Wednesday, December 12, 2012

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்


நமக்கு உயிரளித்து
உலகில் உலவவிட்டவர்களை விட
நமக்கு கல்வி கொடுத்து
செம்மைப் படுத்தியவர்களை விட
நாம் சறுக்கியபோது
விழாது காத்தவர்களை விட
நாம் சோர்ந்தபோது
நமக்கு ஊக்கமளித்தவர்களை விட

நம் பொழுதை நாமே அறியாது
நம்மிடமே களவாடியவர்கள்
நம் சிறுவாட்டுப் பணத்தை
சிதறாது பறித்தவர்கள்

சுயமாக ஏதுமின்றி
ஆட்டுபவனுக்கு ஏற்றார்ப்போல
ஆடம் மட்டுமே தெரிந்தவர்கள்

குரலெத்துப் பாடாது
சிறந்த பாடகனுக்கு
வாயசைப்பு  கொடுப்பவர்கள்

முதலீடு ஏதுமின்றி
அடுத்தவன் முதலீட்டில்
ஆட்டம் காட்டுபவர்கள்

வாலிபம் இருக்கிறவரையில்
காதல் காட்சிகளில்
புகுந்து விளையாடி

நடுவயதில் தவறாது
சமூக அக்கறையை
வசனத்தில் மட்டுமே காட்டுபவர்கள்

சேர்த்த பணத்தைப் பாதுகாக்க
அவ்வப்போது வாய்ஸ் கொடுத்து
தன்னை பலப்படுத்திக் கொள்பவர்கள்

பாலுக்கும் பூனைக்கும்
பாதுகாவலாய் இருப்பதுபோல்
இரு துருவங்களுக்கும்
இதமாய் இருப்பவர்கள்

எப்படி இப்படிக்
கொண்டாடப்படுகிறார்கள்
எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை

என்ன செய்வது
கூடலழகர் பெருமாள் கோயில் கூட
ஒயின்ஸ் ஷாப்புக்குப் பின்னால் என
அடையாளம் காட்டப் படுவது போல

மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது

ஒரு வகையில் இந்தப்
பதிவின் தலைப்பைப் போலவும்

35 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆமா ரொம்ப சரிதான். என்னத்தச்சொல்ல?

பாலவெங்கி said...

சரி ஐயா, ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடுவது தவறுதான்! நீங்கள் பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாட என்ன செய்தீர்கள்? ரஜினியின் பெயரையும் பாரதியாரின் பெயரையும் இணைத்துப் பதிவு போட்டு மற்றவரைக் குற்றம் சொன்னதைத் தவிர? :-)

பாலவெங்கி said...

//மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது//

யாருக்கு? உங்களுக்குமா? அப்படியென்றால், தயவு செய்து இதுபோன்று போலித்தனமாகக் கவிதை எழுதி, ‘மற்றவர்கள் எல்லாரும் முட்டாள்கள்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்த எண்ணாதீர்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

என்ன செய்வது?காலம் அப்படி கடந்த ஆண்டு இதே நாள் பாரதியைப் பற்றிய கவிதையை பதிவிட்டேன். அதை இதுநாள் வரை படித்தவர்கள் 165 பேர் மட்டுமே!
மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.2

ஆத்மா said...

நியாயமான ஆதங்கம் சார் (3)

Yaathoramani.blogspot.com said...

பாலவெங்கி //

யாருக்கு? உங்களுக்குமா? அப்படியென்றால், தயவு செய்து இதுபோன்று போலித்தனமாகக் கவிதை எழுதி, ‘மற்றவர்கள் எல்லாரும் முட்டாள்கள்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்த எண்ணாதீர்கள்!//


ஆதங்கம் எனக் குறிப்பிட்டிருந்ததை
கொஞ்சம் கவனித்திருந்தால் இவ்வளவு
கோபப் பட்டிருக்கமாட்டீர்களோ
பாரதிக்கும் எனக்குமான பிணைப்பு
நிறைய இருக்கிறது..இங்கு குறிப்பிடுவது
தேவையற்ற தம்பட்டம்.
மகா கவி அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகளில்
கலந்து கொண்டு அது வெறும் சடங்கு
சம்பிரதாயமாக இருந்த ஆதங்கத்திலும்
மறு நாள் தொலைக்காட்சி பத்திரிக்கை
அரசியல் வாதிகளின் ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்களில்
கொண்ட மனச் சங்கடத்தில் இதைப்பதிவிட்டேன்
இதுவரை 296 பதிவுகள் எழுதி ஒரு பின்னூட்டம் கூட
இத்தனை காரசாரமாக இருந்ததில்லை
அந்தக் குறையைத் தீர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி


பாலவெங்கி said...

சார், பாரதியை யாரும் கொண்டாடவில்லை என்பது அனைவருக்கும் உள்ள ஆதங்கம்தான்! நான் சொல்ல விரும்பியது,296 பதிவுகள் எழுதிய நீங்கள் பாரதியைப் பற்றி, அவனது ஆளுமையைப் பற்றி, ஒரு இடுகை எழுதி விட்டு, அல்லது இந்த இடுகையிலாவது பாரதியைப் பற்றி ஒரு பத்தியாகிலும் எழுதி விட்டு ஆதங்கப்பட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். நீங்களே பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பற்றியும் இப்போது விசனப்படுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

Balaji said...

Arumai...Kaliyin kodumai enna seiya

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

arumai

ஸாதிகா said...

எப்படி இப்படிக்
கொண்டாடப்படுகிறார்கள்
எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை
////எப்படி இப்படிக்
கொண்டாடப்படுகிறார்கள்
எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை//
உண்மைதான் சார்.எனக்கும் விளங்கவே இல்லை.


என்ன செய்வது
கூடலழகர் பெருமாள் கோயில் கூட
ஒயின்ஸ் ஷாப்புக்குப் பின்னால் என
அடையாளம் காட்டப் படுவது போல//சபாஷ் சரியான உவமானம்.கவிதை வர்கள் பிரமிக்க வைக்குது சார்.உங்கள் கற்பனை திற‌னுக்கு ஒரு ராயல் சல்யூட்.

அம்பாளடியாள் said...
This comment has been removed by the author.
Unknown said...

அந்த பாரதிபித்தர் வேண்டுகோளை ஏற்று..அவர் மனம் குளிர..பாரதி பற்றி நாலு வாக்கியம் எழுதிப் போட்றுங்க.!

வள்ளுவனை திராவிடங்கள் பிரபலப்படுத்தியது போல....தேசியக் கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால் பாரதி பிரபலமாகி இருப்பார்!

தொடருங்கள் உங்கள் வழியிலே! வாழ்த்துக்கள்!

சசிகலா said...

ஆதங்கத்தை அழகாக வெளியிட்டீர்கள் ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

நமது தலைமுறையில் எம்ஜிஆர் – சிவாஜி என்று நடிகர்களின் மன்றங்கள் உருவாகின. இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் இந்தக்கால நடிகர்களின் ரசிகர்கள். பாரதியை அன்றும் இன்றும் என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். சொல்லுவதில் தப்பொன்றும் இல்லை.

போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்
- கவிஞர் கண்ணதாசன்

அம்பாளடியாள் said...

உங்கள் கருத்துக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா .

sury siva said...

என்னாச்சு ஸாரே !!

எவ்வ துறைவ துலகம் உலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

எனும் குறளை ஒரு அம்பது தரம் படிச்சு புரிஞ்சுக்கறது நல்லது.

இக்குறளுக்கு பொருள் சொன்ன பரிமேலழகர், என்ன சொல்கிறார் பாருங்கள்.

" உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அறிவு "

அத அப்படி ஒத்துகிட்டு போகமுடியாங்காட்டியும் கம்னு கிடப்பது அறிவு.

அம்புடுதேன்.

அது இருக்கட்டும்.

36 வருசமா கொடி கட்டிப் பறக்கிற அந்த ராகவேந்திரருக்கு இன்னிக்கு வயசு 63 ஆவுது.

வாய் நிறைய வாழ்த்துங்களேன். என்ன மாதிரி. வயசானதுக்கு அடையாளமா...

வாழ்க வளமுடன்.

சுப்பு தாத்தா.

G.M Balasubramaniam said...


பெங்களூரில் ஒரு ரஜினி போஸ்டருக்கு ஒருவர் பிறந்த நாள் கேக் ஊட்டிவிட ஒருவர் படத்தின் வாயைத் துடைத்துவிட அடுத்தவர் ஊட்ட, என்று தொடர்ந்ததாம். அவருக்கு பாலாபிஷேகமே செய்து ஒரு பெரிய மன ஆசனத்தில் இருத்தி இருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னொரு இடத்தில் படித்தேன் அறுபதுக்கு மேல் ஆனாலும் இருபதுவயது கன்னிகளுடன் நடிக்கும்போது அவர் கெமிஸ்ட்ரி தக்க வைத்துக் கொள்கிறாராம். இதெல்லாம் அவர் கேட்டா கிடைப்பது. என்ன செய்ய . பாரதி இறந்தபோது 20-க்கும் குறைவானவரே இறுடி ஊர்வலத்தில் இருந்தனராம். ரஜினியின் பெயர் அவருக்கு மார்க்கெட் இருக்கும்வரைதான். ஆனால் பாரதி என்றும் நினைக்கப் படுவான், நினைக்க வைத்துவிட்டான். உங்கள் ஆதங்கம் எனக்குமுண்டு.

Avargal Unmaigal said...

வாழ்த்துவது என்பது வேறு தூக்கி துதிபாடுவது என்பது வேறு .... ஆனால் இந்த மீடியா அளவுக்கு அதிகமாக தூக்கி புகழ்பாடுவது பற்றிதான் வாதப் பிரதிவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. பாரதியை மறந்து போய் ரஜினியை துதிபாடுகிரீர்களே என்ரு சொன்னால் நீ என்ன செய்தாய் இந்த பாரதிக்கு என்ற கேள்வி கேட்கிறார்கள். தனிமனிதன் எதும் செய்துவிட முடியாதுதான். இங்கு ஒன்று நன்றாக கவனிக்க வேண்டும் யாரும் ரஜினியை குறை கூறவில்லை மீடியாவைத்தான் குறை கூறுகிறோம்... அதனால் ரஜினிரசிகர்கள் சொல்வதை புரிந்து படியுங்கள்


ரமணி சார் மனதில்பட்ட கருத்தை தைரியமாக கூறிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

அருணா செல்வம் said...

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி!
என்றும் சூப்பர் ஸ்டார் பாரதி...

இங்கே வாழ்ந்து காட்டியவர்களை விட
அவர்களைப் போல் நடித்துக் காட்டுபவர்களை
கொண்டாடுவது தானே உலகம்.
விடுங்கள் இரமணி ஐயா.

பதிவு அருமையாக உள்ளது.

முனைவர் இரா.குணசீலன் said...

மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது


இதுதான் இன்றைய உலகம் அன்பரே.

”தளிர் சுரேஷ்” said...

ஆதங்கம் சரிதான்! ஆனால் வாழ்த்துவதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!நடிகனாக இருந்தாலும் ஒரு நல்ல மனிதனை வாழ்த்துவது தவறில்லைதானே! நன்றி!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

oops! Bharathi birthday would not come with symmetrically! My mistake!


12.12.12 என்பதாலும், உயிருடன் போராடி வந்ததாலும் அதிகமாகக் கொண்டாடுகிறார்கள்னு நெனைக்கிறேன்.

இன்னைக்கு சினிமாவைப் பத்தி எழுதுபவர்கள்தான் "பிரபலப் பதிவர்கள்". கதை கட்டுரை இலக்கியம் எழுதினால் ஒருவர் பிரபலப் பதிவராக "மாக்களால்" கருதப்படமாட்டார். இதுதான் இன்றைய உலகம். அதை ரஜினி, பாரதி பொறந்த நாள் கொண்டாட்டம் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளணுமா என்ன?

உண்மை என்னவென்றால், ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால், இன்று பாரதியின் பிறந்தநாள் இன்னும் இலட்சம் பேருக்கு நியாபகப்படுத்தப் பட்டுள்ளது என்பதே. ஆக, ரஜினியால் பாரதியின் புகழ் இன்னும் உயர்துள்ளது என்றும் எடுத்துக்கலாம்! :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாரதி நினைவு கூரப்படுபவர் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த கட்டவுட்டுக்கு பாலூத்தும் எருமைகள். அவரை நினையாதிருப்பதே! பாரதிக்குப் பெருமை!

உஷா அன்பரசு said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது. // பாலுக்கும் பூனைக்கும்
பாதுகாவலாய் இருப்பதுபோல்
இரு துருவங்களுக்கும்
இதமாய் இருப்பவர்கள்
// - என்னமாய் எழுதி இருக்கிங்க. பாராட்டுக்கள்.
உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

அகல் said...

// என்ன செய்வது
கூடலழகர் பெருமாள் கோயில் கூட
ஒயின்ஸ் ஷாப்புக்குப் பின்னால் என
அடையாளம் காட்டப் படுவது போல

மகாகவி பிறந்தது கூட
சூப்பருக்கு முதல் நாள் என
ஞாபகம் வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது //

நெத்தியடி .. புரிந்தோர் திருந்தினால் நலம்..

Unknown said...

அருமை சார்.....என்ன அருமையாய் சொல்லி விட்டீர்கள். //எப்படி யோசித்த போதும்
காரணம் விளங்கவே இல்லை //...எனக்கும்தான், இந்த நாட்டை யாராவது காப்பாற்ற வேண்டும் !

இராஜராஜேஸ்வரி said...

பாரதியும் சூப்பர் ஸ்டாரும்

தலைப்பும் பதிவின் பொருளும் மனதை நெருடியது...

காலத்தின் கோலம் !

சிகரம் பாரதி said...

உண்மைதான் நண்பரே. பாரதியின் பிறந்தநாளுக்கும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்கும் அடுத்தடுத்து என் தளத்தில் சிறப்புப் பதிவுகள் வெளியிடுவதாக இருந்தேன். ஆனால், ரஜினியின் பிறந்தநாளுக்கு நம்மவர்கள் போட்ட ஆட்டம் என்னை சிந்திக்க வைத்தது. பாரதி சிறப்புப் பதிவோடு நிறுத்திக் கொண்டேன். நறுக்கென்ற அருமையான கவிதை.

என் தளத்தில்:

http://newsigaram.blogspot.com/2012/12/singalath-theevinukkor-paalam-amaippom.html

Ganpat said...

இது எவ்வளவோ பரவாயில்ல ரமணி சார்!
இயேசுகிறிஸ்து பிறந்தநாள் எப்போ வரும்னு கேட்டா,சூப்பர்ஸ்டார் பிறந்த நாளைக்கு 13 நாள் கழித்து வரும்னு சொல்றான் எங்க வீட்டுப்பொடியன்..

ஹேமா said...

இன்றைய நிதர்சனம் சொன்ன வரிகள்.அற்புதம்.ஆனால் மனதில் ஆதங்கம் !

அப்பாதுரை said...

வலிக்க வைக்கும் கவிதை.

Ranjani Narayanan said...

கவிதையில் இருக்கும் உண்மை சுடுகிறது.

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். நல்ல கவிதை.

Post a Comment