Showing posts with label சிறப்புக் கவிதை. Show all posts
Showing posts with label சிறப்புக் கவிதை. Show all posts

Saturday, March 21, 2020

வள்ளுவன் சொன்ன ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)

Monday, September 11, 2017

நல்லதோர் வீணையாய்....

"நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Sunday, April 30, 2017

வளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும் மேதினத்தின் நோக்கங்கள் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லா"மே "
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லா"மே "

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லா"மே "
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லா"மே "

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லா"மே "
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லா" மே "

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லா"மே "
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லா"மே "

உணரட்டும்  இணையட்டும் வளரட்டும்
உழைப்பவருக்கு உழைக்கின்ற எல்லா "மே "
வளரட்டும் நிலைக்கட்டும்   உலகெங்கும்
"மே "தினத்தின் நோக்கங்கள் எல்லா"மே "


(அனைவருக்கும்  மே  தின  நல்வாழ்த்துக்கள் )

Wednesday, March 22, 2017

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன வாழ்க்கை ரகசியம்...

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
 வாழ்க்கை ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Monday, March 6, 2017

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும் எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே

இராகம் என்பது ஆணினமே
தாளம் என்பது பெண்இனமே
இராகமும் தாளமும் இணைந்திருந்தால்
வாழ்வில் என்றும் இன்னிசையே

மேகம் என்பது ஆணினமே
குளிந்தக் காற்றுப் பெண்இனமே
மேகமும் காற்றும் இதையுணர்ந்தால்-
வாழ்வில் என்றும் சுகமழையே

வலிமை என்பதுஆணினமே
மென்மை என்பது பெண்இனமே
வலிமையும் மென்மையும் ஒருங்கிணைந்தால்
வாழ்வில் என்றும் சுகலயமே

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும்
எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே
திண்ணமாய் மனமிதை ஏற்றாலே
சொர்க்கமாய் மாறும் இவ்வுலகே

Friday, January 20, 2017

காளைகளுக்குக் கோவில் கட்டுவோம்

வாடிவாசலில்
பொங்கலிடுவோம்
ஜல்லிக்கட்டு
வாடிவாசலில்
பொங்கலிடுவோம்

அங்குப் பற்றிய
அக்கினிக் குஞ்சே
தமிழர்கள் நெஞ்சினில்
ஊழிக்கால நெருப்பாய்
உக்கிரம் கொண்டதால்...

திமிலுக்குப்
பூச்சூட்டுவோம்
காளைகளின்
திமிளுக்குப்
பூச்சூட்டுவோம்

உரமேறிய
இளைஞர்களின்
உள்ளங்களில் அதுவே
உணர்வேறக்
உண்மைக்காரணமானதால்...

காளைகளுக்குக்
கோவில் கட்டுவோம்
ஜல்லிக்கட்டுக்
காளைகளுக்குக்
கோவில்கட்டுவோம்

ஜாதிமதமென
கட்சியே சதமென
பிரிந்துகிடந்தோரை
தமிழினமென
ஒன்றாகச் சேர்த்ததால்...

தலைமைக்குப்
பின்னன்றி
பிரச்சனைக்குப்பின்
தலைமைகளை
அணிவகுக்க வைத்ததால்...

அதிகாரத்தின்
அலட்சியத்தை
முதன்முதலாய்
அடங்கவைத்ததால்
அலறவைத்ததால்....