Sunday, November 11, 2012

ரஜினி போலத் தானும் ஆக

 ஒருவன்
தலையைச் சீவி தலையைச் சீவி
திரும்பக் கலைக்கிறான்-கேட்டா
ரஜினி  போலத் தானும் ஆக
ரிகர்சல் என்கிறான்

ஒருவன்
முழுங்கி முழுங்கிப் பேசிப் பேசி
நம்மைக் குழப்புறான்-கேட்டா
கமலைப் போல தானும் அறிவு
ஜீவி என்கிறான்

 ஒருவன்
கார ணங்கள்  இன்றி தினமும்
ஏனோ நடக்கிறான்-கேட்டா
அஜீத் பாணி இதுதான் என்று
சைசாய்  சிரிக்கிறான்

 ஒருவன்
கோபம் வந்தால் நண்பனையும் 
போட்டுத்  தாக்கறான்- கேட்டா
கேப்டன்  எந்தன் தலைவன்  என்று
கண்கள் சிவக்கிறான்

இங்கு
 காணு கின்ற   இளைஞர் எல்லாம்
நடிகர் போலவே -தினமும்
வீணேத்    தன்னை  எண்ணிக் கொண்டு
மகிழ்ந்து திரிகிறான்

ஒருவன் 
சொல்லச்  சொல்லத்  திரும்பச் சொல்லும்
கிளிகள் தன்னையே -கூ ண்டின்
உள்ளே  வைத்து காட்சிப் பொருளாய்
 ரசிக்கத் தெரிந்தவன் ...

ஒருவன்
இயக்க இயக்க  இயங்கிச் செல்லும்
நடிகன் அவனையே  -தன்னை  
இயக்க விட்டு மந்தை ஆடாய்
 சுயத்தை  இழக்கிறான்

உலகில்
சிறிய பொருளே  ஆனால்  கூட
அசல்  அசலுதான் -இந்தச்
சிறிய கருத்தை இளமை   நெஞ்சில்
பதியச் சொல்லுவோம்

இனியும்
நடிகன் ஒருவன்  தலைவன் ஆகும்
நிலையை   ஒழிப்போம் -அதற்கு
முடிந்த வரையில் நம்மால் ஆன
உழைப்பை விதைப்போம்  


44 comments:

Avargal Unmaigal said...

நடிகன் ஒருவன் தலைவன் ஆனால் அவன் நல்ல ஆட்சி தருவதாக நடிக்கதான் செய்வான்

முத்தரசு said...

கடசி நாலுவாிகள் நச்

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் சிறப்பான கவிதை! உண்மைதான் நிஜம் எது நிழல் எது என்பதை உணர்ந்து உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல் இருக்க வேண்டும்! அருமை! நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//ஒருவன்இயக்க இயக்க இயங்கிச் செல்லும்
நடிகன் அவனையே -தன்னை
இயக்க விட்டு மந்தை ஆடாய்
சுயத்தை இழக்கிறான்//
நிதர்சனமான வரிகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 2

Ranjani Narayanan said...

உலகில்
சிறிய பொருளே ஆனால் கூட
அசல் அசலுதான் -இந்தச்
சிறிய கருத்தை இளமை நெஞ்சில்
பதியச் சொல்லுவோம்

நல்ல ஆழமான வரிகள்.

பாராட்டுக்கள்!

அ. வேல்முருகன் said...

நடிகன் ஆட்சிக் கட்டில் ஏறலாம்
ஆனால் அவன் மக்களுக்காக என்ன செய்தான்/செய்வான் என்பது முக்கியம்.

அரசு என்பது மக்களுக்கான சேவை என்பது மாறி
அரசு என்பது மக்களை சுரண்டுவது, கொள்ளையடிப்பது என்றான பின் அவன் நடிகனாக இருந்தால் என்ன அல்ல நா.............. இருந்தால் என்ன

கதம்ப உணர்வுகள் said...

எல்லோருக்குமே தனித்தன்மை இருக்கிறது… ஒருவரைப்போல் ஒருவரால் இமிடேட் மட்டும் தான் செய்யமுடியும்…. ஆனால் அவராகவே ஆகமுடியாது… ஆக நினைப்பதும் தவறு… அப்படி நினைக்கும் பட்சத்திலேயே தன்னுடைய தனித்தன்மை அங்கே மரிப்பதை உணரலாம்….

மிக அருமையான தலைப்பு ரமணிசார்…. ஒருவரிடம் இருந்து நாம் நல்லவை கற்கலாம். ஆனால் அவரைப்போலவே தானும் ஆகவேண்டும் என்று நினைப்பது தவறு என்ற படிப்பினை தந்த கவிதை வரிகள் சிறப்பு….

அதற்கு உவமையாக எல்லோரும் ரசிக்கும் நடிகரைச்சொன்னது மிகச்சிறப்பு..

ரஜினிக்கூட ரஜினியானப்பின் தான் உலகமே அவரை திரும்பிப்பார்த்தது…. அவர் சிவாஜிராவா ஒரு பஸ்கண்டக்டரா தன் வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் மக்கள் அவரைப்போல் தலையை சீவி இருப்பாங்களா?? உழைப்பு, இடைவிடாத முயற்சி, நம்பிக்கை, அதிர்ஷ்டம், தெய்வ அருள் இதெல்லாம் இருந்ததால் தான் சிவாஜி ராவ் ரஜினி ஆக முடிந்தது… ரஜினி ஒரு நாலாம்தர நடிகராக சுமாரான நடிகராகவே இருந்திருந்தால் மக்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்திருப்பார்களா? சின்னக்குழந்தையில் இருந்து வயதானவர் வரை அவருக்கு ரசிகராக தான் இருந்திருப்பார்களா? ரஜினி அவருடைய தனித்தன்மையால் உழைப்பால் முன்னுக்கு வந்து ஹீரோவா சக்ஸஸ் ஆனார்….

ரஜினி ஆனதால் உலகம் போற்றுகிறது சிவாஜிராவாக இருந்திருந்தால் உலகத்தின் பலகோடி மக்களில் ஒருவராக சாதாரணமானவராக இருந்திருந்தால் அவருக்கு இத்தனை ரசிகர்கள் இருந்திருக்கமாட்டார்….

கதம்ப உணர்வுகள் said...

த.ம. 3

அடுத்து கமல்….

கமலின் ஈடுபாடு, உயிர்மூச்சு எல்லாமே சினிமாவுக்காக அர்ப்பணித்தவர்…. அவரைப்போல குழறிப்பேசி புரியாத வார்த்தைகளால் தானும் குழம்பி மற்றவரையும் குழப்பாமல், அவரின் ஈடுபாடு, அவரின் உழைப்பு இப்படி அவரிடம் இருந்து நல்லவைகளை கற்கவேண்டும்…படிப்புக்காக பள்ளிக்கூடமே செல்லாத கமல் இன்று ஹாலிவுட் ரேஞ்சுக்கு தன் படங்களை இயக்கி ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அந்த கதாப்பாத்திரமாகவே தன்னை உழைத்து மாற்றிக்கொண்டு தனக்கு எதுவும் தெரியாது, இது எனக்கு வராது, இது என்னால் முடியாது என்று ஒதுங்கி போகாமல், ஒதுக்காமல் முடியாததை முடித்துக்காட்ட முழு முனைப்போடு உழைத்து அதில் வெற்றி காணவில்லை என்றாலும் அதில் நாம் பெறும் பாடங்கள் கண்டிப்பாக அவரின் அனுபவங்களாக இருக்கும்…

அஜீத்தை பார்த்து தல போல வருமா என்று பேசி பொழுதைப்போக்காமல் அஜீத்திடம் இருக்கும் நல்ல பழக்கங்களை கற்று அதுபோல் செயல்பட்டு முன்னுக்கு வந்து வெற்றியை நிலைநாட்டினால் அதற்கு பாராட்டும் புகழும் அஜீத்துக்கு கிடைக்காது நமக்கு தான் கிடைக்கும்…. ஏன்னா கற்றது மட்டும் தான் அவரிடம் இருந்து… ஆனால் அதை நாம் செயல்படுத்தி வெற்றிக்கொள்கிறோம் நம் இயல்புடன்…. அப்ப வெற்றியாருக்கு? பாராட்டு யாருக்கு? புகழ் யாருக்கு? நமக்கு தானே? அஜீத் கிட்ட இருக்கும் ஒரு நல்ல பழக்கம் தன்னிடம் வேலை செய்யும் டைரக்டர்ல இருந்து லைட் பாய் வரை அனைவரிடமும் சமமாக அன்பாக தோழமையுடன் பழகுவதும் தான் வெற்றிப்பெற்றால் அந்த வெற்றிக்காரணமாக அந்த படத்துக்காக உழைத்த அனைவரையும் காரணமாக சொல்லுவதும் தான்….

கேப்டனின் ஒரு பக்கம் இப்ப எங்கே யார் பார்த்தாலும் கேவலமாக கிண்டலாக பேசும்படி இருந்தாலும் யாரும் அறியாத கேப்டனின் இன்னொரு நல்ல பக்கமும் உண்டு… முதன் முதல் சினிமாவில் விஜயகாந்த் நடிக்க வந்தபோது ஹீரோவுக்கு மட்டும் நல்ல சாப்பாடு மீதி கூட வேலை செய்யும் மற்ற நடிகர் நடிகையர்கள் துணை நடிகர்கள் இவர்களுக்கு எல்லாம் கீழே உட்கார்ந்து வேற சாப்பாடு… விஜயகாந்த் இதை பார்த்துட்டு அவர் ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அவருடன் வேலை செய்த அத்தனைப்பேருக்கும் தன் வீட்டில் இருந்து ஒரே போல் உணவு ஹீரோவில் இருந்து சௌண்ட் பாய் வரை…. இந்த நல்லப்பழக்கம் கற்றுக்கலாம் தானே விஜயகாந்த் கிட்ட இருந்து?? அதைவிட்டுட்டு வேண்டாததை கதாநாயகர்களைப்பார்த்து அதேப்போல் செய்ய முனைவதும்… இன்னும் சில பேர் நான் பார்த்திருக்கிறேன் தன்னுடைய ஹீரோவுக்காக மொத்த சம்பளப்பணத்தையும் கட் அவுட்டுக்கும் பாலாபிஷேகத்துக்கும் செலவு செய்வாங்க.. ஆனா அங்க வீட்டில் அடுப்பில் பூனை உறங்கும்… பிள்ளைகள் பட்டினியாக கிடக்கும்… இன்னும் ஒரு படி மேலே.. தலைவா உனக்கு ஒரு பிரச்சனையா அப்படின்னு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரித்துக்கொள்வார்கள்.. இதனால் என்ன பயன்? கதாநாயகன் ஒரு மலர்வளையம் வைத்துவிட்டு ரெண்டு லட்சம் நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு ஜகா வாங்கிடுவாங்க. அதோடு அதைப்பற்றி மறந்தும் போய்விடுவார்கள்… ஆனால் ரசிகனை இழந்த அவன் குடும்பமோ தவித்துப்போய் நிற்கும் அவலம்…கதம்ப உணர்வுகள் said...

எத்தனை அருமையா சொல்லி இருக்கீங்க ரமணி சார்.. கதாநாயகர் ஹீரோ என்று ரசிகர் பட்டாளம் இத்தனைப்பேர் கிளம்பறீங்களே…. அவரை இயக்குவதும் ஆட்டிவைப்பதும் டைரக்டர் தானே என்று….. அப்டி பார்த்தால் டைரக்டரைப்பார்த்து யாராவது அவர் ஸ்டைல் செய்வதுண்டா இல்லை…. ஆனால் ஹீரோ என்றால் அதற்குரிய லட்சணங்கள் பார்த்து தான் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது என்றும்…. ஹீரோவின் ஸ்டைல், அழகு, பாடி லாங்குவேஜ் இதெல்லாம் பலரின் உழைப்பால் தான் சினிமாவில் பாப்புலர் ஆகவைப்பது… டைரக்டர் நன்றாக நடிக்கவைக்கிறார், கோரியோக்ராஃபர் நன்றாக நடனம் ஆடவைக்கிறார்…. நகைச்சுவையாக சிரிக்கவைக்கிறார்கள்…. தவறு கண்டால் கோபமாக கொதித்தெழவைக்கிறார்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைப்போடவைக்கிறார்கள்.. டூப் போட்டு நடிப்பவர் யாரோ.. ஆனால் பேர் வாங்கிக்கொள்வதோ ஹீரோஸ்… தன் சுயம் இழந்து ஆட்டுவித்தால் அது போல் ஆடி பெயர் எடுத்து நம்பர் ஒன் ஆகும் ஹீரோவைப்பார்த்து காப்பி அடிக்கவேண்டாம்னு நச் நு சொல்லிட்டீங்க ரமணி சார்…

இப்படி வெளிப்புறத்தோற்றம் வைத்து வெறும் நடிப்பை வைத்து ஸ்டைல் வைத்து அதை காப்பி அடித்து அதைப்போல் தானும் தன் தோற்றம் மாற்றிக்கொள்வதை நிறுத்தவேண்டும் என்றும்…. என்ன இருந்தாலும் நடிப்பு தானே…. மாயத்தோற்றம்…. நடிப்பைப்பார்த்து நடித்து என்ன ஆகப்போகிறது…

நமக்கான தனித்தன்மை.. நம் உழைப்பு…. நம் முயற்சி, நம் தன்னம்பிக்கை…. இதில் தான் கவனம் செலுத்தி நம்மைப்பார்த்து மற்றவர் சொல்லவேண்டும்… ஆஹா பாருப்பா எப்படி படிக்கிறான்… என்னமா உழைக்கிறான்… என்னமா சாதிக்கிறான்…இவனால் முடியாதது எதுவுமே இல்லை…. இப்படி சொல்லவைக்க நம் தனித்தன்மை தான் உதவும்… மற்றவரைப்பார்த்து நாம அடிக்கும் காப்பி என்னிக்கிருந்தாலும் காப்பி காப்பி தான்… நம் தனித்தன்மை தனித்தன்மை தான் என்று ஆணித்தரமாக கவிதைவரிகளில் சொல்லி இனி நடிகனுக்காக கட் அவுட் வைத்து அவன் நடிப்பைப்பார்த்து பாராட்டுவோம். ஊக்குவிப்போம், ஆனால் அதுவே நம் வாழ்க்கைப்பாதையாக மாற்றிக்கொள்ளாமல் இரண்டரை மணி நேரம் போய் உட்கார்ந்து படம் பார்த்து சிரித்தோமா அழுதோமா வந்தோமா என்று இருக்கவேண்டும்…

நாமே நடிகரை தலைவர் ஆக்கி சிம்மாசனத்தில் உட்காரவைக்கவேண்டாம் ஏனெனில் நமக்கே அந்த தகுதி இருக்கிறது முயன்றால்

இன்றைய காலக்கட்டத்தில் என் மகன் உள்பட நிறையப்பேர் எனக்கு அந்த ஹீரோ பிடிக்கும் அவரைப்பிடிக்கும் இவரைப்பிடிக்கும் என்று அவரவர் ஸ்டைல் காப்பி அடித்து அவரை முன்னேற்றாமல் நம் உழைப்பு, நம் திறமை, நம் அறிவு, நம் செயல், நம் வார்த்தைகள் இப்படி நம்முடைய வழிகள் வெற்றிக்கு வழி வகுக்க, முன்னுக்கு வர எப்படி இருக்கவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று அருமையாக சொன்ன படிப்பினை கவிதைப்பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்…

மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் ரமணி சார்..


JR Benedict II said...

ஒரு கவிதையும் நான்கு பதிவும் படித்த திருப்தி.. சூப்பர் ரமணி சார்..

ஹேமா said...

அவர்கள் அவர்களாகவே இருப்பதில்லை.இன்னொருவராக மாறுவதுதான் சிக்கல் !

மகேந்திரன் said...

யாருக்கு எது முடியுமென்று
ஒரு நிகழ்வு இருக்கிறதல்லவா..

மஞ்சுபாஷினி அக்கா சொன்னதை விட
நான் அதிகமாக சொல்லிவிட முடியாது....

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்வது போல் இளவயதிலேயே உண்மையை மனதில் பதிக்க வேண்டும்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
tm7

Ganpat said...


நன்றி ரமணி ஸார்!


இனியும்
நடிகன் ஒருவன் நடிப்பினை
(திரை)அரங்கிலேயே மறப்போம்.-அதற்கு
பின்னால் உள்ள அவன் உழைப்பினை,
நம் ஆயுள் வரை நினைப்போம்.

நடிகன் ஒருவன் தலைவன் ஆகவேண்டும் என்ற ஆசை குற்றமில்லை -ஆனால்
நடிகன்தான் தலைவன் ஆகவேண்டும் என்ற
விதியை ஒழிப்போம்.

sury siva said...

மாயத்திரையிலே காணுவதையெல்லாம் உண்மையென நம்பி
தம் ஈடு செய்ய இயலாத இளம்வயது நாட்களை, அந்த நாட்கள் தரும்
வாய்ப்புகளை , அந்த வாய்ப்புகள் தர இயலும் திறன்களை, இக்கால இளைஞர்கள்
இழந்துவிடுகின்றனர் என்ற கூற்றில் பொருள் நிறையவே இருக்கிறது.

இளைஞர் சமூகத்தை வழி நடத்துச்செல்வதில் திரை திசை தவறிவிட்டது என்பது
ஒரு அளவிற்கு சரியாக இருக்கலாம்.

இருப்பினும் நடிகர்கள் அரசியல் தலைவர்களாக வரக்கூடாது எனும் நோக்கில்
எனக்கு உடன் பாடு இல்லை.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறி இயல் வல்லுனர்கள், கல்லூரி பல்கலைக் கழகங்கள், பொதுத்துறை
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்,
ரியல் எஸ்டேட் துறைக்குச் செல்லும் கட்டிட க்கலை வல்லுனர்கள், மற்றும் அறிவு சார் துறையிலே
இருப்பவர் அனைவருமே ஏதோ மஹாத்மா காந்தியாக, ஹசாரே, கஜ்ரிவால் ஆகவா இருக்கிறார்கள் ?

இல்லை. அரசாங்கத் துறையிலே இருக்கும் அனைவருமா மனச்சாட்சியுடன் நடந்துகொள்கின்றனர்?
தம் திறமைகளின் அடிப்படையில், தம் முடிவுகளில் திடமாக இருக்கின்றனர் ? எத்தனை எத்தனை
அரசாங்க அலுவலர்கள் ஊழல் செய்து இருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் ?
எவ்வளவு வழக்குகள் குற்றங்கள் இவர்கள் மேல் இருக்கின்றன ! பதிவாகி இருக்கின்றன ?
இவர்களெல்லாம் நடிகர்களா என்ன ?

நடிகர்களில் இன்றைய நாட்களில் பலர் நன்கு படித்தவர்களாகவும், மனித நேயம் கொண்டவர்களாகவும்
தன்னலம் கருதாது தொண்டு செய்யும் மனப்பான்மை உள்ளவர்களாகவும் தான் தென்படுகின்றார்கள்.

இன்னொன்று. நடிகர்கள் அரசியல் தலைவர்களாக வரக்கூடாது என்று வந்துவிட்டால்,
நாட்டில் தேனும் பாலும் ஓடுமா ? அப்பொழுதும் கூவம் தான் ஓடும்.சுப்பு தாத்தா.

பால கணேஷ் said...

மஞ்சுபாஷிணியும் கண்பத்தும் நான் சொல்ல எதுவும் விட்டு வைக்காமல் அருமையாக விரிவாகச் சொல்லி விட்டார்கள். நன்று. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஸார்.

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் பிடித்தது கடைசி நாலு வரிகள்......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Yaathoramani.blogspot.com said...

sury Siva //

இன்னொன்று. நடிகர்கள் அரசியல் தலைவர்களாக வரக்கூடாது என்று வந்துவிட்டால்,
நாட்டில் தேனும் பாலும் ஓடுமா ? அப்பொழுதும் கூவம் தான் ஓடும். //

நீங்கள் சொல்வதும் சரிதான்
ஆயினும் நடிகர்களும் தலவர்கள் ஆகலாம்
என்கிற நிலை மாறி நடிகர்கள் மட்டுமே ஆகமுடியும
என் நிலைமை போவதுதான் சங்கடப்படுத்துகிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நடிகன் ஒருவன் தலைவன் ஆனால் அவன் நல்ல ஆட்சி தருவதாக நடிக்கதான் செய்வான்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முத்தரசு //

கடசி நாலுவாிகள் நச் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

sury siva said...

அது எல்லாமே இருக்கட்டும்.
ரமணி ஸாரே !

என்ன அப்படி ஒரு கோபம் தீபாவளி அதுவுமா ?

சரி, சரி, எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.

விஸ்வரூபம் ஆர் ஓ டிரையல் பார்க்கணும்.
?துப்பாக்கிக்கு ஃபர்ஸ்ட் ஷோ டிக்கட் புக் பண்ணனும்.
தனுஷ் சூபர் ஸ்டாரோட சேர்ந்து நடிக்கிறாராமே என்ன டீடைல் ?
அன்னக்கொடி வீரன் எப்போ ஷூட்டின்க் முடியும்?
நயன் தாரா அடுத்த மூவ் என்னா ?
அனுஷ்கா அடுத்த படம் என்ன ? கவலையா இருக்கு.

இத்தனைக்கும் நடுவிலே
ஆன்மீகத்திலே ஒரு பதிவு போடணும்.

மஞ்சு பாஷிணிக்கு நான் ஜே சொல்லணும்.


தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

Yaathoramani.blogspot.com said...s suresh //

எது நிழல் எது என்பதை உணர்ந்து உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல் இருக்க வேண்டும்! அருமை! நன்றி!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

நிதர்சனமான வரிகள் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...


நடிகர்கள் தலைவர் ஆவது தவறல்ல. தலைவர்கள்தான் நடிக்கக் கூடாது.

Ganpat said...

திரு.ரமணி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ராஜி said...

தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லாம் வளமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் ஐயா!.

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் ரமணிசார்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

நீங்கள் எந்த பாதிப்பில் இதை எழுதினீர்களோ.... எனக்கும் இதே வருத்தம், ஆற்றாமை உண்டு. அவர்கள் திறமையைக் குறை கூறவில்லை. அவர்களை நினைத்து, காபி அடித்து தன் சுயத்தை இழக்கும் இந்தக் கால இளைஞர்களைக் கண்டுதான் எனக்கும் வேதனை.

உங்களுக்கும், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

Anonymous said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

அப்பாதுரை said...

தாளம் போட்டு பாட முடிகிறது கவிதையை. நன்று.

நடிகர் கூட மனிதர் தானே?

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

கவிதை சூப்பர்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரமணி சார்

அன்புடன் மலிக்கா said...

செம நச். திருந்திட வேண்டும் இளைய தலைமுறையாவது..
.

இனிய வாழ்த்துகள்.

Unknown said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் - நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

//இனியும்
நடிகன் ஒருவன் தலைவன் ஆகும்
நிலையை ஒழிப்போம் -அதற்கு
முடிந்த வரையில் நம்மால் ஆன
உழைப்பை விதைப்போம் //

நல்ல சிந்தனை. ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் தலைவர்கள் சினிமாவிலிருந்து தான்! :(

அருணா செல்வம் said...

அருமையான கருத்தை
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் இரமணி ஐயா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

நடிகர்கள் நாடாள வரட்டும். ஆனால் நாடாள வந்த இடத்தில் நடிக்கக் கூடாது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

அழகாகச் சொன்னீர்கள் தமிழ் இளங்கோ!

அப்பாதுரை said...

இந்த மஞ்சுபாஷிணி உங்க கவிதைகள்ள எதுனா கி.எச்.டி பண்றாங்களா??

கதம்ப உணர்வுகள் said...

//அப்பாதுரை said...
இந்த மஞ்சுபாஷிணி உங்க கவிதைகள்ள எதுனா கி.எச்.டி பண்றாங்களா?//

கிச்சடியாப்பா? :-)

கதம்ப உணர்வுகள் said...

//பால கணேஷ் said...
மஞ்சுபாஷிணியும் கண்பத்தும் நான் சொல்ல எதுவும் விட்டு வைக்காமல் அருமையாக விரிவாகச் சொல்லி விட்டார்கள். நன்று. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஸார்.//

அன்பு நன்றிகள் கணேஷா...

Post a Comment