்கிப் பெருகுது மலைப்பு -இருந்தும்
இயற்கை உனக்கு எதிராய் இருக்கு
வீணே வெளியே வராதே-அந்த
ரகசியம் உனக்கும் தெளிவாய் சொன்னேன்
மறந்தும் வெளியே சொல்லாதே

(கல்லூரி நாட்களில்   எழுதியதில்  ஞாபகத்தில்
இருந்த மட்டும் )


Thursday, January 5, 2012

எறும்பு ஊற...

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த 
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
மிக எளிதாய் அடைந்து உயர்வோம்

Tuesday, January 3, 2012

தொடர் பயணம்

சமதளமாய்
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை
கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை
இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை