Friday, November 9, 2012

சிறு பிரிவுகள்

அவன் வீட்டில்
அன்றுதான்
அவன் அவனை அன்னியனாய் உணர்ந்தான்

வீடு நிறையப் பொருளிருந்தும்
எது எங்கிருக்கிறது என்றும்
எது எதற்கானது என்றும்
எதற்கடுத்து எது என்றும்
அதை எப்படிப் பயன்படுத்துவதென்றும்
எதுவுமே புரியவில்லை அவனுக்கு

விழித்தது முதல்
மெத்தையில் சாயும் வரை
அறுவை சிகிச்சையின் போது
அடுத்து  அடுத்துக்  கருவிகளை
மிக நேர்த்தியாய்    எடுத்துத் தரும்
தாதியாய் இருந்தவள்
இன்றில்லை என்றபோதுதான்
கையறு நிலை என்ற சொல்லின் பொருளும்
இரு கையிழந்தவன்  படும் துயரும்
தெளிவாய்த்  தெரிந்தது அவனுக்கு

 இந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....

திருமணம் முடிந்த  சில நாட்களில் 
ஏதோ  ஒரு நாளில்
ஒரே ஒரு நாளில்
ஏதோ ஒரு பொருளை
 தேடித் தரத்  தாமதமானதற்காக 
தான்  ஆடிய ருத்ர தாண்டவம்
நினைவுக்கு வர
வெந்துதான்   போனான்
மிகவும் நொந்துதான்  போனான்

 என்ன செய்வது
 "மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்பதுபோல
சில ஆணாதிக்க  ஜென்மங்கள்
பட்டுத் திருந்தி 
சம நிலைப்பெறக் கூட
இதுபோன்ற  சிறு பிரிவுகள்
அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது        

17 comments:

Anonymous said...

இதற்குத் தான் நான் எப்போதும் கூறுவது பிறந்ததிலிருந்து பிள்ளை வளர்ப்பு சுயகாலில் நிற்கும் வகையில் வளர்க்கப் பட வேண்டும் என்று.
அப்படியானால் இந்த ஆணாதிக்கத் தன்மை பொசுங்கும்.
முக்கால் பங்கு ஆயினம் இப்படியே தானே உள்ளது. இதற்கு சீர் கெட்ட பெண்ணும் காரணமே.
இது ஒரு சுகம் என்று அவளும் இதை சுகிக்கிறாள்.
''...அவருக்கு நானில்லாவிட்டால் கையும் ஓடாது காலும் ஓடாது.....''
ம்..ம்...நல்ல கருத்தோட்டம்.இனிய நல்வாழ்த்துகள்.
(முகநூல் திறந்தேன். இதன் உங்கள் இடுகை விழித்தது. உடனே கிளிக்கினேன்)
Have a nice weekend.
Happy DEEPAVALI.

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ பட்டு 'திருந்தினால்' சரி...
tm2

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

பெண்ணை மதித்துப் போற்றி சம அந்தஸ்துடன் அன்புடன் நடத்தியிருந்தால் சிறு பிரிவும் நேர்ந்திராது. இப்படித் தவித்திடவும் அவசியமிருந்திராது. நிறைய ஆண்களின் யதார்த்த நிலை இதுதான். சம்பாதிக்கும் ஆணைச் சார்ந்து பெண் இருக்கிறாள் என்பதை விடவும். இல்லத்தரசியைச் சார்ந்துதான் இல்லத்தரசன் செயல்பட இயலும் என்பதே உண்மை. அருமையான சிந்தனையைக் கிளறிய பகிர்வு. உங்களுக்கும் உங்கள் இல்லத்திலுள்ள அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...


/ இன்றில்லை என்றபோதுதான்/ /இது போன்ற சிறு பிரிவுகள் அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது./எங்கேயோ நெருடுகிறதே. இல்லை என்பது சிறு பிரிவா. சமநிலை பெறவா அத்தனை பெரிய இழப்பு.....? என் புரிதலில் தவறோ.?

முத்தரசு said...

சம்பாதிக்கும் ஆணைச் சார்ந்து பெண் இருக்கிறாள் என்பதை விடவும். இல்லத்தரசியைச் சார்ந்துதான் இல்லத்தரசன் செயல்பட இயலும் என்பதே உண்மை.
(thanks Bala ganesh)



அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

மிக மிக உண்மை! பிரிவின் போதுதான் இது முழுதும் உரைக்கிறது! அருமையான சிந்தனையில் உதித்த சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அப்பட்டமான உண்மை அய்யா. தீபாவளி வாழ்த்துக்கள்

ஆத்மா said...

தெளிவான உண்மை சார்.....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிலரின் அருமைகள்..
பிரிந்த பிறகே தெரியும்...

அருமைன படைப்பு...

கவியாழி said...

சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....\\\ உண்மை என்ன செய்வது பொறுத்துக்கொள்ள வேண்டும்

அ. வேல்முருகன் said...

சார்ந்தே வாழ்வது
சறுக்கதான் இப்படி

காலம் மாறிட
காட்சியும் மாறும்

இப்படியும் அப்படியும்
இங்கு உண்மைதான்

மகேந்திரன் said...

ஓருயிர் இல்லாத போதுதான்
அதன் வெற்றிட அளவு விளங்க வரும்
என்பது நிதர்சனமாக விளங்குகிறது....
இனங்களில் என்ன வேற்றுமை இருக்கிறது...
ஆணென்ன பெண்ணென்ன இருவரும் மனித இனமே இருக்கையில்
பரஸ்பர ஒற்றுமை உணர்வு கைகொண்டு
சிறப்புற வாழ்தலே உசிதம்...

அழகிய படைப்பு ஐயா ...

கே. பி. ஜனா... said...

பிரிவின்போது தெரியும் கையறு நிலை பற்றி பிரியமாக சொல்கிறது கவிதை!

r.v.saravanan said...

பிரிவின் வலியை சொன்ன கவிதை நன்று சார்

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு சகலமும் போம்

என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது.

kowsy said...

தனித்து வாழ நினைக்காதவன் துணை தேடுகின்றான். துணையைத் தன் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவன் துணைவியின் துணியை மதிக்க மாட்டான் . ஆனால் இவ்வாறான இஅவித்தை ழப்பு ஏற்ப்படும் சந்தர்ப்பங்களில் தான் நிம்மதி இழக்கின்றான் . யதார்த்தம் உரைக்கும்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு...

இருக்கும்போது அருமை தெரிவதில்லை!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

Post a Comment