Wednesday, July 19, 2023

படித்ததில் பிடித்தது..

 என் பள்ளிக் காலத்தில், படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம்,

 

*‘உனக்குப் படிப்பு வராது,* 


*நீ மாடு மேய்க்க போயிடு’* 


என்பதாகும்.


என்னுடன் எட்டாங்கிளாஸில் அய்யாத்துரை என்று ஒரு மாணவர் படித்தார். 


ஏன் 'ர்' போட்டு அழைக்கிறேன் என்று யோசிப்பீர்கள்!!  


அப்போதெல்லாம் கம்பல்சரி பாஸ் கிடையாது. 


பாஸ் ஆகாவிட்டால் ஒவ்வொரு வகுப்பிலும் பாஸ் ஆகிற வரை படிக்கவேண்டும்.


அய்யாத்துரை மூன்று நாட்கள் முக ஷவரம் பண்ணாமல் இருந்தால், முகம் கஞ்சா கருப்பு போல ஆகிவிடும்; 


அவ்வளவு மயிர்வளம்! 


காரணம், ஒவ்வோர் வகுப்பிலும் நல்ல Foundation! 


அந்த அய்யாத்துரையிடம் ஆசிரியர் வழக்கமான அந்த வாக்கியத்தைச் சொன்னார். 


துரதிஷ்டவசமாக, அந்த அய்யாத்துரை நிஜமாகவே அவ்வப்போது மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்!


‘மாடு மேய்க்கிறது ஈஸியா?’ என்றார், ஆசிரியரிடம்.


‘இல்லையா பின்னே?


 படிப்பு இல்லாதவந்தானே மாடு மேய்க்கிறான்?’ 


என்றார் ஆசிரியர்.


‘அம்பது மாட்ல எது கன்னியப்பச் செட்டியார் மாடு, எது பாண்டிய நாடார் மாடுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா?’


ஆசிரியர் அதிர்ந்தார்.


‘எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?’


அடுத்த கேள்வி இன்னும் அதிகமாகத் தாக்கியது.


‘எது எங்க மேயும்ன்னு பாத்து ஓட்டிக்கிட்டு வருவீங்களா?’


இப்போது ஆசிரியர் பாண்டியராஜன் போல விழித்தார்.


‘மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?’


இப்போது விழி ஆடு திருடின கள்ளன்போல் ஆயிற்று.


‘சாணி மொத்தத்தையும் கூடைல பிடிப்பீங்களா? 


வரட்டி தட்டத் தெரியுமா? 


வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா? 


அது ராடு வச்ச கான்க்ரீட்போல ஸ்ட்ராங்குன்னு தெரியுமா?’


கேள்விகள் சரமாரி ஆயின.


*‘எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னுதான் எங்கப்பா படிக்க அனுப்பிச்சார் தெரியுமா ?!!* 


*நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்யார் ஆயிடுன்னு அனுப்புச்சாரு’*


*அதற்கப்புறம், அந்த வாத்தியார் யாரையுமே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னதே இல்லை!*



😍😍😍😍🤓🤓🤓🤓🤓😍😍😍😍

Saturday, July 8, 2023

புத்தகத்தினும் வலைத்தளமே சிறப்பு

 சிறப்பாக என நிச்சயமாகச் சொல்லமுடியாது

என்பது உண்மையாயினும்

பன்னிரண்டாண்டுகளாக

விடாது தொடர்ந்து  மனதில் பட்டதை

வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்


பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல

வலைத்தளம் இப்போது விறுவிறுப்பாக

இல்லையென்றாலும்


மிகச் சிறப்பாக எழுதக் கூடிய பலர் இப்போது

எதனாலோ எழுவதைத் தொடர்வதில்லை

என்றாலும்..


என் போல சிலர் மட்டுமாவது எழுதிக் கொண்டிருப்பது

மிக்க மகிழ்வளிப்பதாகவே உள்ளது..


அதைவிட எழுதுவதில்லை என்றாலும் 

படிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல்

இருப்பதுதான் மகிழ்வளிப்பதாக

மட்டுமல்லாது கூடுதல் ஆச்சரியமளிப்பதாகவும்

உள்ளது 


எம் எழுத்தினை புத்தக வடிவில் 

கொண்டுவந்திருந்தால் ஒரு பதிப்புக்கு

1000 என்கிற எண்ணிக்கையில் மூன்று

புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும்...


அந்த மூவாயிரம் புத்தகங்கள் அனைத்தும்

விற்பனையாகி.....


அதை வாங்கிப் படித்தவர்கள் வியந்து

அடுத்து மூவரிடம் கொடுத்து படிக்கும்படியாகச்

செய்திருந்தாலும் கூட ஒன்பதாயிரம் அல்லது

பத்தாயிரம் பேர் படித்திருக்கவே சாத்தியம்


ஆனால் வலைத்தளப் பதிவாக வந்ததை

இதுவரை  எட்டு இலட்சத்திற்கு மிக நெருக்கமாகப்

பலர் படித்திருப்பதும்...


முப்பத்தாறாயிரத்துக்கு மேற்பட்டோர் 

பதிலுரைத்திருப்பதும்


நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டினர்

விடாது தொடர்வதும்....


வலைத்தளத்தின் பலத்தினை நிரூபிப்பதாக மட்டுமல்லாது

எம் போன்று எழுதுபவர்களுக்கு அதிக

ஊக்கம் தருவதாகவும் உள்ளது  என்பதால்...

..

ஆம் தலைப்பில் சொல்லியபடி

புத்தகத்தினும் வலைத்தளமே

சிறந்தது என்பது மறுக்க முடியாததுதானே


(சிகரத்திற்கு அடுத்து சரிவு என்பது

தவிர்க்க முடியாதது என்பது போல

மிகச் சிறப்பாக நடைபெற்ற இரண்டு

பதிவர்கள் சந்திப்புக்குப் பின் சந்திப்பே

நடக்காது போனது என் போன்ற பலருக்கு

மிகுந்த வருத்தமே


புதுக்கோட்டைப் பதிவர்கள் மனது வைத்தால்

மீண்டும் அதைத் துவக்கி வைக்க முடியும்

ஆம் மனது வைத்தால்...

வாழ்த்துக்களுடன் )

Wednesday, July 5, 2023

சமநிலை பெற ஒரு சுருக்கு வழி..

 https://www.facebook.com/profile.php?id=100072089860941&mibextid=ZbWKwL அன்றாடம் எம்மை சமநிலைப்படுத்திக் கொள்ள வேறு எதன் துணையையும் தேடுவதில்லை...தினமும் இதை அவ்வப்போது இந்த இணைப்பைப் பார்த்துக் கொள்கிறேன் ..அவ்வளவே... 

Monday, July 3, 2023

எங்கள் ஐய்யனார் சாமி

 சிறு வயதில்

வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?