Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, September 22, 2019

மனச்சாட்சியும் அரசியல் தெளிவும்

"மன்னராட்சியின் நீட்சியாய்
வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் தெளிவு

Wednesday, January 9, 2019

மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது மௌனமாய்

வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்

இப்போது நீருக்கே
அல்லாடுகிறோம்

தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்

வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்

பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்

கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்

வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்

மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது

ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்

தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்

பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?

ஆள்காட்டி விரல்
எதை எதையோ சுட்டிக்காட்ட
மடங்கிய விரல்களே
நிஜம் காட்டுகிறது மௌனமாய்

Saturday, May 12, 2018

neet is also good as neat

நீரை அடித்துக்கிளப்பி
அச்சுறுத்தும் அலையாக்கி
அலைதான் கடலென
 சாதிக்க முயல்கிறது
சுயநலப் பேய்க்காற்று

 அலைச்சீற்றம் கண்டு
அச்சம் கொண்டு
முத்தெடுக்கப் பயணிப்போரை
முடக்கிவிட முயல்கிறது
முட்டாள்ப் பேய்க்காற்று

கடலின் ஆழம் அறிந்தோர்
 அதன் சீலம் அறிந்தோர்
கிஞ்சிற்றும்
குழப்பம் கொள்ளவில்லை
ஒதுங்கிக் கரையில் நிற்கவில்லை

கடந்ததைத் தாண்டும் விதமாய்
சாதனையெனச் சொல்லும் விதமாய்
 கூடுதலாய் கடலினுள் பயணிக்கின்றனர்

பதினான்குக்கொருவர்
அதுவும் கூடுதல் பிடுங்கலின்றி
முத்தெடுத்தல் சாத்தியம் என்பது
அவர்களுக்குத்தெரியும்

கத்தியின்றி இரத்தமின்றி
சுதந்திரம் பெறுதல் மட்டுமின்றி
அல்லக்கைகளின் அட்டகாசங்களை
ஒழிக்கவும்  முடியும் என்பதற்கு
ஒரு நேரடிச் சாட்சியாய்....

ஆம் இனிநேர இருக்கும்
பெரும் மாறுதலுக்குக் கட்டியம் கூறும் விதமாய்

ஆம் இனி மாளிகைக்காரர்கள் மட்டுமின்றி
இனி மத்தியமரும்
முத்தெடுக்கும்  சாத்தியமென்பதை
நிரூபிக்கும் விதமாய்  

Tuesday, May 1, 2018

பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?

நம் பகைவர்கள் நம்மை வெல்ல
முன்புபோல்
தம் படைப்பலம் பெருக்குவதில்லை
முன்புபோல்
தம் ஒற்றர்களையும் நம்புவதில்லை

மாறாக நம்முள்
நன்கு பேசத் தெரிந்த சிலரைத்
தங்கள் துணையாக்கிக் கொள்கிறார்கள்
அவர்கள் மூலம் நம்மை எப்போதும்
பதட்டத்திலேயே வைத்திருக்கச் செய்கிறார்கள்

பதட்டத்தில் எப்போதும் இருக்கும் நாம்
இயல்பாக நம் சுயம் இழக்கிறோம்
அதன் காரணமாகவே நம்
கடமைகளையும் மறக்கிறோம்

எங்கோ சில கயவர்கள்
செய்யும் அட்டூழிங்களை அவர்கள்
ஜாதிக்குள்ளும் மதத்திற்குளும்  அடக்கி
நம்மை கொந்தளிக்கச் செய்கிறார்கள்

போராட்டப் போதையில் நம்மை
எப்போதும் இருக்கவைத்து
நேர்மறையான பல விஷயங்களை
நம்மை பார்க்காதே செய்துவிடுகிறார்கள்

உடனிருந்து கொல்லும் நோயாய்
நம்முடனிருந்து நம்மை
நாளும் வீழ்த்தும் இவர்களை
என்று அடையாளம் காணப்போகிறோம் ?

நாம், நம் குடும்பம்,நம் நாடு எனும்
நமக்கான விஷயங்களில்
கவனம் கொள்ளப்போகிறோம் ?
பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ? 

Tuesday, February 20, 2018

இந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
நல்ல மனிதர்களாய் இருந்தோம்

எம் நல்வாழ்வு  குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள்  உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

அதனால்
எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
அன்று உண்மையாய் இருந்தது

அதனாலேயே 
உ ங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்தும் இருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
துண்டு விரித்துக் காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

Thursday, February 8, 2018

தமிழிசையின் அபஸ்வரம் ( ? )

கத்தியினைக்  கொண்டு
பிறந்த நாள் கேக் வெட்டுவது
ஆங்கிலேயர் கலாச்சாரம்
அது நம்முடையதில்லை

தமிழக கலாச்சாரப்படி
கத்தி குத்துவதற்கு
அரிவாள் வெட்டுவதற்கு

அது தலை ஆயினும்
பிறந்த நாள் கேக் ஆயினும்..

மாறிச் செய்வது
நம் மரபல்ல

சந்தேகம் எனில்
பரம்பரைக் குறித்த நினைப்பிலேயே
நாளும் வாழும்
இயக்குநரைக் கேட்டிருக்கலாம்

இது அறியாது தமிழிசை அவர்கள்
அரிவாள் கொண்டு
பிறந்த நாள் கேக் வெட்டுதலை

அதுவும்
ஒரு முன்னணி ரவுடி வெட்டுவதை
ரவுடிகள் சூழ  வெட்டுதலை

தமிழக சட்டம் ஒழுங்கோடு
பிணைத்துப் பார்ப்பது
நிச்சயம் அபஸ்வரமே

அமைதிப்  பூங்காவான  தமிழகத்தின்
பண்பாட்டுக் காவலர்கள்  ( ? )நாங்கள்
இதை வன்மையாய்க் கண்டிக்கிறோம்

Tuesday, August 22, 2017

உங்கள் போதையைத் தெளிய வைத்து விடுகிறோம்

போதையில்  
குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து
வெளிச்சூட்டை ஆராய்பவர்கள்
நிச்சயம்
உண்மை நிலையறிய வாய்ப்பே இல்லை

பதவிச் சுகத்தில்
சுய நலமாய்ச் சிந்திப்போருக்கும்
மக்கள் மனமறிய
நிச்சயம்
துளியும் வாய்ப்பே இல்லை

தயாரிப்பாளரும்
நடிகரும் இயக்குநரும்
தம் படம் குறித்துப் கொள்ளும் பெருமிதம்

உண்மையா கற்பனையா என்பதை
படம் வெளியானால்
மிகச் சரியாக
ஒரு நடைபாதை வாசிக் கூடத்
தெளிவாய்ப் புரிய வைத்துவிடுவான்

யாருக்குச் சொந்தம்
யார் உண்மையானவர்கள் என்பதை
நீங்களே பேசி பேசி
ஏன் எங்களுக்குள்
கூடுதல் வெறுப்பையேற்றுகிறீர்கள்

தில் இருந்தால்
வெளியே வாருங்கள்
நாங்கள் மிக எளிதாய்
உங்களுக்குப் புரிய வைத்து விடுகிறோம்

உங்கள் போதையையும்
மிக எளிதாய்த்
தெளிய வைத்து விடுகிறோம்

Friday, August 4, 2017

.....போக்கு மா நிலம்

முன்பு ஒரு காலத்தில் மத்திய அரசில்
தமிழகத்திற்கென ஒரு கேபினெட்
அந்தஸ்துள்ள மந்திரி கூட
இல்லாத காலம் இருந்தது

அப்போது ஒரு இயக்கம் தமிழகத்திற்கு
கேபினெட் அந்தஸ்துள்ள மந்திரிகள்
பெறும் தகுதி இல்லையா என தமிழகம்
எங்கும்  சுவர்ப் பிரச்சாரம் செய்த ஞாபகம்
இப்போதும் இருக்கிறது

அதே போல இப்போது அடுத்துள்ள
யூனியன் பிரதேசத்திற்குக் கூடத் தனியாக
துணை நிலைய ஆளுனர் இருக்க
நம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தனியாக
ஆளுநர் இல்லாமல் கூடுதல் பொறுப்பிலேயே
இருப்பது .......

(அதுவும் அரசியல்  அநாகரிகங்கள்
மிக மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும்
மிக மிக அவசியமான இந்தச் சூழலில் )

இம்மாநிலம் ஒரு .....போக்கு
மாநிலமாக மத்திய அரசால் மதிக்கப்படுகிறதோ
என்கிற ஒரு மோசமான எண்ணத்தைத்
தோற்றுவிப்பதைத் தவிர்க்க இயலவில்லை

(கிராமங்களில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனை
இப்படிச் சொல்லித்தான் கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுவார்கள் )

எது எதற்கோ எப்படியெல்லாமோ
விளக்கம் சொல்கிற தமிழக பி.ஜெ.பி
முக்கியஸ்தர்கள் இதற்கும் நாம்
இரசிக்கும்படியாகவோ அல்லது
திகைக்கும்படியாகவோ (கேஸ் மானிய
ஒழிப்பிற்கு மேடம் சொன்னமாதிரி )
விளக்கம் சொல்வார்களா ?

அல்லது தலைப்பில் சொன்னது
ஒருவேளை சரிதான் எனும்படியாக
இது குறித்துத் தொடர்ந்து மௌனச் சம்மதம்
தெரிவிப்பார்களா ?

Tuesday, July 4, 2017

நாங்கள் திட்டம் போட்டு கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்

ரோடெல்லாம்
துருப்பிடித்த ஆணிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துருப்பிடித்த ஆணி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களைத்  திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்த்திடேயாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

நீ அவல்  கொண்டுவா
நான் உமி கொண்டுவருகிறேன்
ஊதி ஊதிச்  சாப்பிடுவோம்
எனும் சாமர்த்திய நண்பனைப்
பார்த்ததுண்டா ?

நீ சம்பாதிப்பதையெல்லாம்
வரியாகக் கட்டு
நாங்கள் திட்டம் போட்டு
கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்
என்கிற  அரசுகளுக்கும் இதற்கும்
என்னதான் வித்தியாசம்  ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
நமக்கும் அவர்களுக்கும் என்னதான்  வேறுபாடாம் 

Tuesday, June 20, 2017

எந்த அரசும் விசித்திர பூதங்களே...

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்று இருப்பின்
 அவைகள்  விசித்திர பூதங்கள் தானே

.குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தத்  தெரிந்த அவைகளுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரியாதிருக்கிறதெனில் 

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவைகளுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரியாதிருக்கிறதெனில் 

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லையெனில்

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவைகளுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூடத் துளியுமில்லையெனில்

எதிர்ப்பாளர்களை மிகச் சரியாகக்  கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய
ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 மூளையும் காதுகளும் அற்ற
இந்தக் கொடிய பூதங்கள்
நிச்சயம் விசித்திர பூதங்கள்  தானே

நாம் இப்படிப்   பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை
இதுவும் நிச்சயம் தானே 

Wednesday, June 7, 2017

கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )

கலைஞர் என்று சொன்னாலே அவர்
மேடப் பேச்சுத் திறனும்,சாணக்கியத்தனமும்
சினிமாவும் மொத்தத்தில் முத்தமிழும்
உடன் ஞாபகம் வருகிற அளவு
அவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக
பேசப்படவில்லை.அதனாலேயே என்னவோ
நடுத்தர மற்றும் அதற்கு மேல் நிலையில்
உள்ளவர்களைக் கவர்ந்த அளவு அவர்
பாமர மக்களைக் கவரவில்லை என்பதே
என் கருத்து

(இதற்கு நேரெதிரானவர் புரட்சித் தலைவர்
என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை )

அதற்காகவே எனக்குத்தெரிந்த ஒரு சிறு
தகவலைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்

என்னுடைய நண்பரின் மாமனார் திரைப்படத்
தயாரிப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய
நன்பர்களும் சேர்ந்து உமையாள் ப்ரொடக்ஸனஸ்
என்கிற பெயரில் மூன்று தமிழ்ப் படங்களைத்
தயாரித்திருக்கிறார்கள்.அது அவன் பித்தனா,
தங்கத் தம்பி, உலகம் இவ்வளவுதான் என ஞாபகம்

இதில்  அவன் பித்தனா என்கிற திரைப்படத்திற்கு
திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள்
இது அவர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில்
சிறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டது

தயாரிப்பாளார் என்கிற முறையில்
எனது நண்பரின் மாமனார் அவ்வப்போது
சிறைச்சாலைச் சென்று கலைஞர் அவர்களைச்
சந்தித்து வருவதுண்டு

அங்கு அப்போது சிறைகாவலாராய் இருந்த ஒருவர்
கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த
பற்றின் காரணமாக அவருக்குத் தேவையான
உதவிகளை மிகச் சிறப்பாகச்செய்து வருவாராம்.
அந்தச் சேவை அப்போதைய தனிமைச்சிறை
என்கிற நிலையில்  கலைஞருக்கு மனரீதியாக
அதிக உற்சாகம் தந்ததாகச் சொல்வாராம்.

இது நடந்து சில ஆண்டுகள்  கழிந்து
தேர்தல் வந்ததும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும்
பின் அண்ணா அவர்கள் மறைந்ததும்
கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற
சமயம்...

மரியாதை நிமித்தமாக என் நண்பரின் மாமனார்
கலைஞர் அவர்களைச் சந்திக்க,அந்தச் சந்திப்பில்
அந்தப் படத் தயாரிப்புச் சம்பந்தமான
நினைவுகளையும்சிறைச்சாலை நினைவுகளையும்
 பகிர்ந்து கொண்டகலைஞர் மறக்காது
அந்த சிறைக்காவலர் குறித்தும்அதிகம்
விசாரித்திருக்கிறார்.முடிந்தால் அவரைச்
சந்திக்கச் சொல்லும்படியாகவும்
தகவல்தெரிவித்தாராம்.

கலைஞரின் விருப்பமறிந்த நண்பரின் மாமனாரும்
உடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து
விவரம் சொல்லி கலைஞர் அவர்களைச்
சந்திக்கும்படியானஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்

இந்த நிலையில் இந்த விஷயங்களை அறிந்த
காவ்லரின் உறவினர், செல்வந்தர் ஒருவர்
அவருடைய மகனை மருத்துவக் கல்லூரியில்
சேர்ப்பதற்காக முயன்று கொண்டு இருந்திருக்கிறார்

அதன் காரணமாக முதலவரைச் சந்திக்கச்
செல்லும் காவலரிடம்,தன் மகனுக்கு
உறவினர் என்கிற முறையில் மருத்துவக்
கல்லூரியில் ஏதாவது சிறப்புஒதுக்கீட்டினபடி
சேர்க்க ஆவன செய்யக்
கேட்டுக் கொண்டிருக்கிறார்

வெறுமனே சந்தித்துத் திரும்புகையில்
இந்தக் கோரிக்கையையும் வைத்துப் பார்க்கலாமே
என்கிற எண்ணத்தில் உறவினரின்
வேண்டுகோளையும் ஒரு மனுவாகக் கொண்டு
கலைஞர் அவர்களைச் சந்தித்திருக்கிறார்

கலைஞர் அவர் வந்ததும் மிக உற்சாகமாக
எழுந்து வரவேற்று உடன் இருந்தவர்களிடம்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி,அரசின் கோபத்திற்கும்
அஞ்சாது அவர் செய்த பணிவிடைகளை
நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார்

பின் குடும்ப விஷயம் அனைத்தையும் விசாரித்து
ஏதும் உதவி தேவை எனில் தவறாது
தன்னைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்த
உடன் காவலர் தான் கொண்டு வந்திருந்த
கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கிறார்

அதை பரிசீலித்த கலைஞர் அவர்கள்
அவர்கள் எந்த வகையில் உறவு,அவருக்கு
உதவுவதால் அவருக்கு என்ன லாபம் என
மனம் திறந்து விசாரித்து, அன்றைய நிலவரப்படி
மருத்துவக் கல்லூரி இருக்கையின் மதிப்பு
குறித்துச் சொல்லி அந்த மதிப்பை  இழக்காமல்
ஆவன செய்து கொண்டுப்   பின் தனக்கு தகவல்
தெரிவிக்கும்படியும் பின் விதிகளுக்கு
உட்பட்டு சிறப்பு விதிகளின் கீழ்
ஆவன செய்வதாகக் கூறியதோடு
அப்படியே செய்தும் கொடுத்தாராம்

இதை முழுவதும் மிகச் சந்தோஷமாக
விவரித்த நண்பரின் மாமனார்,ஞாபக சக்தியில்
மட்டுமல்ல,தனக்குப் பொதுவாழ்வில் உதவிய
ஒவ்வொருவருக்கும் தேடித் தேடி உதவி செய்த
கலைஞரின் மாண்பை,குணச் சிறப்பை
இன்னும் சில உதாரணங்களுடன் விளக்கினார்.

எதனாலோ கலைஞர் அவர்களின்
சாணக்கியத்தனம், முத்தமிழ் பாண்டித்தியம்
மேடைப்பேச்சு முதலான பொதுச் சிறப்புக்கள்
குறித்தே அதிகம் பேசப்பட்டு
அவரது தனிப்பட்ட குண நலன்கள்
மிக அதிகமாக பகிரப்படாதது கூட
மாறாக எதிர்மறையான தனிக்குணங்களே
அதிகமாகப்  பகிரப்பட்டதாலேயே கூட
பின்னாளில் தனிப்பட்டகுண நலன்களால்
பெரும்பான்மையோரைக் கவர்ந்த
புரட்சித்தலைவருக்கு ஈடு கொடுக்க
முடியவைல்லையோ என்கிற எண்ணம் கூட
எனக்கு உண்டு

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Sunday, June 4, 2017

கலைஞரும் காவேரியும் ( 2 )

தலைப்பைப் படித்ததும் காவேரி நீர்க்குறித்தும்
அது தொடர்பான கலைஞரின் நிலைப்பாடுகள்
குறித்தும் எதுவோ எழுதப் போகிறேன்
என நினைத்திருப்பீர்கள்.
இந்தப் பதிவு அது குறித்தல்ல

எங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த
காவேரி மணியன் குறித்தும் அவர் தொடர்பாக
கலைஞரின் சாமர்த்திய பேச்சுக் குறித்தும்.

1971 இல் எங்கள் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினராக
இருந்தவர் காவேரி மணியம் அவர்கள்.
இவர் வழக்கறிஞர்.எங்கள் ஊர்க்காரர்.
மதுரை நகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர்
சிறந்தப் பண்பாளர்.

இவரின் செயல்பாடுகள் சட்டமன்ற உறுப்பினராக
இருக்கையில் எப்படி இருந்தது என்பதற்கு
ஒரு உதாரணம்வேண்டுமானால் சொல்லலாம்

இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கையில்தான்
மிஸா சட்டம் அமல்படுத்தப்பட்டது

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு. க. மீது
 அதிகாரிகள் மத்தியிலும் மக்கள்
மத்தியிலும் ஒரு கசப்புணர்வு இருந்தது நிஜம்

பல இடங்களில் தி. மு. க கட்சியின் பொறுப்பாளர்கள்
மக்கள் பிரதிநிதிகள் எல்லாம்
கைது செய்யப்பட்டபோது
மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

சிலர் மிக மோசமாக தாக்கவும்பட்டார்கள் என்பதும்
அனைவரும் அறிந்த விஷயம்

அந்தக் கைது செய்யப் படவேண்டிய நள்ளிரவில்
இவரைக் கைது செய்ய வீடு வந்த மாவட்டப்
போலீஸ் அதிகாரி இவரிடம் கைது வாரண்டைக்
காண்பித்து "உங்களை உடன் கைது செய்து
எங்கள் பொறுப்பில் மறு உத்தரவும் வரும் வரை
வைத்திருக்க உத்திரவு.மாநிலத்தில் கட்சியில்
அனைத்து உயர் பொறுப்பில் இருந்தவர்களியெல்லாம்
கைது செய்து காவல்  நிலையத்தில் வைத்து
இருக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப்பட்டதாக
உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி விடுகிறேன்
தாங்கள் வீட்டிலேயே மறு உத்தரவும் வரும்வரை
வெளியில் செல்லாமல் இருக்கவும் " என கேட்டுக்
கொண்டு சென்று பின் அழைத்துச் சென்றது
என்பது அப்போது மிகப் பெரிய விஷயமாகப்பட்டது

காரணம் அப்போது காவல் செய்யக் 
கிடைத்த வாய்ப்பை தாங்கள் கொண்டப் 
பகைமையைத் தீர்த்துக் கொள்ள
பல காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்திக்
கொண்டிருந்த வேலையில்,இவ்வளவு
மரியாதையாக நடத்தப்பட்டவர் நிச்சயம்
இவராகத்தான் இருக்கச் சாத்தியம்.காரணம்
இவர் பதவியில் இருக்கையில்
அவரின் அணுகுமுறைஅத்தனை
சாத்வீகமாக இருக்கும்

மேலும் மதுரையில் மிஸாவில்
கைது செய்யப்பட்டவர்கள்எல்லாம்
மருத்துவக் காரணம் காட்டி,அல்லது
மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவர
இவர் மட்டும் சட்ட ரீதியாக விடுதலை
செய்யும் மட்டும்சிறையிலேயே காலம் கழித்தவர்

இத்தனைச் சிறப்புக்களையும் விரிவாகக் சொல்லிச்
சொல்லிச் சென்றால்தான் அடுத்துச் சொல்ல வருகிற
விஷயம் சுவாரஸ்யப்படும்

இந்தச் சூழலில் தி.மு.க சார்பாக
ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்யப்படவேண்டிய
நிலையில் ,அதில் ஒருவர் மதுரையைச் சார்ந்த
புறநகர் மாவட்டச் செயலாளரான அக்கினி ராசு
அவர்கள் அல்லது காவேரிமணியன்
அவர்கள் ஆகிய இருவரில் யாருக்கேனும்
ஒருவருக்கு என இருக்க

முடிவாக  அந்தப் பதவிக்கு அக்கினிராசு
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
இந்த விஷயம் காவேரிமனியம் அவர்கள் மீது
அபிமானம் கொண்டவர்கள் அனைவருக்கும்
கொஞ்சம் மனம் வருத்தம் தந்த
நிகழ்வாக அமைந்தது

இந்தச் சூழலில் காவேரிமணியம் வீட்டு
இல்ல விழா ஒன்றில் கலைஞ்ர் அவர்கள்
தலைமையேற்று நடத்திக் கொடுக்க
வந்திருந்தபோது

அந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியஸ்தர்கள்
சிலர் காவேரிமணியம் அவர்கள் மிகச் சரியாக
கௌரவிக்கப்படவில்லை என்பதை மிக
நாசூக்காகப் பேசிவைக்க,அதற்கு பதில்
சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற
சூழல் அந்தக் கூட்டத்தில் இருந்தது
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும்
ஒரு எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில்
கலைஞர் அவர்கள் தனது சிறப்புரையில்
இப்படிப் பேசினார்

"சிலர் அக்கினிக்கு முக்கியம் தரப்பட்டது
குறித்தும் காவேரிக்கு முக்கியத்துவம் தராதது
குறித்தும் தங்கள் ஆதங்கத்தினைப் பதிவு
செய்தார்கள்

இதுகுறித்து இங்கு விரிவாகப் பேசமுடியாது
என்றாலும் கூட ஒரு விஷயத்தை நான் இங்குக்
குறிப்பிடமுடியும்.

அது அக்கினியின் ஜுவாலை எந்தச் சூழலிலும்
மேல் நோக்கியதாகவும்காவேரி நீரின் பயணம்
கீழ் நோக்கியதாகவே இருக்கும்

அதன் பொருட்டே ஒன்று சிறப்புப்பெற்றது
என நாசூக்காக சொல்லிப் போனார்

மேல் நோக்கிய பயணம் என்னவென்பது
கலைஞருக்கும் சம்பந்தப்பட்ட இருவருக்கும்
அவர்களுடன் நெருக்கமாக இருந்த சிலருக்கும்
மட்டுமே இன்று வரை தெரிந்த ராஜ இரகசியம்

ஆனாலும் இதற்கான பதிலை எதிர்பார்த்து
ஆவலுடன் இருந்த கூட்டத்தினருக்கு
ஒரு தவிர்க்க முடியாத, சொல்லமுடியாத
ஒரு விஷயத்தைச் சொன்னதுபோலவும்
ஏதோ காரணம் இருப்பது போல் ,ஒரு
இலக்கியத் தரமாக ஒரு சூசகமாக
ஒருவிஷயத்தை சொன்ன ராஜதந்திரத்தை
அந்தக் கூட்டம் இரசித்தது

அதில் நானும் இருந்து மிகவும்இரசித்தேன்

அந்த மேல் நோக்கிப் பாய்ந்த இரகசியம்
என்ன வென்று தெரிந்தவர்களில் நானும்
ஒருவனாக இருந்ததால் கொஞ்சம்
கூடுதலாகவே...

Thursday, May 25, 2017

வால்மார்ட்டும் இரஜினியும்




Image result for walmart shopfront photo



இலாப நோக்கில்
கூடுதல் விலையில்
தரம் குறைந்த
சாமான்களத் தரும்
அரசியல்  வியாபாரிகளே

உங்கள் மீது
வாடிக்கையாளர்களாகிய
நாங்கள் கொண்ட கோபம்
வால்மார்ட்டுக்கும்  தெரிந்துவிட்டது

அனுபவமிருந்து
முதல் இல்லாதவர்களை
விலைக்கு வாங்கியேனும்

எப்போது வேண்டுமானாலும்
கடையைத் துவங்கும்
சாதுர்யமும் வால்மார்டிடம் இருக்கிறது

ஊழல்  வியாபாரிகளே

கிடைத்த சந்தை வாய்ப்புகளை
அபரிதமான பேராசையால்
நீங்களே அழித்து ஒழித்துவிட்டு
வால்மார்ட் வருவது குறித்து
கூச்சலிடுவது
எந்த விதத்தில் நியாயம் ?

வாடிக்கையாளர்களாகிய எங்களின்
இப்போதையத் தேவை
எப்படியாவது உங்கள்
மோசமான வியாபாரம்
நாசமாகவேண்டும் என்பதுதான்

உங்கள்
போலிச் சரக்குகளால் உண்டான
ஒவ்வாமை நோயின் பாதிப்பை
உடனடியாக குறைக்க வேண்டும்
படிப்படியாய்
அழிக்க வேண்டும் என்பதுதான்

ஆம்
சொரிந்து சுகம் பெற
எங்களுக்கு ஒரு மாற்று
இன்றைய சூழலில்
அவசியம் தேவை
அவசரமாய்த் தேவை
வேறு வழி தெரியவில்லை

வால்மார்ட்
சேவை  அமைப்பல்ல
அதுவும் இலாப நோக்கமுடையதே
என்பது  எங்களுக்கும் தெரியும்

அப்படிப்பட்டதாயினும்  கூட...
உங்கள் லொள்ளுக்கு ...
அது வந்தால் கூட

ஆம் அது
எப்படிப்பட்டதாயினும்   கூட
அது வந்தால் கூட
தேவலாம் எனத்தான் படுகிறது   எங்களுக்கு

Wednesday, April 19, 2017

யார் யார் காரணமோ அவர்கள் வாழ்க

யார் யார் காரணமோ
அவர்கள் வாழ்க

முந்தைய ராஜாராணிக்கதைகளில்
மன்னனின்
சிறு பலவீனத்தைப் பயன்படுத்தி
நாட்டை நாசகாடாக்கும்
சதிகாரர்கள் போல்

புரட்சித் தலைவியின்
ஏதோ ஒரு
பலவீனப்படுத்தைப் பயன்படுத்தி
தமிழகத்தையே சூறையாடிய
ஒரு சதிகாரக் குடும்பத்தை

சட்டமும் நீதியும் தண்டித்தும்
அடங்காது விஷ நாகமாய்
வேறு உருவில் சீறி
மீண்டும் தமிழகத்தை கொள்ளையிடத் துணிந்த
ஒரு மனச்சாட்சி அற்றக் குடும்பத்தை

உல்கின் மூத்தக் குடிமக்கள்
எனப் பெருமிதம்கொண்டத் தமிழினத்தை
உலகின் "பெரும் குடி "மக்களாக்கி
தன் ஆலைச் சரக்கு விற்பனைக் களமாக்கிய
ஒரு சுய நலக்கூட்டக் கும்பலை

அதிகார வட்டத்திலிருந்து
விலக அல்லது வெளியேற்ற
யார் காரணமோ
யார் யாரெல்லாம் காரணமோ
அவர்கள் எத்தன்மையுடையவராயினும்
அவர்கள் வாழ்க

Tuesday, April 18, 2017

தண்ணிக்கண்டத்தில் தமிழ் நாடு.....

தமிழ் நாட்டுக்கும்
பக்கத்து மாநிலம்
ரெண்டுக்கும்
தண்ணி தான் பிரச்சனை

இப்போ
தமிழ் நாடு முழுசுக்கும்
குடி தண்ணியும் பிரச்சனை

மூடின
தண்ணிக் கடையைத்
திறக்கறதுலயும்
நாளெல்லாம் பிரச்சனை

கூவத்தூர்ல
"அதுல " கிடந்து எடுத்த
முடிவுலதான்
அரசாட்சிக்கு
பெரும் பிரச்சனை

இப்ப எதுக்கு
இவங்க
தண்ணில  மிதந்து
முடிவெடுக்கப் போறாங்க ?

ஒருவேளை
அவங்களை காப்பாத்திக்கறதுக்காக
வழக்கம்போல
நம்க்குத் "தண்ணிகாட்ட " இருக்குமோ ?

ஆண்டவா
தமிழ் நாட்டை
தண்ணிக் கண்டத்துல இருந்து
காப்பாத்துப்பா

உனக்கு
ஆயிரம் ஆயிரம்
தண்ணிக் குடமெடுத்து
அபிஷேகம் செய்யுறோம்

Tuesday, April 11, 2017

வானம் பார்த்து மண்ணில் நடக்கும் கற்பனை மனோபாவம்...

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகள் எல்லாம்

இப்போது

கோடாரியினைக் கொண்டு
முடிக்கவேண்டி இருப்பது எதனால் ?

சாக்கடை அடைப்பென்றால்
சட்டசபையிலும்

பாதாள சாக்கடை அடைப்பெனில்
பாராளுமன்றத்திலும்

நம் தெரு மதுக்கடை மூடவேண்டுமெனில்
உச்ச நீதி மன்றத்திலும்

முறையிட்டு முடிக்கும்படி
நம் தலையெழுத்து ஆனது ஏன் ?

வேரில்
மண்ணில்
நீரூற்றி
மரம் வளர்க்க நினையாது

இலையில்
கிளையில்
நீரூற்றி
வளர்க்க நினைப்பது போல்

நம்மில்
நம் பகுதியில்
நம் தலைவனைத்
நாமே தேட முயலாது

தலைவர் குடும்பம் மூலம்
பிரபலஸ்தர்களின்  மூலம்
 நம் தலைவர்களைத்  தேடுவதாலா ?

நினைவில் எப்போதும்
நம் பகுதிக்குறித்த
சிந்தனையது
சிறிதும் இல்லாது

ஐ. நா சபைகுறித்தும்
அமெரிக்க ஜனாதிபதி குறித்தும்
அதிகம் பேசி
அறிவாளிபோல் அலட்டி கொள்வதாலா ?

மொத்தத்தில்
அண்ணா சொன்னது போல்

"கூரையேறி
கோழி பிடிக்க இயலாதவன்
வானமேறி
வைகுண்டம் ஏக நினைப்பதுபோல்

வானம் பார்த்து
மண்ணில் நடக்கும்
கற்பனை மனோபாவம்
நம்முள் வளர்ந்துத் தொலைத்ததாலா ?

முன்புபோல் அல்லாது
இப்போதெல்லாம்

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகளை  எல்லாம்

ஏன்

கோடாரியினைக் கொண்டு
வெட்டித்தொலைக்க வேண்டி இருக்கிறது  ?


Monday, April 10, 2017

தேர்தல் ஆணையர் ஐயா

தப்புப் பன்னீட்டீ ங்களே
ஆணையர்  ஐயா
தப்புப் பன்னிட்டீங்களே

தப்புக் கணக்குக்கும்
கணக்குத் தப்புக்கும்
வித்தியாசம் தெரியாம
தப்புப்பன்னிட்டீங்களே

எங்கள் தொப்பி ஐயா
தேர்தல் செலவுக்குப் பணமில்லாம
கஷ்டப்படரானுன்னு

தொகுதி மக்கள்
ஆளுக்கு நாலாயிரமாப் போட்டு
மந்திரி மூலமா கொடுத்தப் பணமய்யா

வரவை செலவா
செலவை வரவா
தப்பா எழுதினதாலே
உங்களுக்குத்
தப்பாத் தெரியுதையா

இது
கணக்குத் தப்பையா
தப்புக் கணக்கில்லே ஐயா

இப்ப
டாக்டர் ஐயா
குடக் கூலிக்கு கொடுத்தது
ரேகைக்கு இல்லேன்னு
சொன்னாருப் பாத்தீங்களா

அப்படி எங்க
வக்கீல் ஐயாவும்
கணக்குத் தப்பைப்  பத்தி
மிகச் சரியா
நாளைக்குச் சொல்வாரையா

ஒரு கடைக் கோடி
தொண்டன் எனக்குத்
தெரிஞ்சது கூடத் தெரியாம

அதுக்குள்ள
அவசரப்பட்டு
தப்புப் பன்னிட்டீங்களே

தப்புப் பண்ணிட்டீங்களே
ஆணையர் ஐயா
தப்புப் பன்னிட்டீங்களே 

Thursday, April 6, 2017

அவ நம்பிக்கை கொள்ளத் துவங்குகிறது நம்பிக்கை...

எது இருக்கிறது
எப்படி இருக்கிறது
என்பதைவிட
"எதில் "இருக்கிறது என்பதிலும்

யார் இருக்கிறார்
எப்படி இருக்கிறார்
என்பதைவிட
"யாருடன்" இருக்கிறார் என்பதிலும்

எதைச் சொல்கிறான்
எப்படிச் சொல்கிறான்
என்பதைவிட
"எவர்" சொல்கிறார் என்பதிலும்

ஏன் தருகிறான்
எதற்குத் தருகிறான்
என்பதைவிட
"எவ்வளவு" தருகிறான் என்பதிலும்

அதிகக் கவனம்  கொண்டவர்கள்தான்
முடிவைத் தீர்மானிப்பவர்களாக இருக்க
அனைத்துத் துறைகளிலும் நிலைகளிலும் 
கூடுதல் எண்ணிக்கையில் இருக்க

அவ நம்பிக்கை
கொள்ளத் துவங்குகிறது
தர்மத்தை நம்பிய நம்பிக்கை

மெல்ல மெல்ல
அதர்மத்திற்கு
தலைவணங்கத் தயாராகிறது
நம்பிக்கையை இழந்த  தர்மமும்...

Wednesday, March 29, 2017

திருமங்கலமும்..ஆர்.கே நகரும்

பிரியாணிக்குச் சரியாகி
துட்டுக்கு ஓட்டு என்றாக்கி
தமிழக தேர்தல் அகராதியில்
"திருமங்கலம் ஃபார்முலா"என ஓர்
அமங்கலச் சொல்லை
அரங்கேற்றிய அசிங்கம் இன்னும்
நாறிக்கொண்டே இருக்கிறது

எத்தகைய கொடிய சாபமெனினும்
விமோட்சனம் என ஒன்று
நிச்சயம் உண்டு

எத்தகைய கொடிய நோயாயினும்
அதனைத் தீர்க்க மருந்தொன்று
நிச்சயம் உண்டு

அதற்கொரு காலச் சூழலும்
கால அவகாசமும்
நிச்சயம் வேண்டும்

அது இப்போது
ஆர்.கே நகருக்கு வாய்த்திருக்கிறது

"செய்வீர்களா..செய்வீர்களா "
என புரட்சித் தலைவி
கேட்ட கேள்விக்கு நல்ல பதிலாக

"வைத்துச் செய்ய ஒரு
நல்ல வாய்ப்பை
தேர்தல் ஆர்.கே நகர மக்களுக்கு
அழகாய்த் தந்திருக்கிறது

ஆர். கே நகர்
அரசியல் முதிர்ச்சியில்
டி.கே என்றாகுமா ?

ஆர்.கே நகர்
தரும் தீர்ப்பினில் தமிழகம்
ஓ.கே என்றாகுமா ?

திருமங்கல்ம் ஃபார்முலா எனும்
ஒரு அவச் சொல்லுக்கு
மாற்றுச் சொல்லாக

ஆர்.கே நகர்ஃபார்முலா எனும்
ஒரு மங்கலச் சொல் ஒன்று
இனிதே அரங்கேறுமா ?

கேள்விகளுக்கு
நல்ல பதில் வேண்டி

ஆர்வமுடனும்
ஆசையுடனும்
உங்களைப்போலவே
நானும்.....

Thursday, March 9, 2017

இளைஞர்களே நாமொரு புதிய பாதையை வகுப்போமா ?...

கொள்ளையர்கள்
கொள்ளையடித்த பணத்தோடு
இன்னும் கொள்ளையடிக்க
அதிகாரம் கேட்டு
வரும் நாள் முடிவாகிவிட்டது

என்ன செய்யப்போகிறோம் ?

சொல்லாத சொல்லுக்கு
மட்டுமல்ல
விற்பனைக்கல்லாத பொருளுக்கும்
நிச்சயம் விலையில்லை

இனியும் நம் தலையில்
நாமே மண்ணை அள்ளிப் போடாதிருப்போமா ?

ஒவ்வொர் வீட்டு வாசலிலும்
"நாங்கள் விற்பனைப் பண்டமல்ல
எங்கள் வாக்கும்
விற்பனைக்கில்லை" எனும்
வாக்கியத்தை
அச்சிட்டு வைப்போமா ?

திருமங்கலம் ஃபார்முலாவுக்கு
நேர் எதிராய்
ஆர் .கே நகர் ஃபார்முலாவை உருவாக்கி

தமிழகம் கொண்டக்
கறையினைத் துடைப்போமா ?

இளைஞர்களே

நாமொரு புதிய
பாதையை  வகுப்போமா  ?