Wednesday, June 7, 2017

கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )

கலைஞர் என்று சொன்னாலே அவர்
மேடப் பேச்சுத் திறனும்,சாணக்கியத்தனமும்
சினிமாவும் மொத்தத்தில் முத்தமிழும்
உடன் ஞாபகம் வருகிற அளவு
அவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக
பேசப்படவில்லை.அதனாலேயே என்னவோ
நடுத்தர மற்றும் அதற்கு மேல் நிலையில்
உள்ளவர்களைக் கவர்ந்த அளவு அவர்
பாமர மக்களைக் கவரவில்லை என்பதே
என் கருத்து

(இதற்கு நேரெதிரானவர் புரட்சித் தலைவர்
என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை )

அதற்காகவே எனக்குத்தெரிந்த ஒரு சிறு
தகவலைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்

என்னுடைய நண்பரின் மாமனார் திரைப்படத்
தயாரிப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய
நன்பர்களும் சேர்ந்து உமையாள் ப்ரொடக்ஸனஸ்
என்கிற பெயரில் மூன்று தமிழ்ப் படங்களைத்
தயாரித்திருக்கிறார்கள்.அது அவன் பித்தனா,
தங்கத் தம்பி, உலகம் இவ்வளவுதான் என ஞாபகம்

இதில்  அவன் பித்தனா என்கிற திரைப்படத்திற்கு
திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள்
இது அவர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில்
சிறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டது

தயாரிப்பாளார் என்கிற முறையில்
எனது நண்பரின் மாமனார் அவ்வப்போது
சிறைச்சாலைச் சென்று கலைஞர் அவர்களைச்
சந்தித்து வருவதுண்டு

அங்கு அப்போது சிறைகாவலாராய் இருந்த ஒருவர்
கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த
பற்றின் காரணமாக அவருக்குத் தேவையான
உதவிகளை மிகச் சிறப்பாகச்செய்து வருவாராம்.
அந்தச் சேவை அப்போதைய தனிமைச்சிறை
என்கிற நிலையில்  கலைஞருக்கு மனரீதியாக
அதிக உற்சாகம் தந்ததாகச் சொல்வாராம்.

இது நடந்து சில ஆண்டுகள்  கழிந்து
தேர்தல் வந்ததும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும்
பின் அண்ணா அவர்கள் மறைந்ததும்
கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற
சமயம்...

மரியாதை நிமித்தமாக என் நண்பரின் மாமனார்
கலைஞர் அவர்களைச் சந்திக்க,அந்தச் சந்திப்பில்
அந்தப் படத் தயாரிப்புச் சம்பந்தமான
நினைவுகளையும்சிறைச்சாலை நினைவுகளையும்
 பகிர்ந்து கொண்டகலைஞர் மறக்காது
அந்த சிறைக்காவலர் குறித்தும்அதிகம்
விசாரித்திருக்கிறார்.முடிந்தால் அவரைச்
சந்திக்கச் சொல்லும்படியாகவும்
தகவல்தெரிவித்தாராம்.

கலைஞரின் விருப்பமறிந்த நண்பரின் மாமனாரும்
உடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து
விவரம் சொல்லி கலைஞர் அவர்களைச்
சந்திக்கும்படியானஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்

இந்த நிலையில் இந்த விஷயங்களை அறிந்த
காவ்லரின் உறவினர், செல்வந்தர் ஒருவர்
அவருடைய மகனை மருத்துவக் கல்லூரியில்
சேர்ப்பதற்காக முயன்று கொண்டு இருந்திருக்கிறார்

அதன் காரணமாக முதலவரைச் சந்திக்கச்
செல்லும் காவலரிடம்,தன் மகனுக்கு
உறவினர் என்கிற முறையில் மருத்துவக்
கல்லூரியில் ஏதாவது சிறப்புஒதுக்கீட்டினபடி
சேர்க்க ஆவன செய்யக்
கேட்டுக் கொண்டிருக்கிறார்

வெறுமனே சந்தித்துத் திரும்புகையில்
இந்தக் கோரிக்கையையும் வைத்துப் பார்க்கலாமே
என்கிற எண்ணத்தில் உறவினரின்
வேண்டுகோளையும் ஒரு மனுவாகக் கொண்டு
கலைஞர் அவர்களைச் சந்தித்திருக்கிறார்

கலைஞர் அவர் வந்ததும் மிக உற்சாகமாக
எழுந்து வரவேற்று உடன் இருந்தவர்களிடம்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி,அரசின் கோபத்திற்கும்
அஞ்சாது அவர் செய்த பணிவிடைகளை
நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார்

பின் குடும்ப விஷயம் அனைத்தையும் விசாரித்து
ஏதும் உதவி தேவை எனில் தவறாது
தன்னைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்த
உடன் காவலர் தான் கொண்டு வந்திருந்த
கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கிறார்

அதை பரிசீலித்த கலைஞர் அவர்கள்
அவர்கள் எந்த வகையில் உறவு,அவருக்கு
உதவுவதால் அவருக்கு என்ன லாபம் என
மனம் திறந்து விசாரித்து, அன்றைய நிலவரப்படி
மருத்துவக் கல்லூரி இருக்கையின் மதிப்பு
குறித்துச் சொல்லி அந்த மதிப்பை  இழக்காமல்
ஆவன செய்து கொண்டுப்   பின் தனக்கு தகவல்
தெரிவிக்கும்படியும் பின் விதிகளுக்கு
உட்பட்டு சிறப்பு விதிகளின் கீழ்
ஆவன செய்வதாகக் கூறியதோடு
அப்படியே செய்தும் கொடுத்தாராம்

இதை முழுவதும் மிகச் சந்தோஷமாக
விவரித்த நண்பரின் மாமனார்,ஞாபக சக்தியில்
மட்டுமல்ல,தனக்குப் பொதுவாழ்வில் உதவிய
ஒவ்வொருவருக்கும் தேடித் தேடி உதவி செய்த
கலைஞரின் மாண்பை,குணச் சிறப்பை
இன்னும் சில உதாரணங்களுடன் விளக்கினார்.

எதனாலோ கலைஞர் அவர்களின்
சாணக்கியத்தனம், முத்தமிழ் பாண்டித்தியம்
மேடைப்பேச்சு முதலான பொதுச் சிறப்புக்கள்
குறித்தே அதிகம் பேசப்பட்டு
அவரது தனிப்பட்ட குண நலன்கள்
மிக அதிகமாக பகிரப்படாதது கூட
மாறாக எதிர்மறையான தனிக்குணங்களே
அதிகமாகப்  பகிரப்பட்டதாலேயே கூட
பின்னாளில் தனிப்பட்டகுண நலன்களால்
பெரும்பான்மையோரைக் கவர்ந்த
புரட்சித்தலைவருக்கு ஈடு கொடுக்க
முடியவைல்லையோ என்கிற எண்ணம் கூட
எனக்கு உண்டு

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

12 comments:

Rajeevan Ramalingam said...

உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். எம்ஜிஆர் அளவுக்கு கலைஞரின் தனிச்சிறப்புக்கள் பெருமளவு பேசப்படவில்லைத்தான். ஆனால் அவரின் தமிழ் அவரின் புகழை என்றும் காக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பின்னாளில் தனிப்பட்டகுண நலன்களால்
பெரும்பான்மையோரைக் கவர்ந்த எம்.ஜி.ஆர் க்கு
மக்களிடம் அன்றும்.. இன்றும்.. என்றும் உள்ள மகத்தான செல்வாக்கு புரியாமல், அவரை தி.மு.க. கட்சியிலிருந்து வெளியேற்றியது எப்படி சாணக்கியத்தனமாகும்?

எம்.ஜி.ஆரின் மாபெரும் மகத்தான அரசியல் வளர்ச்சிக்கும், எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை கலைஞரின் மாபெரும் வீழ்ச்சிக்கும் அதுவே வித்திட்டு விட்டது என்பதுதானே உண்மை.

Anonymous said...

தனக்கு உதவியவருக்கு உதவி செய்த
கலைஞர்!
எந்த எதிர்பார்ப்பும் இன்றி தேடித் தேடி உதவி செய்தபுரட்சித்தலைவருக்கு ஈடு கொடுக்க
முடியவில்லை

Yaathoramani.blogspot.com said...

Rajeevan Ramalingam //

கலைஞரின் சிறப்புகளில் தெரிந்த
இன்னொரு பதிவை எழுதிவிட்டு
பின் சில விஷயங்களை எழுதலாம்
என நினைத்துள்ளேன்
தங்கள் உடன் வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

நீங்கள் சொல்வது மிகச் சரி
அவர் எடுத்த சில முடிவுகளில்
புரட்சித் தலைவரின் செல்வாக்கை
குறைவாக மதிப்பிட்டதும் ஒன்றாகும்
அது குறித்து விரிவாக ஒரு பதிவு
எழுத உத்தேசம்

மனம் திறந்த அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Anonymous //

நீங்கள் சொல்வது சரியே

ஆயினும் இப்போது அரசியல் தலைவர்கள்
ஊழலுக்குக் கைதாகி
சிறை செல்வது போல் செல்லவில்லை
மக்களுக்கான மகத்தான போராட்டங்களுக்காக
சிறை சென்றதையும்,

அரசுக்கு எதிராக
பாதிப்பு குறித்து பயப்படாது ஒரு
கீழ் நிலைப் பணியாளர் உதவியது குறித்தும்
அது தனிமைச் சிறை என்பதையும்
கருத்தில் கொள்ளலாம்

திண்டுக்கல் தனபாலன் said...

விளம்பரம் இல்லாமல் "தன் மனதிருப்தியே போதும்" என்று நினைத்திருப்பார்...

Unknown said...

mgr படிப்பறிவு இல்லாத பாமர மக்களைத் திட்டமிட்டு கவர்ந்தார் என்பதே சரி :)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. மேலும் விஷயங்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai said...

எம்ஜிஆர் பாமரனை கவர்ந்தார்,
கருணாநிதி பட்டதாரியை கவர்ந்தார்
இதில் யார் திறமைசாலி ?
த.ம.5

ராஜி said...

தமிழ் புலமை அவரின் குணநலன்களை ஆரம்பத்தில் புறந்தள்ளியது. பின்பு, அவரின் குடும்பத்தாரின் ஆதிக்கம் கலைஞரை பற்றி நாம் உணர முடியாமலே போயிற்று

பிலஹரி:) ) அதிரா said...

கலைஞரின் நல்ல பக்கம் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன்.. அவர் ஒருவேளை அரசியலுக்குள் வந்திருக்காது விட்டிருந்தால். அதிகம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கலாமோ..

Post a Comment