Showing posts with label உயர்ந்தவர்கள்.... Show all posts
Showing posts with label உயர்ந்தவர்கள்.... Show all posts

Tuesday, March 10, 2020

முதிர்ச்சியான வாசகர்களுக்காக...

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும் 
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் ச்ரியாகச் சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதினில் கொண்டு

எழுதாது இருப்பதாலேயே
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Monday, January 15, 2018

ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன் ( 2 )

ஏற்கெனவே மதுரையில் திட்டமிட்டிருந்தபடி
உடன் வந்த அனைவரும் தங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்து விட்டு நானும்
முனைவர் மு.ரா அவர்களும் ஞாநி அவர்களைச்
சந்திக்க அவர் வீடு தேடிப் போனோம்

அவர் அப்போது சி,ஐ.டி காலனியில்
இருந்த நினைவிருக்கிறது

அவர் வீட்டிற்குள் நுழைகையிலேயே
வராண்டாவில் அவருடைய தாயார்
எதிர்ப்பட்டார்

கணவனை இழந்த ஆசாரமான பிராமணக்
குடும்பப் பெண்கள் தலைமழித்து காவிஉடை
அணிவது போல் அவர் அணிந்து இருந்தது
எனக்கு ஆச்சரியமாக இருந்தது

இத்தனை முற்போக்கு எண்ணம் கொண்ட
அவர் வீட்டிலேயே அப்படியா என எனக்கு
முதலில் ஆச்சரியமாக இருந்தது

பின் அவரிடம் எங்கள் சூழல் குறித்து
விளக்கி அவரின் குழுவிலோ அல்லது
கூத்துப்பட்டரையிலோ இந்த இக்கட்டான
சூழலை சமாளித்து நடிக்கத் தக்க நல்ல
நடிகைகள் யாரும்  நடித்து கொடுக்கும்படி
இருந்தால் நல்லது என கேட்டுக் கொண்டோம்

சிறிது நேரம் யோசித்தவர் "இன்று மாலைக்குள்
இந்தக் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிக்கத்
தக்கவர் என்றால் அது மிகச் சிரமமான
காரியமே.ஆனாலும் எனக்குத் தெரிய
இந்தச் சவாலை என் துணைவியாரால்
ஏற்றுச் சமாளிக்க் முடியும் "என்றார்

அந்த பதில் எங்களுக்கு கொஞ்சம்
தெம்பளிப்பதாக இருந்தது

"அப்படியானால் கொஞ்சம் கேட்டுச்
சொல்லமுடியுமா ?" என்றோம்

"அவர்களால் நடிக்க முடியும்
என்பதைத்தான் நான் சொல்ல முடியும்
நடிப்பதையும் நடிக்காமல் இருப்பதையும்
அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
நீங்கள் நேரடியாக அவரிடமே கேளுங்கள் "
என்றார்

அப்போது எனக்கு இந்தப் பதில் மிகவும்
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

என்னைப் பொருத்தவரை மதுரையை ஒட்டிய
ஜாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில்
ஆசாரமான சூழலில் வளர்ந்த எனக்கு
மனைவிக்கான அனைத்து முடிவுகளையும்
கணவன் எடுப்பதையே கண்டு பழகிவிட்ட எனக்கு
நடிப்பதையும் நடிக்காததையும் அவர்தான்
முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது
கொஞ்சம் ஆச்சரியமான விஷயமாகவே பட்டது

(பின் நாங்கள் கேட்டுக் கொள்ள அவர்
நடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டு
வசனப்பிரதியை வாங்கிக் கொண்டு மாலையில்
நடந்த கடைசி ஒத்திகையை மட்டும்
கவனித்து,பின் அருமையாக நடித்துக்
கொடுத்தார்

நாடகம் முடிந்து பின் நடந்த கலந்துரையாடலில்
எங்களுக்கு ஏற்பட்ட அசாதரணமான சூழலை
விளக்கி ஒரே ஒரு ஒத்திகையில்
மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்த அந்தக்
கதாப்பாத்திரம் எது எனக் கேட்ட போது
பார்வையாளர்கள் யாரும் அவரைக் குறிப்பிட்டுச்
சொல்லாததே அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்று )

இன்றைய நிலையில் கூட வெளியே
ஒரு புரட்சிக்காரனைப் போல பேசிக் கொண்டும்
நடித்துக் கொண்டும்

வீட்டில் ஒரு ஆணாதிக்க
வாதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழலில்

அன்றைய நிலையிலேயே தன் தாய்க்குரிய
நம்பிக்கைகளிலோ, துணைவியாருக்குரிய
சுதந்திரத்திலோ தலையிடாது

தன்னளவில் வெளிப்புறத்தில் தன்னைக்
காட்டிக் கொண்டதைப் போலவே
தனிப்பட்ட வாழ்விலும்

அன்று முதல் தன் கடைசி மூச்சுவரை
ஒரு பாசாங்கற்ற மனிதராகவே வாழ்ந்து
வந்த ஞாநி அவர்களை நினைவு  கூர்வதில்
பெருமிதம் கொள்வதோடு அவர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போமாக

Sunday, January 14, 2018

..ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன்

எண்பதுகளின் துவக்கம்.என் நினைக்கிறேன்
வங்கத்தில் பாதல் ஸ்ர்க்கார் அவர்களிடம் பயிற்சிப்
பெற்றப் பாதிப்பில் சென்னையில் ஞாநி அவர்களின்
சார்பாக பரிக்ஷா நாடகக் குழுவும்,முத்துச்சாமி
அவர்கள் சார்பில் கூத்துப்பட்டரையும் மதுரையில்
முனைவர் மு. இராமசாமி அவர்கள் சார்பாக
நிஜ நாடக இயக்கமும் துவக்கப்பட்டு தமிழகமே
கவனிக்கத் தக்க அளவில் நாடகத் துறையில்
பெரும் புரட்சிகர மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த
காலக்கட்டம்.

அப்போது நானும் நிஜ நாடக இயக்கத்தில் என்னை
பிணைத்துக் கொண்டிருந்த நேரம்

முனைவர் மு.ரா அவர்கள் தயாரிப்பில்
இயக்கத்தில் தெரு நாடகமாக "ஸ்பார்ட்டகஸ்" என்னும்
உணர்வுப் பூர்வமான நாடகத்தை
தமிழகம் முழுவதும் நிகழ்த்திக் கொண்டிருந்தோம்

அந்தச் சூழலில் சென்னை லயோலா கல்லூரியில்
இந்த நாடகத்தை நிகழ்த்தும்படியாக அழைப்பு
வந்திருந்தது

மு.ரா அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்
கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த
காரணத்தால் என்னைப் போல ஒரு சிலரைத் தவிர
ஏனையோர் அனைவருமே பல்கலைக் கழகத்தில்
பட்டமேற்படிப்பு மாணவராக,ஆராய்ச்சி மாணவராக
இருந்தார்கள்..ஒத்திகை முதலான விஷயங்களுக்கு
அதுவே சாதகமானதாகவும் இருந்தது

அந்த வகையில் இந்த நாடகத்தில் முக்கியமான
பெண் கதாப்பாத்திரத்தை இரண்டு பட்டமேற்படிப்பு
மாணவியர் ஏற்று மிகச் சிறப்பாக
நடித்துக் கொண்டிருந்தார்கள்

அன்று மாலை சென்னை கிளம்ப அனைவரும்
புகைவண்டி நிலையத்தில் கூடிக் கொண்டிருக்கிற
நேரத்தில் முக்கியமான பெண்கதாப்பாத்திரத்தில்
நடிக்கும் மாணவியின் தந்தை "இங்கு
நடிப்பதால் ஒப்புக் கொண்டேன்.சென்னைக்கு
என்றால் எனக்கு அனுப்பச் சம்மதமில்லை"
எனும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்
நாங்கள் அதிர்ந்து விட்டோம்

காரணம் இந்த தேட் தியேட்டர் எனும் பாணி
கொண்ட இந்த நாடகத்தில் வசன மொழியை விட
உடல் மொழியும்,அரங்கினை ஆளும் உடலசைவுகளும்
மிக மிக முக்கியமானவை.திடுமென பிற
மேடை நாடகங்களைப் போல வசனங்களை
மனப்பாடம் செய்து நின்று பேசிவிட்டுப் போகும்
பாணிக்கு இது முற்றிலும் மாறுபட்டது
என்பதால் உடனடியாக புதியவர் ஒருவரை
கதாப்பாத்திரத்துக்கு தயார் செய்வது அவ்வளவு
சுலபமானதில்லை

இது விவரம் அந்த மாணவியின் தந்தையிடம்
எப்படி விளக்கிச் சொல்லியும் அவர் ஏற்கிற
மன நிலையில் இல்லை

பாண்டியன் புகைவண்டி புறப்பட
ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது

ஒன்று இந்த நாடகத்தை இன்னொரு நாளில்
நடத்துவதாக தந்தி கொடுத்துவிட்டு அனைவரும்
வீடு திரும்ப வேண்டும். அல்லது... அல்லது
என்ன செய்வது  எல்லோருக்கும்
ஒரு மாபெரும் குழப்பம்

அப்போதும் எவ்வித அதிர்ச்சியையும்
தன் முக பாவனையில் காட்டிக் கொள்ளாமல்
முனைவர் மு.ரா அவர்கள் "அனைவரும்
புகைவண்டியில் ஏறுங்கள்  எப்படியும்
நாடகம் நடத்துகிறோம் " எனச் சொல்லி
அனைவரையும் வண்டியில் ஏறச் செய்து
விட்டார்.

அனைவரும் மாணவர்கள் என்பதால்
என்ன செய்யப் போகிறோம்,எப்படிச்
செய்யப்போகிறோம் என அறியும்
பதட்டமிருந்தாலும் கேட்க அச்சம்

நான் ஒருவன் மட்டுமே அவர் வயதொத்தவர்
என்பதாலும்,அப்போது இயக்கத்தில் ஒரு
பொறுப்பில் இருந்ததாலும் மெதுவாக
"என்ன செய்யப்போகிறோம்,எப்படிச்
செய்யப் போகிறோம்." என மெதுவாக
பேச்சை ஆரம்பித்தேன்

அவர் வெகு நம்பிக்கையுடன் இப்படிச்
சொன்னார்."ஒரு வழி இருக்கிறது
நாம் இருவரும் நாளை சென்னை சென்றதும்
நேரடியாக ஞாநி அவர்கள் வீட்டுக்குப் போவோம்
நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் " என்றார்

நிஜமாகவே அங்கு அவரைச் சந்தித்த போது
நாடகத்திற்கு ஒரு தீர்வு மட்டும் இல்லை
நிஜம் வாழ்விலும் எப்படி ஒரு பாசாங்கற்ற
சமரசங்களற்ற ஒரு கலைஞராய் ஒரு
தலை சிறந்த மனிதராய்
ஞாநி  அவர்கள் இருக்கிறார்
என்பதும் எனக்குப் புரிந்தது

(தொடரும் )

Wednesday, July 27, 2016

நெஞ்சில் ஈரம் என்றும் காப்போம்



ஈரம் காப்போம்
வறண்டு விடாது
ஈரம் காப்போம்

மண்ணின் செழுமைக்கு
மண்ணில் ஈரம்
மனிதரின் வளமைக்கு
நெஞ்சில் ஈரம்

கோடைச் சூரியன்
எப்படித் தாக்கினும்
அடைமடி ஈரம்
காத்திடும் பூமி

எப்படிக் கறப்பினும்
கன்றுக்கு பாலினை
ஒதுக்கியே வைத்திடும்
அழகியத் தாய்ப்பசு

அதுபோல்

சுயநலச் சூரியன்
எப்படி எரிப்பினும்
அடிமன  ஈரம்
அகலாது காப்போம்

நம் நிலை எந்நிலை
ஆன போதிலும்
நம்சுகம் கொஞ்சம்
நலிவுறும் ஆயினும்...

ஈரம் வரும்வழி
மழைவழி நதிவழி
எவ்வழி என்று
பூமி பிரிப்பதில்லை

ஈரம் வரும் வழி
மதவழி இனவழி
எவ்வழி என்று
நாமும் பிரிக்காது

நெஞ்சில் ஈரம்
என்றும் காப்போம்
அனைவரும் உயர்ந்திட
ஆனதைச் செய்வோம்

(இந்த  நிகழ்வுக்கு அனைத்து விதத்திலும்
ஊற்று அமைப்பின் சார்பாக அனைத்து
விதத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர்கள்
மதிப்பிற்குரிய  ரூபன் ராஜா மற்றும்
நண்பர் யாழ்பாவாணன் ஆகியோரையும்
அறிவுக்குக்கண்  கல்விக்கு கைக்கொடுப்போம்
அமைப்பினரையும் மனதார பாராட்டுவதன் மூலம்
நாமும் இந்த நிகழ்வில் பங்குபெறலாமே )

வாழ்த்துக்களுடன் ....



Saturday, February 6, 2016

உயர்ந்தவர்கள்...

நான் ஏற்கெனவே சென்னை வெள்ள
 நிவாரணப் பணிக்காக அரிமா சங்கமும்
வில்லாபுரம் குடியிருப்போர் நலச் சங்கமும்
இணைந்து பொது மக்களிடம் தெருத் தெருவாகச்
 சென்றுநிவாரணப் பொருட்களைச் சேகரித்து
அனுப்பிய விவரத்தைப் பதிவிட்டிருந்தேன்.

எங்கள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையின்
 காரணமாகமுடிந்த அளவு நிதியும்,
அதிக அளவில் நிவாரணப் பொருட்களும்
வழங்கியவர்கள் மனதில் நீங்கா  இடம்
பெற்றிருந்தாலும் கூட..
( ஏறக்குறைய பதினைந்து   இலட்சம் )

அப்படி வசூலித்துச் செல்லுகையில்
ஒரு மசூதியின் வாயிலில்பிச்சை எடுத்துக்
கொண்டிருந்த ஒரு பெண் தன் அருகில்
இருந்த மகளிடம்  இருபது ரூபாயைக் கொடுத்து
உண்டியலில்போடச் சொன்ன நிகழ்வு
இன்று வரை மனதைத் தொடும்
நிகழ்வாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது

அதற்குப் பின் நடந்த ஒவ்வொரு கூட்டத்திலும்
இந்த நிகழ்வைபதிவு செய்து கொண்டே வந்தேன்.

அதன் படியே நேற்று மதுரை ஃபாத்திமா மைக்கேல்
மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த  மாவட்ட லியோ
சங்கத்  துவக்க விழாவில்  கலந்து கொண்ட
இந்திய அளவில்மாநில அளவில் உயர் பதவியில்
இருக்கிற அரிமாதலைவர்களிடமும் இதை ஒரு
 செய்தியாக மட்டும் பதிவு செய்தேன்.

இதனை மிக அருமையாக தன்
சொற்பொழிவின் போதுசுட்டிக் காட்டி
நெகிழ்ந்த பள்ளித் தாளாளர்
லயன்.ஸ்டாலின்  ஆரோக்கியராஜ் அவர்களின்
பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த லியோ
கூட்டு மாவட்டத் தலைவர்  லயன்.மனோஜ்  அவர்கள்
மிகச் சரியாகஅந்தப் பெண்ணிடம் போய்ச்
சேரும்படியாக ஏற்பாடுசெய்து கொடுத்தால்
அந்தப் பெண்ணின் வாழ் நாள்
முழுமைக்கும் ஒருவேளை உணவுக்கான
ஏற்பாட்டினைத் தன் சொந்தப் பொறுப்பில்
செய்து தருவதாகஅந்த மேடையிலேயே
உறுதியளித்தார்.

அதற்கான ஏற்பாடுகளை இந்த வாரத்தில் செய்து
முடித்து விடுவேன் என்றாலும் இந்த நிகழ்வின் மூலம்

"நல்லவைகளை, நல்லவர்களை எத்தனை முறை
நினைவு கூற முடிந்தாலும் நல்லதே
ஏனேனில் அது தொடர்ந்து நல்லனவற்றையே
தொடர்ந்து விளைவித்துக் கொண்டே போகும் "

என நான் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும்
உறுதி செய்து போனது மிகுந்த மகிழ்வளிக்கிறது

இதனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
கூடுதல் மகிழ்வடைவேன், நீங்களும் மகிழ்வீர்கள்
என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா என்ன ?




( பேசிக்கொண்டிருப்பவர்  தாளாளர்
லயன்  ஸ்டாலின்  ஆரோக்கியராஜ்  அவர்கள்
முன் வரிசையின் வலது  ஓரம் அமர்ந்திருப்பவர்
லயன் மனோஜ்   அவர்கள் )