Tuesday, May 22, 2018

தேடல்

என் முன்னே என் பின்னே    
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்" என்றேன்
என்னை ஒத்தவரிடம்

"நம் முன்னால் செல்பவர்கள் எல்லாம்
தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான் நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால் அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில் என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்

"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா" என்றேன்


நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்" என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்

"நம் கால்கள் ஓடத்தான் படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டது
எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட கேட்கலாம்தானே"
என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்டேன்

"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன் ஓய்வாக இருக்கிறீர்கள்"

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்" என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பார்-கேள்வி கேள் -
உனக்கே எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்

அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்

ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்

இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

8 comments:

Yaathoramani.blogspot.com said...

UsssVenkat said...
Great work Ramani Sir,

I like the way this poem has been written. Particularly this reflects a deeper philosophy.
The starting point of awareness is the question 'why'.
The truth is dynamic and so there can not be a conclusion.
This state is very greatly reflected in the last stanza.
The person who has reached this status is the enlightened being. If he wants to run he can, understanding the fact that the joy is in running. If he wants to sit and relax he can enjoy that too. Standing offers both choices to sit or to run.

So now I can join a Sri Krishna bajan, so that I sail with the devotees and get Prasatham (Snacks) which I relish much without bothering about Bagavat Gita.
(Ref. My post worshiping SriKrishna)

I can feel proud of the Microwave oven without ever using it.
(Ref: My post on How we add things to our household)

I can cherish as an employer and guide the employees to cherish too.
(Ref:My post on How much you cherish as an entrepreneur)

So I can stop giving suggestions, stop expressing the analytical outlook and confine to only appreciations & encouragements, so that I am liked by all.
I have to periodically endorse the views of the society.

The verses explain how people get convinced .This will help the readers to learn perfectly to fit into the GLOBALISATION. If some one comes for counseling , we can understand what is expected out of us. They only need more points to justify their action and they look for endorsement, appreciation (without revealing that you have understood their clever manipulations and cunning moves)

We can encourage them to proceed in their chosen direction because there are always lakhs and crores of others ahead of them in the very same direction.

KILLERGEE Devakottai said...

புரிந்தவனுக்கு சொல்லத் தெரியாதநிலை.
சொல்லத் தெரிந்தவனுக்கு புரியாதநிலை.

அருமை கவிஞரே.

Yaathoramani.blogspot.com said...

புரிந்தவர்கள் சொல்வதில் பயனில்லை எனப் புரிந்தவர்களாய் இருக்கலாம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொஞ்சமும் ’டல்’ அடிக்காத
மிகவும் சுவாரஸ்யமான ஆக்கம்
இந்தத் தங்களின் ’தேடல்’

இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் போலவே
படிக்கப் படிக்க இறுதிவரி வரை ஒரு ’தேடல்’
எனக்குள் ஏற்பட்டு என்னை மிகவும் மகிழ்வித்தது.

’எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிறது’
என்ற முத்திரை வரிகளில்தான்
தங்களின் தனித்திறமை ஒளிந்துள்ளது.

வலைப்பக்கம் வர விரும்பாதவனையும்
வலை வீசிப் பிடித்து இழுத்து விடுகிறீர்கள். மகிழ்ச்சியே !

மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

ஆஹா.பாவமன்னிப்பு படத்தில் வந்தநாள் முதல் என்கிற பாடலீல் மாறாதவைகள் நிறைய என்பதை நாம் அலுப்பாய் உணரும்படியாவே சொல்லிப்போய் முடிவில் மனிதன் மாறிவிட்டான் எனச் சொல்லுகையில் ஒரு நிறைவும் அதன் காரணமாய் ஒரு சுகமும் கேட்பர்களுக்கு வாய்க்கும் அந்த வகையில் தேடுதலையும் சொல்லிப்போய் முடிவில் எப்படித் தேடினாலும் முடிவும் தேடுதலாகத்தான் இருக்கும் எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்.அதனாலேயே தங்களின் இழுக்க இழுக்க என்கிற வார்த்தை மிகவும் பிடித்தது.தங்கள் வரவுக்கும் விரிவான அற்புதமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

விடை அறிந்திருந்தாலும் கூட அதுதான் விடையா என்று உறுதி படுத்திக்க கொள்ளவும் முடியாது. "கேள்வி உன்னுடையதா? உன்னிடம் கேட்கப்பட்டதா?" நல்ல கேள்வி! தேடல்களில் முடிவு என்பதே இருக்காது. அல்லது முடிவு என்பது எது என்றே தெரியாது. அருமை.

kankaatchi.blogspot.com said...

குப்பை தொட்டியை காலி செய்யவும்.பிறகு மீண்டும் குப்பை சேராமலிருக்க குப்பை தொட்டியையே தூக்கி எறியவும். அப்புறம் கேள்வியுமில்லை. பதிலும் தேவைப்படாது.

Thulasidharan V Thillaiakathu said...

அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்//

ஆம் உண்மைதான். சும்மா கிடப்பது என்பது மிகப்பெரிய ஆன்மீகத் தத்துவம். ஆனால் சும்மா இருப்பது என்பது மிகப் பெரிய சவால். ஆனால் அப்படி சும்மா இருப்பவர்களிடம் கிடைக்கும் விடை ஓடுபவர்களிடம் கூடக் கிடைக்கக் கூடும் அருமையான வரிகள். அதற்கான விடையும் நீங்களே சொல்லிவிட்டீர்களே.

//"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பார்-கேள்வி கேள் -
உனக்கே எல்லாம் தெரியும்" //

அகத்தில் இருக்கும் இன்பத்தை வெளியில் தேடினால் கிடைக்குமா என்ன?! தேடல் தொடரத்தான் செய்யும்.

கீதா

Post a Comment