Wednesday, September 19, 2012

ஓடுதலின் சுகமறிவோம்

மைதானத்தின் மேடையில்
சுகமாய்  அமர்ந்தபடி
ஓடிச் ஜெயித்தவனுடன் சேர்ந்து மகிழ்ந்து
ஓடித் தோற்றவனுடன் சேர்ந்து வருந்தி
தனக்கென  ஏதுமற்று
தெருக் கல்லாய் இருந்தே
நொந்துச் சாவோரே உலகில் சரிபாதி
அவர்கள் உணர்வு நமக்கெதற்கு?
அவர்கள் உறவும் நமக்கெதற்கு ?

பந்தயத்தில்  இணைந்திருந்தும்
முன் செல்பவனை எண்ணி வருந்தி
பின் தொடர்பவனை எண்ணி மகிழ்ந்து
ஓடுதலின் சுகம் மறந்து
ஓடுதலின் பயன் மறந்து
கடலலையில் வீழ்ந்த துரும்பாய்
கலங்கிச் சாவாரே உலகில்  மறுபாதி
அவர்கள் மன நிலை நமக்கெதற்கு ?
அவர்கள் இழி நிலையும் நமக்கெதற்கு ?

பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி
வெற்றிக்கான முயற்சியில்
சிறிதளவும் தொய்வின்றி
ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே   வெல்ல முயல்பவர்

மிகச் சிலரே
 ஆயினும்

அவரே வாழ்வைப் புரிந்தவர்
அவரே வழிகாட்டவும் தகுந்தவர்

அவர் வழி என்றும் தொடரப்  பழகுவோம்
என்றென்றும் எதையும் வென்று மகிழ்வோம்

36 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .

கீதமஞ்சரி said...

வாழ்க்கையின் ஓட்டத்தைக் குறிப்பதாய்க் கொண்டால் கவிதையின் சூட்சுமம் புரிகிறது. ஓடுதலின் சுகமறிவோம். செய்யும் செயலின் சுகமறிவோம். வாழ்தலின் சுகமறிவோம். சுகமாய் வாழ்வோம். வழக்கம்போல் அருமையான படைப்பு. பாராட்டுகள் ரமணி சார்.

Seeni said...

arumaiyaa!

sonneenga ayya!

சசிகலா said...

சிறிதளவும் தொய்வின்றி
ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல்ல முயல்பவர்.

தன்னம்பிக்கை தரும் வரிகள் அற்புதம் ஐயா.

செய்தாலி said...

உண்மைதான் சார்

கதம்ப உணர்வுகள் said...

த.ம 4

குறையொன்றுமில்லை. said...

தன்னம்பிக்கை வரிகளில் கவிதை நல்லா இருக்கு.

கதம்ப உணர்வுகள் said...

மிக அட்டகாசமான தலைப்பு ரமணிசார்.... ஓட்டப்பந்தயத்தில் ஜெயிப்பவர், தோற்பவர் நிலையை சொல்லுவது போல வாழ்க்கை பந்தயத்தில் நம் செயல்களை அருமையாக எடுத்துக்காட்டி இருக்கீங்க.... எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ரமணிசார்.... ஓடி ஜெயிக்கணும்னு உழைத்து சிரத்தை எடுத்து முந்துபவன் வெற்றியின் சிகரத்தை தொடுகிறான்.. அல்லது தோற்கும் அனுபவத்தையாவது பெறுகிறான்.. ஆனால் சும்மா உட்கார்ந்துக்கொண்டு ஜெயித்தவனைப்பற்றி வம்புகள் பேசிக்கொண்டு அவன் வெற்றியில் பொறாமைத்தீயை தனக்குள் வளர்த்துக்கொண்டு ஜெயிப்பு கூட நேர்மையானதாக இருக்குமோ என்ற சந்தேக விதையையும் விஷமாய் விதைத்துக்கொண்டு தோற்றவனின் சோர்வை இன்னும் கூட்ட அவனை இன்னும் இழிவாக பேசிக்கொண்டு என்ன செய்தியோ இப்படி ஆனது.. ஒழுங்கா முயன்றிருந்தால் ஜெயிச்சிருக்கலாமே என்று மட்டம் தட்டி.... ஜெயித்தவனை பார் எத்தனை வெற்றிக்களிப்பு என்று தூண்டிவிட்டு அவன் மனதிலும் விஷம் கக்கிவிட்டு... இப்படி எல்லா செயல்களையும் உழைப்பில்லாமல் ஜெயிக்கும் நோக்கமும் இல்லாமல் தோற்பவனை ஊக்குவிக்கும் சக்தி இல்லாமல் மனதை வெறுமனே சும்மா வைத்திருந்தால் இப்படி தான் பலதும் வந்து மனதை கெடுக்கும் என்று சொல்லாமல் சொன்ன மிக அருமையான வரிகள் ரமணி சார்.. இப்படியான மனநிலை நமக்கு எதற்கு... ஒன்று ஓடி ஜெயிக்கவேண்டும் வாழ்க்கையில் எதாவது சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் மனதில் ஏற்படுத்திக்கொண்டு லட்சியத்தை நோக்கி முன்னேறவேண்டும் பாடுபடவேண்டும்.. அல்லது தோல்வியைக்கண்டு துவளாமல் தன் அடுத்த முயற்சியில் இன்னும் பலமாக உழைக்கவேண்டும். இது ரெண்டும் இல்லாமல் மற்றவர் கதையைப்பேசி பேசி தன் மனதை கெடுத்துக்கொள்ளும் அவரின் நிலையும் நமக்கு வேண்டாம் ஸ்பஷ்டமாக அவருடைய உறவும் நமக்கு வேண்டாம் என்று அழுத்தமாக சொன்ன வரிகள் ரமணி சார் முதல்பத்தி.. ஆமாம்.. அவர் உணர்வுகள் நமக்கிருந்தால் சாதிக்க தடையும் ஏற்படும்.... தோல்வியில் ஏற்படும் அவமானம் தற்கொலைக்கு தூண்டும்... நமக்கென்று ஒரு தனி திறமை இருக்கிறது.. அதை முழுமையாக வளப்படுத்தி அதை பயன்படுத்தி முன்னேறும் பாதையில் செல்லவேண்டும் என்ற மிக அருமையான கருத்து ரமணிசார்...

கதம்ப உணர்வுகள் said...

சும்மா இருந்தவனின் உணர்வுகளை அவன் மன எண்ணங்களைப்பற்றி சொன்னது முதல் பத்தியில் என்றால் இரண்டாவது பத்தியில் பந்தயத்தில் இருப்பவனின் மன எண்ணங்கள் அவன் ஓட்டத்தையும் மீறி எத்தனை வேகமாக ஓடுகிறது என்பதை நச் என்று எழுதி இருக்கிறீர்கள் ரமணிசார்... பந்தயத்தில் பங்கு கொண்டவன் தன் லட்சியத்தில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்பதை சொல்லும் மிக அருமையான கருத்து.... வாழ்க்கையில் அவன் முன்னேறினான் இவன் முன்னேறினான் என்னென்ன தகிடுதத்தம் செய்தானோ... நேர்மையாக இருந்தானோ.. லஞ்சம் கொடுத்து தொழில் வளர்த்தானோ இப்படி மற்றவரின் முன்னேற்றம் கண்டு பயந்து அதனுடனே செய்யும் எந்த செயலும் அவனுக்கு கண்டிப்பாக வெற்றி தருமா என்ன??? அதே போல் தன்னை விட தாழ்ந்தவரின் நிலையைக்கண்டு பரிகசிப்பதும்... ஹப்பா இவனைப்போல இல்லை... இவன் நிலையை தாண்டி தான் கடந்து போய்க்கொண்டு இருக்கிறான்...ஆனாலும் அவன் தன்னை தாண்டி சென்றுவிடுவானோ என்ற பதட்டத்துடன்... முன்னேறியவனின் காலை தட்டியாவது எதையாவது செய்து அவனை தள்ளிவிட்டாவது அவன் முதுகில் கால் வைத்து ஏறியாவது வெற்றியின் சிகரம் தொட்டுவிடவேண்டும் என்ற துடிப்புடன் தன் எல்லா நல்ல குணங்களையும் ஒரு பக்கம் தள்ளிவிட்டு பதட்டமும் போராட்டமுமாக ஓடுவதால் வெற்றிக்கனிக்கான வாய்ப்பை இழப்பது மட்டுமல்லாமல் ( மிக அருமையான வரிகள் ரசித்தேன்.. ஓடுதலின் சுகம் மறந்து.. ஓடுதலின் பயன் மறந்து )

ஓடும்போது ஏற்படும் சோர்வை பின் தள்ளிவிடும் ஓடுதலினால் ஏற்படும் பயன்கள்.... ஆனால் அந்த சுகம் அனுபவித்து தான் ஓடுகிறோமா என்றால் இல்லை. அவன் நம்மை பின் தள்ளிடுவானோ நாம் பின் தங்கிவிடுவோமோ என்ற பயம் அதனால் மனதில் ஏற்படும் கெட்ட சிந்தனைகள்..... ஒரு மனிதனின் கெட்டச்செயலின் ஆரம்பமே அவனின் பயத்தில் தான் தொடங்குகிறது என்பேன் நான்...
பயம் மனிதனை பொய் சொல்லவைக்கும்... அந்த பொய்யை மறைக்க மற்றொரு பொய்.. அந்த பொய்யை மறைக்க மற்றொரு பொய்... சிந்தனைகள் நேர்மையாக இருந்தால் பயம் இருக்காது.. எதையும் எதிர்க்க அவசியமில்லை. ஆனால் எதிர்நோக்குவது அவசியம். அந்த திண்மை பயத்தை ஒழித்தால் மட்டுமே முடியும்... அவன் முந்துகிறான்.. அவனை நாம் முந்த என்ன செய்யவேண்டும் என்பதில் தான் நம் கவனம் இருக்கவேண்டுமே அன்றி முன் ஓடுபவனின் கால் தடுக்கவிட்டு தான் ஓடுவதிலோ அல்லது பின் தொடர்பவனுக்கு தடைகள் ஏற்படுத்துவதிலோ இருக்கக்கூடாது.

கதம்ப உணர்வுகள் said...

எந்த ஒரு காரியத்தையும் செய்றதுக்கு முன்னாடி அதாவது தொடங்குவதற்கு முன்னாடி தான் பலமுறை யோசிக்கவேண்டும். தொடங்கலாமா? தொடங்கினால் ஜெயிப்பு நிச்சயமா? அதனால் பயன் ஏற்படுமா, நல்லதா, கெட்டதா என்று... தொடங்கியப்பின் ஜெயிப்போமோ மாட்டோமா என்று பைத்தியக்காரத்தனமாக சிந்திக்கக்கூடாது. தொடங்கியப்பின் நம் சிந்தனை இப்படி தான் இருக்கவேண்டும் எப்படி ஜெயிப்போம்...அதன் வழி முறைகள் என்ன?? நம் செயல்களும் சிந்தனைகளும் எப்போதும் ஒரே மாதிரி நேர்மையாக இருக்கவேண்டும்.. ஜெயித்தால் சந்தோஷம், ஜெயிக்கவில்லை என்றாலும் எது நம்மை தோல்வியாக்கியது என்பதை உணரும் சக்தி கிடைக்கும்... தோல்வி நமக்கு இன்னும் பலத்தை சேர்க்கும்.. தடையை நீக்க என்ன வழிமுறைகள் என்று யோசிக்கவைக்கும்... அதைவிட்டு காரியத்தில் இறங்கிவிட்டு ஓடிருவோமா இல்லை விழுந்துருவோமா என்று சிந்தித்தால் அங்கு வெற்றியே இவனை கெக்கலித்து சிரிக்கும்...

அர்ஜுனனின் வில்லும் அவன் மனமும் ஒரே மாதிரி தான் இயங்கியது. அதனால் தான் அவனால் சாதிக்கவும் முடிந்தது.... லட்சியங்கள் எப்போதும் நல்லவையாக இருக்கவேண்டும்... அந்த லட்சியத்தை சாதிக்க நேர்மை, நம்பிக்கை, உழைப்பு இது முக்கியமாக வேண்டும்... இத்தனையும் இருந்துவிட்டு பந்தயத்தில் கால் வைத்து ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவனுக்கு.... வெற்றி நிச்சயம்.... அல்லது அனுபவம் நிச்சயம்... வெறும் கையோடு மட்டும் திரும்பமாட்டான்... மனமும் பக்குவப்பட்டு வெற்றித்தோல்வி இரண்டையும் சரிசமமாக எடுக்கும் மனநிலையையும் ஏற்பட்டுவிடும். அப்புறம் என்ன வெற்றியாளர் அவர் தான்...

இப்படி ஜெயித்தவரால் தான் வாழ்க்கையின் சூத்திரங்களை நன்றாய் அறியப்பெற்றவராகிறார்... தன் அனுபவங்களை அது வெற்றியோ அல்லது தோல்வியோ பாடங்களாக்கி பிறரை வழிநடத்தி செல்லவும் தயங்குவதில்லை.. அதற்கான சரியான பொருத்தமானவராகவும் கருதப்படுவார்...

வெற்றி பெற்றதும் கர்வத்தில் தலை உயர்வதும் தோல்வியில் தலை துவள்வதும் இப்படியாக இல்லாமல் வெற்றியும் தோல்வியும் சரிசமமாக பாவித்து செயல்பட்டால் என்றும் ஒரே மாதிரி மனிதனால் சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்று நச் என்று சொல்லி இருக்கீங்க ரமணிசார்....

அப்படி நம் எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் நேர்மையாக பிறருக்கு துன்பம் விளைவிக்காத வகையில் நம் வெற்றியை எட்டும் திட்டங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறுவோம்.. வெற்றித்தோல்வி இரண்டையும் வெல்லுவோம் என்று

( ஒவ்வொரு வரியிலும் தொடக்கத்திலிருந்து.... என்ன செய்யவேண்டும்... எப்படி செய்யவேண்டும்.... எதை தவிர்க்கவேண்டும்... எதை கையாளவேண்டும்.. எப்படி கையாளவேண்டும்... எதை தவிர்த்தால் வெற்றி நிச்சயம்.. தடைகளை கண்டு மிரண்டாலோ கெட்ட சிந்தனைகளை வளர்த்தாலோ அதன் வினைக்கும் அவரே பொறுப்பாவார். அந்த தீயது நமக்கு வேண்டாம் என்ற அன்பு அறிவுரையும் மல்லிகைப்பூ தீண்டலாக மிக மென்மையாக மிக அருமையாக சொல்லிச்சென்ற கவிதை வரிகள் மிக மிக சிறப்பு ரமணிசார்.... அன்புநன்றிகள் ரமணிசார் மனம் கவர்ந்த பகிர்வாக பகிர்ந்தமைக்கு.. இன்னும் இன்னும் தொடருங்கள்... இறையிடம் என்றும் தங்களின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்திக்கும் ஒரு நல்ல ரசிகையாக என் பயணமும் தங்களின் கவிதைகளுடன் தொடரும்.....

Easy (EZ) Editorial Calendar said...

\\"பந்தயத்தில் இணைந்திருந்தும்
முன் செல்பவனை எண்ணி வருந்தி
பின் தொடர்பவனை எண்ணி மகிழ்ந்து
ஓடுதலின் சுகம் மறந்து
ஓடுதலின் பயன் மறந்து
கடலலையில் வீழ்ந்த துரும்பாய்
கலங்கிச் சாவாரே உலகில் மறுபாதி
அவர்கள் மன நிலை நமக்கெதற்கு ?
அவர்கள் இழி நிலையும் நமக்கெதற்கு ?"//

மிக அருமையான வரிகள் ...உங்கள் கவிதையும் அருமை...பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Admin said...

ஓடுதலின் சுகத்தை அறிந்தால் போதும் அதிலுள்ள மற்றவைகள் காணாமற் போகும்..

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் கவிதை தனன்ம்பிகையை சிறப்பாய் தூண்டுகிறது...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

ஸாதிகா said...

பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி
வெற்றிக்கான முயற்சியில்
சிறிதளவும் தொய்வின்றி
ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல்ல முயல்பவர்////அட்டகாசமான வரிகள்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல்ல முயல்பவர்
மிகச் சிலரே ஆயினும்
அவரே வாழ்வைப் புரிந்தவர்
அவரே வழிகாட்டவும் தகுந்தவர்
//உண்மை! உண்மை!//அருமையான பதிவு! நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

அப்பாதுரை said...

பயணம் இனிது, புரிதல் அரிது.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

super sir

அருணா செல்வம் said...

வெற்றி தான் இலக்கம் என்ற பிறகு
நடுவில் தோன்றும் தடைகற்களும் படிகட்டுகள் தான்.

கடைசி வரிகள் தன்நம்பிக்கை ஊட்டும் வரிகள்.
நான் அதைமட்டும் உண்கிறேன்.
நன்றி ரமணி ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

பிறப்பின் போது தொடங்கிய
ஓட்டமும் நடையும்
இறப்பை அடையும் வரை!
யாருமே இங்கு கெலிக்கவும் இல்லை!
தோற்கவும் இல்லை! எல்லாம் மாயை!

vimalanperali said...

என்றென்றும் எதையும் வென்று பழக வேண்டும் என்கிற எண்ணம் வந்த பிறகு எதிலும் தோல்வி இல்லை எனவே சொல்லலாம்.

கோமதி அரசு said...

பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி
வெற்றிக்கான முயற்சியில்
சிறிதளவும் தொய்வின்றி
ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல்ல முயல்பவர்//


வாழ்க்கையை நின்று நிதானமாய் எந்தவித பதட்டமும் இல்லாமல் வாழ்பவர்கள் தான் எதிலும் ஜெயிக்கமுடியும் என்பதை கவிதை சொல்கிறது.

அவர்கள் வழி தான் நாம் பின் பற்ற வேண்டும்.

அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

சிறிய கவிதை! பெரிய தத்துவம்! பந்தயத்தில் தொடர்ந்து ஓடுவோம்! நன்றி!

Unknown said...

சிந்தனை முத்துக்களை சிதறுகின்றீர் நாள தோறும் வந்தனை செய்தும்மை வாழ்துகின்றேன்! வாழியவே!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான வரிகள் சார்...

திண்டுக்கல் தனபாலன் said...

TM 8

ஆத்மா said...

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வின் ருசியிருக்கும்

அர்த்தமுள்ள பல வரிகள் சார் TM 9

ஸ்ரீராம். said...

எதைத் தொடர வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும் என்று புரியவைக்கும் வரிகள். ஆனால் முதல் பாராவில் சொல்லப் படும் வார்த்தைகளில்....... பார்த்து மகிழவும், கை தட்டவும், பாராட்டவும், ஆறுதல் சொல்லவும் ஆள் தேவைதானே?

குட்டன்ஜி said...

//ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல்ல முயல்பவர்//
வாழ்க்கையில் அதுதானே முக்கியம்!
அருமை ரமணி சார்

குட்டன்ஜி said...

த.ம.11

RVS said...

வாழ்க்கையோட்டத்தை புரிந்து கொள்ள வார்த்தையோட்டத்தால் சொல்லியிருக்கிறீங்கள். அருமை. :-)

ஹேமா said...

வாழ்க்கையோட்டமோ இல்லை ஓடுதலைக் குறிப்பிட்டீர்களோ....ஓடுதல் சுகமும் சுவாத்தியமும்.அதிசயிக்க வைக்கிறது உங்கள் சிந்தனைகள் !

Avargal Unmaigal said...

உங்கள் பதிவை பாராட்டுவதா அல்லது அதற்கு பின்னுட்டம் இட்ட மஞ்சு சுபாஷினியை பாராட்டுவதா என்பது தெரியவில்லை

முனைவர் இரா.குணசீலன் said...

ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல்ல முயல்பவர்

அருமையாகச் சொன்னீர்கள் அன்பரே.

ssk said...

ஒடுதலில் என்ன சுகம் உண்டு. களைப்பு தான் மிஞ்சும். வாழ்க்கையை அமைதியாக நடந்தாலே போதும்.
வாழ்வை பந்தயம் என்று நினைத்து அதில் தான் மட்டும் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்ற நினைப்பு தான் தவறு.
எதை பிடிக்க இந்த ஓட்ட பந்தயம்?. எதற்கு இந்த போட்டி.? எதற்கும் அடுத்தவனை எப்படியாவது மிஞ்சிவிட ஒரு மன அரிப்பு.
அதிலும் நோகாமல் வெற்றி பெற அனைவருக்கும் பிடிக்கும். அதற்கு பல வழிகள் உண்டு பிரார்த்தனை, லஞ்சம், ...
இதெல்லாம் ஒரு கூட்டம் ஆரம்பித்து இன்று வரை சுகம் காண்கிறது. மற்றவரும் அதே பாதையில் இப்போது.
எல்லோருக்கும் எல்லாமும் உள்ளது, எல்லோருக்கும் கிடைக்கும், எல்லோரும் இங்கு சமம் என்று என்னும் சமத்துவ மனம் இருந்தால் இந்த பந்தயம் ஓடி விடும்.
அமைதியுள்ள சமுகம் மலரும்.ஆன்மிகம் ஏற்குமா?

kankaatchi.blogspot.com said...

ஓடிக்கொண்டிருப்பவன்தான் உயிரோடிருப்பவன்
சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டவன் செத்துக்கொண்டிருப்பவன்
எதுவும் செய்யாமல் அவன் வெற்றி பெற்றான் இவன் தோல்வியடைந்தான் என்று விமரிசனம் செய்பவன்
நடைபிணம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நமக்கென்று ஒரு தனி திறமை இருக்கிறது.. அதை முழுமையாக வளப்படுத்தி அதை பயன்படுத்தி முன்னேறும் பாதையில் செல்லவேண்டும் என்ற மிக அருமையான கருத்தினை வெளிப்படுத்தியுள்ள படைப்புக்கு நன்றி. பாராட்டுக்கள்.

Post a Comment