Tuesday, August 7, 2018

"அந்தோ ஐயகோ "

"அந்தோ ஐயகோ "
சோகத்தின் உச்சத்திற்கான வார்த்தைகளாய்
உன் பயன்பட்டால்
வீரியம் கொண்ட  வார்த்தைகளை
உனக்கே பயன்படுத்தும்படி  ஆகிப் போனதே

ஐயகோ ! இந்தக் கொடுமையை
என்னவென்று சொல்வது ?

"அண்ணனுக்கு" நீ எழுதிய
இரங்கற்பாவே இன்று வரை
இரங்கற்பாவிற்கு இலக்கணமாய்..
இரங்கற்பா இலக்கியமாய்...

உனக்கே ஒரு இறங்கற்பாவா
இந்தக் கொடுமையை எப்படிச் சகிப்பது ?

அன்று இயக்கப் பாதையில்
நீ முதலடி எடுத்து வைக்கையில்
உன்னைச் சுற்றி
இரண்டு பட்டமேற்படிப்புத் தலைவர்களே அதிகம்

மிரண்டு விடவில்லை நீ
காரணம் உன்னிடம் அவர்களினும்
இரண்டு மடங்கு தமிழறிவும் தமிழுணர்வும்
தகிக்கித் கிடந்தது உன்னுள்

அன்றைய தலைவர்கள் எல்லாம்
நகர வாசிகளாய் நடுத்தரவாசிகளாய்
நீ மட்டும் கிராமவாசியாய் கீழ் நிலையாய்..

கலங்கிடவில்லை நீ...

காரணம் நீ  பேச்சாற்றலால்
தமிழகமெங்கும்
நகரும் வாசியாய் இருந்ததால்

பாமர மக்களை
இனிய தமிழால்
கவரும் வாசியாய் இருந்ததால்..

அண்ணனுக்கு அடுத்து நான்
என் முன் வரிசையில் எல்லோரும் இருக்க
நீ அண்ண்னுக்கு பின் பலமாய் இருந்தாய்

அதனால் தானே கழகத்தின் உயிராய்
தொண்டனுக்குத் தலைவானாய்
தமிழக முதல்வனாய் முன்மொழியப்பட்டாய்..

பதவியை முள் கிரீடமாய் எண்ணினாய்

அதனால்தான் உன்னால்

தென்றலின் சுகத்தில்
மயங்கா தீரனாய்

புயலில் கொடுமையில்
சோராத தலைவனாய்
இறுதிவரை இருக்க முடிந்தது

அதனால்தானே கழகத்தை
அண்ணன் போதித்த
கடமை கண்ணியம் கட்டுப் பாட்டுடன்
இன்று வரை கட்டிக் காக்க முடிந்தது..

நல்ல தெளிவுடன் இருக்கையிலேயே
" ஓயாது உழைத்த இதயம் இங்கு
ஓய்வு கொள்கிறது " என
கல்லறைக்கான  இறுதிவாசகம் தந்தவனே

சாணக்கியத் தனத்தினால்
உன் அரசியல் எதிரிகளையும்
உனக்குச் சாமரம் வீச  வைத்தவனே

பேச்சுச் திறத்தால்
உன் கொள்கை எதிரிகளையும்
உனக்குத் காவடித் தூக்க வைத்தவனே

திடமான முடிவுகளால்
என்றும் எதிரான வடவர்களையும்
உனக்கு கம்பளம் விரிக்க வைத்தவனே                                                                                      மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதில் நீ உறுதியாய் இருந்தாய்             அதனால்தானே அந்த மகேசனும்             பழுத்த ஆன்மீக வாதிக்கும் அருளும்   l ஏகாதசி மரணத்தை உனக்கு அருளி          மனம் நிறைவு கொண்டிருக்கிறான்

 உன் திறன் குறித்து எழுத
உன் புகழ்க் குறித்து எழுத
நிச்சயம் இங்கு எமக்குத் தகுதியில்லை

எங்கள் விழிப்புணர்வுக்காக
ஓயாது உழைத்த உதய சூரியனே

தமிழ் உள்ளவரை
உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான்

கையறு நிலையில்
கண்ணீர் மல்க விடைதருகிறோம்

போய் வா
தன் மானத் தலைவா

போய்வா
தமிழினதின் ஒப்பற்ற தலைவா

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பலமுறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவரும், தமிழ் அறிஞரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், திரைக்கதை வசன கர்த்தாவும், எழுத்தாளரும், தனிப்பாணியில் மிகச்சிறந்த பேச்சாளரும், சமூக சீர்திருத்த சிந்தனையாளரும், தோல்விகளைக்கண்டு துவளாதவரும், அரசியல் சாணக்கியரும், என பல முகங்களுடன் விளங்கி வந்த ’கலைஞர் கருணாநிதி’ அவர்களின் பெயரும் புகழும், தமிழ் மக்களிடையே பல்லாண்டு நீடித்து இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

KILLERGEE Devakottai said...

நிச்சயம் இவர் பெயர் இனியும் நிலைத்திருக்கும்.

தி.தமிழ் இளங்கோ said...

// தமிழ் உள்ளவரை
உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான் //

வரலாற்றில் கலைஞருக்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.

Yarlpavanan said...

அருமையான சிந்தனைகள்
சிந்திப்போம்

ஸ்ரீராம். said...

இருந்தார் இறந்தார் என்றில்லாமல் உழைப்பால் உயர்ந்தார். மக்கள் நெஞ்சங்களில் அமர்ந்தார்.

கோமதி அரசு said...

என்றும் நினைவுகளில் இருப்பார்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் மக்கள் மனதில் வாழ்வார்...

வே.நடனசபாபதி said...

மறைந்தும் நம் தமிழோடு மறையாமல் இருப்பார்.

Kamala Hariharan said...

/உன் திறன் குறித்து எழுத
உன் புகழ்க் குறித்து எழுத
நிச்சயம் இங்கு எமக்குத் தகுதியில்லை/

/தமிழ் உள்ளவரை
உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான்/

உண்மை.. அவர் புகழ் நிச்சயம் மறையாது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நினைத்துப் பார்க்கிறேன் .........

’ஏகாதஸி மரணம் .... துவாதஸி தகனம் அல்லது அடக்கம்’ கிடைப்பது அரிது எனச் சொல்லுவார்கள். இரண்டுமே இவருக்குக் கிடைத்துள்ளது.

இட ஒதுக்கீடுகளுக்காகவே வாழ்க்கையில் பலமுறை போராடி வந்துள்ள இவர், தான் இறந்த பின்னும், தன் உடலை அடக்கம் செய்ய நியாயமான ‘இட ஒதுக்கீடு’ வேண்டி போராடி, நள்ளிரவில் நீதிமன்றம் சென்று, நியாயமானதொரு தீர்ப்பினை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் பின்னூட்டம் மற்றுமொரு பாரா எழுத உதவியது. மிக்க நன்றி

Thenammai Lakshmanan said...

அமரத்தன்மையுடன் வாழ்கிறார் உங்கள் கவிதையில்

K. ASOKAN said...

தமிழக்கு கவிதாஞ்சலி நன்று

V.GOPALAKRISHNAN said...

அறிவு கூர்மையும் நிர்வாகத் திறமை வாய்ந்த பேரின்பம் அனுபவித்த ஒரு மகாரசிகன்

Post a Comment