Monday, August 20, 2018

இம்முறையும் எப்போதும் போலவே ..

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி   எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

இயற்கைக்கு எதிராக
எங்கள்  வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள்  செய்தக்  கொடுமைகளை

அது  தானாகத்  தன்னைச்
 சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல

அது  எங்களுக்குப்   பேரிடராய்
பெரும் அழிவாய்
எம்  அன்றாட வாழ்வைப் பாதிக்க

இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத்  தெளிவாய்ப் புரியக்

காடுகளை அழிப்பதில்லை
மண்வளம் கெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என

இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட

இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க

இனியும் குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக்   குடிகாரனைப்போலவே

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி  எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்

எண்ணத்தால் இமயம் அசைப்பதில்        வெற்றுச் சொல்லால் அதன் சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்

இம்முறையும் .....


12 comments:

ஸ்ரீராம். said...

உறுதி மொழிதானே? அது நிறைய எடுப்போமே...

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் மட்டுமே மீதம்.

SURYAJEEVA said...

இம்முறையும் .....
எப்பொழுதும்....
என்றென்றும்....

K. ASOKAN said...

உறுதிமிக்க உறுதிமொழி எடுப்போம்

Unknown said...

இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

// இனியும் குடிப்பதில்லை என மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக் குடிகாரனைப்போலவே

இம்முறையும் நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே //

நல்ல உதா ’ர ண ம்’ !

-=-=-=-=-=-

இடியோ,
மின்னலோ,
கடும் மழையோ,
வெள்ளமோ,
நில நடுக்கமோ,
புயலோ,
பூகம்பமோ,
நிலச் சரிவோ,
தீப்பிடித்தலோ,
எரிமலையின் தாக்கமோ
அனைத்துமே
அடுத்தடுத்து

’எப்போதும் போலவே இம்முறையும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்’ நயவஞ்சகர்களை மட்டும் தாக்கி அழித்துச் சென்றால், நாட்டுக்கும், நாட்டில் வாழும் அப்பாவி மக்களுக்கும் நன்மையாக இருக்கும்.

oooooooooo

KILLERGEE Devakottai said...

வாய்ச்சொல்லில் வீரர்கள்தான் நாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

வெற்று வார்த்தைகளால் பயனில்லைதான் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இம்முறையும்...இந்த ஒரு சொல் வெளிப்படுத்தும் ஆதங்கத்தை அளவிட முடியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

மாறாதோ...?

G.M Balasubramaniam said...

அதில் நாம் சிறந்தவர்கள் ஆயிற்றே

PUTHIYAMAADHAVI said...

உறுதிமொழிகள் உறுதி இழந்ததின் அடையாளங்களாகிவிட்டன.

Post a Comment