Monday, May 7, 2018

என்னருமைத் தமிழ்த் தாயே...

தெரியாதவருக்குச்
சொல்வதைப் போல
எதையும் விளக்கிச் சொல்லிவிடாது
மிகவும் எச்சரிக்கையாய் ..

தெரிந்தவருக்கு
ஞாபகம்செய்வதைப் போலவே
எதையும் மிகவும் எளிமையாய்
மிகச் சுருக்கமாய்...

பாண்டியத்தைக்
காட்டும்படியாய்
எந்தப் பெரும் வார்த்தையையும்
தவறியும் பயன்படுத்தி விடாது

வசனகவிதைக்கும்
உரை நடைக்கும் இடையினில்
மிகச் சரியாய் புரியும் படியாய்
மிக மிக எளிமையாய்

மிகப் பெரும்பிரச்சனையும்
நாளும் விட்டு விடாது
தொட்டுப் போக முனைகிறேன்
சமூக அக்கறையின் காரணமாய்..

நித்தமும்
கரிக் கங்கினை வெறும் கையால்
இடம் மாற்றும்
அப்பத்தாவின் லாவகமாய்...

"போற்றுவோர்
போற்றாட்டும் புழுதி வாரி
தூற்றுவோர் தூற்றட்டும் "என்ற
மன நிலை மாறாமலே

பிரச்சனைகளை
நடு நிலைக் கண்ணோட்டத்தோடு
நாளும் அணுகுகின்ற
நல்லமனப் பாங்கினையும்
  
வார்த்தையோடு விளையாடும்
சூட்சுமமும் எனைவிட்டு
மாறாதுக்  காத்திடுவாய்
என்னருமைத் தமிழ்த் தாயே

2 comments:

KILLERGEE Devakottai said...

அருமை இரசித்தேன் கவிஞரே.
கருத்துகளை திறந்து விடுவதில்லையே ஏன் ?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அருமை ஐயா...

Post a Comment